பாலியல் வன்கொடுமை, ஒரு சமூக கொடுமை!

 

 

பாலியல் வன்கொடுமை என்பது, பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை விட்ட பாடில்லை. இது குறித்து கருத்து சொல்பவர்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பின்மையைச் சாடுகின்றனர். மேலும், பிள்ளைகளின் மீதான பெற்றோர்களின் பார்வையும் மாற வேண்டுமென கூறுகின்றனர்.

அதிலும், குடும்பங்களில் ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் வெவ்வேறாக வளர்ப்பதாகவும், அதாவது, ஆண் பிள்ளைகளை செல்லம் கொடுத்தும், பெண் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கியும் வளர்க்கின்றனர். இதனால், ஆண் பிள்ளைகள் அடங்காதவர்களாகவும், அடங்காபேர் வழிகளாகவும், பெண் பிள்ளைகள் கோழைகளாகவும் வளர்வதாக ங்கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

சமூக சீர்கேடுகளுக்கு பலியாகும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களைப் பொறுப்பாக்கும் அதே வேளையில், சமூகத்தில் கொள்கை என்ற பெயரில் ஆளும் வர்க்கமும் (கார்ப்பரேட்டுகளும்) இவர்களுக்காக ஆட்சி நடத்தி வரும் ஆட்சியாளர்களும் நம் பிள்ளைகளின் மண்டையில் திணித்து வரும் நுகர்வு வெறியால் அன்றாடம் பித்துப் பிடித்து அலைவதைத் தடுத்தாக வேண்டும்.

இதற்கு பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு, தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் நமது பிள்ளைகளின் கைகளில் தவழவிடும் கூர்மையான ஆயுதங்களான இணையம், கைபேசி, சமூக வலைதளம் ஆகியவை மூலம் நடத்தப்படும் சூதாட்டம், ரீல்ஸ் என்ற பெயரில் பரப்பப்படும் ஆபாச படங்கள், உடலுறவு காட்சிகள், ஆபாச சேட்டைகள், இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் போன்றவைகளால் அன்றாடம் சிக்கிச் சீரழிக்கப்படுவதை தடுத்தாக வேண்டும்.

அதற்கு, ஆணுக்குப் பெண் சமம் என்கிற கருத்தாயுதத்தை பிள்ளை பருவத்தில் இருந்தே சிந்தனையில் விதைத்தாக வேண்டும். ஆண் பிள்ளைகளை  ‘,சுதந்திரமாக அடங்காதவர்களாக திரியவிடுவதும், பெண் பிள்ளைகளை அடக்கி, ஒடுக்கி இருத்தி வைப்பதும் நிறுத்தப்பட வேண்டும். ஆண், பெண் இருவரும் உடலியலில் வேறுபாட்டாலும் சிந்திப்பதிலும், செயலிலும் வேறுபட்டவர்கள் அல்லர் என்பதை விதைக்க வேண்டும்.

ஆணுக்குப் பெண் அடிமை என்கிற கருத்தோட்டத்தை, இதன் அடிப்படையில் நிலவும் ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் அடியோடு அறுத்தெறியப் போராட வேண்டும். இவற்றை முதலில் குடும்பத்திலிருந்தே துவங்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற துணிவு வரும். இல்லையேல் கருத்து கருத்தாக இருக்குமே தவிர நடைமுறைக்கு வராது.

அதாவது, ஆணும், பெண்ணும் சமம். அனைவரும் சமம் என்ற ஜனநாயகப் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். எதையும் கேள்விக்குள்ளாக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைக் கண்டு ஒதுங்கிப் போகாமல் அதற்கு எதிராக போராடும் துணிவையும், அதற்கான சுதந்திரப் பண்பையும் வளர்த்தெடுக்க முடியும். இதற்கு தேவை ஒரு பண்பாட்டுப் புரட்சி.

இது ஒரு புறம் இருப்பினும், கார்ப்பரேட் சுரண்டலுக்காக சீரழிவைப் பரப்பிவரும் இணையம், சமூக வலைதளம் ஆகியவைகளை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும். அதற்கு, பிள்ளை குட்டிகளுடன் வீடு, வீடாகச் சென்று அணிதிரட்டுவது, போராடுவது மூலமே பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்ட முடியும். இதன் வளர்ச்சியின் மூலமே பண்பாட்டுப் புரட்சியின் தேவையை மக்களுக்கு உணர்த்த முடியும். அதற்கான பாதையையும் செப்பனிட முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன