இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில் நடத்திய போராட்டத்தின் மூலம் நாக்பூரின் பல பகுதிகளில் கலவரத்தை அரங்கேற்றியுள்ளது.
இக்கலவரத்தில் வாகனங்களும், கடைகளும், வீடுகளும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. 33 போலீசார் காயம் அடைந்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருக்கிறது. இக்கலவரம் குறித்து சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பட்நாவிஸ், சாவா(Chhaava) என்ற இந்தி திரைப்படம் அவுரங்கசீப்புக்கு எதிரான மனநிலையையும், கடுமையான எதிர்ப்பையும் மக்களிடம் உருவாக்கியிருக்கிறது. இக்கலவரம் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று எனப் பேசியிருக்கிறார்.
ஒரு திரைப்படம் எப்படி கலவரத்தைத் தூண்டமுடியும்? இதே கேள்வியை மும்பை செசன்ஸ் கோர்ட்டும் எழுப்பியுள்ளது. இரு கைகளைத் தட்டாமல் ஓசை வருவதில்லை. அதுபோல வெறும் திரைப்படம் மட்டும் கலவரத்தைத் தூண்டி விட முடியுமா? நிச்சயமாக முடியாது. கலவரத்தை அரங்கேற்றுவதற்கான தேவையான அரசியல் சூழ்நிலைகளும் அதற்கான சமூக சக்திகளும் வேண்டும். மகாராஷ்டிரா மாநில ஆளும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் கும்பலும் இப்படத்தை வைத்துக் கலவரத்தைக் கட்டியமைத்தன என்பதே உண்மை. இதையொட்டி நடந்த நிகழ்வுகளைக் காலவரிசையில் பார்த்தாலே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சம்பாஜி மன்னரைப் பற்றி எடுக்கப்பட்ட சாவா(Chhaava) திரைப்படம் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் வெளியானது. இப்படமானது சம்பாஜியை ஒரு இந்துமத காவலர் போலவும் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை “கொடூரமான இந்து விரோதி” போலவும் சித்தரிக்கிறது. 126 நிமிடப் படத்தில், 40 நிமிடங்கள் சம்பாஜியின் சித்திரவதைக் காட்சிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதிலிருந்தே இப்படம் காவி கும்பலின் அரசியல் நோக்கத்திற்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். ஆனால் மத்திய கால இந்திய வரலாற்றை ‘உன்னத’ இந்து மன்னர்களுக்கும் ‘தீய’ முஸ்லீம் மன்னர்களுக்கும் இடையிலான இந்து-முஸ்லீம் மதப்போர் என்ற கண்ணோட்டத்திலே (ஆர்எஸ்எஸ்-இன் கண்ணோட்டம்) முழுப்படமும் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த (மார்ச் முதல் வாரத்தில்) மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அபு அஸ்மி, “அவுரங்கசீப் ஒரு கொடூரமான நிர்வாகி கிடையாது; அவர் நிறைய இந்து கோயில்களைக் கட்டியுள்ளார்; சம்பாஜி மகாராஜாவுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே நடந்த போர் இந்து-முஸ்லீம் போர் அல்ல. அது நாட்டைக் கைப்பற்றுவதற்கான போர்” என்று பேசியிருந்தார்.
உடனே, ‘மனம் புண்பட்டுவிட்ட இந்துக்கள்’, இந்தியா கூட்டணியில் உள்ள உத்ததேவ் தாக்கரே முதல் பாஜக, ஷிண்டே கும்பல் வரை அஸ்மியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பித்தனர். உடனே பட்நாவிஸ் சோ, அபு அஸ்மியை சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாகவும் அபு அஸ்மி சிறைக்குப்போவது 100% உறுதி என்றும் அறிவித்தார்.
“அவுரங்கசீப் பற்றிய ஒரு வரலாற்றாசிரியரின் புத்தகத்தை மேற்கோள் காட்டி நான் பேசினேன், நமது சிறந்த தலைவர்கள் பற்றி நான் தவறாக பேசவில்லை. எனவே, திரிக்கப்பட்ட எனது பேச்சுக்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், நான் அவற்றைத் திரும்பப் பெறுகிறேன்.” என்று அஸ்மி மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரச்சனை இத்தோடு முடிந்திருக்க வேண்டியது. ஆனால் சங்கிகள் விடுவதாக இல்லை. மனம் புண்பட்டுவிட்டதே சும்மா விடமுடியுமா?
சதாரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான உதயராஜே போஸ்லே (சிவாஜியின் வாரிசு), அவுரங்கசீப்பின் கல்லறை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு தரைமட்டமாக்க வேண்டும் எனப் பேசி பிரச்சனையை மீண்டும் கிளப்பியுள்ளார். பிறகு ஒருவர் பின் ஒருவராக இதே கோரிக்கையை பேச ஆரம்பித்தனர். இந்தியா கூட்டணியிலுள்ள உத்ததேவ் தாக்கரேவோ பாஜக தான் அவுரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்கிறது என தனது மராத்தா பாசத்தை வெளிப்படுத்தினார்.
பட்நாவிஸ்சோ, ஒருபடி மேலே சென்று “மசூதியை இடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு ஆனால் அது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான நிதியும் மத்திய அரசு தான் வழங்குகிறது. இதில் மாநில அரசு தலையிட முடியாது. சட்ட ரீதியாகவே கல்லறையை நாங்கள் அகற்றுவோம்.” என்றார். பாஜக ஆதரவு ஊடகங்களும், மகாராஷ்டிராவின் முக்கியப் பிரச்சனையே அவுரங்கசீப்பின் கல்லறைதான் என்று தனது பங்கிற்கு முஸ்லீம்கள் மீதான விரோதத்தை பிரச்சாரம் செய்தது.
கடந்த பத்து நாட்களாகவே அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோஷத்துடன் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் மகாராஷ்டிராவில் பல போராட்டங்களை நடத்தி வந்தது. கடந்த திங்களன்று நாக்பூரில் விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் நடத்திய போராட்டத்தில் குர்ஆன்-னையும், இஸ்லாமியப் புனித வாசகங்கள் பொறிக்கப்பட்ட துணியையும் எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டு பின்னர் அது கலவரமாக மாறியிருக்கிறது.
இவ்விஷயத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் முழுமையாக அம்பலப்படவே, “அவுரங்கசீப்பைப் பற்றி தற்போது பேசுவது அவசியம் இல்லாதது” என்று கூறி இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விலகிக் கொண்டது. ஆனால் விஷ்வ ஹிந்துப் பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்ளைச் சேர்ந்த எட்டுப்பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி தாங்களாகவே போலீஸிடம் சரணடைந்துள்ளனர். குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது இந்த பாசிஸ்டுக் கூட்டம்.
இப்பிரச்சனையில் அவுரங்கசீப்பின் கல்லறையை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்பதே மகாராஷ்ட்ராவிலுள்ள பெரிய கட்சிகளின் கோரிக்கை. இவர்களது அடிப்படையே முஸ்லீம் வெறுப்பும் போலி மராத்தா பெருமிதமும்தான். இதில் பாஜகவுக்கோ அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனாவிற்கோ பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது.
முஸ்லீம் வெறுப்பு தான் காவி பாசிஸ்டுகளின் அரசியல் ஆயுதம். இதனை முன்வைத்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்து ஓட்டுவங்கி முழுவதையும் தனதாக்கிக்கொள்ள முடியும் எனற கணக்கில் பாஜக வேலைசெய்கிறது. பாஜகவைத் தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்று சொல்லும் சிவசேனாவோ பாஜகவை விட தீவிர முஸ்லீம் வெறுப்பையும் மராத்தா பெருமையையும் தனது அரசியலாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பிறகட்சிகளும் இது பற்றிக் கண்டுகொள்வதில்லை. எனவே பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற போர்வையில் ஒளிந்துள்ள பிறகட்சிகளும் இந்துத்துவ ஆதரவாளர்கள் தான் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். இதற்கு திமுகவும் விதிவிலக்கல்ல.
* * * * * * *
ஆர்.எஸ்.எஸ்-பாஜகவை பொறுத்த வரை முஸ்லீம்கள் அந்நியர்கள். இந்து மன்னர்களைப் போரில் தோற்கடித்ததன் மூலம் இந்துக்களை முஸ்லீம்களாக மதமாற்றினர். இந்து கோவிகளை இடித்தனர். முஸ்லீம்களை ஆதரித்து பேசுவதென்பது இந்தியாவை அவமதிப்பது என்கின்றனர்.
இசுலாமிய மன்னர்கள் அனைவரும் மதவெறியர்களா? அதனால்தான் அவர்கள் இந்து கோயில்களை இடித்தார்களா? இந்து மன்னர்களும் மதத்தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ் கூறுவது போல சகிப்புத் தன்மை மிக்கவர்களா?
“கஜினி முகமது மற்ற பல கோயில்கள் இருக்க சோமநாதபுரத்தை மட்டும் ஏன் கொள்ளையடிக்க வேண்டும்? 11-ம் நூற்றாண்டின் துவகத்திலேயே இந்த ஆலயத்திற்கு 10,000 கிராமங்களும், 500 தேவதாசிகளும், 300 முடி திருத்துபவர்களும் சொந்தமாக இருந்தனர். மற்ற சொத்துக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. எனவே இந்து மதத்திற்கெதிரான வெறியல்ல கஜினியின் கொள்ளைக்கு காரணம்; மாறாக சோமநாதபுரம் ஆலயத்தின் சொத்துதான். இத்தகைய கொள்ளையை இந்திய வரலாற்றில் இசுலாமியர்கள் மட்டும்தான் செய்தார்களா என்றால் இல்லை.
11-ம் நூற்றாண்டின் இறுதியில் காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ஹர்ஷன் என்னும் இந்து மன்னன் தனது அரசவையில் விக்கிரகங்களைத் திருடுவதற்கென்றே ஒரு இலாகாவையும் அதற்கு ஒரு அதிகாரியையும் (தேவோத்பாதனா) நியமித்திருந்தான். மூட நம்பிக்கைகளையும் பொய்களையும் பரப்புவதன் மூலம் மக்களிடம் பணம் வசூல் செய்யலாம் என்று சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் மன்னனுக்கு ஆலோசனை வழங்குகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்கள் தனது மதத்தையே சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கிருந்த கோயில்களை இந்து மன்னர்கள் சூறையாடினார்கள். இதற்கு காரணம் கோயில்களில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்து கிடந்தது தான். இப்படிக் கொள்ளையடிப்பதை கஜினி மட்டும் செய்யவில்லை, ராஜராஜ சோழன் முதல் ஹர்ஷன் வரை அனைவரும் செய்தனர்.
இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?
ஏன்? டெல்லியை ஆண்ட சுல்தான் ஷா அரசைத்தாக்கி அழித்த தைமூர் கூட ஒரு இசுலாமியன் தானே! இந்துக்களுடன் சேர்ந்து விட்டதால் முகலாயர்களின் புனிதம் கெட்டுவிட்டதென்றும் அதனால்தான் அவர்கள் மீது படையெடுப்பதாகவும் அன்று தனது ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தான் துருக்கியனான தைமூர். முஸ்லீம் மதவெறியன் என இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பலால் அவதூறு செய்யப்படும் திப்பு சுல்தான் எவ்வாறு முறியடிக்கப்பட்டான்? திப்புவை ஒழித்துக்கட்ட பிரிட்டிஷாருக்கு உதவியவர்கள் யார்? ’இந்து’க்களான மராட்டிய மன்னர்களும், முஸ்லீமான ஐதராபாத் நிஜாமும்தானே ஆர்.எஸ்.எஸ். ”தேசபக்தர்கள்” இதற்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?” (புதிய கலாச்சாரம் டிச1990).
சம்பாஜி மகராஜ் ஒரு குடிகாரன், பெண்பித்தனாக இருந்ததினால் சிவாஜி தன்னுடைய மகன் சம்பாஜியை சிறையில் அடைத்ததாக மூத்த சங்கிகளான கோல்வல்கர் மற்றும் சாவர்க்கரும் எழுதியுள்ளனர். சம்பாஜி அவுரங்கசீப்போடு சேர்ந்து கொண்டு சிவாஜிக்கு எதிராக போரிட்டு இருக்கிறார். மேலும் அவுரங்கசீப்புடன் இணைந்து பிஜாப்பூரின் அதில்ஷாவை எதிர்த்துப் போரிட்டிருக்கிறார்.
சிவாஜியின் இராணுவம் சூரத்தை கொள்ளையடித்ததையும் இராணுவம் செய்த அட்டூழியங்களையும் பால் சமந்த் தனது புத்தகத்தில் விவரித்திருக்கிறார். சாம்பாஜியின் மராட்டியர்கள் கோவாவைத் தாக்கியதை “இதுவரை இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டதில்லை…” என்று போர்ச்சுகீசியரின் குறிப்பு (வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரால் மேற்கோள் காட்டப்பட்டது) கூறுகிறது.
அக்பருக்குப் பிறகு ஆண்ட ஔரங்கசீப் ராஜா ரகு ராஜ் என்ற இந்துவைத் தன்னுடைய திவானாக வைத்துக்கொண்டார். மான்சாப் என்ற உயர் பதவிகள் ராஜபுத்திரர்களுக்கே வழங்கப்பட்டன. முக்கியமான மாகாணங்களின் ஆளுநர்களாக இந்துக்களையே நியமித்தார். ஔரங்கசீப்பின் நிர்வாகத்தில் 31% ராஜபுத்திரர்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்துகள் என்பதற்காக சூரத்தையும் கோவாவையும் மராத்தாக்கள் சூறையாடமல் விட்டுவிட்டார்களா? அல்லது முஸ்லீம் என்பதற்காக ராஜபுத்திரர்கள் முகலாய மன்னர்களின் அரசாங்கத்தில் வேலை செய்யவில்லையா?
மன்னராட்சிக் காலத்தில், இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமே மதம் அரசியலுடன் பிரிக்க முடியாதபடி கலந்திருந்தது. மன்னனின் மதம் எதுவோ அதுவே அரசு மதமாக இருந்தது. பிற மதத்தினர் ஒடுக்கப்பட்டனர் அல்லது பாரபட்சமாக நடத்தப்பட்டனர். படையெடுப்புகள் நடத்தப்படும் போது வெற்றி கொள்ளப்பட்ட நாட்டினர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பின் அவர்களுடன் சேர்ந்து அவர்களது மதத்தையும் ஒடுக்குவதென்பது அடக்குமுறையின் வடிவமாக இருந்தது இதற்கு யாரும் விதிவிலக்கில்லை.
முஸ்லீம் வெறுப்பு அரசியல் என்ற ஒற்றை புள்ளியை மையமாக வைத்து கடந்த 100 வருட காலமாக ஆர்எஸ்எஸ் காவிக்கும்பல் ஏகாதிபத்திய சேவையைச் செய்துவருகிறது. கடந்த 40 ஆண்டுகாலமாக பாஜகவும் முஸ்லீம் வெறுப்பைத் தேசிய அரசியலில் கலந்து இன்று காவி-கார்ப்பரேட் பாசிசமாக வளர்ந்து நிற்கிறது.
இந்தப் பாசிசக்கும்பல், மகாராஷ்டிரா அரசாங்கம் கல்லறையை அகற்றாவிட்டால், கரசேவையின் மூலம் கல்லறையை இடித்துத் தரைமட்டமாக்குவோம் என்று மிரட்டுகிறது. கரசேவை நடத்தவேண்டியது கல்லறைக்கா அல்லது ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிசக் கும்பலுக்கா என்பதை இனி நாம் தான் முடிவுசெய்ய வேண்டும்.
* * * * * * *
- செல்வம்
https://theaidem.com/en-indian-history-aurangzeb-chhava-and-selective-historiography/