அதானியே பாஜக, பாஜகவே அதானி!

மக்களின் உயிரை விட அதானின் நலனே பாஜக விற்கு முக்கியம். எனவே தான் நகரின் முக்கியப் பகுதியான தாராவியில் இருந்து மக்களை வெளியேற்றி மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத பகுதியில் அவர்களை குடியமர்த்த முயற்சிக்கிறது பாஜக. இதனை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே மகாராஷ்ட்ரா சிறப்பு பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தினை கொண்டுவந்துள்ளது பாஜக அரசாங்கம்.

இந்தியாவின் வர்த்தக மையமான மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பல வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வீசி வருகின்றனர். பாஜக தலைவர்கள், வாக்குறுதிகளைத் தாண்டி தீவிரமான முஸ்லீம் வெறுப்பையும் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஊடகங்களும் ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் தேர்தலை ஒரு ஜனநாயக திருவிழா என்று பிரச்சாரம் செய்தாலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகள் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், சட்ட விதி மீறல்கள்/முறைகேடுகளை கவனிக்கும் போது இந்த தேர்தல் ஜனநாயகத்தின் முடைநாற்றம் வீசும் யோக்கியதையைக் கண்டு யாரும் முகம்சுளிக்காமலும் இல்லாமல் இல்லை. மேலும் கட்சிகளுக்குப் பின்னால் முதலாளிகளின் நலன் ஒளிந்து இருக்கிறது என்ற உண்மையை மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் எவ்வளவோ பாசாங்குகள் செய்தாலும் சில நேரங்களில் அந்த மறுக்க முடியாத உண்மையை அவர்கள் அறியாமலே வெளிப்படுத்தி விடுகின்றனர்.

சமீபத்தில் இணையதளப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக கூட்டணியில்(மகாயுதி) உள்ள தேசியவாத காங்கிரஸ் (NCP) பிரிவு தலைவரான அஜித் பவர், “2019 ஆம் ஆண்டு பாஜக ம்ற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைப்பது குறித்து டெல்லியில் அதானி வீட்டில் கூட்டம் நடந்தது. அதில் கௌதம் அதானி, அமித் ஷா, பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவர், புரபுல் பட்டேல் மற்றும் அஜித் பவர் ஆகியோர் கலந்து கொண்டதாக” கூறியிருந்தார். கூட்டத்தில் அதானி இருந்ததாக சரத் பவரும் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவும் அதானியும் இதுவரை வாய்திறக்கவில்லை.

2019 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அரசு அமைப்பதற்கான முயற்சியில் பாஜகவும் காங்கிரசும் முனைப்புடன் இருந்தன. சிவசேனா, பிஜேபிக்கு ஆதரவளிக்க முடியாது என்று அறிவித்திருந்த நிலையில் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பாஜக முயன்றது. இதற்கான கூட்டம் தான் அதானி வீட்டில் நடந்ததாக அஜித்பவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

கூட்டத்திற்கு பிறகு அஜித் பவர், தேசியவாத காங்கிரசினுடைய சில எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜகவுக்கு கொடுப்பதாக தெரிவித்ததன் பேரில் 2019இல் பாஜகவின் பட்நாவிஸ் முதலவராக பொறுப்பேற்றார். இந்நிகழ்வுகளுக்கு இடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சின் தலைவர் சரத் பவர் பாஜகவிற்கு ஆதரவு இல்லை என அறிவித்துவிடவே, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவர் பின் செல்லவில்லை. எனவே நம்பிக்கை தீர்மானத்தில் பாஜக தோல்வியடைந்தது. அதனையடுத்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியின் கீழ் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைத்தது.

ஆட்சி அமைத்த இரண்டு வருடங்களுக்குள், சிவசேனாவையும் தேசியவாத காங்கிரசையும் பாஜக உடைத்தது. சிண்டே தலைமையில் சிவசேனாவின் கணிசமான எம்எல்ஏக்களும் அஜித் பவர் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களும் பிரிந்து வந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் கடந்த மூன்று வருடங்களாக பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தியது. தேர்தல் ஆணையமும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவர் பிரிவு மற்றும் சிவசேனாவின் சிண்டே பிரிவு ஆகியவையே உண்மையான கட்சிகள் அப்பிரிவுகளுக்கே சின்னம் மற்றும் கட்சியின் உள்கட்டமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அதிகாரம் உண்டு என அறிவித்தது. உச்சநீதிமன்றமும்(தனி நீதிபதி மற்றும் அரசியல் சாசன அமர்வு) பாஜக ஆட்சியமைப்பதற்கு சாதகமான வழிகாட்டுதல்களையே வழங்கியது. இறுதியில் அதானியின் விருப்பம் நிறைவேறியது.

தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரங்களில் அதானி, மீண்டும் விவாத பொருளாகியிருக்கிறார். அது தாராவி மறுசீரமைப்பு திட்டம் குறித்து தான். மும்பையின் அடித்தட்டு மக்கள் வாழக்கூடிய, 259 ஹெக்டர் அளவிலான தாராவியை 22000 கோடி செலவில் மறுசீரமைப்புச் செய்து நகர்புற குடியிருப்பாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை அதானி ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது மகாராஷ்ட்ரா பாஜக அரசாங்கம். இந்த மறுசீரமைப்பு குறித்த எந்த விவரங்களும் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் வேலைகளை ஆரம்பித்துள்ளது அதானி நிறுவனம். தாராவியிலிருக்கும் மக்களை மும்பையின் புறநகர் பகுதியில் குடியமர்த்தி விட்டு தாராவியை கார்பரேட் ஜோன் ஆக மாற்றுவதே அதானி-பாஜகவின் திட்டம்.

தாராவியில் வசிக்கும் மக்களை தியோனர் குப்பைக் கிடங்கு பகுதிக்கு மாற்றி விட்டு தாராவியை பந்தரா குர்லா காம்ளக்ஸ் – 2 என்ற கார்பரேட் வளாகமாக மாற்ற அதானி நிறுவனம் திட்டமிட்டுருப்பதாக தாராவி பகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி கெய்வாட் தி வயர் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பாக, தாராவி மக்களுக்கு மாற்று குடியிருப்பு கட்டுவதற்காக தியோனர் குப்பைக் கிடங்கில் 124 ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கியது மகாராஷ்ட்ரா மாநில பாஜக அரசாங்கம்.

தியோனர் குப்பைக் கிடங்கு என்பது மும்பையின் குப்பைக் கழிவுகளைக் கொட்டப்படுகின்ற மிகப்பெரிய பகுதி. தியோனர் பகுதியில் வசிக்கும் மக்களின் சராசரி ஆயுள்காலமே 45 வயதுதான். இதற்கு காரணம் இக்குப்பைகளினால் ஏற்படும் நச்சு வாயுக்கள், நுண்துகள்கள் கலந்த காற்று, கடுமையான துர்நாற்றம் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளே. அப்பகுதிகளில் வசிக்கும் மக்களில் கணிசமானோர் நுரையீரல் நோயினால்(TB) பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் உயிரை விட அதானின் நலனே பாஜக விற்கு முக்கியம். எனவே தான் நகரின் முக்கியப் பகுதியான தாராவியில் இருந்து மக்களை வெளியேற்றி மனிதர்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத பகுதியில் அவர்களை குடியமர்த்த முயற்சிக்கிறது பாஜக. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே மகாராஷ்ட்ரா சிறப்பு பொது பாதுகாப்புச் சட்டம் என்ற கொடிய சட்டத்தினை கொண்டுவந்துள்ளது பாஜக அரசாங்கம்.

மகாராஷ்ட்ராவில், பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று அதானிக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

உலகில், எந்தவொரு நாட்டிலும் உள்ள தொழில் நிறுவனங்கள் அடைந்திராத வளர்சியை அதானி கார்பரேட் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் அடைந்துள்ளது. மோடி – அமித்ஷா – மோகன் பகவத் காவி பாசிச கும்பலின் ஆதவுடனே இது நடந்துவருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.  

பொதுவாக கூறுகையில், முதலாளித்துவ கட்டமைப்பில், ஜனநாயகம் என்பது முதலாளிகளுக்கானதாகவும் பெரும்பான்மை மக்களுக்கு அது சர்வாதிகாரமாகவே இருக்கும். இதில் அரசியல் கட்சிகள்  என்பவை முதலாளிகள் மற்றும் பெரும்பான்மை மக்களின் நலன்களை பாதுகாப்பவை என்று சொல்லப்பட்டாலும் அடிப்படையில் இவ்விரு தரப்புகளுக்கிடையே ஏற்படும் முரண்பாட்டில் முதலாளிகளின் நலனை உத்திரவாதப்படுத்துவதுதான் கட்சிகளின் கடமை என்ற உண்மையை சாம்சங் தொழிலாளர் போராட்டத்திலும் காணலாம் அல்லது மேற்சொன்ன உதாரணத்திலிருந்தும் புரிந்துக் கொள்ளலாம்.

ஆனால் ஆளும்வர்க்கத்தின் கடுமையான நெருக்கடியானது முதலாளித்துவ ஜனநாயகத்தை முற்றிலும் சுருக்கி பாசிசமாகவே மாற்றிவிடுகிறது. இது முதலாளிகளுக்கு உள்ளேயே இருக்கக்கூடிய ஒரு சிறு தரப்புக்கான ஜனநாயகமாகவும் மற்ற அனைவரையுமே ஒடுக்கக்கூடிய பாசிசமாகவுமே வெளிப்படுகிறது. இந்தியாவை பொருத்தவரை அது அதானி, அம்பானி போன்ற சில கார்பரேட்களுக்கான ஜனநாயகமாகவும் மற்ற அனைவருக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமையிலான காவி பாசிச ஒடுக்குமுறையாக வெளிப்படுகிறது.

தேர்தலின் மூலம் காவி-கார்பரேட் பாசசித்தை வீழ்த்த விட முடியும் என்று எதிர் கட்சிகளும் அவர்களை ஆதரிக்கின்ற சில முற்போக்கு அமைப்புகளும் தனி நபர்களும் வாதிடுகின்றனர். ஆனால் பாஜகவை பொருத்தவரை தன்னுடைய காவி கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்துவதற்காக உள்ள பல செயல்திட்டங்களில் தேர்தலும் ஒன்று. அடிப்படையில் பாஜக தன்னுடைய பாசிச கருத்துக்களை பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் வாயிலாக மக்களிடையே பிரச்சாரம் செய்து ஆதரவைத் திரட்டுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள மகாராஷ்டிரா பாஜக தலைவரான தேவேந்திர பட்நாவிஸ், “நாடாளுமன்றத் தேர்தலுகு முன்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ யாத்ரா உருவாக்கிய எதிர்பிரச்சாரத்தை எங்களால் முறியடிக்க முடியவில்லை.  இதன் விளைவாக தான் 2024 லோக்சபா தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றோம். அரசுக்கு எதிராக மக்களிடையே காங்கிரஸ் உருவாக்கிய மனோபாவத்தை முறியடித்து எங்களுடைய கருத்தை பரப்புவதற்காக, ஆர்எஸ்எஸ்ன் கருத்தியலில் இயங்கக்கூடிய முப்பது அமைப்புகளின் ஆதரவைக் கோரினோம். மக்களோடு நெருக்கமாக உள்ள இந்த முப்பது  அமைப்புகளும் கடந்த ஐந்து மாதங்களாக மக்களிடையே பிரச்சாரம் செய்து பாஜகவிற்கு ஆதரவான கருத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த தேர்தலில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார். பாஜகன் வெற்றிக்கு சங்கப்பரிவாரங்களின் பிரச்சாரம் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

காவி-காரபரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு முதலில் பாசிசத்திற்கு எதிரான வலுவான பிரச்சாரமே அவசியமானது. குறிப்பாக காவி பாசிஸ்ட்கள் தாங்கி நிற்கும் கார்பரேட்களை மக்களிடையே அம்பலப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஆனால் இங்கோ பாசிசத்தை வீழ்த்துவதென்பது மோடி-அமித் ஷா வை தேர்தலில் தோற்கடிப்பது என்று சுருங்கி, அரசியல் சாசனத்தைக் காப்பதும் திமுக, காங்கிரஸ், சிவசேனா, JMM கட்சிகளை தேர்தலில் வெற்றிபெற செய்வதுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழியென்று பிரச்சாரம் செய்கின்றனர்.

  • அழகு

https://www.agniban.com/sharad-pawar-and-amit-shah-made-big-plans-after-meeting-gautam-adani-ajit-pawars-blast-in-the-middle-of-elections/#google_vignette

https://indianexpress.com/article/cities/mumbai/resettling-on-waste-housing-risks-at-deonar-landfill-9630401/

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன