வங்கதேசத்து ஆயத்த ஆடைத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் ஸ்மார்ட் உற்பத்தி!

தையல் இயந்திரத்தில் Nidle கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் தினசரி அடைய முடியாத இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது; பணிநேரம் முழுவதும் எங்களுக்குத் தொடர்ச்சியான அழுத்தம் இருக்கிறது; எனவே நாங்கள் அடுப்பில் கொதிக்கும் நிலையில் இருப்பது போல ஒவ்வொரு நாளும் உணர்கிறோம் என்கிறார் ஒரு பெண் தொழிலாளி.

ஆயத்த ஆடைகள் (Readymade) தான் இன்று அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. வியட்நாம், கம்போடியா, வங்கதேசம், இந்தியா (குர்கான், திருப்பூர்), இலங்கை போன்ற நாடுகளில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயத்த ஆடைகளின் விற்பனைச்சந்தையை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பகாசுர நிறுவனங்கள் தான்; தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் தான் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.

ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் வங்க தேசமும் ஒன்று. ஏழை தெற்காசிய நாடான வங்கதேசத்திலிருந்து  பிரான்சின் கேரிஃபோர், கனடாவின் டயர், ஜப்பானின் யூனிக்லோ, அயர்லாந்தின் பிரைமார்க், ஸ்வீடனின் எச்&எம் மற்றும் ஸ்பெயினின் ஜாரா போன்ற உலகளாவிய தயாரிப்புகள்  இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது

வங்கதேசத்தைப் போல  கம்போடியா, வியட்நாம் போன்ற தெற்காசிய நாடுகளும் ஆயத்த ஆடைப் பிரிவில் கோலோச்சுகின்றன. இந்நாடுகள் வங்கதேசத்தை விட மலிவான விலையில் அமெரிக்கா, ஐரோப்பாவின் ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

இந்நாடுகளுடான தொழிற்போட்டியை சமாளிக்க வங்கதேசத்து ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி திறன் என்ற பெயரில் மலிவான விலையில் ஆடைகளை உற்பத்தி செய்யவும், ஆட்குறைப்பை ஏற்படுத்தவும் தானியங்கி தொழில்நுட்பம் சில ஆண்டுகளாகவே அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆயத்த ஆடைத் தொழிலில் ஆடை வடிவமைப்பு, ஸ்பின்னிங், டையிங், தையல் லைன் (sewing line), பிரிண்டிங், எம்பிராயிடரிங்,  பேக்கிங் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் மனித உழைப்பு நிரம்பிய தையல் வேலை பிரிவைத்  தவிர மற்ற பிரிவுகளில் ஆட்டோமேசன் வேகமாக புகுத்தப்பட்டது

தையல் இயந்திரத்தை இயக்குபவர்களின் பிரிவில் மட்டும் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் எண்ணிக்கையில் சுமார் 60 சதவிகிதத்திற்கும்  மேலே இருக்கிறார்கள். பெண் தொழிலாளர்களின் மனித உழைப்பு நிரம்பிய இப்பிரிவில் ஆட்டோமேசனைப் புகுத்துவதை விட அத்தொழிலாளர்களை மலிவு விலையில் மேன்மேலும் சுரண்டுவதே ஆலை முதலாளிகளுக்கு இலாபத்தை கொடுப்பதாக இருக்கிறது.  இருந்தபோதிலும்  இப்பிரிவில் தையல் இயந்திரத்தில் நூலைக் கத்தரிப்பதற்கும்; நூற்கண்டை மாற்றுவதற்கும் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆரம்பநிலை உதவியாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்காக தானியங்கி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான ஆரம்பநிலை உதவியாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சுமார் 85க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதில்  பெரும்பாலும் பெண் தொழிலாளர்கள்.

மேலும் அங்கு நிலவிய அரசியல் நெருக்கடியால், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு, டாலருக்கு நிகரான டாக்காவின் மதிப்புக் குறைவு; மூலப்பொருட்களுக்கான இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு; எரிவாயு பற்றாக்குறை; காட் வரிகள் உயர்வு; அடிக்கடி நிகழும் மின்சாரத் துண்டிப்பு என ஆயத்த ஆடை தொழில் வங்கதேசத்தில் தற்போது தீரா நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

மேலும் வங்கதேசத்தில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளின் கொள்முதல் விலைகளை  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கொள்முதல் செய்பவர்கள் (Buyers) 5 விழுக்காடும் அமெரிக்கா 8 விழுக்காடும் குறைத்துள்ளது.  ஒட்டுமொத்த ஏற்றுமதியோ 2023-ம் ஆண்டை ஒப்பிடும் போது  2024-ம் ஆண்டு 3 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்க  ஆயத்த ஆடை முதலாளிகள்,  ஏற்கனவே 12 மணிநேரத்தில் வேலை பார்க்கும் அத்தொழிலாளர்களை மேலும்  கசக்கி பிழிய  ஸ்மார்ட் உற்பத்தி எனும் புதிய வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் எனும் இணையதளம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.  

இந்த ஸ்மார்ட் உற்பத்தி முறை மூலம் வங்கதேச ஆயத்த ஆடைகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தப்படப்போவதாகவும்; இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும்; ஸ்மார்ட் உற்பத்தி முறை மூலமே  பிறநாடுகளுக்கு போட்டியாக வங்கதேசம் ஆயத்த ஆடைகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும்; இல்லையென்றால் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சார்ந்த கொள்முதலாளர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று விடுவார்கள் என அங்குள்ள ஆயத்த ஆடை ஆலை முதலாளிகள்.

இந்த ஸ்மார்ட் உற்பத்தி முறை எனும் கண்காணிப்பு முறை தற்போது வங்கதேச ஆயத்த ஆடை ஆலைகளில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை கொண்ட தையல் லைனில் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

தையல் லைனில் (sewing Line) ஒவ்வொரு தொழிலாளியும்,  ஒரு குறிப்பிட்ட  தையல் செயல்பாட்டை ஒரு துணியில் முடித்துவிட்டு அதை அடுத்த தொழிலாளிக்கு அனுப்புவார்.  இப்படி அனுப்பபடும் துணி, ஒவ்வொரு தொழிலாளியாக சென்று  இறுதியில் சட்டையாகவோ அல்லது கால்சட்டையாகவோ வடிவம் பெற்று தையல் லைனின் முடிவில் வெளியில் வருகிறது. இந்த தொடர்ச்சியான செயல்பாட்டில் ஒரு தொழிலாளி, மற்ற தொழிலாளியின் தையல் செயல்பாடு முடியும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை idle time (காத்திருப்பு நேரம்) என முதலாளி வர்க்கம் அழைக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு சில வினாடிகளே நடந்தேறும்  இந்தக் காத்திருப்பு நேரத்தால் உற்பத்தி திறன் குறைகிறது என்று ஆயத்த ஆடை தொழிற்சாலை நிர்வாகங்கள் கூறுகின்றன.  எனவே தான் காத்திருப்பு நேரத்தைக் கண்காணித்து அதனைக் குறைக்க  Nidle (No idle) எனும் தானியங்கிக் கண்காணிப்புக் கருவியை ஒவ்வொரு தையல் இயந்திரத்திலும் பொருத்தி  வருகின்றன. இக்கருவியின் மூலம் ஒரு பெண் தொழிலாளி ஒரு மணிநேரத்தில் எத்தனை துணிகளை தைக்கிறார்; எவ்வளவு வினாடிகள் இயந்திரத்தை இயக்காமல் இருந்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்க முடியும். அப்படிக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக சிவப்பு நிறக் குறியீட்டைக் காட்டி ஒலி எழுப்பும்.  

ஆலை முழுவதும் இருக்கும் Nidle கருவிகள் இணையம் வழியாக இணைக்கப்பட்டு அது தரும் தரவுகளை கணிணித் திரையில்  நேரலையாக ஆலை நிர்வாகம்  பார்க்க முடியும். இத்திரையில் ஒவ்வொரு தொழிலாளியும் மணிக்கு எவ்வளவு உற்பத்தி செய்திருக்கிறார்? அவர் தன் தினசரி இலக்கை எட்டினாரா? ஒவ்வொரு தொழிலாளியின் உற்பத்தித் திறன் எவ்வளவு? எந்த தொழிலாளியால் ஒட்டு மொத்த லைனின் உற்பத்தி திறன் (bottle neck station) குறைகிறது எனக் கணக்கீட முடியும்.

வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி இயந்திரங்களினால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். 1991-ம் ஆண்டில் 85 சதவிகிதமாக இருந்த பெண் தொழிலாளர்கள் 2023-ம் ஆண்டில் 57 சதவிகிதமாகக்  குறைந்துள்ளனர்.

தற்போது பொருத்தப்பட்டிருக்கும் Nidle கருவியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர். இது போன்ற கருவிகளைப் பொருத்துவதன் மூலம் தானியங்கி இயந்திரத்தின் வேகத்திற்கும், மனித திறனுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனால்  பெண் தொழிலாளர்கள் ஆட்டோமேசனை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு வெளியேறுகின்றனர் என்கிறார் வங்கதேச ஆடை மற்றும் தொழில்துறை தொழிலாளர் கூட்டமைப்பின் வர்த்தகக் குழுவின் பொதுச் செயலாளர் பாபுல் அக்தர்.

ஒரு பெண் தொழிலாளி, தனது தையல் இயந்திரத்தில் Nidle கருவியைப் பொருத்திய பிறகு தனது இலக்கு முன்பை விட 75% அதிகரிக்கப்பட்டதாக கூறுகிறார். இக்கருவி உற்பத்தித் தரவுகளை சேகரிக்கிறது. இதனால் மேலாளர்கள் ஒரு தொழிலாளி சிறிது நேரம் வேலை செய்யாமல் இருந்தாலும் கண்காணிக்க முடியும்; மேலாளர் உற்பத்தியை அதிகரிக்க பணியிடங்களில் முன்பை போல சத்தம் எழுப்பிக் கொண்டே இருப்பதில்லை என்கிறார்.

மற்றொரு பெண் தொழிலாளியோ கழிவறையைப் பயன்படுத்துவதையே தான் நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். இந்த Nidle கருவி பொருத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்கள் அடைய முடியாத  தினசரி இலக்கு கொடுக்கப்படுகிறது; பணிநேரம் முழுவதும் எங்களுக்குத் தொடர்ச்சியான அழுத்தம் இருக்கிறது; நாங்கள் அடுப்பில் கொதிக்கும் நிலையில் இருப்பது போல உணர்கிறோம் என்கிறார் ஒரு பெண் தொழிலாளி.

ஒரு தொழிலாளி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் எவ்வளவு உற்பத்தி செய்திருக்கிறார்? அவரது உற்பத்தி திறன் எவ்வளவு என்பதைக் காட்டும் Nidle கருவியின் தரவுகள்:

ஸ்மார்ட் உற்பத்தி முறையின் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் உயரும்; வாழ்நிலை உயரும் எனப் பீற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகரித்து வருகிறதே தவிர, அவர்களது மாத ஊதியம் அதிகரிக்கவில்லை; 2023-ம் ஆண்டில் வங்கதேச அரசு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்கான மாத ஊதியத்தை 8000 டாக்காவிலிருந்து 12,500 டாக்காவாக உயர்த்தியது. ஆயத்த ஆடைத் தொழிற்சங்கங்கள் 23,000 டாக்காவை  மாத ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் எனக் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து பல கட்டங்களாகப் போராடி வருகிறது. மிக அற்பமான இந்த ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் வாழ்நிலையை எவ்விதத்திலும் உயர்த்தவில்லை தொழிலாளர்கள் தீராத நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதற்கு சாட்சியாக பல பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இரைப்பை அழற்சியுடன் அவதிப்படும் ஒருபெண் தொழிலாளி காலை உணவைத் தவிர்த்துவிட்டு பசியுடன் வேலைக்குச் செல்வதாகக் கூறுகிறார். நான் பசியால் வாடும் போது கூட எனது தினசரி இலக்கை அடைவதற்காக சாப்பிடுவது  இல்லை; எனக்கு முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் Nidle கருவி எனது பதட்டத்தைத் தூண்டுகிறது; இலக்கைப் பற்றி கவலைப்பட வைக்கிறது என்கிறார். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை செய்தால் தான் 16000 டாக்காவை சம்பாதிக்க முடியும் என்கிறார் அவர்.

சொல்லொணாத் துயரத்தில் வங்கதேசத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, உலகமயமாக்கல் கொள்கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து ஏழை நாடுகளிலும் இதுதான் நிலைமை. பன்னாட்டு பகாசுர ஆயத்த ஆடை நிறுவனங்களுடன் வங்கதேசத் தரகு முதலாளிகள் கைகோர்த்துக் கொண்டு  வங்கதேசத் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி மேலும் கொழுக்கவே  இந்த ஸ்மார்ட் உற்பத்தி முறை கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்களை மேன்மேலும் மலிவு கூலியில் சுரண்டி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கு பெயர் தான் ஸ்மார்ட் உற்பத்தி.

இத்தகைய கொடிய சுரண்டல் தான் வேலை வாய்ப்பு; உற்பத்தி திறன் மேம்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் இந்தச் சுரண்டலை ஏற்று உழைக்கப் பழகாவிட்டால் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் இதர ஏழை நாடுகளான கம்போடியா, வியட்நாமிற்கு சென்று தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என மிரட்டிப் பணியவைக்கும் யுக்தியே இந்த வங்கதேசத்து ஸ்மார்ட் உற்பத்தி முறை.

வங்கதேசத்து ஆயத்த ஆடைத் தொழிற்துறைச் சுரண்டலின் நவீன வடிவமான Nidle கருவியும், ஸ்மார்ட் உற்பத்தியும் இன்று வங்கதேசத்திற்கு என்றால் நாளை திருப்பூர் போன்ற இந்திய ஆயத்த ஆடைத் தொழிற் நகரங்களுக்கும் பரவும் என்பதில் ஐயமில்லை. புதிய பொருளாதாரக் கொள்கை எனும் நச்சு வளையத்திற்குள் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கம் இது போன்ற பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களையும், அவர்களின் கூட்டாளிகளான உள்நாட்டு முதலாளிகளையும் எதிர்த்து ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதையே வங்கதேசத்து ஸ்மார்ட் உற்பத்தி முறை நமக்கு உணர்த்துகிறது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன