தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் பேசக்கூட முடியாதபடி முடக்கப்படும் மாணவர்கள்!

இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழத் தமிழர் இனஅழிப்பிற்கு எதிரான போராட்டம் என ஒரு காலத்தில் அரசியல் போராட்ட களத்தில் முன்னணியாக நின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் இன்றைக்குத் தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் பேசக்கூட முடியாதபடி முடக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் சமூக விரோதி ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த சமூகவிரோதி, மாணவரை அடித்துத் துரத்திவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதனைத் தனது செல்போனில் படம் பிடித்து அவரைத் தொடர்ந்து மிரட்டவும் செய்துள்ளான்.

இது குறித்து மறுநாள் போலீசில் மாணவி புகாரளித்த பிறகு, விசயம் பூதகரமாக கிளம்பி தமிழ்நாடு முழுவதும் இன்றைக்குப் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

மாநிலத்தின் தலைநகரில், மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், பல அடுக்குப் பாதுகாப்புடன், வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்புடன், உள்ள இடத்தில் நூற்றுக் கணக்கான தனியார் செக்யூரிட்டி நிறுவன காவலர்களின் கிடுக்குப்பிடி சோதனைகளைத் தாண்டி இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்தற்கு பொறுப்பேற்று இதுவரை பல்கலைக்கழக நிர்வாகம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இது தற்போது கட்சிகளுக்கிடையேயான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

மாணவிக்கு நியாயம் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி முழங்குகிறார், அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். அண்ணாமலை தன்னை சவுக்கால் அடித்துக் கொள்கிறார். தமிழிசை தலைமையில் பாஜகவினர் போராடி கைதாகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி படித்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலிருந்து எவ்வித போராட்டமும் வரவில்லை. தங்களில் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துக் குறைந்தபட்சம் தொலைக்காட்சி விவாதத்தில் கூட பேசுவதற்கு கல்லூரி மாணவர்கள் தரப்பிலிருந்து இதுவரை யாரும் வரவில்லை.

அண்ணா பலகலைக்கழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் இதுதான் நிலையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழத் தமிழர் இனஅழிப்பிற்கு எதிரான போராட்டம் என ஒரு காலத்தில் அரசியல் போராட்ட களத்தில் முன்னணியாக நின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் இன்றைக்குத் தமக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் பேசக்கூட முடியாதபடி முடக்கப்பட்டிருக்கின்றனர்.

மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது ஊடகங்களில் வெளியான உடனே, அண்ணா பல்கலைக் கழகத்தின் அனைத்து துறைத் தலைவர்களும் (HOD), தமது துறை மாணவர்களை அழைத்து இந்த விசயம் குறித்துப் பேசவோ, போராடவோ, பேட்டி கொடுக்கவோ கூடாது என மிரட்டியுள்ளனர்.

தற்போது நடந்திருக்கும் வன்கொடுமை சம்பவம் போல இதற்கு முன்னரும் நடந்திருக்கிறது என்றும், தற்போது இந்த மாணவி தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததால்தான் இது வெளியே வந்திருக்கிறது என்றும் மாணவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசிடம் புகாரளிக்க முன்வரவில்லை என்பதுடன், பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்துள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்புப் பிரிவின் மீது துளியும் நம்பிக்கை இல்லாததால் அங்கேயும் இதனைப் புகாராக எடுத்துச் செல்லவில்லை என்று கூறுகின்றனர்.

தற்போதும் கூட பாதிக்கப்பட்ட மாணவி யார் என்பது அனைவருக்கும் தெரியும் வகையில் போலீசின் முதல் தகவலறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகியிருப்பது இனி இது போன்ற சம்பவம் நடைபெற்றால் மாணவிகள் தைரியமாக புகாரளிக்க முன்வருவதைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நேர் எதிரில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. ஐஐடி நிர்வாகமும், அரசும் இதனைத் தடுக்க பல்வேறு கமிட்டிகளை உருவாக்கியிருந்தாலும் மாணவர் தற்கொலையைத் தடுக்க முடியவில்லை.  நிர்வாகம் உருவாக்கும் அமைப்புகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லாததே இது போன்ற முயற்சிகள் தோல்வியடைவதற்குக் காரணமாக இருக்கின்றன.

பல்கலைக்கழக/கல்லூரி நிர்வாகத்தால் உருவாக்கப்படும் அமைப்புகள் செய்வதெல்லாம் ஒன்றுதான் அது நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடாமல் பிரச்சனையைக் கையாள்வது. பெரும்பாலான சமயங்களில் அவை பாதிக்கப்பட்ட மாணவர்களையே குற்றவாளிகளாக மாற்றி அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே பரிந்துரைக்கின்றன. தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விசயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் மாணவ மாணவிகள் இரவு 8:30 மணி வரை வெளியில் செல்லலாம் என்ற விதியை மாற்றி இனி மாலை 6:30 மணிக்குள் மாணவ மாணவிகள் விடுதிக்குள் வந்துவிட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இரவு 8 மணிக்கு மாணவி வெளியில் சென்றதால்தான் இந்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது ஆகையால் இனி மாணவிகள் 6:30 மணிக்கே விடுதிக்குள் வந்துவிட வேண்டும் என இதன் மூலம் நிர்வாகம் சொல்லாமல் சொல்கிறது.

இந்த நிர்வாகம் உருவாக்கியிருக்கும் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு அமைப்பை மாணவிகள் எப்படி நம்புவார்கள். இவர்களிடம் பிரச்சனையை எடுத்துச் சென்றால் தம்மையே குற்றவாளியாக்கி தண்டிப்பார்கள் என்பதை அவர்கள் நடைமுறையிலிருந்து உணர்ந்திருக்கிறார்கள்.

இதுவே இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஜனநாயக அமைப்பு ஒன்று, மாணவர் சங்கமாகவோ, அல்லது குறைந்தபட்சம் வாசகர் வட்டமாகவோ இருந்திருந்தால் கூட அது மாணவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்துத் தைரியமாக பேசவும், ஜனநாயகம் குறித்து உரையாடவும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடவும் ஒரு களமாக இருந்திருக்கும். சொல்லப்போனால் முதல் முறை இது போன்ற பாலியல் வன்முறை அரங்கேறிய போதே குற்றவாளியை தண்டித்திருக்கவும் முடியும். தற்போது நடந்திருக்கும் வன் கொடுமைச் சம்பவத்தைத் தடுத்திருக்கக் கூட முடியும்.

ஆனால் கல்வி நிறுவனங்களில் இது போன்ற மாணவர்களின் ஜனநாயக அமைப்புகளுக்கு திட்டமிட்டே தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பதைத் தாண்டி ஜனநாயகம் குறித்தோ, தங்களது உரிமைகள் குறித்தோ பேசுவதும், புரிந்து கொள்வதும் தமக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே ஆளும் வர்க்கமும் அரசும் அதனைத் தடை செய்துள்ளன.

கல்வியைத் தனியார்மயமாக்குவது என்ற கொள்கையில் செயல்படும் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் மாணவர் விரோதமாக இருக்கின்ற சூழலில் மாணவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஜனநாயக அமைப்புகள் உருவாவது என்பது இறுதியில் அரசுக்கு எதிரானதாகப் போய் முடியும் என அரசு அஞ்சுகிறது.

கிட்டத்தட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் தற்போது மாணவர் சங்கத் தேர்தல்கள் நடப்பதில்லை. மாணவர் பிரதிநிதிகளைக் கல்லூரி நிர்வாகமே தேர்ந்தெடுக்கிறது. இந்த பிரதிநிதிகளுக்கும் மாணவர் பிரச்சனைகளைப் பேசுவதற்கு உரிமையில்லை. கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும், கருத்தரங்கங்களுக்கும் விளம்பரம் வாங்குவது, நன்கொடை வசூலிப்பது தான் அவர்களுடைய பிரதான வேலையே.

அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே ஆய்வு மாணவர்களால் சங்கம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்ட போதும் கூட மாணவர்களை மிரட்டி அந்த முயற்சியை நிர்வாகம் முடக்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி விடுதியில் உணவின் தரம் குறைந்து உடல்நலக் கோளாறு ஏற்படுவதாகக் கூறி மாணவர்கள் ஒன்றாக கூடிப் பேசி புகாரளித்த போது, விடுதி சமயல் காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகாரளித்த மாணவர்கள் மீதே நடவடிக்கை எடுத்தது பல்கலைக்கழக நிர்வாகம்.

இது எல்லாம் பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்கள் சங்கமாக ஒன்றுதிரளக் கூடாது என்பதில் உறுதியாக நின்றதைக் காட்டுகிறது. அதற்கு பதிலாக மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச கல்லூரி நிர்வாகத்திடம் பேசும்படி கூறுகிறது. ஆனால் நிர்வாகத்தின் மீது மாணவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

மாணவர்கள் மத்தியிலும் நமக்கெதற்கு வீண் பிரச்சனை, படித்தோமா வேலை வாங்கிக் கொண்டு போனோமா எனத் தன்னை மட்டுமே பார்க்கும் மனநிலை கல்வி நிறுவனத்திற்குள்ளும், சமூகத்திலிருந்தும் ஊட்டி வளர்க்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு ஜனநாயகவெளி மறுக்கப்படுவது குறித்து மாணவர்களும் பெரிதாக கவலைப்படுவதில்லை.

இந்த நிலை தொடரும் வரை மாணவர்கள் தங்களது பிரச்சனைக்களுக்காக போராட யாராவது வருவார்கள் என காத்திருக்க வேண்டியதுதான். எடப்பாடியும், தமிழிசையும், அண்ணாமலையும் மாணவர் பிரச்சனையைத் தங்களது தனிப்பட்ட அரசியல் லாபத்திற்குப் பயன்படுத்துவார்களே அன்றி எக்காலத்திலும் மாணவர்கள் பக்கம் நிற்கப்போவதில்லை.

தற்போதைக்கு இந்த பிரச்சனையில் குற்றமிழைத்தவனை போலீசு கைது செய்து சிறையிலடைத்துள்ளது. பல்கலைக் கழக நிர்வாகமும் வழக்கம் போல பாதுகாப்பு குறைபாடுகளை ஆராய ஒரு கமிட்டியைப் போட்டுள்ளது. நீதிமன்றமும் தன்னுடைய பங்குக்கு, பாதிக்கப்பட்ட மாணவியின் கல்விக் கட்டணத்தை நிர்வாகம் ஏற்கவேண்டும் என்றும், அவருக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது போன்ற சம்பவம் இனி இந்த கல்லூரியில் மட்டுமல்லாமல் வேறு எந்தக் கல்லூரியிலும் நடக்காமல் தடுப்பது எப்படி என்பது குறித்து யாரும் கவலைப்படவில்லை. இனி அடுத்த சம்பவம் நடக்கும்வரை இவர்கள் மோன நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர் அமைப்புகளை உருவாக்குவதுதான் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் தடுப்பதற்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரே வழி.

  • அறிவு

 

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது தமிழ்நாட்டில்தான். அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றம் இரண்டாம்பட்சமாகவும், அண்ணாமலைக்கு எதிரான கேலிப்பேச்சே முதன்மைப் பொருளாக பேசவைத்திருக்கிறார்கள். திராவிட மாடல் அரசாங்கத்தில்தான் இது சாத்தியாமாகியுள்ளது.

    ஆம், ஆட்சிக்கு வந்தவுடனே பெயரளவிற்காகவாவது ஜனநாயகபூர்வமாக இயங்கிய தனிநபர்களையும் அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது திராவிட மாடல் அரசு. தற்போது எதிர்ப்பு என்பது கிஞ்சித்தும் இல்லை. அரசின் அதன் நிர்வாகத்தின் கொடுமைகளை எதிர்த்துப் பேச அஞ்சுகிறார்கள், எழுத அஞ்சுகிறார்கள்.

    திராவிட மாடல் அரசு, ஒருவித அச்ச உணர்வை போராடும் அமைப்புகள், ஜனநாயக உணர்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பாசிச பாஜகவிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல திமுக. கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவதில் பாஜகவைப் போல, திமுகவும் ஒரு வகை மாதிரி.