அந்நிய நாடுகளில் இருந்து பணத்தை அள்ளி வழங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசு செய்ததென்ன?

இஸ்ரேல், உக்ரைன் போன்ற நாடுகளின் போர்முனையில் இருந்தும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்களில் இருந்தும், அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களில் இருந்தும், சிங்கப்பூர் துறைமுகத்துக் கப்பல்களில் இருந்தும், இன்னும் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைப் பார்த்தும் நம் நாட்டுத் தொழிலாளர்கள் தங்களது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைத்து, அனுப்பும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பதில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

நவீன தாராளமயக் கொள்கையின் படி, வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி. அதற்காகத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் சுரண்டலுக்குத் திறந்துவிட்டுள்ளது இந்திய ஆளும்வர்க்கம். அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் பாய்வதால் வேலைவாய்ப்பு பெருகும், தொழிற்துறை வளர்ச்சியடையும், ஏற்றுமதி அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர்.

ஆகையால் எப்பாடு பட்டாவது அந்நிய நேரடி மூதலீட்டை நம் நாட்டிற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என முனைப்புடன் வேலை செய்கின்றனர். இந்தியாவில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள், உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மானியம், தொழில் தொடங்குவதற்கு எளிதில் அனுமதி, நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் அடிப்படைக் கட்டுமானங்கள் தாரை வார்ப்பு போன்ற சலுகைகள் வாரி வாரி வழங்கப்படுகின்றது.

அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்காக சிங்கப்பூரில் இந்திய அரசின்  சார்பாக சமீபத்தில் ஒரு அலுவலகமே  திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அலுவலகங்கள் பல நாடுகளில் திறக்கப்பட உள்ளதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். வரும் ஆண்டுகளில் அந்நிய மூலதனத்தினை அதிக அளவில் ஈர்ப்பதற்காக இந்திய அரசு திட்டமிட்டு வேலை செய்வதாக பியூஷ் கோயல் கூறிவருகிறார்.

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்குப் போட்டி போடுவதில் பாஜக காங்கிரஸ் திமுக என கட்சிகளுக்கு இடையில் எந்த பாகுபாடும் கிடையாது. தமிழகத்தை ஆளும் திமுக அரசும் ஆண்டுதோரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நாங்கள் மற்ற மாநிலங்களை விட அதிக சலுகைகளை வழங்குகிறோம் வாருங்கள் என அழைக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களின் உள்ளம் குளிர வேண்டும் என்பதற்காக 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த முயற்சிக்கிறது. சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனத்தின் ஆலையில் தொழிற்சங்கம் திறக்க அனுமதித்தால் அது முதலீட்டாளர்களின் மனதைப் புண்படுத்தும் என தொழிற்சங்க உரிமையை பறிக்கிறது.

ஆனால் இவர்கள் கூவி கூவி அழைத்துக் கொண்டு வரும் அந்நிய நிறுவனங்கள் மக்களின் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டு, அவர்கள் உறுதியளித்திருந்த வேலைவாய்ப்பில் பாதியை கூட வழங்காமல், நாட்டின் வளங்களையும், இந்திய தொழிலாளர்களின் உழைப்பையும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கும் கொத்தடிமை சமஸ்தானங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்குள் வரும் அந்நிய மூலதனத்தையும் (FDI Inflows), அதனைக் கொண்டுவரும் பன்னாட்டு நிறுவனங்கள் சலுகைகளாகத் தின்றதையும் (Incentives), லாபமாக நம் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் சென்றதையும் (FDI Outflows) கணக்கிட்டுப் பார்த்தால் அந்நிய முதலீடு என்பது மிகப்பெரிய ஏமாற்றுவேலை என்பது புரியும்.

இதற்குத் துலக்கமான எடுத்துக்காட்டு நோக்கியா நிறுவனம். வெறும் 350 கோடி அந்நிய முதலீட்டுடன் சென்னையில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம் பல்லாயிரம் கோடி ருபாய் அளவிற்கு மானியமாகவும், சலுகையாகவும் வாரித் தின்று, தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு ஓடிப்போனது நாம் அறிந்ததே.

அப்படியிருந்தும் அந்நிய மூலதனம்தான் நாட்டை உயர்த்தும் எனக் கூறிக்கொண்டு முதலாளிகளுக்குச் சோப்புப் போடுவதை ஆளும்வர்க்கம் தொடர்ந்து செய்கிறது. அதேசமயம் அந்நிய மூலதனத்தை விட மிக அதிக அளவில் வெளிநாட்டு நிதியை நம் நாட்டிற்குள் கொண்டுவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து இவர்கள் என்றைக்கும் கண்டுகொண்டதில்லை.

சமீபத்தில் உலக வங்கி  வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி இந்தியாவை பூர்விகமாக கொண்டு பல்வேறு வெளி நாடுகளில் வேலைப் பார்க்கும் இந்திய தொழிலாளர்கள் தங்களது குடும்பத்திற்கு 2023-24 நிதியாண்டில் மட்டும் சுமார் 129 பில்லியன் டாலர் தொகையை அனுப்பியுள்ளனர். அதாவது சுமார் 11 லட்சம் கோடி ருபாயை இந்தியாவிற்கு அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 சதவீதம்.

2023-24 நிதியாண்டில் இந்தியாவிற்குள் வந்த அந்நிய நேரடி முதலீட்டை (70 பில்லியன் டாலர்) விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நம் நாட்டிற்கு பணமாக அனுப்பியிருக்கின்றனர்.

இப்படி இவர்கள் அனுப்பும் தொகை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே  செல்கிறது  2014 ஆம் ஆண்டில் 70.4 பில்லியன் டாலராக இருந்த இத்தொகை 2024 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

உலகத்தில் வாழும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் தான் அதிக பணத்தை தம் தாய்நாட்டிற்கு அனுப்புகின்றனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாகவே மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சார்ந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலாளர்கள் மூலமே அதிகளவு பணம் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது.

இஸ்ரேல், உக்ரைன் போன்ற நாடுகளின் போர்முனையில் இருந்தும், வளைகுடா நாடுகளின் எண்ணெய் வயல்களில் இருந்தும், அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களில் இருந்தும், சிங்கப்பூர் துறைமுகத்துக் கப்பல்களில் இருந்தும், இன்னும் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைப் பார்த்தும் நம் நாட்டுத் தொழிலாளர்கள் தங்களது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி உழைத்து, அனுப்பும் பணம் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி பிடிப்பதில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆனால் இந்த தொழிலாளர்களின் நிலை என்ன? வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூருக்கும் வேலைதேடிச் செல்லும் இந்திய தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் சொல்லி மாளாது. அந்த நாடுகளில் தரையிறங்கிய உடனேயே அவர்களது பாஸ்போர்ட்களை முதலாளி பிடுங்கி வைத்துக் கொள்வான். பேசிய சம்பளத்தை முழுவதுமாக கொடுக்கும் முதலாளியே அங்கு கிடையாது. 8 மணி நேர உழைப்பு என்பதை வார்த்தைகளில் கூட கேட்க முடியாது. எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என முதலாளி கூறுகிறானோ அத்தனை மணிநேரம் உழைக்க வேண்டும். உரிமைகள் என்று கேட்டாலே அந்நாட்டு அரசின் சவுக்கடிதான் பதிலாக கிடைக்கும்.

வெளிநாட்டு இந்திய தொழிலாளர்களின் நிலையை புரிந்து கொள்ள அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை ஒருமுறை பார்த்தாலே போதும். ஒரு சிறிய அறையில் 10,15 தொழிலாளர்கள் தங்கியிருக்கின்றனர். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, உறங்கியெழுந்து வேலைசெய்துதான் இந்தப் பணத்தை அவர்கள் நம் நாட்டிற்கு அனுப்புகின்றனர்.

ஆனால் இந்த தொழிலாளர்களின் நலனுக்காக பாஜக அரசு துரும்பை கூட கிள்ளிப் போடுவது கிடையாது. இந்த நாடுகளில் இந்திய தூதரகம் என்பது மோடியின் வருகையைத் திட்டமிடவும், அதனை ஊடகங்களில் பிரபலப்படுத்தவும் மட்டுமே வேலை செய்கின்றன. இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நிவாரணம் பெற இந்திய தூதரகத்தை எந்நாளும் அனுக முடியாது. தூதரக அதிகாரிகளை விட தம்முடைய முதலாளியின் கங்காணிகளே எவ்வளோ மேல் எனத் தொழிலாளர்கள் கூறும் அளவிற்கு இந்திய தூதரக அதிகாரிகள் இவர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்துகின்றனர்.

போர் முனை எனத் தெரிந்தே பத்தாயிரம் தொழிலாளர்களை எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இன்றி இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கும் அரசின் அதிகார வர்க்கத்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

அம்பானி அதானி போன்ற முதலாளிகளின் நலனுக்காக உலகில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் பறந்து சென்று ஒப்பந்தம் போடும் மோடிக்கு, அந்நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க என்றைக்கும் நேரம் இருந்ததில்லை.

வெளிநாட்டிலிருந்து பணத்தைக் கொண்டுவருகிறான் என்பதற்காக பன்னாட்டு முதலாளிகளுக்கு வழங்கப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பையும், அந்நிய நேரடி முதலீட்டை விட இருமடங்கு பணத்தை நம் நாட்டிற்குள் கொண்டு வரும் இந்திய புலம் பெயர் தொழிலாளர்களை அரசு நடத்தும் விதத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும் இந்த அரசு யாருக்கான அரசு, யாருடைய நலனுக்கான அரசு என்பது சொல்லாமல் விளங்கும்.

  • தாமிரபரணி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன