மின் துறையை மொத்தமாக தனியாருக்கு தாரை வார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்து கட்டுவதற்காக மோடி அரசு, மின்சார சட்ட திருத்த மசோதா 2022 என்ற சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கார்ப்பரேட் முதலாளிகளை போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அவர்கள் பகற்கொள்ளை அடிப்பதற்காக மின்பயன்பாட்டை துல்லியமாக அளவிடும் ஸ்மார்ட் மின் மீட்டர்களை நாடு முழுவதும் 2025க்குள் பொருத்த மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.26 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும், மின்சார வாரியம் உடனடியாக “பீக் ஹவர் சார்ஜஸ்” அதாவது காலை 6 மணிமுதல் 10 மணிவரை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 25% அதிக கட்டணம் விதிக்கும் முறையை, வீடுகளுக்கு கொண்டுவர உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிகார், குஜராத், மராட்டியம், அசாம், காஷ்மீர் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளில் மின்கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இம்மாநில மக்கள், மோடி அரசு திணிக்கும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். தங்கள் மீது சுமத்தப்படும் சுரண்டலையும், உரிமை பறிப்புகளையும் எப்போதும் இந்திய உழைக்கும் மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்பதை இப்போராட்டங்கள் உணர்த்துகின்றன.
பிகார் மாநிலத்தின் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்:
பிகாரின் பகல்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய அடுத்த ஒருசில மாதங்களிலேயே மின்கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஸ்மார்ட் மீட்டரை தங்களது கிராமங்களில் பொருத்த கூடாது என கிராம மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பிகார் மாநில அரசு, போராடும் மக்கள் வசிக்கும் கிராமங்களின் மின்சாரத்தை துண்டித்து வருகிறது. மின் இணைப்பை துண்டித்தாலும், போராட்டங்கள் பல கிராமங்களுக்கு பரவி வருகிறது.
மோடி அரசு கொண்டு வந்த இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, நிதிஷ் குமார் 2025க்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொருத்த பிகார் மாநில மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பிகார் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 40 இலட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் பகல்பூர், தர்பங்கா மாவட்டத்தின் சில பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதையடுத்து மும்மடங்கு மின்கட்டணம் உயர்ந்துள்ளதோடு, இப்பகுதி மக்கள் ரீசார்ஜ் செய்தாலும், துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பை மீண்டும் தருவதற்கே பல மணிநேரமாகுகிறது மேலும் முசார்பூரில் உள்ள இனயத்பூர் கிராமத்தில் வசிக்கும் பூலா தேவிக்கு ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்கட்டண பாக்கியாக ரூ76 இலட்சத்தை கட்ட சொல்லியிருக்கிறது பிகார் மின்சார வாரியம். இதுதான் ஸ்மார் மீட்டர் திட்டத்தின் லட்சணம். மக்களின் தன்னெழுச்சியான இப்போராட்டங்களின் வாயிலாக தற்போது பிகார் அரசு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளது.
மராட்டியத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான போராட்டம்:
மராட்டிய மாநிலத்தின் மின்விநியோக நிறுவனம் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக விடப்பட்ட ஆறு டெண்டரில் அதானி நிறுவனம் ரூ 13,888 கோடி ரூபாய்க்கு இரண்டு டெண்டர்களை கைப்பற்றியுள்ளது. நாக்பூர் மின்வாரிய ஊழியர்கள், மராட்டியத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிரிப்பு தெரிவித்து போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை தொடர்ந்து வருகின்றனர். அம்மாநிலம் முழுவதும் மீட்டர் பொருத்தினால் 25000 மின்வாரிய ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும்; இத்திட்டம் தொடர்ந்தால் நுகர்வோர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின் காரணமாக மராட்டிய அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதானிக்கு தந்த டெண்டர்களை மராட்டிய அரசு இதுவரை ரத்து செய்யவில்லை.
குஜராத்தில் நடக்கும் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான போராட்டம்:
குஜராத் மாநில அரசு, அம்மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் 1.65 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான இலக்கில் உள்ளது. இதுவரை 67,856 ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓவ்வொரு நுகர்வோரும் அவர்களது வீட்டில் பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்காக ரூ300ஐ முன்பணமாக குஜராத் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என்கிறது அம்மாநில அரசு. இதன் படி கணக்கிட்டால் அம்மாநிலத்தில் பொருத்தப்படும் 1.65 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கு, அம்மாநில மின் நுகர்வோரிடமிருந்து சுமார் 500 கோடி ரூபாயை சுரண்டுகிறது
வதோதராவில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி வருகிறது குஜராத் மாநில அரசு. ஒவ்வொரு மின்நுகர்வோர் கணக்கிலும் குறைந்தபட்சம் ரூ300 இருப்புத் தொகை இருக்கவேண்டும். இத்தொகை இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்; ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு நுகர்வோர் தாமதம் செய்தால் ரூ10,000 அபராதம் வசூலிக்கப்படும் என மக்களை மிரட்டுகிறார்கள்; ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கு முன்பு ஒருவர் சராசரி மின்கட்டணத் தொகையாக 3600 ரூபாயை கட்டினால், மீட்டர் பொருத்திய பிறகு பத்து நாட்களுக்கு ஒரு முறை 2000 ரூபாயை கட்ட வேண்டும்.
குஜராத்தில் ஸ்மார்ட் மீட்டர் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து வதோதராவில் தொடங்கிய மக்களின் போராட்டம், சூரத், இராஜ்கோட், ஜாம்நகர், ஆனந்த் கோத்ரா என பல இடங்களுக்கு பரவி வருகிறது.
காஷ்மீரில் நடந்த ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான போராட்டம்:
காஷ்மீரில் புதியதாக கொடுக்கப்படும் மின் இணைப்புகள் அனைத்தும் ஸ்மார் மீட்டர் பொருத்தப்பட்டே வழங்கப்படுகின்றன. அங்கு முதற்கட்டமாக இதுவரை 57,000 மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டத்தில் 1.25 இலட்சம் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் நடக்கும் மக்கள் போராட்டங்களை மோடி அரசு தீவிரமாக கண்காணித்தும் ஒடுக்கியும் வருகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் கொள்ளையை எதிர்த்து தினக்கூலி அடிப்படையில் வேலைபார்க்கும் பெண்களும் முதியவர்களும் கடந்த ஆண்டு ஸ்ரீநகரின் முக்கியப் பகுதிகளில் சாலையில் நடுவே அமர்ந்து போராட்டதில் ஈடுபட்டனர்.
எங்களது நதிகளின் மூலம் குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து விட்டு எங்களிடமே அதிக விலைக்கு மின்சாரத்தை விற்கிறார்கள் என்றும்; ஸ்மார்ட் மீட்டர்களுக்கான மின்கட்டணமான 3000- 5000 ரூபாயை கட்டுவது எப்படி? என முழக்கம் எழுப்பி போராடியுள்ளனர்.
அசாமில் நடந்து வரும் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான போராட்டம்:
அசாம் அனைத்து மாணவர் சங்கம் சார்பில் ஸ்மார் மீட்டர் திட்டம் மூலம் நடந்தேறும் கட்டணக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் நடைப்பெற்று வருகிறது அசாமின் பிஸ்வந்த் மாவட்ட மின்சார வாரியத்தை மாணவர்கள் முற்றுகையிட முயன்ற போது போலிசார் மானவர்களின் பேனர்களை கிழித்தோடு அவர்களை தாக்கியுள்ளனர். இப்போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அசாமின் பிஸ்வந்த் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
போராடி வரும் மாணவர்கள், இன்று போலிசார் எங்களது பேனரை கிழிக்கலாம்; ஆனால் இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு அசாமின் கிராமங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து போராடினால், அப்போது எங்கள் போராட்டத்தை ஒடுக்க போலிசாரின் எண்ணிக்கை போதாது என்கின்றனர்.
மின்சாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மின் உற்பத்தி, மின் விநியோகம் என ஒட்டுமொத்த மின் துறையையும் கார்ப்பரேட்டுக்கு நேர்ந்துவிடத் துடிக்கும் மோடி அரசை எதிர்த்து கடந்த ஆண்டிலிருந்து நேற்று அசாமில் நடந்தேறிய ஊரடங்கு வரை மக்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மின்துறை தனியார்மயமாக்கம் என்பது மறுகாலனியாக்கத்தின் ஓர் அங்கம். இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம், மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான மின்சாரம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிடும். மின்துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் பெட்ரோல்−டீசல் விலை உயர்வு போல, கார்ப்பரேட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டணத்தை அதிகரித்து மக்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இதற்காகத் தான் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம். ஆங்காங்கே நடக்கும் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் மூலம் பிகார், மராட்டியம், குஜராத் மாநில அரசுகள் இத்திட்டத்தை தற்போது ஒத்தி வைத்துள்ளன.
காஷ்மீரிலோ இரானுவமும், போலிசும் ரோந்து சுற்றி வந்த போதிலும், பெண்களும் முதியவர்களும் ஸ்மார் மீட்டர்களை பொருத்துவதற்கு எதிராக சாலை மறியல் செய்கின்றனர்.
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்கள், நாளை மறுகாலனியாக்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த பெருந்திரள் எழுச்சியாக மாறும்;
- தாமிரபரணி
நாடு முழுவதும் பற்றி எரியட்டும், கார்ப்பரேட் கொள்ளை பொசுங்கட்டும்.