கோவையைச் சேர்ந்த “ஃபோக்கஸ் எடுமேட்டிக்ஸ்” என்ற ஐ.டி. நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விச் சேவையை அளித்து வந்துள்ளது. இந்நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்திருக்கிறது.
மூடப்பட்ட நிறுவனத்தின் வாயிலில் கூடிய தொழிலாளர்கள் என்ன செய்வது? அடுத்த மாதச் செலவுகளை சம்பளம் இன்றி எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
சாம்சங் தொழிற்சாலையில் சங்கம் அமைக்க தொழிலாளர்கள் போராடிய போது, “தொழிலாளர்கள் போராடினால் சாம்சங் நிறுவனம் தொழிற்சாலையை மூடிவிட்டு போய்விடும்” எனப் போராடிய தொழிலாளர்கள் மீது வன்மத்தைக் கக்கிய திமுக அனுதாபிகள் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டிருக்கும் ஐ.டி. நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தொழிற்தகராறுகள் சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தை நிறந்தரமாக மூடுவதென்றால் 90 நாட்களுக்கு முன்னரே அரசிடமும், தொழிலாளர் பிரதிநிதிகளிடமும் அதனைத் தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் வாயிலில் அறிவிப்பாணையை ஒட்ட வேண்டும். தொழிலாளர்களுக்குச் சரியான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆனால் தொழிலாளர் நலச் சட்டங்களை இது போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு போதும் மதித்ததில்லை. ஒரே நாளில் எவ்வித இழப்பீடுமின்றி, இந்த மாதச் சம்பளம் கூட கொடுக்காமல் 2000 பேரை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு நிறுவனத்தை மூடியிருக்கிறார்கள்.
நாட்டின் தொழிற்துறை சட்டத்தை மீறிய இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை அரசு உத்திரவாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை அரசு எதுவும் செய்யப்போவது இல்லை.
வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்களும், மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்வது, தொழிலாளர் ஆணையரிடம் முறையிடுவது எனத் தங்களது அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த தொழிலாளர்கள் மட்டும் போராடிப் பயன் இல்லை. ஐ.டி. தொழிலாளர்களின் கோரிக்கை அரசின் செவிகளில் கேட்க வேண்டும் என்றால் முதலில் தொழிலாளர்களின் மத்தியில் ஒற்றுமை வேண்டும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% அளவிற்கு பங்களிப்பை வழங்கிவரும் ஐ.டி. துறையில் 55 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் இவர்களில் தொழிற்சங்கங்களில் இணைந்திருப்பவர்கள் சில நூறு பேர்கள் மட்டுமே. அவர்களும் கூட வேலை பறிபோகும் சூழல் உருவாகும் போது தொழிற்சங்கத்தை நாடியவர்கள்.
இந்தத் துறையில் பணிபுரியும் 90 சதவீதம் தொழிலாளர்கள் தங்களை தொழிலாளர்கள் என்றே உணர்வதில்லை, தொழிலாளர் நலச் சட்டங்கள் தங்களுக்கு பொருந்தாது என அவர்கள் நினைக்கிறார்கள். தொழிற்சங்கம் அமைப்பது வளர்ச்சிக்கு எதிரானது என்று ஆளும்வர்க்கம் கட்டியெழுப்பியிருக்கும் மாயையை உண்மை என நம்புகிறார்கள். மிஞ்சிப் போனால் பிரச்சனை வந்த பிறகு தொழிற்சங்கத்திடம் போவோம் என நினைக்கிறார்கள். ஐ.டி. துறையில் வலுவான தொழிற்சங்க அமைப்புகள் இல்லாததே நிறுவனங்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கும், அரசின் மெத்தனத்திற்கும் காரணம்.
அதே சமயம் “சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம்” முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை இன்று அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் சமரசமின்றி ஒற்றுமையாக போராடினால் நிர்வாகத்தை மட்டுமல்ல அரசையும் பணியவைக்க முடியும் என சாம்சங் தொழிலாளர்கள் நிரூபித்துள்ளனர். சாம்சங் தொழிலாளர்களின் வர்க்க உணர்விலிருந்து ஐ.டி. தொழிலாளர்கள் பாடம் கற்க வேண்டும்.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பின் கொள்கைகள் காரணமாக இந்திய ஐ.டி. துறை கூடிய விரைவில் பல சிக்கல்களைச் சந்திக்கவிருக்கிறது. அப்போது தங்களது பாரம் அனைத்தையும் தொழிலாளர்களின் முதுகில் ஏற்ற நினைப்பார்கள். நம் நாட்டை ஆளும் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசும், அமெரிக்க எஜமானர்களின் உத்தரவைத் தலைமேல் தாங்கி நிறைவேற்றுவதை நிச்சயம் செய்வார்கள். எனவே அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் முதலில் இந்திய ஐ.டி. தொழிலாளர்கள் வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும்.
- சந்திரன்
தொழிலாளர்கள் போராடும் போது, ஐ.டி யில் வேலை பார்ப்பவர்கள் முதலாளிகளை போல் நடந்துக் கொள்கின்றனர். ஒரு ஐ.டி தொழிலாளியிடம் பேசும்போது, கார்ப்பரேட் அவசியம் தேவை என மல்லுக்கட்டி கொண்டு பேசினர். இப்போதாவது உணர்ந்தால் சரி.