“உக்ரைன் இந்தப் போரில் வெல்வதன் மூலம் தனது இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது எல்லைகளை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். அதற்கு அமெரிக்கா எல்லா உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்கும்” – சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்து கூறியதுதான் இது.
இரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் போர் விமானங்கள், ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. போர் தொடங்கி இதுவரை சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதாவது இந்திய ருபாய் மதிப்பில் 17 லட்சம் கோடி ருபாய்க்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.
இந்த உதவிகளையெல்லாம் உக்ரைனின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக வழங்கியதாக இதுவரைக்கும் அமெரிக்கா கூறிவந்தது. ஆனால் ஏகாதிபத்தியங்கள் என்றைக்கும் ஒரு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நினைக்காது, மாறாக இறையாண்மையை அழித்து தங்களின் சுரண்டலுக்கு வழிவகுக்க, அனுமதிக்க வேண்டும் என்பதுதான், எப்போதும் ஏகாதிபத்தியங்களின் நிபந்தனையாக இருக்கும்.
உக்ரைன் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனை ஆதரிப்பதற்கு அமெரிக்காவிற்கு அந்த நாடு கொடுக்க வேண்டிய விலை என்ன என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. இதுவரை திரைமறைவில் பிடன் அரசுக்கும் ஜெலன்ஸ்கி அரசுக்கும் நடந்த பேரங்கள் தற்போது டிரம்ப் வந்தவுடன் பகீரங்கமாக நடக்கிறது.
உக்ரைனின் அருமண் கனிமங்களை (rare earth minerals) அமெரிக்காவின் கொள்ளைக்குத் திறந்துவிடும் ஒப்பந்தம் ஒன்று வரும் வெள்ளியன்று (28/2/2025) கையெழுத்தாகவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் போது, ஒரு டிரில்லியன் டாலர் (87 லட்சம் கோடி ருபாய்) மதிப்பிலான அருமண் கனிமங்களை அமெரிக்கா உக்ரைனிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இதுவரை உக்ரைன் போருக்கு நிதிஉதவியாக கொடுத்த பணத்தை வட்டியுடன் வசூலிக்கப்போவதாக செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறியிருக்கிறார்.
இது ஏதோ டிரம்ப் வந்ததால் ஏற்பட்ட மாற்றம், பிடன் தலைமையிலான ஆட்சி நடந்த போது அமெரிக்கா இது போல் நடந்து கொள்ளவில்லை என சிலர் கூறுகிறார்கள் ஆனால் இந்த ஒப்பந்தம் பிடன் ஆட்சியின் போதே விவாதிக்கப்பட்டதுதான்.
இரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதன் மூலம் அந்த பிராந்தியத்தில் இரஷ்யாவின் செல்வாக்கினை குறைக்க முடியும் என்பது உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியதற்கு முக்கிய காரணம் என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா அளித்த நிதி உதவி 200 பில்லியன் டாலர்களையும் தாண்டி உக்ரைன் தன் பங்கிற்கு 150 பில்லியன் டாலர் அளவிற்கு செலவு செய்து ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. அந்த ஆயுதங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீது மார்டின் மற்றும் ரேதியான் ஆகிய நிறுவனங்களிடமிருந்தே வாங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதிஉதவிக்கு மாற்றாக அந்நாட்டின் கனிமவளத்தையும், விவசாய நிலங்களையும், உற்பத்தியையும் அமெரிக்க ஏகபோக நிறுவனங்களின் வேட்டைக்குத் திறந்துவிட நிர்பந்திக்க வேண்டும் என பிடன் அரசு ஒவ்வொரு முறை நிதி உதவி அளித்த போது அமெரிக்க செனட்டில் விவாதிக்கப்பட்டது.
இது எல்லாம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்குத் தெரியாமல் இல்லை. தனது அரசியல் நலனுக்காக இரஷ்ய அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கிடையில் இருந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்டவர்தான் இந்த ஜெலன்ஸ்கி. தற்போதும் கூட டிரம்ப்ர அரசிடம் நாட்டின் இறையாண்மை மொத்தத்தையும் அடகுவைக்க அவர் தயாராகத்தான் இருக்கிறார். இரஷ்யாவிற்கு எதிராக நீண்டகால நோக்கில் தனக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவர் டிரம்பிடம் வைக்கும் கோரிக்கை. அதைத்தாண்டி இந்த கனிமவள ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கிக்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை.
ஏகாதிபத்தியங்களின் தயவுடன் எந்தவொரு நாடும் தனது இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதற்கு உக்ரைன் ஒரு சிறந்த உதாரணம்.
- மகேஷ்