ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதத் தொடக்கத்தையொட்டி, ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் கலை நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொள்ளவும், ஆண்டளை கருவறைக்குள் சென்று தரிசிக்கவும் ஆசையுடன் சென்றவரை கருவறைக்குள் அனுமதிக்கவில்லை.
அனைத்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் கலையில் கரை கண்டவர்கள், ஆரியப் பார்ப்பன பண்பாட்டில் ஊறித் திளைத்த அர்ச்சகர்கள். ஜீயர்களுடன் சென்ற இளையராஜாவிற்கும் ஆண்டாளுக்கு சூட்டிய மாலையை, பட்டு வஸ்திரத்தை, ஆண்டாள் படத்துடன் கூடிய பிரசாதத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவரை (இளையராஜாவை) மட்டும் அனைத்து அமுக்கி, கருவறைக்குள் நுழையவிடாமல், வெளியே நிறுத்தி, வழக்கம்போல பக்தர்கள் தரிசிக்கும் இடத்திலேயே நிறுத்தி தரிசிக்க வைத்து விட்டனர் ஆண்டாளின் அர்ச்சகர்கள்.
இவை அனைத்தும் சமூக வலைதளத்தில் வளைய தொடங்கியவுடன் “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றனர். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என நடந்த உண்மையை ஊத்தி மூடிவிட்டார் இசைஞானி இளையராஜா.
சனாதன வாதியாக மாறிய இசை’ஞானி’ இளையராஜாவிடம் அவருக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையைக் கூர் தீட்டி காட்டினால் கோபம் வராதா, நிச்சயம் வரும். இசை’ஞானி’ கூறுவது போல, சனாதான எதிர்ப்பாளர்கள் தான், அவர் பாணியிலேயே “நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றனர்” என்றால், இந்து அறநிலைத்துறை அதிகாரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை எந்த பரப்புரையில் சேர்ப்பது என்பதை இசை’ஞானி’ இளையராஜாவிடமே விட்டுவிடுவோம்.
இசை’ஞானி’ இளையராஜாவாக இருந்தாலும் சரி, எந்த கொம்பனாலும் சரி, கருவறைக்குள் அர்ச்சகர்களைத் தவிர, நுழைய முடியாது என்று மிரட்டுகிற தொனியில் பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி தான், தனது ஊத்த வாயால், ‘இளையராஜா என்பவர் இசை கடவுள் என்று வர்ணிக்கிறார்’. ஆண்டாளையே இசையால் மனம் குளிர வைத்த இளையராஜாவை, இசைக் கடவுளான இளையராஜாவை, கருவறைக்குள் எழுந்தருளியுள்ள மூலவர்களில் ஒருவராக, அர்த்த மண்டபத்தின் உற்சவர்களில் ஒருவராக எழுந்தருளச் செய்யவில்லையென்றாலும், கருவறைக்குள் அனுமதிக்கலாம் அல்லவா? அது எப்படி?
முறையாகப் பயிற்சிப் பெற்ற, பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்களையே கருவறைக்குள் அனுமதிக்காத போது, தீண்டாமையை உருவாக்கிய ஆரிய பார்ப்பன பண்பாட்டு சனாதனம் எப்படி அனுமதிக்கும்? ஆனால், இதையும் மீறி, அர்ச்சகர் நியமனத்திற்கு ஜாதி தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட, மரபு வழிப்பட்ட கோயில்களில், பார்ப்பன அல்லாதவர்கள் அர்ச்சகராக முடியாது என்கிற பார்ப்பனர்கள் உருவாக்கிய சனாதனத்தைக் காட்டி அந்த தீர்ப்புக்கும் ஆப்பரைந்து விட்டது உச்சநீதிமன்றம்.
இதன் மூலம், முறையாகப் பயிற்சி பெற்ற பார்ப்பனர்கள் அல்லாத 24 அர்ச்சகர்களின் வாழ்வைப் பறித்து வீதியில் விரட்டியதோடு, அர்ச்சகர்கள் நியமனத்திற்கு சாதி ஒரு தடையில்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும் கல்லறை எழுப்பி விட்டது உச்சி குடுமிமன்றம்.
இளையராஜா பிறந்த தேனி, பண்ணைபுரம் உட்பட இந்தியா முழுவதும் சனாதனத்தின் தீண்டாமைக் கொடுமைக்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் ஆட்பட்டு வரும் தலித் மக்களைப் பற்றி, இசைக்கே ஞானியான இளையராஜா ஒன்றும் அறியாதவர் அல்ல.
சாதிய ஒடுக்குமுறையில் இருந்தும், வர்க்க ஒடுக்குமுறையில் இருந்தும் மீண்டு, இசைஞானியாக வளர்ந்து, ஒளிரும் இன்றைய இளையராஜா ஆரியப் பார்ப்பன பண்பாட்டின் சனாதன சாக்கடையில் சங்கமமாகி விட்டார். இசையை காவி – கார்ப்பரேட் மயமாக்கி ID, ED யிடம் சுயமரியாதை இழந்து பாசிச ஆர்எஸ்எஸ், பிஜேபி, மோடிக் கும்பலின் மாநிலங்களவை உறுப்பினராகிய இசைக் ‘கடவுளான’ இளையராஜாவுக்கு, தீண்டாமைக் கொடுமைக்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான அனைத்து போராட்ட முழக்கங்களும், கண்டனங்களும் முகாரி இராகமாகத் தான் ஒலிக்கும்.
- மோகன்