இந்திய ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது என்றும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்கு மட்டும் சுமார் 14-15% என்றும்; இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வினோத் அகர்வால் கடந்த செப்டம்பர் 2024 ல் தெரிவித்திருந்தார்.
மோடி அரசின் “மிஷன் ஆட்டோமொபைல் – 2047” திட்டமோ, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 2.5 கோடி பேருக்கு கூடுதலாக இத்துறையில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறது. இத்துறையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவை உலகத்திலேயே முதலிடத்தை நோக்கி நகர்த்தப் போவதாகவும்; இதன் மூலம் “ஸ்கில் இந்தியா” திட்டத்தை மேம்படுத்த போவதாகவும் மார்தட்டுகிறது.
இந்தப் புள்ளி விவரங்கள் காட்டும் தோற்றங்களின் உண்மைத்தன்மையை இந்தியாவிலேயே பயணியர் வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாருதி ஆலையின் களநிலவரத்தை வைத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஜப்பானின் தேசங்கடந்த நிறுவனமான சுசுகி மோட்டார்ஸின் துணை நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் பயணியர் வாகனச் சந்தையில் மட்டும் சுமார் 40% க்கும் அதிகமான பங்கைத் தனது பிடியில் வைத்திருக்கிறது. மானேசர், கன்சல்பூர் மற்றும் குருகிராமில் மூன்று ஆலைகளை வைத்திருக்கும் இந்நிறுவனம் நான்காவதாக சோனிபட்டில் ஒரு ஆலையைத் தொடங்க திட்டமிட்டு வருகிறது. கடந்த ஜனவரி 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 1,72,813 கார்களை இந்நிறுவனம் விற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் ஒவ்வொரு ஆலையிலும் சராசரியாக நிமிடத்திற்கு ஒரு கார் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் சுமார் 36000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் சுமார் 2120 பேர் (17%) மட்டுமே நிரந்தர தொழிலாளர்களாக உள்ளனர். மீதமுள்ள 33,800 பேர் (83%) fixed term employment எனும் பிரிவின் கீழே தான் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மாருதி ஆலை நிர்வாகம் நடத்திய திட்டமிட்ட வன்முறையினால் அவ்வாலையில் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் மீது மேலாளார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டு 13 நிர்வாகிகள் மீது ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களை சிறிதும் மதிக்காமல் மாருதி நிர்வாகம் 546 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. பணியிலிருந்து நீக்கப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக மாருதி தொழிலாளர்கள் போராட்டக்குழு எனும் அமைப்பு சார்பில் 2012 ஆம் ஆண்டிலேயே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவ்வழக்குகள் கடந்த 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
மாருதி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 546 தொழிலாளர்கள் உலகிலேயே மூன்றாவது வாகன உற்பத்தித்துறை எனப் பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவின் வாகனத் தொழிற்சாலைக்குள் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகியும் மீண்டும் வேலைக்கு சேரமுடியவில்லை. வேலையில் மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி வழக்குத் தொடுத்தும் பன்னிரெண்டு ஆண்டுகளாகியும் எந்த பயனும் ஏற்படவில்லை.
மாருதி நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் போராட்டக் குழு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 2024 ஆம் ஆண்டிலிருந்து குர்கானில் உள்ள மாருதி ஆலைக்கு 2 கி.மீ தொலைவில் உள்ள வீதியில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
இத்தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வேண்டும் என்பதற்காக மட்டும் போராடவில்லை. மாருதி ஆலையில் பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளர்களை பணிநிரந்தரமாக்க வேண்டும் எனும் கோரிக்கைக்காவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இப்போராட்டக்குழு முன்கையெடுத்து தற்காலிகத் தொழிலாளர்களை சங்கமாக்கி மாருதி தற்காலிகத் தொழிலாளர்கள் சங்கம் எனும் சங்கத்தை தற்போது உருவாக்கி இருக்கிறது.
யார் இந்த தற்காலிகத் தொழிலாளர்கள்?
மாருதியின் 2012 ஆண்டின் போராட்டத்திற்கு பிறகு அந்நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்து fixed term employment எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இம்முறையில் பல்வேறு தற்காலிகத் தொழிலாளர்கள் வகைப் பிரிவுகளை உருவாக்கியது. இதில் அப்ரண்டிஸ் பயிற்சியாளர்கள். தற்காலிகத் தொழிலாளர்கள் 1, 2, 3, கேஷுவல் தொழிலாளர்கள் 1,2 மற்றும் பல்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ற வகைப் பிரிவினை உருவாக்கியது.
2012 ஆம் ஆண்டு போராட்டத்திற்குப் பின்பு தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்கும் பொருட்டு நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு சுமார் ரூ1,30,000 ஊதியத்தை உயர்த்தியது. சமவேலைக்கு சம ஊதியம் என்பதை மறுத்து தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ரூ 13,000 லிருந்து ரூ 30,000 வரையே ஊதியத்தை நிர்ணயித்திருக்கிறது. தனது இலாபத்திலிருந்து நிரந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு மாறாக 83% பேரை fixed term employment எனும் கொடுஞ்சுரண்டல் முறையில் பணிக்கமர்த்தி அவர்களின் உழைப்புச் சக்தியை அற்ப கூலிக்கு ஒட்டச் சுரண்டி வருகிறது. இதன் மூலமே நிரந்தர தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தியது.
மாருதி நிர்வாகம் இளம் தொழிலாளிகளின் உழைப்புச் சக்தியை எப்படி சுரண்டுகிறது என்பதை ஹரியானாவைச் சார்ந்த கெளதம் எனும் இளம் தொழிலாளியின் அனுபவத்திலிருந்து நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
ஹரியானாவின் நருனூலிவில் உள்ள ஐடிஐ கல்லுரியின் நேர்முகத்தேர்வின் மூலம் மாருதி ஆலைக்கு 2018 ஆம் ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சியாளராக கெளதம் தேர்வாகிறார். ஒரு வார ஆரம்ப பயிற்சிக்கு பிறகு கெளதம் மானேசர் ஆலையினுள் கேஸ்டிங் பிரிவில் வேலைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு பணிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் ஒரு தற்காலிகத் தொழிலாளர்(TW1 அல்லது TW2) மூலம் அவருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
கேஸ்டிங் பிரிவில் ரோபோக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் பற்றியெல்லாம் கெளதமிற்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை, அது நிரந்தர தொழிலாளர்களின் வேலை என ஒதுக்கப்படுகிறது. இந்த அப்ரடின்ஸ் பயிற்சியின் போது கெளதமின் மாத ஊதியம் ரூ 13,000. இதில் 10,000 ரூபாயை அரசே வழங்குகிறது. போனஸ், இ.எஸ்.ஐ, பி.எப் எல்லாம் இதில் கிடையாது. ஒரு வருடம் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த பின்பு, கெளதமிற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என ஒரு கடிதம் கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். மாருதி நிர்வாகம் கெளதமை பணிக்கு மீண்டும் அழைப்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
சுமார் மூன்று மாதம் கழித்து மாருதி நிர்வாகத்திடமிருந்து கெளதமிற்கு மீண்டும் அழைப்பு வந்திருக்கிறது. அதுவரை அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த முறை மாருதியின் மானேசர் ஆலையின் அசெம்பிளி லைனில் தற்காலிகத்தொழிலாளர் 1(TW 1) எனும் பிரிவின் கீழ் பணியில் சேர்கிறார். அசெம்பிளி லைனில் காரின் கதவு போல்டை 30 வினாடிக்குள் அசெம்பிள் செய்யும் வேலை ஒதுக்கப்படுகிறது. இந்த வேலையை பணிக்காலம் முடியும் தருவாயில் இருக்கும் TW 2 எனும் தொழிலாளி கற்றுக் கொடுக்கிறார். 30 வினாடிக்குள் வேலை பார்க்கவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்கிறார் கெளதம். ஏழரை நிமிடத்திற்குள் தேநீர், சிற்றுண்டி மற்றும் கழிப்பறைக்கு சென்று திரும்பி தன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தினமும் வேலை செய்து வந்திருக்கிறார்.
ஒரு TW1 தொழிலாளியாக கெளதமிற்கு ஒவ்வொரு மாதமும் பி.எப். தொகை கழிக்கப்பட்டு ரூ 24,000 வழங்கப்பட்டு வந்தது. ஏழு மாதங்கள் சென்ற பிறகு வேலை செய்ததற்கான கடிதம் வழங்கப்பட்டது. மாருதி சுசுகியில் நிரந்தரவேலை கிடைக்கும் என மீண்டும் கெளதம் வேலையில்லாமல் இருந்தார் அவரின் செயல்திறன், மதிப்பீடு பற்றி நிர்வாகத்திடமிருந்து எந்த கருத்தும் கெளதமுக்கு கூறப்படவில்லை.
சுமார் 4 மாதங்களுக்கு பிறகு கெளதம் TW 2 வேலைக்கு அழைக்கப்படுகிறார். இந்த முறையும் வேறு ஒரு TW 2 தொழிலாளி மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. தனக்கு நிரந்தமான வேலை கிடைக்குமா எனும் கேள்விக் குறியோடு கெளதம் மீண்டும் ஏழு மாதம் வேலைப் பார்த்து அவரது ஒப்பந்தம் முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
ஒரு வருடம் கழித்து நிரந்தரப் பணியாளர்களுக்கான தேர்வை எழுதும்படி கெளதமிற்கு அழைப்பு வருகிறது. தேர்வை மிகவும் எளிதாக எழுதிய கெளதம் அதில் தேர்வாகவில்லை. மாருதி நிர்வாகம் அவரின் மதிப்பெண் பற்றி எதுவும் கூறாமல், அவர் தேர்வாகவில்லை என்ற செய்தியை மட்டும் அவருக்கு கூறியது.
மாருதி சுசுகி நிர்வாகத்தின் படி அவர்கள் மூன்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றனர். ஆனால் கெளதமை பொருத்தவரையில் மூன்று முறை நிரந்தமற்ற தொழிலாளியாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
இதன் பின்பு கெளதம் மாருதி ஆலையில் இருந்து தனக்கு கிடைத்த சான்றிதழை கொண்டு வேலை தேடினார். அச்சான்றிதழ்கள் மதிப்பற்றவை என்பதையே அவர் வேலை தேடிச் சென்ற அனைத்து நிறுவனங்களும் கூறியுள்ளன. சிறிது மாதம் கழித்து கெளதமிற்கு ஒரு நிறுவனத்தில் ரூ 13,610 க்கு வேலை கிடைத்தது. இந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு தனது குடும்பத்திற்கு உதவ முடியாததால் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி தற்போது மீண்டும் வேலை தேடி அழைகிறார்.
இது கெளதமின் கதை மட்டுமல்ல. கெளதமை போல சுமார் 30,000 தற்காலிகத் தொழிலாளர்கள் மாருதி ஆலையில் வேலைப் பார்த்து வருகின்றனர். புதியதாக தொடங்க இருக்கும் சோனிபட் மாருதி ஆலைக்கு இந்த 30,000 பேரிலிருந்து தான் நிரந்தரத் தொழிலாளர்களை எடுக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்பதே மாருதி தற்காலிகத் தொழிலாளர்கள் சங்கத்தின் கோரிக்கை. இக்கோரிக்கைகாகவே ஜனவரி 5 ம் தேதியன்று மாருதியின் தற்காலிக தொழிலாளர்கள் ஒன்று கூடி போராடியிருக்கின்றனர். சுமார் 100 தற்காலிகத் தொழிலாளர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிகார், உ.பி, ம.பி, ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து ஒரே நாளில் மாருதி ஆலையில் வேலை பார்த்த 3000 தற்காலிகத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்திற்கு கூடியுள்ளனர்.
ஜனவரி 5ம் தேதி நடந்த மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், பணிநீக்கம் செய்யப்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களிடையே ஏற்பட்ட ஐக்கியமும் ஒற்றுமையும்தான். அந்தப் பிணைப்பை பணிநீக்கம் செய்யப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் முன்கையெடுத்து நிலைநாட்டியதுதான்.
நிரந்தர மற்றும் தற்காலிகத் தொழிலாளர்களிடையே ஒற்றுமை காணமுடியாது என்பது வெறும் மாயை என்பதையும், மொழி, இனம், பண்பாடு போன்ற வேறுபாடுகளை கடந்து தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிராக ஒன்றுபட்டு களத்தில் நிற்கிறார்கள்
மாருதி போன்ற நிறுவனங்கள் நடத்தும் தாக்குதலை தற்காலிக தொழிலாளர்களும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களும் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தின் வெற்றி தோல்வியைக் காட்டிலும், வேறுபாடுகளைக் கடந்து இத்தொழிலாளர்கள் சாதித்திருக்கும் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. இப்போராட்டம் சர்வதேச மூலதனமும் அரசும் இணைந்து நடத்தும் தாக்குதலை முறியடிக்க தொழிலாளி வர்க்க ஒற்றுமையைச் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது!
- தாமிரபரணி