அதானியைப் பாதுகாக்கும் காவி பா(சி)சம்!

ஒருபுறம் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அதானியை மாற்றுவதற்காகவே புதிய திட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும் கொண்டுவருவது மறுபுறம் அதானி குழுமத்தின் குற்றங்களுக்கு உறுதியான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதானி என்ற கார்பரேட் முதலாளியைப் பாதுகாத்து வளர்க்கிறது மோடி தலைமையிலான காவிப் பாசிசக் கூட்டம்.

இந்திய சூரிய மின்சார உற்பத்தித் திட்டத்தில் தனக்கு சாதகமான சரத்துக்களை சேர்க்கவும் சூரிய மின்சார உற்பத்தி ஒப்பந்தத்தை கைப்பற்றவும். அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி அதன் நிர்வாக இயக்குநர் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் மற்றும் அஜூர் பவர் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறையும் (US department of Justice) அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (US Securities and Exchange Commission) ஊழல் புகார் அளித்தது.  


அதனையடுத்து சூரிய மின் உற்பத்தியில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் மாநில மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து (DISCOM) ஒப்பந்தங்களைப் பெற 2020-2024 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளுக்கு 2,029 கோடி லஞ்சம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாக நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அம்மாவட்ட அட்டர்னி வழக்குத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் அதானிக்கும் அவரது மருமகன் சாகர் அதானிக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தன்னுடைய சோலார் மின்சார உற்பத்தித்  திட்டத்திற்காக ஏறத்தாழ 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியைப் பத்திரங்கள் மூலமாக  வெளிநாட்டில் இருந்து கடனாகப் பெற்றுள்ளது. இதில் 175 மில்லியன் டாலர் அளவிலான நிதியை அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும் கடனாக வாங்கியுள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தின் படி (Foreign Correption Practices Act), தனது நிறுவனத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும் தன் நாட்டில் அத்திட்டத்திற்காக லஞ்ச-ஊழல் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. லஞ்ச-ஊழல் முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்று உறுதியளித்தால் மட்டுமே கடன் பெற முடியும். எனவே எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்று ஒப்புதல் கொடுத்த பின்னரே 175 மில்லியன் டாலரைக் கடனாக அதானி பெற்றிருக்கிறார். ஆனால் தன்னுடைய சோலார் மின்சார உற்பத்தி திட்டத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள்/கட்சிகள் பிரமுகர்களுக்கு 2000 கோடிகளுக்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டு இருந்ததை தரவுகளுடன் அமெரிக்க நீதித்துறை மற்றும் பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. இதுதான் அதானி மீதான வழக்கின் பின்னணி.

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று பாஜக மறுத்து வருகிறது. ஆர்எஸ்எஸ்-ன் ஆதரவாளரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குறைஞருமான மகேஷ் ஜெத்மலானி மற்றும் இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகில் ரோகித் இருவரும், “ஆதானி ஊழல் செய்தார் என்பதற்கு ஆதாரம் கிடையாது எனவே இதை விசாரிக்கத் தேவையில்லை” என்று பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளித்துள்ளனர். இவ்வழக்கின் பின்னணியை சற்று விரிவாகப் பார்த்தால் அதானி குற்றவாளி என்பதையும் மோடி-அமித்ஷா கும்பல் அதானியைப் பாதுகாக்கின்றனர் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

* * * * * * * *

இவ்வழக்கின் மையப் புள்ளியே மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கார்ப்பரேஷன் (Solar Energy Corporation of India-SECI) தான். 2019-ல், சூரிய மின்சார உற்பத்திக்கான ஒப்பந்தத்தை SECI அதானியின் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அமெரிக்காவின் அஜூர் பவர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இத்திட்டத்தின்படி 3000 மெகாவாட் சூரிய மின்சார உற்பத்திக்குத் தேவையான சோலார் பேனல்ஸ், மாடுல்ஸ் மற்றும் இதர மின் கருவிகளை இந்நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். கூடவே இந்நிறுவனங்களிடமிருந்து 12 ஆயிரம் மெகாவாட் சூரிய-மின்சாரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு SECI வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே ஒப்பந்தம். இதில் 8000 மெகாவாட் சூரிய-மின்சாரத்தை அதானியின் கிரீன் எனெர்ஜியும் மீதமுள்ள 4000 மெகாவாட் சூரிய-மின்சாரத்தை அஜூர் பவர் நிறுவனமும் உற்பத்தி செய்யும்.

இத்தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக மின்சார சட்டம் 2003-ல் திருத்தம் செய்தது மோடி-அமித்ஷா கும்பல். அத்திருத்தத்தின் படி, மாநில அரசுகள் தனது மின்தேவையில் 10 சதவிகிதத்தை, அதிகமான விலையாக இருந்தாலும், SECI யிடமிருந்து வாங்க வேண்டும் என்று நிர்பந்தித்தது.இது குறித்து நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ள முன்னாள் மத்திய நிதித்துறைச் செயளாலர் E A S  சர்மா, “2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ், மாநில மின்வாரியங்கள் குறைந்தபட்சம் 10% மின்சாரத் தேவையை, ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த அஜூர் பவர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி மையத்தொகுப்பில் இருந்து வாங்க வேண்டும், என்ன விலையாக இருந்தாலும், என்று சட்டத்திற்குப் புறம்பாக உத்தரவுகளைப் பிறப்பித்து சூரிய மின்சக்தித் துறையில் ஊழலுக்கான வாய்ப்பை மின் அமைச்சகம் உருவாக்கியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.   

ஒப்பந்தத்தின்படி, SECI அதானியிடமிருந்து சூரிய மின்சாரத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் (DISCOMs) தங்களது 10% மின்சாரத்தை SECI யிடம் இருந்து வாங்கிக்கொள்ள வேண்டும். சந்தை விலையை விட அதிக விலைக்கு அதானியிடம் இருந்து சூரிய மின்சாரத்தை வாங்கிக்கொள்ள SECI ஒப்புக்கொண்டது. ஆனால் மாநில அரசுகளோ அதே விலைக்கு SECI யிடமிருந்து வாங்க மறுத்துவிட்டன. எனவே அதானி நேரடியாகவே மாநில அரசு பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் சந்தையை விட அதிக விலைக்கு SECI யிடமிருந்து சூரிய மின்சாரத்தை வாங்க சம்மதிக்க வைத்துள்ளார்.


2030-குள் 45 ஜிகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து தயாரிப்பது என்ற இலக்கை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக அதன் அறிக்கை கூறுகிறது. இந்த இலக்கை அடைவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் 16,600 கோடி ரூபாய் இலாபம் ஈட்ட அதானி நிறுவனம் திட்டமிட்டு இருப்பதையும் அமெரிக்க குற்றப்பத்திரிகை கூறுகிறது. இது ஆளும் கட்சிகளின் உதவியில்லாமல் குறிப்பாக மோடியின் ஆதரவில்லாமல் சாத்தியமில்லை.

அமெரிக்க குற்றப்பத்திரிகையில், ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022-க்கு இடையில் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் மின்சார விநியோக நிறுவனங்கள் அதானி கிரீன் எனர்ஜியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்குரோல் இணையப் பத்திரிக்கை தனது ஆய்வில் மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஆந்திரா, ஒரிசா, தமிழ்நாடு, சட்டீஸ்கர், ஜம்மு&காஷ்மீர் ஆகிய மாநில மின்சார விநியோக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறுகிறது.


குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் YSR காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சூரிய மின்சாரம் ஒப்பந்தத்திற்காக அதிகாரிகள்/கட்சி பிரமுகர்களுக்கு 1,750 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க திட்டம் போடப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிக்கை கூறுகிறது. இது ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான பி.வி. ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், 2019-ல் ஆந்திரப் பிரதேச அரசு 2,132 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான (PPA) 23 செயல்திட்டங்களை (Project) இரத்து செய்ததாகவும் அதற்குப் பதிலாக 7,000 மெகாவாட் சூரிய மின்சாரத்தை SECI யிடமிருந்து பெறுவதற்காக டிசம்பர் 2021-ல் ஒப்பந்தம் செய்ததாகவும், இந்த ஒப்பந்தத்திற்கு மூளையாக இரண்டு உயர் அதிகாரிகள் இருத்தனர் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அஜூர் பவர் நிறுவனத்திடம் இருந்து கட்டாயமாக சூரிய மின்சாரத்தைப் பெற வேண்டும் என்ற திருத்தத்தை கொண்டு வந்தது மோடி அரசு தான். மேலும் மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் SECI யிடமிருந்து சந்தையை விட அதிக விலைக்கு அதானிடம் வாங்குவதற்காக இடைத்தரகர்கள் வேலை செய்ததும் மோடி அரசுதான் என்பது அம்பலமாகியிருக்கிறது.  

இவ்விஷயத்தில் மோடி அரசின் மரபுசார மின் உற்பத்தி துறையின் கொள்கை முடிவுகள்,  SECI, மற்றும் மத்திய – மாநில அரசு அதிகாரிகள் அதானி என்ற கார்ப்பரேட் முதலாளியை முன்னிறுத்துவதைத் திட்டமிட்டே செய்து இருக்கின்றனர். இதன் விளைவாக மின்சார விலையேற்றம் என்பது மக்களின் தலையில் பெரிய இடியாக விழுந்துள்ளது.

* * * * * * *

அதானி மீதான  குற்றச்சாட்டுகளை அமெரிக்க பத்திர மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக விசாரித்து வருகிறது. இது அதானிக்கும் தெரியும். இவ்விசாரணை குறித்து 2024 மார்ச் மாதம் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் FCPA சட்டத்தினை மீறியதற்காக சாகர் அதானியிடம் FBI விசாரணை நடத்தியுள்ளது. கூடவே அவருடைய மின்னணு சாதனங்களையும் கைப்பற்றியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் விசாரணை குறித்து, அதானி நிறுவனம் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கும் இந்தியப் பங்கு சந்தை நிர்வாகிகளுக்கும், செபிக்கும் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. செபிக்கு சமர்ப்பிக்கும் தனது ஆண்டு அறிக்கையிலும் இதுகுறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இவை அனைத்தும் தெரிந்திருந்தும், செபி இன்றுவரை அதானியிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கள்ளமவுனம் காக்கிறது.

ஹிட்டன் பெர்க் குற்றச்சாட்டுகளையொட்டி அதானி மீது உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில், இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டுள்ளதா என்று விசாரித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செபிக்கு ஜனவரி முதல் வாரத்தில் உத்தவிட்டிருந்தது. அதானி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதே செபியின் பதில். ஆனால் அதானி மீதான SEC குற்றச்சாட்டிலிருந்து பார்க்கும் போது செபி அதானியை விசாரிக்கவே இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியப் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்தும், அந்நிறுவனங்களின் ஆண்டறிக்கையின் உண்மை தன்மையைப் பரிசோதிப்பதும் செபியின் முக்கியமான வேலையாகும். ஆனால் அதானி நிறுவனம் சட்ட விரோத முறைகேடுகள் செய்துள்ளதாக ஆதாரங்களுடன் ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுகள் வைத்த போதும் இவை குறித்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்த போதும் தற்போது அமெரிக்க பங்கு சந்தையை நிர்வகிக்கும் அமைப்பான SEC ஆதாரங்களுடன் அதானியின் மீது குற்றசாட்டுகளை வைத்த போதும் அதைப் பற்றி வாய் திறக்காமல் செபி அமைதியாகவே இருக்கிறது.  

மோடியை எதிர்க்கும் கட்சித் தலைவர்களையும் மாநில முதலமைச்சர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கும் அமலாக்க துறையும் CBI அமைப்பும் போதிய ஆதாரங்கள் இருந்தும் அதானி விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருபுறம் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அதானியை மாற்றுவதற்காகவே புதிய திட்டங்களையும்,  சட்டத்திருத்தங்களையும் கொண்டுவருவது மறுபுறம் அதானி குழுமத்தின் குற்றங்களுக்கு உறுதியான ஆதாரம் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதானி என்ற கார்பரேட் முதலாளியைப் பாதுகாத்து வளர்க்கிறது மோடி தலைமையிலான காவிப் பாசிசக் கூட்டம்.

  • அழகு

 

 

தகவல் ஆதாரம்

https://scroll.in/article/1075951/adani-us-indictment-the-indian-solar-deals-for-which-rs-2029-crore-was-allegedly-paid-in-bribes

https://scroll.in/article/1075944/explainer-what-does-us-law-say-about-adanis-indictment-and-can-he-be-charged-in-india

https://scroll.in/article/1075913/explained-why-the-us-has-filed-bribery-fraud-charges-against-adani

https://www.deccanherald.com/india/ex-ias-officer-sarma-flays-sebi-for-not-taking-action-against-adani-group-3289073

https://www.businesstoday.in/bt-tv/video/mukul-rohatgi-mahesh-jethmalani-defend-gautam-adani-sagar-adani-over-us-bribery-charges-455354-2024-11-27

https://thewire.in/business/adani-bribery-allegations-din-seci-silence-conspicuous 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன