பசுமைப் புரட்சியின் நச்சு மரபுடன் போராடும்
பஞ்சாப் விவசாயிகள்

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றக் கெடுநோக்குடன் பாசிச மோடி அரசு அன்றிலிருந்து துடித்துக் கொண்டிருக்கிறது.

2020-21 ஆண்டில் நடைபெற்ற போராட்டங்களைப் போல மீண்டும் ஒரு போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும் எனத் தில்லியை நோக்கி இரண்டாவது முறையாக அணிவகுத்துச் சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தங்களின் முக்கியக் கோரிக்கையான அனைத்து விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனக் கடந்த ஒரு வருடமாகப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்திற்கும் அம்மாநிலத்தில் வீச்சாக அமல்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சிக்கும் உள்ள தொடர்பு, அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு அறுவடை இயந்திரத்தின் விளக்குகளால் தங்கத்தைப் போன்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் பஞ்சாப் மாநிலம் பத்திந்தா மாவட்டத்தின் செமாவில் உள்ள கோதுமை வயல்

1960 களில் இந்தியாவில் திணிக்கப்பட்ட பசுமைப்புரட்சியானது, பட்டினியை எதிர்த்துப் போரிடும் ஆயுதம் எனவும், காலனிய ஆட்சியினால் சீர்குலைந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றவும் இதனை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தியதாக இந்திய ஆளும் வர்க்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பிறகு பசுமைப்புரட்சி பஞ்சாப்பின் சுற்றுச்சூழலுக்கும், விவசாயிகளுக்கும் எப்படி பேரழிவாக இருக்கிறது என்பதை பஞ்சாப் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்; இத்தனை ஆண்டுகளில் பசுமைப்புரட்சி செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுமையை இந்திய விவசாயிகள் ஏற்றுக் கொண்டதோடு இந்திய விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை கேரவன் இதழின் நிருபர் கடந்த ஆறு ஆண்டுகளாக எடுத்த புகைப்படத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். மார்ச் மாத கேரவன் இதழில் வெளிவந்த பஞ்சாப் விவசாயிகள் பற்றிய புகைப்படக் கட்டுரையோடு சில பகுதிகளைச் சேர்த்து இங்கு வெளியிடுகிறோம்

1960 களில் கலப்பின விதைகள், இராசயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பசுமைப்புரட்சி பஞ்சாப்பில் தானிய உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பதில் வெற்றி பெற்றது. இந்தியாவின் நிலப்பரப்பில் வெறும் இரண்டு விழுக்காட்டிற்கும் குறைவான பரப்பளவில் இருக்கும் பஞ்சாப் இந்திய கோதுமை உற்பத்தியில் 16 விழுக்காட்டையும்; அரிசியில் 11 விழுக்காட்டையும் உற்பத்தி செய்கிறது.

பஞ்சாப், இராஜஸ்தான், ஹரியானாவில் உள்ள 4 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு பயன்படும் சட்லெஜ் ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்ட பக்ரா அணை

 

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்திலுள்ள பருவகால நதியான கக்கார். இமயமலையில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கக்கார் நதியில் வெள்ளப்பெருக்கும், வறட்சியும் அடிக்கடி ஏற்படுகின்றது. கக்கார் நதியில் நீர்வரத்து குறைந்து வருவதை உற்று நோக்கும் ஒரு விவசாயி.

இந்திய நிலத்தடி வாரியத்தின் கணக்கீடு பஞ்சாப்பில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு 49 செ.மீட்டர் குறைந்து வருவதாகவும் 2039 ஆண்டுக்குள் பஞ்சாப்பில் நிலத்தடி நீர் முற்றிலுமாக தீர்ந்துபோகக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

பத்திந்தா மாவட்டத்தில் மூன்று தலைமுறைகளாக கிணறு வெட்டும் வேலையை செய்து வருகிறது ஹர்விந்தர்சிங்கின் குடும்பம் ஹர்விந்தர் அக்கிராமங்களில் கிணறு வெட்டும் போது எத்தனை அடிகள் தோண்டினால் நீர் வருகிறது என்பதைக் குறித்துக்கொள்ள தன் சட்டைப்பையில் எப்போதுமே ஒரு டைரியை வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பத்திந்தா மாவட்டத்தில் ஒன்றரை அடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும். ராம்புராபுல் எனும் பகுதியில் 2017 இல் 80 அடியாக இருந்த நீர்மட்டம் 2024 இல் 110 அடியாகக் குறைந்துள்ளது எனக் கூறுகிறார்.

பஞ்சாப்பின் குளிரைத் தாக்குப் பிடிப்பதற்காக தன் உடம்பில் கடுகு எண்ணெயைத் தேய்த்து தானியச் சந்தையில் வேலைக்குத் தயாராகும் பிகாரின் புலம் பெயர் தொழிலாளி

 

அதிகாலையில் எழுந்து வீடு வீடாகப் பால் சேகரித்து அனுப்பும் வேலையை முடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறும் பர்னாலாவைச் சேர்ந்த இளைஞர்கள்.

 

மான்சா பகுதியில் மக்காச் சோளத்தை அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள். மூன்றாவது பயிராக சோளத்தைப் பயிரிட்டாலும் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது

1961 இல் பஞ்சாப்பில் 7445 ஆக இருந்த கிணறுகளின் எண்ணிக்கை 2021 இல் 15 இலட்சமாக அதிகரித்துள்ளது. நிலத்தடிநீர் வற்றிவரும் பஞ்சாப்பை பருவநிலை மாற்றமும் அம்மாநில நிலைமையை மோசமாக்கியுள்ளது. ஆற்றுப்பாசனம், பருவமழையை நம்பி விவசாயம் பொய்த்து போவதால் பஞ்சாப் விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தை நம்பியே பெரும்பாலும் நெற்பயிரை பயிர்செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. ஒரு கிலோ விளைச்சலுக்கு சுமார் 5000 லிட்டர் நீர் தேவைப்படும் நெல்ப்பயிரை குறைந்த பட்ச ஆதார விலையை பெறும் பொருட்டே பயிர்செய்யும் நிலைக்கு பஞ்சாப் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இந்த 5000 லிட்டர் நீரை ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாகப் பருகும் அளவை வைத்துப்பார்த்தால் இதனை 5 ஆண்டுகளுக்குப் பருக முடியும்.

விக்ரம் சிங் (30) எனும் விவசாயி சென்ற ஆண்டு பயிரிட்ட கோதுமை பயிர் ஆலங்கட்டி மழையால் பாதிப்படைந்தது. இப்பாதிப்பிற்கு முன்னர் அவர் பயிரிட்ட பருத்தியைப் பூச்சிகள் தாக்கி விளைச்சலை நாசப்படுத்தியது. இதனால் நொடிந்து போன விக்ரம், புதிதாக தனது நிலத்தில் கிணறு வெட்டி, கிணற்றுப் பாசனம் மூலம் நெற்பயிர் செய்து வருகிறார்.

பருவநிலை அடிக்கடி மோசமாக இருப்பதால், கிணற்றுப்பாசனமே எங்களது பயிர்களைக் காப்பாற்றுகின்றன. பஞ்சாப்பில் பருவநிலை தவறும் போது நிலங்களின் வெப்பநிலை அதிகரிப்பதால் பூச்சிக் கொல்லிகளின் செயல் திறன் குறைகிறது. இதனால் விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பாற்றும் பொருட்டு அதிகளவு பூச்சிக்கொல்லிகளை தமது நிலத்தின் மீது பயன்படுத்துகின்றனர்.

பெரிய அளவில் இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் தேவைப்படும் உயர் விளைச்சல் ரகங்களை சார்ந்திருப்பது மண்ணைச் சீர்குலைத்து விடுவதற்கு இட்டுச் செல்கிறது. இரசாயனங்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க மண்ணின் வளம் அரித்துச் செல்லப்படுகிறது. இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் அதிக மகசூல் தரும் விதைகள் முளைப்பதில்லை. தமது முந்தைய ஆண்டின் மகசூல் எடுப்பதற்கே பஞ்சாப் விவசாயிகள் சென்ற ஆண்டை விட அதிகளவு பூச்சிக் கொல்லிகளை தமது நிலத்தில் பயன்படுத்துகின்றனர்.

நெல் வைக்கோல் எரிக்கப்படும் காட்சி

 

நெற்பயிர்களின் வைக்கோலை எரிக்காமலேயே கோதுமை விதைகளை விதைக்கும் ஹேப்பி சீடர் எனும் இயந்திரத்தை பற்றிய விவசாயிகள் – பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. ஆனால் ஹேப்பி சீடர் இயந்திரத்தின் மூலம் விதைத்தாலும் அவ்வயல்கள் பூச்சிக் கொல்லிகளின் தாக்குதலுக்கு தப்புவதில்லை.

 

கால்வாய் பாசனத்திற்கான நீரைத் திறக்கக்கோரி போராடிய விவசாயிகள், போராட்டத்தின் இறுதியில் உருவபொம்மையை எரிக்கும் காட்சி.

கடந்த ஆகஸ்டு 2024 இல் ஒன்றிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் அளித்த தரவுகளின்படி நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் போன்ற உரங்களின் மொத்தப் பயன்பாட்டில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் பஞ்சாப் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 247.61 கிலோ உரங்களைப் பயன்படுத்தி இருக்கிறது. இது தேசிய சராசரியான ஒரு ஹெக்டேருக்கு 139.81 கிலோவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

இந்திய விவசாய நிலப்பரப்பில் வெறும் 1.53 சதவீதத்தை கொண்டிருக்கும் பஞ்சாப், தேசிய சராசரியில் 9% உரங்களைப் பயன்படுத்துகிறது. கடந்த 40 ஆண்டுகளில் (1980 முதல் 2018 வரை) NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) பயன்பாடு சுமார் 180 சதவீதம் பஞ்சாப்பில் அதிகரித்திருக்கிறது.

பசுமைப்புரட்சி செயல்திட்டத்தின் விளைவால் உணவு தானிய உற்பத்தியில் சிறந்த சாதனை படைத்து வந்த பஞ்சாப் மோசமான மண்வளப் பிரச்சினைகள், நிலத்தடி நீர் பிரச்சினைகளை மட்டுமல்லாமல் உயிரினச்சூழல் பிரச்சினைகளையும் சந்திந்து வருகிறது.

இராஜஸ்தானில் உள்ள ஆச்சார்யா துளசி பிராந்திய புற்றுநோய் மருத்துவமனையில் பஞ்சாப் மக்களின் மார்பு எக்ஸ்ரே புகைப்படங்கள் உலர வைக்கப்படும் காட்சி.

பஞ்சாப் மக்களின் சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பசுமைப்புரட்சி ஏற்படுத்திய தீங்கு அளவிடற்கரியது. பஞ்சாப்பில் இரசாயன உரங்களுடனும் பூச்சிக்கொல்லிகளுடனும் இணைந்த துன்பங்களுக்கு விவசாயிகள் ஆட்படுகின்றனர். பெரிய அளவில் இரசாயன இடுபொருட்கள் உதவியுடன் வளர்க்கப்படும் உணவு அதன் தீமை பயக்கும் எச்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. பூச்சிக்கொல்லிகள், இரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்துவது உயிரினச் சூழல் இடர்பாடுகளுக்கு வித்திடுகிறது. நைட்ரஜன் உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவது நீர்நிலைகளுக்குள் கசியச் செய்வதற்கு இட்டுச்செல்லும். இவை நுண்ணியிரிகளால் நைட்ரேட்டுகளாகவும், கார்சினோ ஜென்களாகவும் மாற்றப்படும். அவை திரும்பவும் உணவுச் சங்கிலி மூலமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வந்து சேரும். பசுமைப்புரட்சியினால் ஏற்பட்ட இந்த அவலத்திற்குச் சாட்சியாக இன்று பஞ்சாப் மக்கள் இருக்கிறார்கள்.

பஞ்சாப்பில் புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள் அதிகரிப்பதற்கான காரணம் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியதே என்ற ஒருமித்த கருத்து பஞ்சாப் விவசாயிகளிடம் பரவலாகக் காணப்படுகிறது.

உற்பத்தித்திறனை அதிகரிக்கும் போட்டியில் நாங்கள் சிக்கிக் கொண்டு இறுதியில் எங்களுக்கு நாங்களே தீங்கு விளைவித்துக் கொண்டோம் என்கிறார் சிறுநீரக நோயாளியான இக்பால் சிங் (66) இவர் டயாலிசிஸ் செய்வதற்கு 40 கிமீ தூரம் பயணம் செய்கிறார். நாங்கள் உண்ணும் உணவிலும், பாலிலும் பூச்சிக் கொல்லிகள் நிறைந்துள்ளன. இரசாயனங்கள் தான் அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்

கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் பஞ்சாப்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கர்ப்பப்பை புற்று, வாய்ப்புற்று, மார்பக புற்றுநோய் 4 மடங்கு அதிகரித்திருத்திருக்கிறது. இதுமட்டுமில்லாமல் பஞ்சாபின் லூதியானாவில் இருந்து எடுக்கப்பட்ட பசுவின் பால் மாதிரிகளில் (samples) 6.9 சதவீதத்தில் டைக்ளோரோ-டைஃபீனைல் ட்ரைக்ளோரோ எத்தேன் அல்லது டிடிடி, எண்டோசல்பான் போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளின் செறிவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

மான்சா பகுதியில் உள்ள கிராமப்புற வேலைவாய்ப்பு தளம். பஞ்சாப் விவசாய வேலைகளில் அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் பல நாட்கள் வேலை இல்லாமல் இருப்பதாக கூறுகிறார்கள் விவசாயப் பெண் தொழிலாளர்கள்

 

மான்சாவில் உள்ள மருத்துவர் மாலுக் சிங் என்பவர் கோவிட் காலத்தில் அவர் செய்த உதவியால் மான்சா மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார். சுமார் 23 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வரும் மாலுக் சிங், சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் இருப்பதைக் கவனித்து உள்ளூர் மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.

 

கால்நடைகளிடமிருந்து பயிர்களை காக்கும் வேலையில் தனது தந்தை குர்பஷன் சிங்கிற்கு உதவும் பொருட்டு குதிரையில் அமர்ந்து பயிரை கண்காணிக்கும் 14 வயது நங்கு எனும் சிறுவன். அங்குள்ள பல விவசாயிகளால் கூட்டாக குர்பஷன் சிங் குடும்பம் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறது. ஊதியமாக கோதுமை வழங்கப்படுகிறது. இதை இவர்கள் சந்தையில் விற்று அவர்களது குடும்பச் செலவுகளைப் பராமரிக்கிறார்கள்

பஞ்சாப்பின் பத்திந்தாவிலிருந்து இராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்திற்கு ஒவ்வொரு இரவும் பத்திந்தா-பிகானேர் எக்ஸ்பிரஸ் எனும் இரயில் சென்று வருகிறது. சுமார் 300 பேர் வரை அமரும் இந்த இரயிலில் 100 பேர் புற்றுநோயாளிகளாக இருக்கின்றனர். இவர்கள் இராஜஸ்தானில் உள்ள ஆச்சார்யா துளசி பிராந்திய புற்றுநோய் மருத்துவமனைக்கு தமது கைப்பையில் மருத்துவச் சீட்டுகளுடன் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர் இந்த இரயிலில் இலட்சக்கணக்கான புற்றுநோயாளிகள் பய்ணம் செய்து வருவதால் இது கேன்சர் எக்ஸ்பிரஸ் என்றே அழைக்கப்படுகிறது

பசுமைப்புரட்சியின் விளைவு இந்தியா எதை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது என்பதை தீர்மானிப்பதும், இந்திய விவசாயத்தை ஏகாதிபத்திய மூலதனத்தின் நீட்டிக்கப்பட்ட ஒரு உறுப்பாக ஆக்குவதாகவே இருந்தது. பசுமைப்புரட்சிக்கு முன்னர் பல்வகை பயிர்களை பயிரிட்ட பஞ்சாப் விவசாயிகள் தற்போது நெல், கோதுமையையே பிரதானமாகப் பயிரிடுகின்றனர். இவ்விரண்டு பயிர்களுக்கு தான் இந்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையைக் கொடுக்கிறது.

உணவு சங்கிலியில் பூச்சிக் கொல்லிகள் அதிகளவு கலந்திருப்பதால் பஞ்சாப் விவசாயிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமது சொந்த நுகர்வுக்காக தமது நிலத்தில் மாற்றுப் பயிர்களை பயிர் செய்து வருகின்றனர். பத்திந்தா வில் உள்ள டாடேவைச் சேர்ந்த பால்வந்த் சிங் (35) மற்றும் குர்பான்ஸ் சிங் (48) போன்ற பல விவசாயிகள், தங்கள் சொந்த நுகர்வுக்காக, தங்களது நிலத்தில் இரசாயனப் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் இல்லாமல் காய்கறிகள் மற்றும் கோதுமையைப் பயிரிட்டு வருகின்றனர்.

பயிர் பல்வகைப்படுத்தல் குறித்து அரசிற்கு பரிந்துரைகளை வழங்கிய குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தில்லான் எனும் விவசாயி. “நெல்லின் பிரச்சனை என்னவென்றால், அது லாபகரமானது. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதால் தான் விவசாயிகள் மற்ற பயிர்களை பயிரிடுவதில்லை என்கிறார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கோடையில் பஞ்சாப் விவசாயிகள் கோதுமை விளைச்சலில் சராசரியாக ஹெக்டேருக்கு சுமார் 500 கிலோ அதிக மகசூலைப் பெற்றிருக்கின்றனர். அதிக வெப்பத்தை தாங்கும் ஒரு புதிய வகை விதையை விதைத்து இந்த மகசூலை பஞ்சாப் விவசாயிகள் பெற்றிருக்கின்றனர்.

அதிக வெப்பத்தை தாங்கும் புதிய வகை கோதுமை விதையின் மூலம் அதிக மகசூலை கடந்த ஆண்டு பஞ்சாப் விவசாயிகள் பெற்றிருக்கின்றனர். கோதுமை மூட்டைகள் தானியச் சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி.

 

நெற்பயிரின் அறுவடை சமயத்தில் மழை பெய்வதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகிறது. 17 சதவீதத்திற்கும் மேலான நெல் ஈரப்பதத்தை அரசு கமிஷன் மண்டிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் நெல்லின் ஒட்டுமொத்த எடையில் 2% குறைவாக தனியார் கமிசன் ஏஜெண்டுகளிடம் விவசாயிகள் விற்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது அல்லது நெல்லின் ஈரம் காயும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. நெற்மூட்டைகளிடையே கட்டில் போட்டு படுத்துறங்கும் ஒரு விவசாயி.

 

கால்வாயிலிருந்து வயல்களுக்கு தண்ணிர் பாய்ச்சுவதை விவசாயிகள் தங்களிடையே சுழற்சி முறையில் செய்து வருகிறார்கள். அச்சுழற்சி அடிப்படையில் தனது கோதுமை வயலுக்கு நீர் சரியாக பாய்ந்திருக்கிறதா என இரவு நேரத்தில் பார்க்கும் ஒரு விவசாயி

 

தீபாவளியன்று தனது கிணற்றில் விளக்கை ஏற்றும் ஒரு விவசாயி

 

தனது வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட ஒரு விவசாயின் இறுதிச்சடங்கில் பங்கெடுக்கும் சக விவசாயிகள்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. மோடி அரசு, மூன்று வேளாண் சட்டங்களை திணிப்பதை எதிர்த்து இரண்டாவது முறையாக போராடுவதற்கு அணிவகுத்துச் சென்ற போது ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். கானூர் போன்ற பல போராட்டக் களங்களில் பஞ்சாப் விவசாயிகள் போராடி வருகின்றனர். இளைஞர்கள் இரவு நேரத்தில் போராட்டக் களத்தில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

எழுபது வயதான தேஜாசிங் எனும் விவசாயி “அரிசி”, பஞ்சாப்பை கொன்று வருகிறது. அரசு அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தும் வரை எங்களது போராட்டம் தொடரும். நாங்கள் இங்கிருந்து திரும்ப செல்லப்போவதில்லை என்கிறார்.

எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என தனது தலைப்பாகை வரிந்து கட்டும் ஒரு முதிய விவசாயி.

 

புகைப்படங்கள் நன்றி: கேரவன் இதழ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன