நாராயணமூர்த்தி இலக்கு 6 நாட்கள் 70 மணி நேரம்; நமது இலக்கு 5 நாட்கள் 40 மணி நேரம்

 

“இளைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு வாரம் 70 மணி நேரம் கடின உழைப்பைச் செலுத்தி, சீனாவைப் போல 3 1/2 மடங்கு உற்பத்தியைப் பெருக்கினால், நாடும் முன்னேறலாம், நாமும் (கார்ப்பரேட்டுகளும்) முன்னேறலாம். இதற்கு, வாரம் 6 நாட்கள் வேலை முறை அவசியம் என்பதை, என் இறுதி மூச்சு வரை முழங்குவேன்” என்கிறார், இன்போசிஸ் கார்ப்பரேட் முதலாளியான நாராயணமூர்த்தி.

இதற்கு உதாரணமாக, காய்கறி விற்பவர்களையும், டீக்கடைக்காரர்களையும் காட்டுவதோடு, தானும் மாலை 6.30 முதல் இரவு 8.30 வரை, உழைப்பதாக ஓயாமல் ஒப்பாரி வைக்கிறார். இதுபோல உழைத்தால் உற்பத்தியில் பின்தங்கியுள்ள இந்தியா முன்னேறும் என்கிறார்.1986 இல் அறிவிக்கப்பட்ட 6 வேலை நாட்களை 5 நாட்களாக மாற்றியதும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் புலம்புகிறார். இவை இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்புடையதே. ஆனால், நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள், தனது இறுதி மூச்சு வரை, உழைத்து, உழைத்து ஓடாகத் தேய்ந்து போன உழைப்பாளிகளின் முன்னேற்றத்திற்கு இவை எற்புடையதா என்றால், இல்லையென்றே பதிலாக வரும்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி, தொடர்ந்து ஒப்பாரி வைப்பதுப் போல, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், கடின உழைப்புடன் 70 மணி நேரம் உழைத்தால் உற்பத்தி பெருகும். கார்ப்பரேட் கல்லாவும் நிரம்பும். இவை, 30 வயதுக்குள்ளாகவே, உழைப்பாளர்களின் உயிரைப் பறிக்கும் கல்லறையாகவே அமையும். இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், கார்ப்பரேட்டுகளின் கைத்தடியான பாசிச ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய பெண்கள் ஒவ்வொருவரும் 3 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ளும்படி கட்டளையிட்டுள்ளார். இதை கார்ப்பரேட் முதலாளிகளும் அங்கீகரித்துள்ளனர். போதாக்குறைக்கு பாசிசம் மோடி அரசும், 12 மணி நேர வேலையையும் அங்கீகரித்துள்ளது. இனி என்ன? நாராயணமூர்த்தி இறுதி மூச்சு நிற்பதற்குள் 70 மணி நேரம் என்ன? 80 மணி நேரம் உழைப்பையும் உறிஞ்சியெடுப்பதற்கு ஏற்ப பாசிசக் கும்பலால் அடக்கு முறையும் அரங்கேற்றப்படும்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி, தன்னிடம் பணிபுரியும் 3 லட்சம் தொழிலாளர்களிடமிருந்து, 5 வேலை நாட்களில் சுரண்டிய லாபத்தின் மதிப்பு 27 ஆயிரம் கோடி ரூபாய், இவருடைய இறுதி மூச்சு நிற்பதற்குள், 6 வேலை நாட்கள் மூலம் மேலும், மேலும் சுரண்டி லாபத்தைக் குவித்து விடுவார். தற்போதைய லாபத்திலிருந்தே பேரனுக்கு 350 கோடி மதிப்பிலான பங்கை வழங்கியுள்ளார். லாபம் அதிகமாகும் பட்சத்தில், ரூபாய் 700 கோடி மதிப்பிலான பங்கையும் வழங்குவார். இந்திய உழைப்பின் மதிப்பை விட அமெரிக்க உழைப்பின் மதிப்பு தோராயமாக 5 மடங்கு அதிகமாக இருக்குமென்றே வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 5 மடங்கு கூடுதல் லாபத்தை இம்போசிஸிக்கு ஆர்டர் தரும் அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலுக்கும் வழிவகுத்துத் தருகிறார்.

தொழிலுக்கும், முதலீட்டுக்கும் 20% லாபம் போக மீதியை தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமாக இன்போசிஸ் முதலாளி பிரித்துக் கொடுத்தால், 70 மணி நேரம் என்ன? 80 மணி நேரம் கூட உழைக்க தயார் என்பது போன்ற சவால்கள் முதலாளித்துவச் சுரண்டல் சமுதாயத்தில் சாத்தியமில்லை என்பதோடு, வெற்று சவடாலாகவே அமையும்.

இன்று, உலகத்தை மேலாதிக்கம் செய்து வரும் அதே அமெரிக்காவில், தொழிலாளர்களிடமிருந்து 12 – 14 மணிநேர உழைப்பைச் சுரண்டியெடுத்தன அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம். இதற்கு எதிராக போராடிய, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உதிரத்தில் மலர்ந்தது தான் 8 மணி நேர வேலை நேரம். அதனால்தான், இந்த 8 மணி நேர வேலை போக, மீதமுள்ள 16 மணி நேரத்தை பொழுதுபோக்கிற்கும், உறக்கத்திற்கும் பெற முடிந்தது. போனஸ், பிஎப், இஎஸ்ஐ போன்ற இன்னும் பல்வேறு சலுகைகளுடன் 60 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழவும் முடிந்தது. ரத்தம் சிந்திப் போராடி பெற்ற இவ்வுரிமையைப் பணத்திற்காக பலியிட முனைவது படுமுட்டாள்தனம். இன்றைய ஐடி ஊழியர்கள் 60 வயதில் வரவேண்டிய முதுகு வலி, தூக்கமின்மை, இதய நோய், மூல நோய் போன்றவைகளால் பாதிக்கப்படுவதும், அதிக நேரப் பணிச்சுமையால் மன நிம்மதியின்மை, விவகாரத்து, தற்கொலை போன்றவைகளால் 30 வயதிலேயே பீடிக்கப்பட்டு மரணத்தை நோக்கி பயணிக்கின்றனர்.

ரத்தம் சிந்திப் பெற்ற இந்த 8 மணி நேர உழைப்பிற்கும், கூலி தரப்படுகிறதா என்றால் அதுவுமில்லை. 4 மணி நேர உழைப்பிற்கு மட்டுமே கூலி தரப்படுகிறது. மீதி 4 மணி நேர உழைப்பிற்கான கூலியை உற்பத்தியின் போதே லாபமாக (உபரியாக) திருடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப வரும் லாபத்தையும் சுருட்டி கொள்கிறது. தற்போதைய வேலை நேர அதிகரிப்பும், எந்திரங்களின் வளர்ச்சியும், அறிவியல் – தகவல் தொழில்நுட்பப் புரட்சியும், 4 மணி நேரத்திற்கு தரப்பட்ட கூலியை 1 மணி நேரத்திற்கான கூலியாகக் குறைத்து, மீதமுள்ள 7 மணி நேர உழைப்பை, லாபமாக உற்பத்தியின் போதே, வழக்கம் போல திருடி வருவதை எந்த கார்ப்பரேட் முதலாளிகளாலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

மேலும், தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் கார்ப்பரேட்டுகளின் நம்பகமான அடியாளான பாசிச ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடி கும்பல் தலைமையிலான அரசு 12 – 14 வேலை நேரத்தை உத்திரவாதப்படுத்துவதையும், சுரண்டலை மேலும், மேலும் தீவிரப் படுத்துவதையும், கார்ப்பரேட்டுகளின் லாபத்தை இரட்டிப்பாக்கி தருவதையும் செவ்வனே செய்து வருகிறது.

இவற்றை முறியடிப்பதோடு, இனபோசிஸ் நாராயண மூர்த்தியின் மூச்சை இறுதியாக்குவதற்கேற்ப, 8 மணி நேர (8*5=40 மணி நேர) வேலையை – உழைப்பை – நிரந்தரப்படுத்துவோம். இதற்கான போராட்டத்தை இன்று முதல் நாடு தழுவிய அளவில் தீவிரப்படுத்துவதுமே இதற்கு தீர்வாக அமையும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன