இடது ஜனநாயக முன்னணி ஆட்சிசெய்யும் கேரளாவில் நாட்டின் பிற மாநிலங்களை போல, இங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் திறக்க வழிவகை செய்யும் “தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா” சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து துறைகளிலும் தனியார்மயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் ஆட்சியில், கல்வியை தனியார்மயமாக்கும் முடிவை எடுத்திருப்பது பெரும் பேசுபொருளாகி இருக்கும் என எண்ணுவது இயல்பே அனால் அங்கு பெரும் எதிர்ப்புகளே இல்லாத நிலையில் தான் இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. கேரளத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை மாறாக “நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. ஆனால், தனியார் பல்கலைகளின் வரவால், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அரசு பல்கலைகளுக்கு ஆபத்து வரக்கூடாது. கேரளாவின் கல்வித் துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பல்வேறு கார்பரேட் நிறுவனங்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். அதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்களை அழைக்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை வைத்தது.
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார், “ஒரு காலத்தில் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ முடிவு எடுப்பது நியாயமில்லை. இந்த முடிவு கல்வியை தனியார்மயமாக்கும். பணம் உள்ளவர் மட்டுமே உயர் கல்வி பயில முடியும் என்ற நிலையை உருவாக்கும்” என்றார். இதற்கு பதிலளித்த சிபிஎமின் கல்வி அமைச்சர், “தனியார் பல்கலைக்கழக மசோதா, கேரளாவின் கல்வி பாதையில் புதிய அத்தியாயமாக அமையும். கல்வி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். கல்வித்தரம் சீர்கெடாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் இன்றி பல்கலைக்கழகங்கள் இயங்க தகுந்த சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதை எதிர்த்து இத்தனை காலம் போராடியதோ, மக்களைதிரட்டியதோ இப்போது அதனையே புதிய அத்தியாயமாக இருக்கும் என மக்களை நம்ப சொல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பல ஆண்டுகளாக தனியார் முதலீட்டுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்துள்ளது, இது மாநிலத்தின் கல்வி துறையிலும் பிரதிபலித்துள்ளது. தனது மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளான SFI & DYFI ஆகியவற்றை கல்வித் துறையில் நடைமுறைக்கான மாற்றங்களுக்கு எதிராக எப்போதும் போராட்டக் களத்தில் வைத்திருந்தது. 1994-ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு கண்ணூரில் கூட்டுறவு துறையில் ஒரு மருத்துவக் கல்லூரியை துவங்கியபோது, சிபிஎம் கட்சி கடுமையான எதிர்ப்பை காட்டியது. அக்கட்சி நடத்திய போராட்டத்தின் போது கூத்து பரம்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து DYFI உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அக்கல்லூரியை, வடகேரளத்தின் முக்கியமான மருத்துவமனையாக மாற்றியது சிபிஎம் அரசு.
2001-06 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில், மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையைத் தடுக்கும் வகையில் சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குமாறு எடுத்த முக்கியமான முடிவுக்கு, சிபிஎம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. 2014-ஆம் ஆண்டில், கேரளாவின் முன்னணி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி வழங்கும் முடிவை காங்கிரஸ் அரசு எடுத்தபோது, சிபிஎம் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. உலக கல்வி மாநாடு நடைபெற்றபோது, இந்த மாநாடு உயர்கல்வியில் வணிகமயத்தை தூண்டும் என கூறி போராட்டம் நடத்தி, அப்போதைய உயர்கல்வித்துறையின் துணை தலைவரை தாக்கியது SFI. இவ்வாறாக கேரளத்தில் உயர்கல்வியை தனியார்மயமாக்கலுக்கு எதிரான கடந்த கால போராட்ட வரலாறுகளை மறந்துவிட்டு தற்போது தனியார்மயமாக்கலை சிபிஎம் கட்சியே முன்னின்று நடத்துகிறது.
கடந்த பத்தாண்டுகளில் சிபிஎம் கட்சி மெதுவாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதை காலத்தின் மாற்றத்திற்கும், கேரளாவின் வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கும்ஏற்ப ஏற்பட்ட மாற்றமென சொல்கிறது. ஆனால் உயர்கல்வியை தனியாரிடம் தாரைவார்த்தபின் நமது நாட்டில் நடந்தது என்ன என்பது எல்லாரும் அறிந்ததே. கல்வியின் தரம் உயர்ந்துள்ளதா? இல்லை. இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் செயல்படும் அரசு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு மாணவர்கள் ஏங்குகிறார்கள், போட்டி போட்டுகொண்டு JEE போன்ற தேர்வுகள் எழுதுகிறார்கள். தனியார் பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவைக்கு ஏற்ப சரக்குகளை மட்டுமே உருவாக்குகிறது, மாணவர்களை வெறும் சந்தைப்பொருட்களாக பார்க்கிறது. அவர்களை ஜனநாயகப்படுத்தி, அரசியல்படுத்துவதில் இருந்து தடுக்கிறது, இன்னும் ஏன் மாணவச்செல்வங்களை யதார்த்தத்திலிருந்துபிரித்து வைத்து, “Each one for himself” என்ற முதலாளித்துவ தத்துவத்தை மிக ஆழமாக திணிக்கிறது. இது மட்டுமில்லாமல், தனியார் பல்கலைக்கழங்களில் நமது பிள்ளைகள் படிப்பதை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கல்வி கட்டணத்தை உயர்ந்து உள்ளது. இப்பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடும் கேள்விக்குறியாகிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் உயர் பிரிவினருக்கு மட்டுமே கல்வி வழங்குகிறது, இதனால் Inclusivity and accessibility முக்கியமாகக் கொண்டுள்ளதாக கூறப்படும் கேரளா கல்வி முறையின் அடிப்படையே பாதிக்கப்படும்.
கல்வி இப்போது ஒரு மிகப்பெரிய சந்தை. மோடி-ஷாவின் காவி கார்பொரேட் பாசிசத்திற்கு துணைபோக கூடிய போக்கு தான் கேரளத்தில் கல்வியை தனியார்மயமாக்குவதும். சமீப காலமாக, இன்போசிஸ், ஆனந்த் மஹிந்திரா, விப்ரோ, ஜிண்டால் போன்ற பெருமுதலாளிகள் உயர்கல்வியை கைப்பற்றி வருகின்றன. கேரளா சிபிஎம் அரசு கல்வியை தனியார்மயக்குவதற்கு பின்னால் இந்தியக் கல்விச் சந்தையை வெளிநாட்டு மூலதனத்திற்குத் திறந்துவிட்டு, இந்தியக் கல்விப் பெருமுதலைகள் தரமான கல்வி என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிப்பதற்கு வழியமைத்துக்கொடுப்பதுஎன்ற முதலாளிகளின் நலன் தான் மறைந்துள்ளது. நாடு முழுவதும் கார்பரேட் முதலாளிகளின் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி ஒருபுறம் என்றால் அதற்கு அக்கம்பக்கமாகவே அரசு கல்லூரிகள் சீரழிவதும் துலக்கமாகத் தெரிகின்றது. கேரளா அரசு எத்தனை முறை “அரசின் கட்டுப்பாட்டின் கீழ்” தான் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கும் என சொன்னாலும் நாட்டின் மற்ற பகுதிகளில் நடப்பது தான் நாளை கேரளத்திலும் நடைபெறும். இது மறுக்க முடியாத உண்மை.
- கார்த்திக்