புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
08/01/2025
மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!
சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக செயற்பாட்டாளர்களைக் குறிவைத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. மனேசர் ஜெனரல் மஸ்தூர் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ராம்பால் சிங் மற்றும் பிந்து ராம்; பாட்டியாலாவைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமூகத்தின் (SFS) முன்னாள் தலைவர் தமன்பிரீத் சிங்; தில்லி ஜெனரல் மஸ்தூர் முன்னணியைச் (DGMF) சேர்ந்த அஜய் குமார், பிரியான்சு மற்றும் ஜகதீஷ் சிங்; தில்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீ ராம் ஆகியோரது வீடுகளில் ஒரே நாளில் என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் அமைப்பை மீட்டுருவாக்க முயல்கிறார்கள் (Maoist NRB Region Revival Case) என இவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பதிந்து இந்த பீதியூட்டும் நடவடிக்கையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ளது.
ராம்பால் சிங் மற்றும் பிந்து ராம் ஆகியோர் ஹரியானாவின் குருகிராமில் உள்ள தொழிற்சங்க அமைப்பான மானேசர் ஜெனரல் மஜ்தூர் சங்கத்தில் செயல்படுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் மாதம் 6ம் தேதி, அந்த அமைப்பின் தலைவர் அனிருத் ராஜன் சென்னையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றபோது பெங்களூர் காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ராம்பால் சிங்கின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி பொய்யான வாக்குமூலம் பெற என்.ஐ.ஏ. முயன்றிருக்கிறது. தில்லியில் நடந்த சோதனையின் போது, அஜய் குமார் மற்றும் பிரியான்ஷு இருவரையும் வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் போடும்படி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிர்பந்தித்துள்ளனர். மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த அறிக்கையில், சோதனையில் கிடைக்காத விஷயங்களையும் சேர்த்துள்ளனர்; ஏற்கெனவே பீமா கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் போலீசாரே பொய்யான கடிதங்களை புகுத்தியது போல தற்போதும் சதிவலையைப் பின்னுகின்றனர்.
இந்த சோதனைகள் அனைத்தும் “மாவோயிஸ்டுகளின் NRB மறுமலர்ச்சி வழக்கு” அல்லது லக்னோ சதி வழக்கு என அழைக்கப்படும் வழக்கில் இவர்களை இணைப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், என்.ஐ.ஏ ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் அஜய் குமாரை கைது செய்துள்ளது. இதே வழக்கில் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படும் மாணவர்களுக்கான சமூகத்தின் (SFS) முன்னாள் தலைவரான தமன் ப்ரீத் சிங்கையும் விசாரித்துள்ளனர். தற்போது அவரது வீட்டிலும் சோதனை நடத்தி மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உட்பட பல ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சோதனைகளில் குற்றம் சாட்டும் வகையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை, ஆனால் பீமா கோரேகான் சதி வழக்கில் செய்தது போல், செயல்பாட்டாளர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டுவதற்கு என்.ஐ.ஏ. இந்த சாதனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக் கூடும்.
சமூக செயற்பாட்டாளர்கள் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தி பீதியூட்டியதற்கு அடுத்த வாரத்திலேயே பனராஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் மனுஷ்மிருதியை எரித்த நிகழ்வை நினைவு கூற கூடிய பகத்சிங் மாணவர் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த பதிமூன்று மாணவர்களை தனியார் செக்யூரிட்டி நிறுவன குண்டர்களைக் கொண்டு தாக்கியதுடன், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது யோகி ஆதித்யநாத் அரசு. அந்த மாணவர்களை நக்சல் அமைப்புடன் தொடர்பில் இருந்தார்கள் எனக் கூறி அவர்கள் மீது ஊபா வழக்கு பதியப்போவதாகவும் மிரட்டி வருகிறது.
மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற உடனேயே அறிவுத்துறையினர், மாணவர் தலைவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பாசிசத்திற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள் மீது திட்டமிட்ட ஒடுக்குமுறையை ஏவியது. மோடியைக் கொல்ல சதி என எல்கர் பரிக்ஷத் வழக்கை பொய்யாக ஜோடித்து ஆனந்த் தெல்டும்டே, வரவர ராவ் உள்ளிட்ட 16 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் அனைவரும் அர்பன் நக்சல்கள் எனப் பிரச்சாரம் செய்து தனது அடக்குமுறையை நியாயப்படுத்தியது.
அதில் பழங்குடியினர் உரிமைக்காக போராடிய ஸ்டேன் பாதிரியார் சிறையிலேயே கொல்லப்பட்டார். வரவர ராவ், ஆனந்த் தெல்டும்டே உள்ளிட்ட சிலர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போதுதான் பிணையில் வெளிவந்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு மேலாக பிணை கிடைக்காமல் இன்னமும் ஏழு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஜனநாயக சக்திகள் மீது என்.ஐ.ஏ. மூலம் அடுத்த சுற்று ஒடுக்குமுறை ஏவப்படுகிறது.
நாடு முழுவதும் மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறையை புரட்சிகர மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் பீதியூட்டுவதைக் கைவிட வேண்டும் என்றும் பொய்யாக புனையப்பட்டுள்ள “மாவோயிஸ்டுகளின் NRB மறுமலர்ச்சி” வழக்கை ரத்து செய்யும் படியும் கோருகிறது. மேலும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறது.
பாசிச மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என புரட்சிகர மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
முத்துக்குமார்
மாநிலப் பொதுச் செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்