மோடியின் எஜமான் அதானியின் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு அங்கமான, அதானி போர்ட்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கடன் சுமையோ ரூபாய் 36,422 கோடி. இவற்றை, ஈடு செய்வதற்கு கடன் பத்திரங்களை வழங்கி நிதியை திரட்ட முயன்று வருகிறது 333.அதானி நிறுவனம். பங்கு மோசடி கதாநாயகன் அதானியின் யோக்கியதையை, நேர்மையை, நாணயத்தை அறிந்த எந்த நிதி நிறுவனமும், முதலீட்டு நிறுவனமும் கடன் பத்திரங்களை வாங்க முன்வரவில்லை. ஆனால், அதானியின் அடிமையான ஒன்றிய தலைமை அமைச்சர் மோடியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தையில் விலைபோகாத தனது கடன் பத்திரங்களின் ஒரு பகுதியை, மக்கள் காப்பீட்டுப் பணத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் தலையில் சுமத்தி ரூபாய் 5000 கோடியை சுருட்டிக் கொண்டது அதானி போர்ட்ஸ் நிறுவனம்.
இதற்கு முன்பும் கூட அதானியின் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத் தொழிலுக்கு முதலீடு செய்ய எந்த நிதி நிறுவனங்களும், தனியார் வங்கிகளும் முன்வரவில்லை. ஆபத்து இரட்சனாக மோடி அவதரித்து அதானிக்கு அரசு வங்கியான எஸ்பிஐ-யில் இருந்து ரூபாய் 6 ஆயிரம் கோடியை அவிழ்த்து விட்டார். அதானி நிறுவனம் ஒவ்வொரு முறையும் கடனில் மூழ்கும் போதும், மோசடியில் சிக்கிப் பரிதவிக்கும் போதும் மக்கள் சேமிப்புப் பணத்தை அள்ளி வீசி அதானியைப் பாதுகாக்கும் மோடிதான் ஏழைகளின் பங்காளனாம்; நம்புவோமாக!
உலகளவில் மோசடிக்கும், பித்தலாட்டத்திற்கும் பெயர் போன அதானி கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்ய எவரும் தயாராக இல்லாதபோது, எல்ஐசி மட்டும் அதானி கார்ப்பரேட் நிறுவனங்களில் மார்ச் 2023 வரை ரூபாய் 38,471 கோடி வரை முதலீடு செய்துள்ளது. ஹிண்டன் பர்க் அறிக்கையானது கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய மோசடியில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்கிற செய்தியை வெளியிட்டதையொட்டி அதன் பங்குகள் பெரிய அளவில் சீட்டுக் கட்டைப் போல் சரியத் தொடங்கியது. இதையொட்டி எல்ஐசி நிறுவனத்திற்கு ரூபாய் 12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் பிறகும் எல்ஐசி நிறுவனம் ரூபாய் 22,793 கோடியை முதலீடாகக் கொட்டி அதானி கார்ப்பரேட்களில் எல்ஐசி முதலீட்டை ரூபாய் 61,210 கோடியாக உயர்த்தியுள்ளது.
அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் பங்கு சந்தை சூதாட்டத்தில் மக்கள் சேமிப்புப் பணத்தை கொண்டு போய் கொட்டுவதன் மூலம் பங்கு சரிவு ஏற்பட்டால் ஏராளமான இழப்பை எல்ஐசி-யைப் போல் சந்திக்க நேரிடும். இவற்றை ஈடுசெய்ய மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி அழ வேண்டியுள்ளது. இப்படித்தான் யூடிஐ வங்கியை வாஜ்பாய் அரசு மக்கள் வரிப்பணத்தைக் கொட்டி மீட்டெடுத்தது.
தனது அடிமையான மோடி அரசை பயன்படுத்தி நிதி நடவடிக்கையில் மோசடியை கையாளுவதிலும், கடனை திருப்பி செலுத்துவதிலும் நேர்மையின்றி செயல்பட்டு வருகிறது அதானி கார்ப்பரேட் கும்பல். பங்கு சந்தை மோசடி, கணக்கு மோசடி போன்றவைகளில் ஈடுபடுவதோடு, நிறுவன பங்கீடுகளை செயர்க்கையாக உயர்த்திக் காட்டி வங்கிகளில் இருந்தும், முதலீட்டு நிறுவனங்களில் இருந்தும் பெருமளவில் கடனை வாங்கிக் குவித்துக் கொள்கிறது.
இவை ஒரு பக்கம் முதலீட்டாளர்களுக்கு, நிதி நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடிகள் நட்டத்தை ஏற்படுகிறது. மறுபக்கம் வங்கியில் வாங்கிய கடன்களை வாராக் கடன் பட்டியலில் தள்ளி வங்கிகளை திவால் நிலைக்கு தள்ளுவது நடந்தேறுகின்றன.
தொடர்ந்து நட்டம் அடைந்து வரும், ஒரு நிறுவனத்திற்கு எந்த மாங்காய் மடையனும் மீண்டும், மீண்டும் கடன் தர முன்வர மாட்டான். ஆனால், தொடர்ந்து நட்டம் அடைந்து வரும் நிறுவனமாக மட்டுமல்லாமல் மோசடியில் கடனில் மூழ்கி வரும் அதானி நிறுவனங்களுக்கு மக்கள் சேமிப்புப் பணத்தை வாரி இறைக்க எல்ஐசி-யால் எப்படி முடிந்தது? எல்லாம் சாட்சாத் பாசிச மோடி அரசின் கைங்கரியமே!
அரசு பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் அரசின் உற்பத்தி சேவைத் துறைகளில் முதலீடு செய்வது மூலமே அரசு கட்டமைப்பு பணிகளையும், மக்கள் நலப் பணிகளையும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் அந்நிய நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள முடியும். படிப்படியாக நிறுத்திக் கொள்ளவும் முடியும். மாறாக தனியார் கார்ப்பரேட்டுகளில் முதலீடு செய்வதன் மூலம், அவற்றின் பங்கு சரியும்போது மக்கள் சேமிப்புப் பணத்தை இழக்க நேரிடும். இவற்றை மீண்டும் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டே ஈடு செய்ய வேண்டும். இதனால், மக்கள் நலப் பணிகள் பாதிப்படையும்.
மக்களின் வங்கி சேமிப்புப் பணத்தை, காப்பீட்டுப் பணத்தை முதலீடு என்ற பெயரில் அதானி, அம்பானி, மிட்டல், ஷிவ் நாடார் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொட்டி அழிப்பதற்கு எதிராக மக்கள் திரள் போராட்டங்களைக் கட்டி எழுப்புவோம். அதானியின் இழப்பையும், மோசடியையும் பாதுகாத்து வரும் மக்கள் விரோத பாசிச மோடி அரசை, அதாவது மோசடி அரசைத் தூக்கியெறிவோம்.
- மோகன்