புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கிய தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்த வழக்கில் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீதே குற்றஞ்சாட்டியிருக்கிறது திமுக அரசு.
இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள “நிலை அறிக்கையில்” (status report) வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறது. இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முரளிராஜா என்பவரது தந்தைக்கும் வேங்கைவயலை உள்ளடக்கிய முத்துக்காடு பஞ்சாயத்தின் தலைவரான எம். பத்மாவின் கணவரான முத்தையாவுக்கும் கிராமசபைக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறையடுத்து முத்தையாவை பழிவாங்க முரளிராஜா இது போல செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வருவதாக அவர்களே புரளியை கிளப்பிவிட்டு, 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று, தொட்டியில் ஏறிப்பார்ப்பதாக கூறி அவர்களே மலத்தை தொட்டியில் கலந்தனர் என போலீசார் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
இது மட்டுமன்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மலம் கலந்தது குறித்து பேசியதாக ஒரு காணொளியையும் நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் மூலம் போலீசு பரப்பியிருக்கிறது.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலில் அந்த வழக்கை விசாரித்துவந்த தமிழக சிபிசிஐடி போலீசாரால் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவின் மீதான விசாரணையில்தான் தமிழக சிபிசிஐடி போலீசார் இவ்வாறு கூறியிருக்கின்றனர்.
போலீசாரின் இந்தச் செயலுக்கு எதிராக வேங்கைவயல் கிராமத்து மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசும் ஆயிரக்கணக்கான போலீசாரைக் குவித்து கிராமத்திற்குள் வெளியாள் யாரும் போக முடியாத வண்ணம் தடுத்து வைத்திருக்கிறது. அதனைத் தாண்டி கிராம மக்கள் தங்கள் தரப்பு நியாயத்தை பல்வேறு ஊடகங்களில் முன்வைத்து வருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த தமிழக போலீசார் ஆரம்பம் முதலே தாழ்த்தப்பட்டவர்கள் மீது பழியைச் சுமத்துவதிலேயே குறியாக இருந்தார்கள் என வேங்கைவயல் மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது போலீஸ் தரப்பிலிருந்து வேங்கைவயல் மக்கள் மீது பழி சுமத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் ஒருவர் அவரது தாயுடன் தொலைபேசியில் பேசும் ஆடியோ பதிவு உள்ளது.
அதில் அவரது தாய், குற்றத்தை ஒப்புக் கொள்ள போலீசார் வற்புறுத்தினாலும் ஏற்றுக் கொள்ளாதே எனக் கூறியதைத்தான் போலீஸ் தரப்பு சாட்சியம் எனக் கூறுகிறது. ஆனால் வழக்கு விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேசனிற்கு அழைத்துச் சென்றுவிட்டு, அவர்களை குற்றத்தை ஒப்புக் கொள்ளச் சொல்லி போலீஸ் மிரட்டியிருக்கிறது. விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து பல மணி நேரம் போலீசின் சித்ரவதையில் சிக்கியிருந்த இளைஞரிடம் அவரது தாய் பேசிய ஒலிப்பதிவை வைத்துக் கொண்டு அவர்தான் குற்றவாளி என போலீசு திரிக்கிறது.
“தமிழக போலீசார் வேங்கைவயல் வழக்கில் கிராம மக்களையே குற்றவாளிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்” என கிராம மக்கள் தரப்பில் இந்த வழக்கை நடத்தி வரும் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்கெனவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி போலீசாரின் திட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் வேங்கைவயல் கிராமத்தில் துர்நாற்றத்துடன் வந்த குடிநீரைக் குடித்த கிராம மக்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குடிநீரில் தான் பிரச்சனை என கூறியிருக்கின்றனர். இதனை அடுத்து டிசம்பர் 26ம் தேதி தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்கள் தொட்டியில் ஏறிப் பார்த்து அதில் மலம் கலக்கப்பட்டிருப்பதை புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் போலீஸ் தரப்போ அவர்கள்தான் மலம் கலந்தனர் எனக் கூறுகிறது.
“நாங்களே மலத்தை அள்ளிப்போட்டு, நாங்களே அந்தத் தண்ணீர் குடிப்போமா?” என கேள்வி எழுப்பும் கிராமத்து மக்கள், கிராமம் முழுவதும் வேடிக்கை பார்க்க தொட்டியில் ஏறி மலத்தை கலந்தார்கள் எனப் போலீசார் கூறும் கட்டுக்கதையை கடுமையாக கண்டிப்பதுடன், டிசம்பர் 26ம் தேதி மலம் கலந்தனர் என்றால், கிராம மக்கள் 20ம் தேதியே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எப்படி நடந்தது என கேள்வியெழுப்புகின்றனர்.
குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த ஈனச் செயலைச் செய்தவர் என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுவது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பத்மாவின் கணவரான முத்தையாவைத்தான். இவருக்கும் ஊர் மக்களுக்கும் ஏற்கெனவே பகை இருக்கிறது. ஊர் மக்கள் யாரும் தனக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பதால் அவர்கள் மீது கோபத்தில் இருந்த முத்தையா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதாக கிராமசபைக் கூட்டத்தில் அவர் கூறிய பொய்யை ஊர் மக்கள் அம்பலப்படுத்தி சண்டையிட்டதால் இவ்வாறு செய்திருக்க கூடும் என ஊர் மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட கிராம மக்களைக் கொச்சைப்படுத்த திட்டமிட்டு காணொளியை வெளியிட்டுள்ள போலீசு முத்தையாவிற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கிறது. ஊடகங்கள் யாரும் அவரைச் சந்திக்கக் கூட முடியாதபடி தடுத்து வைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் சிபிசிஐடி போலீசாரின் செயலைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. ஆனால் ஆளுங்கட்சியான திமுக பதிலேதும் கூறாமல் மௌனம் காக்கிறது. அதேசமயம் “இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மிரட்டுகிறது.
எதெற்கெடுத்தாலும் திராவிட மாடலின் சாதனை, சமூகநீதியைக் காக்கும் அரசு என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து வரும் திமுக வழங்கும் சமூக நீதியின் லட்சணம் இதுதான்.
- மகேஷ்