மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவியின் கொலைக்கு நீதிவேண்டியும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தினைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக பாஜக களத்தில் முன்னணியில் நிற்கிறது. அம்மாநிலத்தை ஆள்வது திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கிறது பாஜக. இதுவே பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்கியிருப்பார்கள். ஹத்ராஸ் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை இதுதான் நடந்துள்ளது.
தற்போதும் கூட தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சாமியாருக்கு, சிறைத்தண்டனையில் இருந்து விடுப்பு கொடுத்து, தாங்கள் எப்போதும் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்கள் என்பதை காவி கும்பல் நிரூபித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் குர்மித் ராம் ரஹிம் மீது, கடந்த 2017ம் ஆண்டு தனது சீடர்கள் இருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் சிறையில் இருந்ததை விட வெளியில் தான் அதிக காலம் இருந்தார் எனச் சொல்லும் அளவிற்கு பாஜக அரசு அவருக்கு அடுத்தடுத்து பரோல் வழங்கியுள்ளது.
தற்போது ஆகஸ்டு 13ம் தேதியன்று பத்தாவது முறையாக அவர் பரோலில் வெளிவந்திருக்கிறார். இத்துடன் சேர்த்தால் கடந்த 7 ஆண்டுகளில் 255 நாட்கள் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்து சுதந்திரமாக சுற்றிதிரிந்திருக்கிறார்.
இவருக்கு பரோல் வழங்கப்பட்ட காலகட்டத்தை சற்று உற்று நோக்கினால், அவை அனைத்தின் போதும் ஹரியானா மாநிலத்திலோ அல்லது அதன் பக்கத்து மாநிலங்களிலோ ஏதாவது தேர்தல் நடைபெற்றிருப்பதை பார்க்க முடியும். தற்போதும் கூட வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஹரியானா மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அவர் சிறையில் இருந்து வெளிவந்திருக்கிறார்.
2022ம் ஆண்டில் இந்தச் சாமியார் மூன்று முறை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். முதல் முறை பிப்ரவரி மாதத்தில் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலின் போது வெளியே விடப்பட்டார். 21 நாட்கள் வெளியே சுற்றிவிட்டு மார்ச் மாதத்தில் அவர் சிறைக்குத் திரும்பினாலும், ஹரியானா மாநில பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி, உடனடியாக ஜூன் மாதத்தில் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்த தேர்தலின் போது ஆன்லைன் மூலமாக ஆன்மீக கூட்டம் நடத்துகிறேன் என்ற பெயரில் பாஜகவின் முன்னாள் மேயரான ரேனு பால குப்தா என்பவருடன் நேரலையில் தோன்றி அவரை தேர்தலில் வெற்றி பெற ஆசிர்வதிப்பதாக கூறி, தனது சீடர்களை அவருக்கு வாக்களிக்கும்படி மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூருக்கு நடைபெற்ற சட்டமற்ற இடைத்தேர்தலை ஒட்டி மீண்டும் 40 நாள் பரோலில் வெளிவந்தார். 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஹரியாணா மாநிலத்தின் சில பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற போதும், அதே ஆண்டு நவம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற போதும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இந்தச் சாமியாருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதால் எல்லா பரோல்களும் மாவட்ட நீதிபதி வழங்குவதற்கு பதிலாக, மண்டல போலீஸ் கமிசனரின் ஒப்புதலை மட்டுமே அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் சமயங்களில் எல்லாம் இந்தச் சாமியாருக்கு பரோல் கொடுத்து வெளியே விடப்படுவது குறித்து கேள்வி எழும் போதெல்லாம், சட்டப்படியே அவருக்கு பரோல் கொடுக்கப்படுவதாக ஹரியானா மாநில சிறைத்துறை அமைச்சர் முதல் முதலமைச்சர் வரை வரிந்து கட்டிக் கொண்டு அவருக்கு ஆதரவாக பேசியிருக்கின்றனர்.
சாமியார் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்த 2014ம் ஆண்டில் ஹரியானா மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில், சாமியாரின் ஆசியோடு நின்ற பாஜக 90 இடங்களில் 47 இடங்களை வென்று முதல் முறையாக ஹரியானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது சாமியாரின் ஆசிரமம் முன்பாக பாஜகவினரின் கார்கள் வரிசைக் கட்டி நின்றன. அன்று தொடங்கி இன்று வரை பாஜகவிற்கும், சாமியார் குர்மித் ராம் ரஹிமுக்குமான நட்பு தொடர்கிறது.
பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டும், தங்களுக்கு ஓட்டு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, சாமியார் ராம் ரஹிமை பாஜக பாதுகாக்கிறது. அதேசமயம் கொல்கத்தா வீதிகளில் போராளி வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது. இதுதான் காவி பாசிஸ்டுகளின் யோக்கியதை.
- மகேஷ்