அரசியல், அமைப்பு, பண்பாட்டு ரீதியாகச் சீரழிந்துபோன வெற்றி-மருது தலைமையிலான அமைப்பில் இருந்து விலகி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைகிறோம்!

வெற்றி-மருது தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பில் சென்னை மாவட்டத்தில் இயங்கிய ஆகப் பெரும்பாலான தோழர்களும், வேறுசில மாவட்டங்களில் இயங்கிய பெரும்பாலான தோழர்களும் மொத்தமாக அவ்வமைப்பில் இருந்து வெளியேறி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம் என்பதை எமது ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிக்கைச் செய்தி!

அன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், மக்கள் அதிகாரம் அமைப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதலாக இயங்கி வந்த நாங்கள், 2020-இல் மருதையன், நாதன் தலைமையிலான கலைப்புவாதக் கும்பலொன்று சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்திய பிறகு தோழர்கள் வெற்றிவேல் செழியன் – மருது தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக வெற்றி-மருது தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பானது மக்களின் விடுதலைக்காகப் பாடுபடுவதற்கு மாறாக, ஆளும் வர்க்கத்தின் அரசியலுக்கு வாலாகச் சீரழிந்து போய்விட்டது. மக்களுக்கான அரசியலை முன்வைத்து மக்களை அணிதிரட்டி அரசியல், பொருளாதாரப் போராட்டங்களை நடத்தாமல் என்.ஜி.ஓ. பாணியில் செயல்பட வழிகாட்டினர்; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பங்கேற்பா? புறக்கணிப்பா? என்பதில் தெளிவான ஒரு நிலைப்பாடு எடுக்காமல், அமைப்பைச் சூனியவாதத்தில் தள்ளினர்; தேர்தல் புறக்கணிப்புதான் செய்கிறோம் என்று அமைப்புக்குள் பேசிக் கொண்டே “பா.ஜ.க.வைத் தேர்தலில் வீழ்த்துவது எப்படி?” என்று “அதுவும் இல்லை; இதுவும் இல்லை” என்று தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டனர்; தேர்தலில் ஓட்டுப்போடுவது மக்கள் அவரவர் முடிவு என்று எழுதினர் – இவை உள்ளிட்ட இன்னபிற அரசியல் பிரச்சனைகளையும் முன்வைத்து கேள்வி எழுப்பி வந்தோம். ’

மேலும், அமைப்பு முறை, அமைப்பு விதிகள் என எதையும் பின்பற்றாமல். தலைமைக்குழு அதற்குக் கீழே தனக்கு ஆதரவான ஒரு கோஷ்டி என்று வைத்துக் கொண்டு கேள்வி எழுப்புபவர்களைத் தனிமைப்படுத்தும் வகையிலும், அவர்களாகவே வெறுத்து ஒதுங்கிக் கொள்ளும் வகையிலும் நடந்து கொள்கின்றனர். மேலும், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டு விவாதிப்பவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் பிறரிடம் அவதூறு செய்வது; இழிவான பொய்களைப் பேசுவது என எந்த அமைப்பு முறையும் இன்றி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

“அங்கே இவ்வளவு கிளைகளைக் கட்டிவிட்டோம்; இங்கே இவ்வளவு பேரைத் திரட்டிவிட்டோம்; தமிழ்நாடு முழுவதும் நமது அமைப்பு விரிவடைந்து வருகிறது; அலையலையாக மக்களை நாம் திரட்டி வருகிறோம்” என்று பச்சைப் பொய்களையும் கட்டுக் கதைகளையும் அமைப்பு அறிக்கையாக வைத்து அணிகளை முற்றிலுமாக ஏமாற்றி வருகின்றனர். அதேவேளையில், மக்களை அரசியல்படுத்தி அணிதிரட்டுவதற்கென்று எந்த வேலையிலும் ஈடுபடாமல், “கூட்டமைப்பு கட்டுவது, கூட்டு நடவடிக்கைக்குச் செல்வது” என்று பெயர்ப் பலகை அமைப்புகளுக்கு வாலாகச் சென்று, அதையே பெரிய சாதனையாகப் பீற்றிக் கொண்டு அமைப்பையும் அணிகளையும் தோழர்களையும் சீரழித்து வருகின்றனர்.

மேற்கூறிய அரசியல், அமைப்புப் பிரச்சனைகளை முன்வைத்து பலமுறை தலைமைக் குழுவிடம் நாங்கள் போராடி வந்தோம். ஆனால். இப்பிரச்சனைகள் எவற்றுக்கும் தலைமைக் குழு உரிய விளக்கத்தையோ, பதிலையோ தரவில்லை. மாறாக, “அதிருப்தியாளர்கள், அமைப்பின் புதிய வேலைமுறையைப் புரிந்து கொள்ளாதவர்கள்” என்றும் இன்னபிறவாறும் எங்களின் மீது இழிவான பல அவதூறுகளையும் பொய்களையும் பிறரிடம் பேசினர். எங்களின் கேள்விகள், மாற்றுக் கருத்துக்கள் எவற்றையும் பரிசீலித்து சரிசெய்து, மக்களுக்கும் அணிகளுக்கும் விசுவாசமாக இருந்து அமைப்பை மக்களுக்கான விடுதலையை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் துளியும் இல்லை என்பதை நடைமுறையில் உணர்ந்தோம்.

அரசியல், அமைப்பு ரீதியாக மட்டுமின்றி, பண்பாட்டு ரீதியாகவும் இவர்கள் மிகவும் சீரழிந்து போய்யுள்ளனர்; எவ்வித விழுமியங்களோ, அறநெறிகளோ அற்றவர்களாகவும் சீரழிந்து போயுள்ளனர்; சொந்த வாழ்க்கையிலும் அவ்வாறே நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் பிற்பாடு எங்களுக்குத் தெரிய வந்தது.

எனவே, மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என முடிவு செய்த நாங்கள், இவ்வமைப்பில் தொடர முடியாது என்று முடிவெடுத்தோம். அதேசமயத்தில், அமைப்பையும் அரசியலையும் விட்டு விலகி சொந்த வாழ்க்கைக்குச் சென்று விடக் கூடாது என்றும் ஊன்றி நின்றோம். அவ்வகையில் மக்களுக்கான அரசியலில் ஊன்றி நிற்கிற தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் என்ற அமைப்புடன் அரசியல், அமைப்பு நிலைப்பாடுகள் ரீதியாக விவாதம் நடத்தினோம். இவ்விவாதத்தின் முடிவில் அவர்களோடு ஒருமித்த கருத்துக்கும் நிலைப்பாட்டுக்கும் வந்தடைந்துள்ளோம்.

எனவே, வெற்றி-மருது தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பில் சென்னை மாவட்டத்தில் இயங்கிய ஆகப் பெரும்பாலான தோழர்களும், வேறுசில மாவட்டங்களில் இயங்கிய பெரும்பாலான தோழர்களும் மொத்தமாக அவ்வமைப்பில் இருந்து வெளியேறி, தோழர் முத்துக்குமார் தலைமையிலான புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பில் எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம் என்பதை எமது ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்மைப் போலவே வெற்றி-மருது தலைமையிலான மக்கள் அதிகாரத்தில் இயங்கிவரும், மக்களை நேசிக்கிற எஞ்சியிருக்கும் தோழர்களும் அவ்வமைப்பில் இருந்து வெளியேறி எங்களோடு இணைந்து மக்களின் விடுதலைக்காக உண்மையாகப் பாடுபட வருமாறு அறைகூவி அழைக்கிறோம்.

நன்றி!

 

இவண்,

தோழர், புவன் மற்றும் தோழர்கள்

புரட்சிகர மக்கள் அதிகாரம்,

சென்னை மாவட்டம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன