ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் பாஜகவும்,
பாசிச எதிர்ப்பு நாடகமாடும் இந்தியா கூட்டணியும்

இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை பின்னின்று இயக்கும் நிதிமூலதன கும்பலின் முக்கியமான பிரதிநிதி அதானி. அதன் காரணமாகத்தான், உலகப் பணக்காரர்களின் வரிசையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த அதானி, பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், அபரிதமாக வளர்ச்சியடைந்து முன்னணியில் வந்து நிற்கிறார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானிக்கு வழங்கப்படுவதும், அதானிக்கு சாதகமாக சட்டங்கள் திருத்தப்படுவதும், சர்வதேச அளவில் அதானிக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர கென்யாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், வங்க தேசத்திற்கும் மோடியே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதும் இதற்காகத்தான்.

 

 

சூரிய மின்சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதானி குழும நிறுவனர் தலைவர் கௌதம் அதானி மீது, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதானிக்கு எதிரான குரல்கள் நாடுமுழுவதும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அதானி குழுமத்தின் மீதான லஞ்ச புகாரை விசாரிக்க கோரியும், அந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியைக் கைது செய்யக் கோரியும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நூற்றுக்கணக்கானவர்கள் மிகச் சிறிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும் போது, பல ஆயிரம் கோடி ருபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானி சிறையில் அடைக்கப்பட வேண்டும், அவரை கைது செய்யாமல் அரசு அவரைப் பாதுகாக்கிறது” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

ஆனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ, இதற்கு முன்னர் ஹிண்டன்பெர்க் அறிக்கை அதானி பங்குச் சந்தையில் செய்த மோசடிகளை அம்பலப்படுத்திய போது எவ்வாறு அதானியின் பக்கம் நின்று விசாரணையை நீர்த்துப் போகச் செய்ததோ அதே போன்று தற்போதும் அதானியைப் பாதுகாக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதானியின் மீதான குற்றச்சாட்டுகளை நாட்டின் மீதான தாக்குதல்களாக சித்தரிக்கும் வேலையில் பாஜகவினர் இறங்கியுள்ளனர். பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன், இவை அனைத்தும் ஜார்ஜ் சோரசின் சதி என்றும், காங்கிரஸ் கட்சி சோரஸ் எழுதிக் கொடுத்த திரைக்கதையை நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் குற்றஞ்ச்சாட்டியிருக்கிறார்.

ஆனால் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் அதானி லஞ்சம் கொடுத்ததை நிரூபிக்கும் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல்கள், அதானி குழுமத்தின் ஆவணங்கள், என பல ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள அதானி குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ.யின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றபட்டவை.

அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியும், அவரது மருமனும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான சாகர் அதானியும் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 2000 கோடி ருபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியாவில் கௌதம் அதானியின் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

அதே சமயம் லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த தகவல்களில், ஐந்து மாநில அரசுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒடிசா, சட்டீஸ்கர், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஐந்து மாநிலங்களை 2020-24 ஆண்டுகளில் ஆட்சி செய்த மாநில அரசுகள் அதானி குழுமத்தின் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றஞ்ச் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்சப் புகாரில் கூறப்பட்டுள்ள காலகட்டத்தில் இந்த ஐந்து மாநிலங்களில் பாஜக அல்லாத மற்ற கட்சிகளே ஆட்சியில் இருந்திருக்கின்றன. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதள ஆட்சி நடந்தது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியும், சட்டீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியும் நடந்தது.

ஊழல் ஒழிப்பில் தீவிரமாக இருப்பதாக தனக்குத் தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் பாஜக, தன்னை எதிர்க்கும் கட்சிகளை அமலாக்கத்துறையைக் கொண்டும், பணமோசடி தடுப்பு சட்டத்தைக் கொண்டும் ஒடுக்கி வரும் பாஜக ஐந்து மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் செய்திருக்கும் ஊழல் இவ்வாறு சர்வதேச அளவில் அம்பலப்பட்டு நிற்கும் போது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உடனடியாக அமலாக்கத்துறையைக் கொண்டு வழக்கு பதிந்து விசாரணையில் இறங்கியிருக்க வேண்டும் அல்லவா.

தில்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதான மதுபானக் கொள்கை வழக்கு, தற்போது அதானிக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒத்தது. தனியார் முதலாளிகளிடன் லஞ்சம் வாங்கிக் கொண்டு தில்லியின் மதுபானக் கொள்கைகளில் மாற்றம் செய்து அவர்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவி செய்தார் என்பதுதான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் சாரம்.

அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கை பாஜக எவ்வாறு கையாண்டது? முதலில் லஞ்சம் கொடுத்தாக குற்றம் சாட்டப்பட்ட முதலாளிகளான சரத் ரெட்டியும், ராகவ் மகுந்தா ரெட்டியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடமிருந்து வாங்கிய ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சிசோடியா முதல் கேஜ்ரிவால் வரைக் கைது செய்யப்பட்டனர். அது போல இந்த விசயத்திலும் முதலில் அமலாக்கத் துறை வழக்கு பதிந்து அதானியைக் கைது செய்து அவரிடம் வாக்குமூலம் வாங்கி எதிர்க்கட்சி தலைவர்களை, முன்னாள் இன்னாள் முதலமைச்சர்களைக் கைது செய்யலாமே. பாஜக அதனை ஏன் செய்ய மறுக்கிறது.

ஏனென்றால் மதுபானக் கொள்கை வழக்கில் சம்பந்தப்பட்ட முதலாளிகளும் அதானியும் பாஜகவிற்கு ஒன்றல்ல. இந்தியாவில் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை பின்னின்று இயக்கும் நிதிமூலதன கும்பலின் முக்கியமான பிரதிநிதி அதானி. அதன் காரணமாகத்தான், உலகப் பணக்காரர்களின் வரிசையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த அதானி, பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், அபரிதமாக வளர்ச்சியடைந்து முன்னணியில் வந்து நிற்கிறார். அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானிக்கு வழங்கப்படுவதும், அதானிக்கு சாதகமாக சட்டங்கள் திருத்தப்படுவதும், சர்வதேச அளவில் அதானிக்கு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர கென்யாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், வங்க தேசத்திற்கும் மோடியே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதும் இதற்காகத்தான்.

ஊழல் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என மார்தட்டிக் கொள்ளும் மோடியும் அவரது காவி பாசிச கும்பலும் அதானியைப் பாதுகாப்பதும், அதானி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எல்லாம் நாட்டின் நலனுக்கு எதிரானதாக சித்தரிப்பதும், அதானி காவி பாசிசத்தின் பங்காளி என்ற பாசத்தினால்தான்.

அதானிக்கும் காவி பாசிஸ்டுகளுக்கும் உள்ள இந்தப் பங்காளி உறவு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதது அல்ல. ஒட்டு அரசியலுக்காக, மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, பாசிச எதிர்ப்பு பேசிக் கொண்டிருக்கும் இந்த கட்சிகள், திரைக்குப் பின்னால் அதானியுடன் பேரம் பேசிக் கொண்டிருந்ததை அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கும் அதில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.

பாசிச மோடி அரசு அதானிக்கு எதிராக வழக்கு பதியப் போவதும் இல்லை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதும் இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெறுமனே கூச்சலிடுவதைத் தாண்டி பாஜகவை நிர்பந்திக்கும் வகையில் போராடப்போவதும் இல்லை. தற்போது பாராளுமன்றத்தில் இவர்கள் நடத்திக் கொண்டிருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகமே அன்றி வேரில்லை.

பாசிச எதிர்ப்பில் உறுதியான சக்திகள் யார், வாயளவில் பாசிச எதிர்ப்பு பேசிக்கொண்டு, புறவழியில் பாசிசத்துடன் கைகோர்த்துக் கொண்டு முதுகில் குத்தும் சக்திகள் யார் என இனம் காணுவதற்கு எடுப்பான உதாரணம்தான் அதானியின் ஊழல்.

 

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன