கடந்த வாரம் ஆந்திராவிலுள்ள ஒரு தனியார் கல்லூரியை ஆய்வு செய்ய, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலால் (National Assessment and Accredatio Council-NAAC-நாக்) அனுப்பப்பட்ட குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேரை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை(CBI). கைது செய்யபட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் பேராசிரியர்கள்.
இந்த மெத்தப் படித்தவர்களின் கைதுக்கான காரணம், ஆந்திராவின் குண்டூரில் உள்ள கொனையேரு லட்சுமையா கல்வி அறக்கட்டளை(KLEF) என்ற தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு A++ என்ற நாக் மதிப்பீட்டை வழங்க லஞ்சம் வாங்கினார்கள் என்பது தான்.
KELF பல்கலைக்கழகத்தை தரமதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜெஎன்யு பல்கலைக்கழகப் பேரா. ராஜிவ் சிஜாரியா வை நாக் நியமித்திருந்தது. இவர் ஒரு சங்கியும் கூட. அவர் KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு A++ நாக் மதிப்பீட்டை வழங்க 1.8 கோடி ரூபாய் கேட்டுப் பேரம் பேசியதாகவும், கல்லூரி நிறுவனருடனான பேச்சுவார்த்தையில் தனக்கு 10 லட்சம் ரூபாயும் குழு உறுப்பினர்களுக்கு (வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள்) தலா மூன்று லட்சம் ரூபாயுடன் ஒரு மடிக்கணினியும் வழங்க கல்லூரி நிர்வாகமும் ராஜிவும் ஒப்புக்கொண்டதாகவும் CBI ன் முதல் தகவல் அறிக்கைக் கூறுகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் கல்லூரி தரப்பு உட்பட மொத்தம் 14 பெயர்கள் CBI இன் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரமதிப்பீட்டிற்காக 1.8 கோடியை ஒரு பேராசிரியர் லஞ்சமாக கேட்கிறார் என்றால் அம்மதிப்பீட்டின் மூலம் அத்தனியார் கல்லூரி அடையப்போகும் லாபம் எவ்வளவு? இதனைப் புரிந்து கொள்ள நாக் அமைப்பை பற்றியும் அதன் பின்னாலுள்ள முதலாளிகளின் நலங்களைப் பற்றியும் புரிந்து கொள்வது அவசியம்.
நாக் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். இது கல்லூரி/பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து அதற்கான தரமதிப்பீடுகளை வழங்குகிறது. அத்தரமதிப்பீட்டின் அடிப்படையில் கல்லூரி/பல்கலைக்கழகங்களுக்கான மத்திய அரசின் சலுகைகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் இருக்கும். 1986 கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்ட இவ்வமைப்பு 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தேசியக் கல்விக் கொள்கை 2020 இல், தற்போது ஒன்றிய அரசினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற தரமதிப்பீட்டு நடவடிக்கைகளைத் தனியார் கல்வி அமைப்புகளிடம் ஒப்படைக்கப் பரிந்துரைத்துள்ளது மோடி அரசு.
தொடக்கத்தில் நாக் இன் தரமதிப்பீடு அவசியமானதாக ஆட்சியாளர்கள் கருதவில்லை. எனவே அதற்கு அதிக முக்கியத்துவமும் தரப்படவில்லை. உயர்கல்வியில் தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தியதை அடுத்து, குறிப்பாக 2005 க்கு பிறகு, கல்லூரிகளின் தரத்தை கண்காணிக்க வேண்டும் என்ற பெயரில் நாக் இன் தரமதிப்பீட்டைப் படிப்படியாக கட்டாயமாக்கத் தொடங்கினர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களுக்கு நாக் இன் தர மதிப்பீடு கட்டாயம் என யுஜிசி மூலமாக அழுத்தம் கொடுத்தனர்.
நாக் தரமதிப்பீட்டின் அடிப்படையே இந்தியப் பல்கலைக்கழகங்களை உலகத் தரவரிசையில் முன்னிலைப்படுத்த வேண்டும் அதற்காக அவற்றைத் தயார்படுத்த வேண்டும் என்பதுதான். இதுபோலவே இந்தியாவில் உள்ள பொறியியல் படிப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்று சொல்லி அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய வாஷிங்டன் அக்கார்டு என்ற பொறியியல் உயர்கல்விக்கான தரக்கூட்டமைப்பில் மோடி அரசு கையெழுத்திட்டது.
சர்வதேசத் தரம் என்று இவர்கள் சொல்லுவதின் அர்த்தம், இந்திய மாணவர்கள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து செல்லும் போது அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு தகுந்தாற் போன்ற பாடத்திட்டங்கள், கற்றல்-கற்பித்தல் முறைகள் இதரக் கல்விச் செயல்பாடுகளை இந்தியாவிலும் உருவாக்குவது என்பதை தாண்டி வேரொன்றும் இல்லை. உதாரணமாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலைப் படிப்பிற்கு ஆகும் காலம் நான்கு ஆண்டுகள். ஆனால் இந்தியாவிலோ மூன்று ஆண்டுகள் தான். நான்கு ஆண்டுகள் இளங்கலைப் படிப்பை புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைத்தது மோடி அரசு. கடந்தாண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் நான்காண்டு இளங்கலைப் படிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாக் இன் தரமதிப்பீட்டில் A++ மதிப்பீட்டை பெறும் ஒரு பல்கலைக்கழகம் ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்றதாக யுஜிசி கூறுகிறது. அதன்படி, அப்பல்கலைக்கழகங்கள் புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது, கல்வி கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்வது, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு புதிய படிப்புகளை வழங்குவது, தொலைதூரக்கல்வி வழங்குவது, புதிய வளாகங்களை அமைப்பது போன்றவற்றை யுஜிசி இன் நேரடியான ஒப்புதல் இல்லாமலேயே செய்துகொள்ள முடியும். இவ்வழிகாட்டுதல் தனியார் கல்வி முதலைகள் பலநூறு கோடிகளை சம்பாதிப்பதற்கும் அதனை மூலதனமாகக் கொண்டு புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளது. தரமான உயர்கல்விக்கு நாக் இன் தரமதிப்பீடு அவசியம் எனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் நாக் இன் A++ என்பது தனியார் கல்லுரிகள்/பல்கலைக்கழகங்களின் தொழில் பெருக்கத்திற்கும் பகற்கொள்ளைக்கும் மிக அவசியம்.
உயர்கல்வியில் தரமதிப்பீடு என்பதே ஒரு மோசடிதான். KLEF நிகர்நிலைப் பல்கலைக்கழக ஊழல் முறைகேடு என்பது இந்திய உயர்கல்விச் சீர்கேட்டிற்கான ஒரு உதாரணம். புதிய கல்விக் கொள்கை 2020 இல் மோடி கும்பல் முன் வைத்துள்ள பல வகைப்பட்ட தரமதிப்பீட்டு அமைப்புகள் அவை சொல்லுகின்ற கல்வித்தரம் ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தியக் கல்விச் சந்தையை வெளிநாட்டு மூலதனத்திற்குத் திறந்துவிட்டு, இந்தியக் கல்விப் பெருமுதலைகள் தரமான கல்வி என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிப்பதற்கு வழியமைத்துக்கொடுப்பது என்ற முதலாளிகளின் நலன் தான் மறைந்துள்ளது.
- செல்வம்