இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றிடாத உக்ரைன் நாட்டிற்கு முதன் முறையாக கடந்த வாரம் சென்றார் நரேந்திர மோடி. அதிபர் ஜெலன்ஸ்கியை ஆரத்தழுவி, இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும் என்று அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த பயணம் “வெகுசிரத்தையாக, நுணுக்கமாக, ராஜதந்திரமாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பயணம்” காவிக் கும்பலின் சமூக ஊடகங்கள் போற்றிப் புகழ்கின்றன. “இது ஒரு வரலாற்றுப் பயணம்”[1] என்றும் “உக்ரைனில் அமைதி திரும்புவதற்கான கதவை மோடி திறந்துள்ளார்” என்றும் “ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் அதே சமயம், உக்ரைனுக்கும் பயணம் மேற்கொண்டிருப்பது மோடியின் ராஜதந்திரத்தை காட்டுகிறது” என்றும் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.
இந்தப் பிரச்சாரத்தை அப்படியே நம்பும் ஒருவர், சர்வதேச உறவுகளைக் கையாளும் மோடியின் திறமை குறித்து மெய்சிலிரித்துப் போய்விடுவார். ஆனால் உலக நடப்பை, அதுவும் குறைந்தபட்சம் தினசரிப் பத்திரிக்கைகளில் சர்வதேச நிகழ்வுகள் குறித்துப் படிக்கும் எவரும், உக்ரைனுக்கு மோடி சென்றது என்பதே, மோடியின் ரசிய பயணம் குறித்து அமெரிக்க அரசும், ஐரோப்பிய ஒன்றியமும், எழுப்பிய கண்டனங்களுக்குப் பிறகு அவர்களைச் சமாதானப்படுத்த மோடி எடுத்திருக்கும் நடவடிக்கை என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
சென்ற ஜூலை மாதத்தில் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றார் நரேந்திர மோடி. ரஷ்ய அதிபர் புதினுடன் அவர் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவின் மிக உயர்ந்த தேசிய விருதான “தி ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்” விருதை மோடிக்கு வழங்கினார்[2], ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
உக்ரைனில் மிகத் தீவிரமான போர் நடந்து கொண்டிருந்த சூழலில் மோடியின் ரஷ்ய பயணம் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளானது. உக்ரைன் தலைநகர் கியேவில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் ரஷ்ய அதிபரை மோடி சந்தித்ததை குறிப்பிட்டு பல நாடுகள் கண்டித்துப் பேசின. உக்ரைன் தலைநகரில் சேதமடைந்த குழந்தைகள் மருத்துவமனையின் படங்களுடன், மோடியும் புதினும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் பரவின.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது X (டிவிட்டர்) பக்கத்தில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர் உலகின் மிக இரத்தக்கறை படிந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடிப்பதைப் பார்ப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார். அதே பதிவில், குழந்தைகள் மருத்துவமனை மீதான ஏவுகணை தாக்குதலின் புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.
மோடியின் ரஷ்ய பயணம் குறித்துப் பேசிய அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மேத்யூ மில்லர் “ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்த எங்களின் கவலைகள் குறித்து நாங்கள் தெளிவாக, தனிப்பட்ட முறையில், நேரடியாக இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்”[3] என்று கூறினார். அதேசமயம் இந்திய அரசிடம் என்ன கூறப்பட்டது என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.
இந்திய அரசிடம் அமெரிக்கா என்ன கூறியது என்பதை மேத்யூ மில்லர் கூற மறுத்தாலும் அது என்ன என்பதை அடுத்த சில வாரங்களிலேயே உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம் மோடி வெளிப்படுத்திவிட்டார்.
இந்திய ரஷ்ய உறவு என்பது, இந்திய தரகு முதலாளிகளின் நலன் சார்ந்தது. ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனாவினைப் பின்னுக்குத்தள்ளி[4] இந்தியா முதலிடத்தில் தற்போது இருக்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணை இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை, மாறாக அம்பானியின் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அம்பானி கொழுப்பதற்கே ரஷ்ய எண்ணை பயன்படுகிறது.
அதே போன்று “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இராணுவ உதிரிபாகங்களைத் ரஷ்யா தயாரிக்கவிருக்கிறது.[5] மோடியின் ரஷ்ய பயணத்தின் போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு முன்னர் மற்ற நாடுகளுடன் (எ.கா:- இஸ்ரேல்) இந்தியா செய்துகொண்ட இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அதானி குழுமம் தான் பலனடந்துள்ளது என்பதால், கூடிய விரைவில் ரஷ்ய அதானி கூட்டணியில் இந்தியாவில் இராணுவ உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படலாம். இந்திய தரகுமுதலாளிகளின் நலன் காப்பதற்காகத்தான் மோடி கடந்த பத்து ஆண்டுகளில் 17 முறை ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மோடி ரஷ்யா சென்று வந்த பிறகு, அதுவும் இராணுவ உதிரிபாக தயாரிப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திய முதலாளிகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து தரக்கூடாது என அமெரிக்கா பகீரங்கமாக மிரட்டல் விடுத்தது.[6]
இதிலிருந்து தெளிவாக தெரிவது என்ன? தரகு முதலாளிகளுக்காக ரஷ்ய ஏகாதிபத்தியத்திடம் கூழைக்கும்பிடு போடும் அதேசமயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மோடி. அதற்காகத்தான் இந்த உக்ரைன் பயணம் என்ற நாடகத்தை நடத்தியிருக்கிறார்
அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்ய ஏகாதிபத்தியம் என இரண்டு ஆண்டைகளிடம் கைகட்டி நின்று, அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் இருவரது மனமும் நோகாமல் நடந்து கொள்வதுதான் மோடியின் வெளியுறவுக் கொள்கை. இதைத்தான் விஸ்வகுருவின் ராஜதந்திரம் என காவி கும்பல் ஏற்றிப் புகழ்கிறது.
- அறிவு
தகவல் ஆதாரம்
[1] https://timesofindia.indiatimes.com/blogs/ashoks-statecraft/prime-minister-modis-historic-visit-to-ukraine-indias-diplomatic-balancing-act-amidst-the-russia-ukraine-conflict/
[2] https://indianexpress.com/article/explained/explained-global/what-is-order-of-saint-andrew-the-apostle-conferred-upon-pm-modi-9443383/
[3] https://thewire.in/diplomacy/modis-russia-visit-raised-concerns-directly-with-indian-government-says-us
[4] https://www.reuters.com/markets/commodities/india-surpasses-china-become-russias-top-oil-buyer-july-2024-08-22/
[5] https://economictimes.indiatimes.com/news/defence/russia-agrees-to-set-up-joint-ventures-in-india-to-address-delays-in-supply-of-spares-of-military-platforms/articleshow/111613968.cms
[6] https://www.thehindubusinessline.com/economy/us-sensitises-indian-firms-on-items-not-to-be-exported-to-russia/article68543259.ece