கும்பமேளா படுகொலைகள்: காவி பாசிஸ்டுகளின் அரசியல் லாபத்துக்காகப் பலியிடப்படும் பொதுமக்கள்

இராமர்கோவில் திறக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தங்களது இந்துத்துவ அரசியலைச் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் காவி பாசிஸ்டுகள், கும்பமேளாவைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். அதுமட்டுமன்றி உலகை உய்விக்க வந்த விஷ்வகுருவாக, கடவுளின் அவதாரமாக தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் மோடியின் நார்சிச வெறிக்குத் தீனி போட இராமர்கோவில் திறப்பு விழா போன்ற பெரும் நிகழ்வுகளை அடிக்கடி நடத்துவதும் அவருக்குத் தேவையாக இருக்கிறது. இதற்காகத்தான் இத்தனை ஆயிரம் கோடி ருபாய் செலவு செய்து, மக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். தங்களது நோக்கம் ஈடேற வேண்டுமென்றால் சில நூறுபேரைப் பலிகொடுக்கவும் கூட பாசிஸ்டுகள் தயங்க மாட்டார்கள்.

ஒன்றிய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் இணைந்து நடத்தி வரும் மகா கும்பமேளா இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் உ.பி. மாநிலத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் குவிந்து வருகிறார்கள். ஏற்கெனவே பிரயாக்ராஜ் நகரில் ஒரு முறையும், தில்லி இரயில் நிலையத்தில் ஒரு முறையும் என இரண்டு முறை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் கும்பமேளாவில் கலந்து கொள்ளச் சென்ற பொதுமக்கள் பலியாகியிருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 26ம் தேதியோடு இந்த நிகழ்வு முடிவடைய இருப்பதால் தற்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதில் கலந்து கொள்ள வருவார்கள் எனக் கூறுகிறார்கள். எனவே மீண்டும் ஒரு நெரிசல் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது.

பிப்ரவரி 15ம் தேதி தில்லி இரயில் நிலையத்தில் ஏற்பட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு முன்னர் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 29 அன்று ஏற்பட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் இறந்ததாகக் கூறப்பட்டாலும் யோகி ஆதித்யநாத் அரசு இன்னமும் அதிகாரப்பூர்வமாக இறப்பு எண்ணிக்கையை அறிவிக்கவில்லை. பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்க கூடும் என சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். 15,000க்கும் அதிகமானவர்கள் அந்த விபத்து நடந்த பிறகு தங்களது உறவினர்களைக் காணவில்லை என தேடி வருவதாகவும், பல உயிரிழந்த உடல்கள் கங்கை நதியில் இழுத்து விடப்பட்டதாகவும் சமாஜ்வாதி எம்.பி. இராம் கோபால் யாதவ் கூறுகிறார்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உ.பி. சட்டசபையில் சமாஜ்வாதிக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி மாநில பாஜக அரசு இதற்குப் பதிலளிக்காமல் மௌனம் சாதிக்கிறது.

தில்லியிலும் சரி, பிரயாக்ராஜிலும் சரி கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு நிர்வாகத் தவறுகள் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டுகின்றன. பல கோடிப் பேர் வருவார்கள் எனத் தெரிந்தும் பிரயாக்ராஜில் அதற்குத் தகுந்தபடியான ஏற்பாடுகளை யோகி ஆதித்யநாத் அரசு செய்யவில்லை. விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு அதிக அளவிலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மக்களை நெரிசலில் தள்ளிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே போல தில்லியில் நடந்த கூட்ட நெரிசலுக்கும் காரணம் ஒன்றிய இரயில்வே அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. விபத்து நடந்த போது ஒரு போலீஸ் கூட கூட்டத்தைக் கட்டுப்படுத்த களத்தில் இல்லை. இரண்டு இடங்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு அதில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்பதைக் காட்டிலும் ஊடகங்களுக்கு விசயம் பரவிவிடாதபடி தடுப்பதைத்தான் செய்தார்கள் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோரி உபி சட்டசபையில் போராடும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்

கும்பமேளா என்றாலே கோடிக்கணக்கில் மக்கள் கூடுவார்கள், அதனைக் கையாள சரியான முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக மோடி அரசின், ஆதித்யநாத் அரசின் நிர்வாகத் திறனின்மையையே எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். ஆனால் யாரும், ஏன் ஒன்றிய அரசும், உ.பி. மாநில அரசும் இத்தனை கோடி மக்கள் கூடும் வகையில் ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் எனக் கேள்வி கேட்கவில்லை.

6000 கோடி ருபாய்க்கும் அதிகமாக செலவு செய்து இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்தக் கும்பமேளா நிகழ்வை காவி பாசிச கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது. தொலைக்கட்சி சேனல்கள், நாளிதழ்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் என நாடு முழுவதும் இதற்கென விளம்பரங்கள் செய்யப்பட்டன.

காவிகளின் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் வட இந்திய ஊடகங்களும் கும்பமேளாவைத் தங்கள் வீட்டு விழா போலக் கொண்டாடித் தீர்க்கின்றன. பத்திரிக்கை நிருபர்களும், செய்திச் சேனல்கள், யூடியூப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லா ஊடக, சமூக ஊடக கும்பலும், பிரயாக்ராஜில் குவிந்து கிடக்கிறார்கள்.

கும்பமேளாவின் தினசரி நிகழ்வுகளைப் பின்தொடர்ந்து செய்திகளைக் கொடுப்பது, அதன் பின்னணியில் உள்ள புராண கட்டுக் கதைகளுக்கு அறிவியல் விளக்கங்கள் கொடுப்பது, கும்பமேளாவில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரபலங்கள் முதல், உள்நாட்டு நடிகைகள் வரை அனைவரையும் படம்பிடித்து வெளியிடுவது, கஞ்சா சாமியார்கள் முதல் ஐஐடி சாமியார்கள் வரை அனைவரையும் பேட்டியெடுத்துப் போடுவது என அனைத்தும் பரபரப்புச் செய்தியாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜை நோக்கி இழுக்கப்படுகிறார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் கூறுவது போல இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி கிடையாது. இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு அகிலேஷ் குமார் யாதவ் தலைமையிலான உ.பி. மாநில அரசு நடத்திய கும்பமேளா நிகழ்வுதான் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா கும்பமேளா என 2015ல் ஆதித்யநாத்தின் பாஜக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டு வெளிவந்த சிஏஜி அறிக்கையிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது நடக்கும் கும்பமேளாதான் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா எனக் கதையளக்கிறார்கள். இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் சேர்த்து மக்கள் கூட்டத்தை கொண்டுவருவதற்காகவே பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவை அனைத்தும் மோடியின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காகவும், காவி கும்பல் முன்னிறுத்தும் இந்து மதப் பெருமையை உயர்த்திப் பிடிப்பதற்காகவும் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நேரடியான துவேசத்தைப் பரப்பி மதவெறியைக் கிளப்புவது ஒரு வகை என்றால், இந்து மதத்தின் பிற்போக்கான மூடநம்பிக்கைகளைப் புனிதமானது என்றும், அதுவே நமது நாட்டின் அடையாளம் பெருமை என்றும் விளம்பரப்படுத்திக் கட்டமைப்பது, இத்தகைய பெருமையை, இடையில் வந்த இஸ்லாமியர்கள் அழித்துவிட்டார்கள் எனக் கூறி மதவெறியைத் தூண்டும் பிரச்சாரம் செய்வது இன்னொரு வகை.

அந்த வகையில் இராமர்கோவில் திறக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தங்களது இந்துத்துவ அரசியலைச் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு காவி பாசிஸ்டுகள், கும்பமேளாவைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி உலகை உய்விக்க வந்த விஷ்வகுருவாக, கடவுளின் அவதாரமாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் மோடியின் நார்சிச வெறிக்குத் தீனி போட இராமர்கோவில் திறப்பு விழா போன்ற பெரும் நிகழ்வு ஒன்றை அடிக்கடி நடத்துவதும் அவருக்குத் தேவையாக இருக்கிறது. இதற்காகத்தான் இத்தனை ஆயிரம் கோடி ருபாய் செலவு செய்து, மக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். தங்களது நோக்கம் ஈடேற வேண்டுமென்றால் சில நூறுபேரைப் பலிகொடுக்கவும் கூட பாசிஸ்டுகள் தயங்க மாட்டார்கள்.

பத்திரிக்கைகளும் மோடியின் மனம் குளிரும் வகையில் அவர் கும்பமேளாவில் குளித்தது தொடங்கி, படகுச் சவாரி செய்தது வரை அனைத்தையும் விலாவரியாகப் படங்களுடன் எழுதி வெளியிடுகின்றன. தமிழ் இந்து நாளேடு மோடி கங்கையில் குளித்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு, நாட்டில் உள்ள ஆன்மீக நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மோடி உறுதிபூண்டுள்ளார் எனப் பாஜகவின் கட்சிப் பத்திரிக்கை போல புகழ்ந்து எழுதுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் இந்து பத்திரிக்கையே இப்படியென்றால் வடஇந்திய ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து தலையங்கம் எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், இவ்வளவு செலவு செய்து, பல கோடி பேர் கலந்து கொள்ளும் வகையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நடத்தும் போது, இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதனைப் பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு கும்பமேளா நிகழ்வுக்கு களங்கம் உருவாக்கக் கூடாது என எழுதி காவிக் கும்பலுக்குத் தனது விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. இது போன்ற பாசிச பாதந்தாங்கிகள் இருக்கும் தைரியத்தில்தான் பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் பட்டியலைத் தர மறுக்கிறது ஆதித்யநாத் அரசு.

பார்ப்பனப் பாசிஸ்டான ஜெயலலிதாவின் குரூர வக்கிர எண்ணங்களுக்கு கும்பகோணம் மகாமகத்தில் மக்கள் கொல்லப்பட்டது போல், மோடியின் சுயமோக விருப்பத்திற்காகவும், பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்காகவும் நடத்தப்பட்டிருக்கும் படுகொலைதான் இந்த கும்பமேளாக் கூட்ட நெரிசல். தமது சுயநலத்திற்காக இத்தகைய படுகொலையை நடத்தியிருக்கும் மோடியும், காவி பாசிசக் கும்பலும் கிரிமினல் குற்றவாளிகள். திரைப்பட விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரசிகர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தெலுங்கு நடிகர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டது போன்று, கும்பமேளா படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் மோடி கும்பல் மீதும் கிரிமினல் குற்ற வழக்குகள் பதியப்பட வேண்டும்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன