இரு வாரங்களுக்கு முன்பு 55வது ஜிஎஸ்டி குழு கூட்டம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் நடந்தது. மத்திய நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், பெரியளவு எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களுக்கான வரி மாற்றங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், கார்கள், பாப்கார்ன் ஆகியவற்றின் மீதான வரியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர். இதைவைத்து சமூக வலைதளங்களில் மோடியையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வதம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பழைய கார்கள் மீது ஏற்கனவே இருந்த 12 சதவீத வரியை தற்போது 18 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது மோடி அரசு. உதாரணமாக ஒருவர் பத்து வருடங்களுக்கு முன்பு 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை வாங்கி இருந்தால் அவர் தற்போது அந்த காரை ஒரு லட்சம் ரூபாய்க்கு மற்றவருக்கு விற்றால் இவ்விரு தொகைக்கும் இடையே உள்ள வேறுபாடான ஒன்பது லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்று ஆரம்பத்தில் விளக்கம் கொடுத்தார் நிதி அமைச்சர். அதாவது ஒன்பது லட்சத்திற்கு 18 சதவீதம் வரி ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய். ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கக்கூடிய காருக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வரியாக கட்ட வேண்டும் என்ற அதிமேதாவித்தனமான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் கொடுத்திருந்தார். சமூக வலைதளங்களில் பலரும் வறுத்து எடுக்கவே நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை, காரின் தேய்மானத்தை கொண்டு கணக்கிடப்படும் தொகைக்கு வரிகட்ட வேண்டும் என்று சமாளித்திருக்கிறார் நிதி அமைச்சர்.
மோடி கும்பலுக்கு மக்கள் பாப்கார்ன் சாப்பிடுவது கூட கடுப்புபோல. பரலாக விற்கப்படும் பாப்கானுக்கு 18 சதவீதம் வரி விதித்துள்ளனர். இதுவும் சமூக வலைத்தளங்களில் மிகக் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகவே, புதிய விளக்கத்தினை கொடுத்திருக்கிறார் பூண்டு சாப்பிடாத நிதியமைச்சர். கடைகளில் விற்கப்படும் சாதாரண பாப்கார்ன்களுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டியாம் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உப்பு சேர்க்கப்பட்ட பாப்கான்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியாம் உப்போடு சர்க்கரை சேர்த்த கராமல் பாப்பான்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியாம். வரியென்ற பெயரில் மக்களை கொள்ளையடியக்க மோடி கும்பலின் மூளை எவ்வளவு விசித்திரமாக சிந்திக்கிறது பாருங்கள்.
மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகச்சாதாரணப் பொருட்களின் மீது கூட ஜிஎஸ்டி வரி விதிப்பதும் அதன் அளவை அதிகரித்துக் கொண்டே செல்வதும் மோடி அரசின் தொடர் நடவடிக்கையாகவே உள்ளது. இவ்வாறு மக்களை கசக்கிப் பிழிவதின் மூலம் மத்திய அரசுக்கான வரிவருவாய் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மாத ஜிஎஸ்டி வருவாய் மட்டுமே 1.72 லட்சம் கோடி ரூபாய் என்கிறது மத்திய அரசு.
அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி விகிதத்தை அதிகரித்து மக்கள் மீது ஏன் அதிக சுமைகளை ஏற்றுகிறீர்கள் என்று கேட்டால் நாட்டின் முன்னேற்றத்திற்கு இது அவசியம், ஜிஎஸ்டி என்பதே மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்கின்றன பாஜக – ஆர்எஸ்எஸ் வகையறாக்கள்.
இவர்கள் ‘மக்களின் நலனுக்காக’ ஜிஎஸ்டி வரியை அதிகரித்த அதே சமயத்தில் தான் மத்திய ஒன்றிய அமைச்சகத்திடம் இருந்து வங்கிகளின் கடன் தள்ளுபடி பற்றிய செய்தியும் வெளியாகியுள்ளது. இது பெரும்முதலாளிகளுக்கு செய்யப்பட்ட கடன் தள்ளுபடி பற்றியது.
மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 16.11 லட்சம் கோடி வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதலாளிகள் வாங்கிய கடன்கள். குறிப்பாக மோடிக்கு நெருக்கமானவர்கள் வாங்கிய கடன்கள். 16.1 லட்சம் கோடி என்பது தோராயமாக கடந்த 10 வருடங்களில் மோடி அரசாங்கம் கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய்த தொகையின் கூட்டுதொகையை விட அதிகம். இதில் இந்திய தொழிற்துறை மற்றும் சேவைத்துறை தரகு முதலாளிகளின் கடன் தள்ளுபடி பங்கு மட்டும் 12 லட்சம் கோடி.
இந்த கடன் தள்ளுபடிகள் நாட்டின் வளர்ச்சிக்கானது என்று நம்பச்சொல்கிறது மோடி கும்பல். ஆனால், முதலாளிகளுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்த பின்பும் தொழில் வளர்ச்சி இருந்ததா? போதிய வேலை வாய்ப்பு உருவானதா? என்றால் இல்லை என்கிறது மோடி அரசு. அடிப்படையில் தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் பல லட்சம் கோடிகளை முதலாளிகள் சுருட்டியிருப்பதாக அரசாங்க புள்ளிவிவரங்களே சொல்கின்றன.
சமீபத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடன் தள்ளுபடி பற்றிய ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அத்தகவலின்படி, வங்கிகளில் 61,832 கோடி கடன் வாங்கிய 10 நிறுவனங்களை வெறும் 15977 கோடிக்கு அதானிக்கு கொடுத்துள்ளது தேசிய கம்பெனி சட்ட தீர்பாயம்(NCLT). இதன் மூலம் இந்த பத்து நிறுவனங்களுக்கு வங்கிகள் கொடுத்த 61,832 கோடிக்கு பதிலாக அதானி கொடுக்கும் வெறும் ₹15977 கோடியை வங்கிகள் தங்களுக்குள்ளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஏறத்தாழ 45 சதவிகித நட்டம் வங்கிகளுக்கு. ஆனால் அதே அளவு லாபம் அதானிக்கு.
ரேடியஸ் எஸ்டேட்ஸ் அண்டு டெவெலப்பர் என்ற நிறுவனம் திவாலானதையடுத்து அந்நிறுவனத்தை வெறும் 76 கோடிக்கு அதானி குட்ஹோம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது NCLT. ரேடியஸ் நிறுவனம் 1700 கோடி ரூபாயை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கியிருந்தது. ஆனால் வங்கிகளுக்கு வெறும் 76 கோடி மட்டுமே திருப்பிக் கிடைத்தது. இதனால் வங்கிகளுக்கு 96 சதவிகிதம் இழப்பு. மற்றொரு வழக்கில், அதானி பிராபர்டீஸ், HDIL இன் BKC ப்ராஜெக்டை ரூ. 285 கோடிக்கு வாங்கியது. அந்நிறுவனத்திற்கு 7,795 கோடியை வங்கிகள் கடனாக வழங்கியிருந்தது. ஆனால் வங்கிகளுக்கு வெறும் 285 கோடி மட்டுமே திருப்பிக் கிடைத்தது. இதனால் வங்கிகளுக்கு 96 சதவிகிதம் இழப்பு.
இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இதுபோல திவாலான பல நிறுவனங்களை அதானி, அம்பானி, பாபா ராம்தேவ் போன்ற மோடிக்கு நெருக்கமானவர்கள் அற்ப விலைக்கு தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் வாங்கியுள்ளனர். இதனால் வங்கிகளுக்கு பல லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளோ அல்லது மாணவர்களோ கடன் தள்ளுபடி பற்றி கோரிக்கை வைத்தால் ஆளும் வர்க்க பத்திரிகைகள் கொதித்தெழுந்து விடுகின்றன. இக்கடன்களை தள்ளுபடி செய்தால் மக்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் மனப்பான்மை இல்லாமல் போய்விடும் என்கின்றனர். நிதி அமைச்சரோ கல்விக் கடன் தள்ளுபடிக்கு வாய்ப்பே இல்லை என்கிறார். ஆனால் முதலாளிகள் என்று வரும்போது வரிசலுகைகள், கடன் உதவிகள் என்று அவர்கள் கேட்கும் முன்னே வாரி கொடுக்கத் தயாராகின்றனர். மோடி கும்பலின் செயல்துடிப்பு முதலாளிகளுக்கானதே மற்றதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதே உண்மை.
- அழகு
They charging so many bank charges,Many places
they accepting only GPay,you etc cash not accepted