சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக நடத்திய ராமநவமி பேரணிகளில் துப்பாக்கி, கத்தி, கூர்மையான நீண்டவாள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளோடு கலந்து கொண்ட காவிக் காலிகள் சில முஸ்லீம் பகுதிகளில் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டு அப்பகுதிகளில் கலவரத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மார்ச் இறுதிவாக்கில் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள நூரனி மஜித் முன்பு கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் காவிக் காலிகள் கையில் காவிக் கொடியுடன் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டுள்ளனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக போலீஸ் கூறுகிறது.
மார்ச் மாத முதல் வாரத்தில் அகமதாபாத் நகரின் வத்வா பகுதியில் உள்ள மசூதியில் ரமலான் மாத சிறப்புத் தொழுகையான தராவிக் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களைச் சுற்றி வளைத்த காவிக் கும்பல் “ஜெய் ஸ்ரீராம்” சொல்லச் சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸ் கூறுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த CAA போராட்டப் பகுதியில் ஆர்எஸ்எஸ்-பாஜக ஏற்படுத்திய கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒன்பது முஸ்லீம் இளைஞர்களின் ஆடைகளைக் கழற்றி ஜெய் ஸ்ரீராம் எனப் பலமுறை உச்சரிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர் பின்னர் அவர்களைக் கொடூரமாக அடித்துக் கொலைசெய்து சாக்கடையில் வீசப்பட்டதாக தி ஹிந்து செய்தி நாளேடு கூறுகிறது.
2019-2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடச் சொல்லி முஸ்லீம்கள் தாக்கப்பட்டதாக 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையதளம் கூறுகிறது.
அத்வானியின் ரதயாத்திரை தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பைக் கலவரங்கள், குஜராத் இனப்படுகொலைகள், பல குண்டு வெடிப்புகள், முஸ்லீம்கள்-தலித்துகள் மீதான தாக்குதல்கள், CAA கலவரம் எனக் கடந்த நாற்பது வருடங்களாக ஆர்எஸ்எஸ்-பாஜக காலிகள் நடந்தி வரும் கலவரங்களுக்கு கதாநாயகன் இராமனே. கலவரங்கள் செய்வதானாலும் சரி அல்லது கலவரத்தில் பிரியாணி அண்டாவைத் திருடுவதானாலும் சரி சங்கிகள் இடும் ஒரே முழக்கம் “ஜெய் ஸ்ரீராம்”. காவி பாசிஸ்ட்டுகளின் அட்டூழியங்களுக்கும், அயோக்கியத் தனங்களுக்கும் துருப்புச் சீட்டான இம்முழக்கத்தைப் பொறியியல் படிக்கும் மாணவர்களைப் போட வைத்து கலவரத்திற்கு விதைபோட்டிருக்கிறார் இந்துத்துவா ஏஜெண்டான ஆளுநர் ஆர்.என். ரவி.
“கல்விக்கூடங்களில் கம்பர்” என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பரிசு வழங்கும் விழா நடந்துள்ளது. இதில் தியாகராஜர் கல்லூரித் தலைவர் ஹரி தியாகராஜன், எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், விஐடி பல்கலைக்கழக இணைவேந்தர் செல்வம், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்ய சுப்பிரமணியன், ஆளுநர் ரவி ஆகியோர் கலந்துள்ளனர்.
சங்கிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கம்பனுக்கு விழா என்ற பெயரில் இந்துமதவெறி அரசியலைப் பேசியிருக்கின்றனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் மேடையமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்நிகழ்வுக்காக 550 மாணவர்களையும் 45 பேராசிரியர்களையும் விடுமுறை நாளன்று கட்டாயப்படுத்தி வரவழைத்துள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய ரவி, “அந்த அமைப்பினரால் நமது தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவுடன் ஒப்பிட்டுப் பேசுவது போன்ற செயல்கள் நடக்கிறது. தற்போது புதிய அடையாளங்களை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடக்கின்றன. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருந்துவிடக் கூடாது. பல்லாண்டுகளுக்கு முன்னர் நமது ஆலயங்களை அழிக்க முற்பட்டபோது நம் முன்னோர்கள் அதனை எதிர்த்துப் போராடியுள்ளனர். இதனை நாம் கற்றுக்கொண்டு பள்ளிகளில் இருந்தே ஒரு இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும். இதுவே நாம் கம்பனுக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும் உரையை முடிக்கும்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு, அதே முழக்கத்தை மாணவர்களையும் போட வைத்துள்ளார்.”
இங்கு சனாதன தர்மத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது. அதனால் அமைதியாக இருக்காதீர்கள். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை எவ்வாறு இந்து மன்னர்கள் வீழ்த்தினார்களோ அதுபோல பார்ப்பன எதிர்ப்பு கடவுள் மறுப்புக் கருத்துக்களை ஒழிக்க மாணவர்கள் முன்வரவேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக வின் கொள்கைப் பரப்பு செயலாளராகவே மாறியிருக்கிறார் ரவி.
அத்வானி, அசோக் சிங்கால், மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் எதை பேசி மதக்கலவரத்தைத் தூண்டுகிறதோ அதற்கு சிறிதும் குறைவில்லாதது ரவியின் பேச்சு. இங்குள்ள சில பார்ப்பனர்களை வைத்துக்கொண்டும் பதவிக்காக ஜால்ரா போடும் பல்கலைக்கழக துணைவேந்தர்/பதிவாளர்கள்/கல்லூரி முதல்வர்கள் துணையோடும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டு அவ்விடங்களில் இந்துத்துவா கருத்துக்களை முன்வைப்பது NEP-ஐ முன்னிறுத்துவது, மோடி புகழ்பாடுவது சனாதன பிற்போக்குத்தனங்களை ஆதரித்துப் பேசுவது என்பதுதான் ரவியின் நிகழ்ச்சி நிரல். ரவியின் நடவடிக்கைகள் சட்டத்திற்கும் அறிவியல் உண்மைகளுக்கும் முற்றிலும் எதிரானது. இருந்தாலும் அதைபற்றியெல்லாம் ரவிக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது. இந்துத்துவா கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்பதுதான் ரவியின் நோக்கம்.
ரவியின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுத்துள்ளன. உயர்கல்வியில் காவி அரசியலைத் திணிக்கவேண்டும் என்ற திட்டத்தோடு செயல்பட்டுவரும் ரவியை தடுக்க கண்டன அறிக்கைகள் மட்டும் போதாது. காவி பாசிசத்திற்கு எதிராக மாணவர்கள் ஆசிரியர்களை உள்ளடக்கிய பரவலான போராட்டத்தின் மூலமே ஆளுநர் என்ற போர்வைக்குள் ஒளிந்துள்ள காவி பாசிசத்தின் ஏஜெண்டான ரவியை நாம்மால் வீழ்த்த முடியும்.
- செல்வம்
தகவல் உதவி
https://muslimmirror.com/jai-shri-ram-has-become-a-murderous-chant-to-kill-muslims-in-india/