உத்திரப்பிரதேச மாநிலத்தில், சுமார் 4 வருடங்களுக்கு முன்பு, தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாகக் கூறி, இரண்டு இளைஞர்கள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
அதற்கு முன்பாக சிறுமியின் மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த அச்சிறுமி சப்தமிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர். இனியும் தாமதித்தால் மக்கள் சக்கையாகப் பிழிந்து விடுவார்கள் என்றுணர்ந்த அவ்விளைஞர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பியோடி விட்டனர். ஒருவேளை மக்கள் வரவில்லையென்றால் அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சின்னாப் பின்னமாக்கப்பட்டு உயிரும் பறிக்கப்பட்டிருக்கும் என்பதை எந்த பகுத்தறிவுள்ள மனிதனாலும் உணர முடியும். ஆனால், என்னவோ மெத்தப் படித்த ‘நீதிமான்’ நீதிபதி மிஸ்ராவால் உணர முடியவில்லை.
அந்த இளைஞர்கள் மீது காவல்துறை IPC பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) போக்சோ சட்டப்பிரிவு 18-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நிறுத்தியது.
கீழமை நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்பட்ட அவ்விளைஞர்கள், அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில், அதாவது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை அந்நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவரான ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா என்பவருக்கு ஒதுக்கியது.
சட்டத்தைக் கரைத்துக் குடித்த அவரும், அவர்கள் அச்சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை, மார்பகத்தை அழுத்தியுள்ளனர். ஆடையை அவிழ்த்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தவில்லை. அதற்கான சாட்சியங்களாக சிறுமியும் நிர்வாணப்படுத்தப்படவில்லை. இளைஞர்களும் நிர்வாணமாக பிடிப்படவில்லை. ஆகையால், இவை IPC பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) போக்சோ சட்டப்பிரிவு 18-இன் கீழ் வராது. வேண்டுமானால், IPC (வெறும் பாலியல் சீண்டல் பிரிவு) 354, 354 B-இன் கீழ் வழக்கைப் பதிவு செய்யலாமென தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி மிஸ்ரா. நல்ல வேலை அச்சிறுமி தனியாக சென்றதுதான் இக்கொடூரத்திற்கு காரணம் என்று சொல்லாமல் விட்டரே!
நடந்து முடிந்த இந்த வக்கிரம் இவருடைய மகளுக்கோ, பேத்திக்கோ நடந்து இருந்தால், இப்படி தீர்ப்பளித்திருப்பாரா? என்பதை அந்தக் கழிசடை நீதிபதியிடமே விட்டு விடுவோம்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், புரட்சியாளர்கள் கண்டனக் குரல் எழுப்பவும், அதற்கெதிராகப் போராடவும் செய்தனர். இதனால் சமூகத்தில் இப்பிரச்சனை புழுத்து நாறவே வேறு வழியின்றி நீதிமன்ற மாண்பைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரித்த பின்பு மிஸ்ரா வழங்கிய தீர்ப்பை இரத்து செய்துவிட்டது.
ஆனால், தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் மிஸ்ராவின் ஆற்றல் குறைபாடு, மனிதாபிமானமற்ற செயல், உணர்ச்சியற்ற நிலை ஆகியவைகள் குறித்து விமர்சித்துள்ளது. இது போன்ற தடித்த கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவிற்கு மிஸ்ரா நீதிமன்றத்தைத் தள்ளியுள்ளது குறித்து வருத்தப்படுவதாகக் கூறியுள்ளது.
வருத்தப்படுவதால், எந்த மாற்றமும் வரப்போவதில்லை. இதற்கு மாறாக, “உடலோடு உடல் உரசாத…” பாலியல் சீண்டல், போக்சோ வழக்கின் கீழ் வராது; மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை என்கிற இது மாதிரியான முந்தைய தீர்ப்புகளும், இதன் பரிணாம வளர்ச்சியே என்பதை உணரவேண்டும்.
ஒரு மனிதனுக்கு ஆற்றல் குறைபாடு, அறிவுக் குறைபாடு இருக்கலாம். ஆனால், பண்பாட்டுக் குறைபாடு இருக்கவே கூடாது. எனவே, இது ஒரு சீரழிந்த பண்பாட்டுக் குறைபாடு என்று தான். உச்ச நீதிமன்றம் மிஸ்ராவைக் கண்டித்திருக்க வேண்டுமே ஒழிய, கவைக்குதவாத வார்த்தைகளை கொண்டு சீரழிவைத் தாங்கிப்பிடிக்கும் மிஸ்ராவை கண்டிப்பதாகக் கூறிக்கொண்டு, சீரழிவை அப்படியே விட்டுவிடுவதற்கு அல்ல.
எனவே, பகுத்தறிவோடும், சமூக அறிவோடும் சிந்தித்து செயல்படவில்லையெனில் இது போன்ற வக்கிரங்கள் தொடர்ந்து வெடிக்கவே செய்யும் என்பதை உணர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
- மோகன்