கேரளத்தின் தொடர் நிலச்சரிவுகள் :
முதலாளித்துவ பயங்கரவாதத்தையும்,
அதன் கோர வடிவமான மறுகாலனியாக்கத்தையும்
தூக்கியெறிவதே தீர்வு! – பாகம் – 2

மறுகாலனியாக்கத்தின் கீழ்

சுமார் 300 ஆண்டுகால நேரடி காலனியாதிக்கம் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் பலமடங்கு பேரழிவை 30 ஆண்டுகால மறுகாலனியாக்க காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை சந்தித்துள்ளது. 1990-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் மக்களின் உழைப்பை மட்டுமல்ல இயற்கை வளங்களையும் எல்லையில்லாமல் சுரண்டிக் கொழுத்து புவிக் கோளத்தையே அழிவின் விளிம்பில் தள்ளியுள்ளது. அதுவரையில் அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு இருந்த தடைகள் விலக்கப்பட்டு வரைமுறையின்றி இயற்கையையும் மனித உழைப்பையும் சூறையாட அனுமதிக்கப்பட்டனர். அதன் நேரடிச் சாட்சிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று.

தேயிலை, இரப்பர், காபி போன்ற தோட்டங்களை எல்லையற்ற வகையில் பெருக்குவது; அதற்காக அம்மண்ணுக்கேற்ற மரங்கள், தாவரங்களை அழிப்பது; நிலக்கரி, இரும்புத் தாது, பாக்சைட்டு சுரங்கங்கள், கல்குவாரிகளை வரைமுறையின்றி கட்டுவது; சூழலியலை அதிமாக மாசுபடுத்தும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகையிலான தொழிற்சாலைகளுக்கு எல்லையற்ற அனுமதியை வழங்குவது; சுற்றுலாவை ஊக்குவிப்பது என்ற பெயரில் ஐந்து, நான்கு, மூன்று நட்சத்திர விடுதிகளைக் கட்டுவதற்கு எல்லாவித விதிமுறைகளையும் மீறி அனுமதி வழங்குவது; இவையனைத்திற்காகவும் காடழிப்பை மூர்க்கமாக மேற்கொள்வது; மலையைக் குடைந்து சாலைகளும் சுரங்கப் பாதைகளும் அமைப்பது – என எண்ணற்ற தாக்குதல்கள் இம்மலையின் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. ஏகாதிபத்திய முதலாளிகள், உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் நலனுக்காக, இலாப வெறிக்காக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள்தான் இமயமலையை விடவும் உறுதியான, பழைமையான மேற்குத் தொடர்ச்சி மலையை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மொத்தப் பரப்பளவான 1,29,037 சதுர கி.மீ. இல் 40%-ஐ அதாவது சுமார் 51,000 சதுர கி.மீ பரப்பளவை கேரளம் மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது. கேரளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 9,000 சதுர கி.மீ காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்கிறார், வயநாட்டில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையைச் சேர்ந்த அறிவியலாளர் தான்யா. இவற்றில் ஆகப் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளாகும். 20008-இலிருந்து 2023 வரையிலான 15 ஆண்டுகளில் மட்டும் கேரளத்தில் காட்டுப் பகுதிகளை பிற நடவடிக்கைகளுக்காக (non forest activities) – அதாவது மேற்கூறிய தேயிலை, காபி, இரப்பர் தோட்டங்கள் அமைப்பது; குவாரிகள், சுரங்கங்கள் அமைப்பது போன்றவற்றிற்கு – திருப்பிவிடப்பட்டுள்ளது 178% அதிகரித்துள்ளது. வேதனை என்னவென்றால், 2018-க்குப் பிறகு தொடர்ந்து பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வந்த போதுதான், மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுக்காக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் சூழலியலாளர்கள் வலியுறுத்திய வேளையில்தான் இக்காடழிப்பு நடவடிக்கை கேரளத்தில் உச்சத்தை தொட்டுள்ளது.  இப்பதினைந்து ஆண்டுகளில் நடந்த காடழிப்பு 2021–2023 காலகட்டத்தில்தான் 35 மடங்கு அதிகரித்தது.

 

 

இந்திய அளவில் நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 13 ஆவது இடத்திலும், கேரளத்தில் 5 ஆவது இடத்திலும் உள்ள மாவட்டம் என்று இஸ்ரோவின் நிலச்சரிவு வரைபடத்தால் (landslide atlas) அறிவிக்கப்பட்டுள்ளது வயநாடு மாவட்டம். அத்தகைய அபாயகரமான மாவட்டத்தில் மட்டும் நடந்தேறிய காடழிப்பின் பரிமாணம் நம்மைத் திகைக்க வைக்கிறது. 2007-இல் 1776 சதுர கி.மீ காடுகளைக் கொண்டிருந்த வயநாடு 2021-இல் 1580 சதுர கி.மீ ஆகச் சுருங்கிப் போனது. அதாவது 14 ஆண்டுகளில் மட்டும் 11% காடழிப்பு வயநாட்டில் மட்டும் நடந்தேறியுள்ளது. மேலும், 2021-22 இல் 3.9 ஹெக்டேர் காடுகளும் 2022-23 இல் 137.19 ஹெக்டேர் காடுகளும் பிற நடவடிக்கைகளுக்காக அங்கே திருப்பிவிடப்பட்டுள்ளன.[1]

1950-இல் வயநாட்டின் 85% பகுதிகள் காடுகளால் நிரம்பியிருந்தன. ஆனால், 2018-இல் அவற்றில் 62% காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்தக் காடுகளை எல்லாம் மக்கள் தொகை பெருகியதால் மனிதர்கள் குடியிருப்பிற்காகத்தானே அழித்தார்கள் என்று யாரேனும் சீறியெழலாம். ஆனால் அது முழு உண்மையல்ல. இதே காலகட்டத்தில் அங்கே காபி, இரப்பர், தேயிலை போன்ற தோட்டங்களின் அளவு 1,800% அதிகரித்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஏகாதிபத்திய, இந்தியத் தரகு முதலாளிகளின் இலாபவெறிக்காக அம்மாவட்டத்தில் ஆகப்பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு மேற்கூறிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதே.[2]

காடழிப்பு நடந்தேறிய இடங்களில் வெறுமனே மேற்கூறிய தோட்டங்கள் மட்டும் பயிரிடப்படவில்லை. கல்குவாரிகளும், இரும்பு, பாக்சைட், மாக்னீசு, நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கங்களும் எவ்வித விதிமுறைகளுமின்றி இயங்க அனுமதிக்கப்பட்டன. உலகின் மிகப்பழமையான மலைகளில் ஒன்றும் பல்வேறு கனிம வளங்களை தன்னகத்தே கொண்டதுமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கண்டால் முதலாளிகளின் நாவில் எச்சில் ஊறாமல் இருக்குமா என்ன?

 

 

“2020-வரையில் கேரள அரசின் வனத்துறை அளித்த அதிகாரப்பூர்வத் தகவலின்படியே கேரளத்தில் மட்டும் 5927 கற்குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 1000-க்கும் குறைவானவைதான் உரிமம் பெற்று நடத்தப்படுபவையாகும். ஏனைய குவாரிகளெல்லாம் சட்டவிரோதமாக இயங்குபவையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையை நாங்கள் ஆய்வு செய்த போது, அது மலையா அல்லது கற்குவாரிகளின் குவியலா என்று எண்ணுமளவுக்கு அங்கே குவாரிகள் இருந்தன. எங்களது பரிந்துரையில் நாங்கள் எல்லா சட்டவிரோத குவாரிகளையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் இப்போதுவரை எதுவும் நடக்கவில்லை” என்று தி இந்து யூடியூபில் வெளியான ஆவணப்படத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார், சூழலியலாளர் வி.எஸ். விஜயன்.[3] இவர் 2010-இல் அமைக்கப்பட்ட மாதவ் காட்கில் தலைமையிலான குழுவில் அங்கம் வகித்தவராவார். “இந்த குவாரிகளில் ஆகப் பெரும்பாலானவை சி.பி.எம். பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களால் நடத்தப்படுபவைதான். இதுதான் அப்பட்டமான உண்மை.” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல சகல ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளயும் அம்பலப்படுத்துகிறார், மாதவ் காட்கில்.[4] ஏகாதிபத்திய, தரகு முதலாளிகளும் மறுகாலனியாக்கத்தின் ஒட்டுண்ணி வர்க்கமாகப் பிறந்த புதிய தரகு முதலாளிகளான இந்த பணக்கார அரசியல்வாதிகளும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்த கதை கற்குவாரிகளோடு நிற்கவில்லை.

நாடுமுழுவதும் நடந்துவந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை ஆய்வு செய்ய 2010-ஆம் ஆண்டில் நீதிபதி நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான கமிஷனை அப்போதைய காங்கிரசு அரசு அமைத்தது. இந்தியாவின் இயற்கை வளங்களை ஏகாதிபத்திய, தரகு முதலாளிகள் கொள்ளையடித்துச் செல்வதற்கு தரகு வேலை பார்ப்பதையே தன் கொள்கையாகக் கொண்டிருந்த காங்கிரசும் மன்மோகன்சிங்கும் தாமாக இக்குழுவை அமைத்துவிடவில்லை. பல்வேறு சூழலியலாளர்களின் அழுத்தம், போராட்டம் போன்றவற்றின் விளைவாக வேறு வழியின்றி இக்குழு அமைக்கபட்டது.

நீதிபதி ஷா கமிட்டியின் விசாரனைகள் அதிர்ச்சிக்குரிய பல விவகாரங்களை வெளிக்கொண்டுவந்தது. குறிப்பாக சட்டிஸ்கர், ஒடிசா, கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளையும் ஊழல்களையும் அதில் சகல ஓட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகள் உள்ளிட்டு அரசு எந்திரம் முழுமையும் ஈடுபட்டுள்ளமையையும் அதன் பரிமாணத்தையும் வெளி உலகிற்குக் கொண்டுவந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பாலான சுரங்கப் பணிகள் கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகத்தில்தான் நடக்கிறது. கோவாவின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறைக்கு அடுத்த நிலையில் குவாரி மற்றும் சுரங்கத் துறைதான் இருக்கிறது. அம்மாநிலாத்தில் 1992-இல் 12 மில்லியன் மெட்ரிக் டண்ணாக இருந்த இரும்புத்தாது உற்பத்தியானது 2009-இல் சுமார் 42 மில்லியன் மெட்ரிக் டண்ணாக உயர்ந்ததைப் பார்த்தால் மறுகாலனியாக்கம் எந்தளவு துரிதகதியில் அம்மலையை சீரழித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ‘நமது நாட்டின் தேவைகளுகாகத் தானே இரும்பை வெட்டுகிறோம்’ என்று சிந்திப்பவர்களுக்காகச் சொல்கிறோம். 2011 கணக்கீட்டின்படி கோவாவில் வெட்டியெடுக்கப்படும் இரும்புத்தாது 100% வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டது. குறிப்பாக, 89% சீனாவுக்கும் 8% ஜப்பானும் ஏற்றுமதியாகின.[5]

 

 

இக்கொள்ளை சட்டப்பூர்வமாக மட்டுமின்றி சட்ட விரோதமாகவும் நடந்தேறியது. பல்வேறு தொகுதிகளாக நீதிபதி ஷா கமிஷனின் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 2012-இல் வெளியான அறிக்கையில், இரும்புத்தாதை வெட்டியெடுப்பதில் கோவாவில் மட்டும் சுமார் 34,953 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளது அம்பலமானது. “விதிமுறைகளின்றி, சோதனைகளின்றி, கட்டுப்பாடுகளின்றி இரும்புத்தாதுவை [முதலாளிகள்] வெட்டியெடுத்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் சுரங்க முதலாளிகள் மேன்மேலும் பணக்காரர்களாகியுள்ளனர்” என்று நேரடியாக அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது. கோவாவின் அப்போதைய பா.ஜ.க. முதல்வரகவும், 2002 – 2012 வரையிலான சுரங்கத் துறை அமைச்சாரகவும் இருந்த ‘தேசபக்தர்’ திகம்பர் காமத்தின் மீது நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக 2006-2011 காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாதுவின் அளவு அதிகரித்த அதே காலகட்டத்தில்தான், இந்த ஊழல் உச்சத்தில் நடந்தேறியதாக அவ்வறிக்கை கூறியது. சீன எதிர்ப்பு ‘தேசபக்த’ வேடம் போட்டுத் திரியும் பா.ஜ.க. கும்பலின் யோக்கியதை இதுதான்!

அத்துடன் அவ்வறிக்கை நின்றுவிடவில்லை. இந்திய சுரங்க ஆணையம், இந்திய சூழலியல் மற்றும் காடுகள் அமைச்சகம், கோவாவின் சுரங்கத் துறை செயலகம், மாநில வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் முக்கிய அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் நேரடியான தொடர்பிருந்ததை அம்பலப்படுத்தியது. பலநூற்றுக் கணக்கிலான ஹெக்டேரில் இந்த சட்டவிரோத சுரங்கப் பணிகள் நடந்து வந்ததாகவும் அது கூறியது. வேதாந்தா குழுமத்தின் தலைவர் அணில் அகர்வாலுக்குச் சொந்தமான ஷேஷா கோவா என்ற சுரங்க நிறுவனம், கோவாவின் மிகப்பெரிய தரகுமுதலாளிகளான டிம்ப்ளோஸ் குழுமம், சலகோன்கார் செளகுளோஸ் குழுமம் (Timblos, Salgaonkar Chowgules) போன்றவர்களால் நடத்தப்படும் சுரங்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு மிகப்பெரிய சுரங்க நிறுவனங்கள் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்துள்ளன என்று ஷா கமிட்டியால் நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டன.[6] இவையனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலோ அல்லது அதற்கு மிக அருகமைப் பகுதிகளிலோதான் இயங்கின. குறிப்பாக 90 சுரங்கங்கள் முறையான உரிமம் கூட இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும் அவற்றில் 33 சுரங்கங்கள் சூழலியல் விதிமுறைகளை மீறி வனவிலங்கு சரணாலயங்களில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் செயல்பட்டதாகவும் அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது.

அதேபோல கர்நாடகத்தில் கனிமவளங்களை வெட்டியெடுத்தது, ஏற்றுமதி செய்ததில் 2005-2011 வரையிலான ஆறே ஆண்டில் மட்டும் சுமார் 2,976 கோடி ரூபாய் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதை அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது. குறிப்பாக, அப்போது சுரங்கத் துறையின் இயக்குனராக இருந்த எம்.இ.சிவலிங்க மூர்த்தி என்பவர் கர்நாடகத்தின் அமைச்சராக இருந்த காலி ஜனார்த்தன ரெட்டிக்குச் சொந்தமான அசோசியேட் மைனிங் கம்பெணிக்கு (ஏம்.எம்.சி) போலியான உரிமங்களை வழங்கியாதாகவும் ஆறு முக்கிய அதிகாரிகள் இதில் உடந்தையாக இருந்ததையும் அது அம்பலப்படுத்தியது.[7] இந்த ஜனார்தன ரெட்டி மார்ச் 2024-இல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

அதேபோல, இவ்வறிக்கை மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தொடர்பற்ற ஒடிசாவிலும் சட்டிஸ்கரிலும் நடந்த சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளையும் வெளியே கொண்டு வந்தது. இந்த ஊழல்களுக்கெல்லாம் உச்சமாக ஒடிசாவில் சுமார் 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான மாக்னீசு, இரும்புத் தாதுக்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்யப்பட்டதை அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது.[8]

இக்கமிட்டியின் விசாரணையைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் கோவா, கர்நாடகத்தில் சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்ட காரணத்தினால், அப்போது இந்தியாவின் இரும்பு ஏற்றுமதி 70% வீழ்ச்சியடைந்தது. இந்த உண்மை இவ்விரு மாநிலங்களில் மட்டும் எந்தளவு சட்டவிரோத சுரங்கப் பணிகள் நடந்துள்ளது என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

நீதிபதி ஷா கமிட்டியானது இரும்புத் தாதுவை வெட்டியெடுக்கும் 14 மிகப்பெரிய சுரங்க நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. குறிப்பாக, ஆதித்யா பிர்லா குழுமம், சிராஜுதீன் & கோ, இந்திரானி பாட்நாயக் மைன்ஸ், ஆர்யன் மைனிங், எம்.எல்.ரங்குதா மெஸ்கோ, கலிங்கா மைனிங் கார்ப்போரேசன், ராம் பகதூர் தாக்குர், எஸ்.என். தாஸ்மோபாத்திரா மற்றும் 4 சிறிய சுரங்க கம்பெனிகள் (Aditya Birla group controlled Essel Mining, Sirajuddin and Co, Indrani Patnaik, Sarada Mines, Aryan Mining, M L Rungta, Mesco, Kalinga MIning Corporation, Ram Bahadur Thakur, S N Dasmohapatra and four other small miners) என இப்பதினான்கு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரனைக்குப் பரிந்துரைத்து. மேலும், ஜிண்டால் ஸ்டீல் & பவர், இலண்டனைச் சேர்ந்த ஸ்டெம்கோர், மைனிங் & காண்டிராக்டர் திருவேனி எர்த் மூவர்ஸ் பிரைவேட் லிமிடட் (Jindal Steel and Power Ltd (JSPL) , UK-based trading agency Stemcor and mining contractor Thriveni, Earthmovers Private Ltd (TEMPL) ஆகிய மிகப்பெரிய நிறுவனங்கள் பினாமிகளின் பெயரில் சுரங்க அனுமதி பெற்று சட்டவிரோதமாக இரும்புத் தாதுவை வெட்டி ஏற்றுமதி செய்ததையும் அம்பலப்படுத்தியது.[9]

நீதிபதி ஷா கமிஷனின் விசாரனையானது தொடர்ந்து பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்திய காரணத்தினால், குறிப்பாக சுரங்க முதலாளிகள், அதிகார வர்க்கம், சர்வ கட்சி அரசியல்வாதிகளின் கூட்டணியை அம்பலப்படுத்திய காரணத்தினால், விசாரனையை நிறுத்துமாறு எவ்வித விளக்கமுமின்றி அறிவித்து பின்னர் அக்கமிட்டியையே கலைத்துவிட்டது, அப்போதைய காங்கிரசு அரசு. நாடுமுழுவதும் நடந்துள்ள சட்டவிரோத சுரங்கப் பணிகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதுதான் ஷா கமிஷனுக்கு அளிக்கப்பட்ட பணியாகும். ஆனால், ஏனைய மாநிலங்களில் விசாரணை தொடங்குவதற்கு முன்னரே அக்கமிட்டியே கலைக்கப்பட்டுவிட்டது. அத்துடன் முதலாளிகள் அகமகிழும் வண்ணம் நீதிபதி ஷா கமிட்டி கண்டறிந்த விசயங்களையும் அதன் பரிந்துரைகளையும் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது, காங்கிரசு அரசு.

இதேபோல, நிலக்கரி, பாக்சைட்டு, மாக்னீசு என ஏராளமான கனிமவளங்களை சட்டப் பூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் ஏகாதிபத்திய, தரகு முதலாளிகள் கொள்ளையடித்துச் சென்று மேற்குத் தொடர்ச்சி மலையையும் அதன் அருகமை மாவட்டங்களையும் முற்றிலுமாக நாசமாக்கினர். பிரதானமாக இவர்களின் நலனுக்காகத்தான் அம்மலைத்தொடரில் காற்றாலை, அனல், புனல் மின் நிலையங்களை அரசு கட்டியது. இவையெல்லாம் தன் பங்கிற்கு மேன்மேலும் அம்மலைத் தொடரைச் சீரழித்தன. முதலாளிகளின் இலாபவெறிக்கான இத்திருப்பணியில் சகல ஓட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், சூழலியல் அமைச்சகம், சுரங்க அமைச்சகம், வனத்துறை உள்ளிட்ட மொத்த அரசுக் கட்டமைப்புமே உடந்தையாக இருந்துதான் இக்கொள்ளையானது அரங்கியேறியுள்ளது / அரங்கேறி வருகிறது.

 

 

எனவே, மேற்குத் தொடர் மலையின் சீரழிற்கும் காடழிப்பிற்கும் அதனால் ஏற்படும் பெருவெள்ளம், நிலச்சரிவிற்கும் காரணம் மக்களல்ல. மனிதச் செயல்பாடுகளல்ல. ஏகாதிபத்திய, இந்தியத் தரகு முதலாளிகன் கட்டற்ற இலாபவெறிதான். இந்த ‘மனிதர்களின்’ நலனுக்கான செயல்பாடுகளும் தலையீடுகளும்தான் அம்மலையைச் சீரழித்துள்ளன. 31.07.2024 அன்று இந்தியா டுடே-வுக்கு அளித்த பேட்டியில் மாதவ் காட்கில் இதைப் பின்வருமாறு கூறுகிறார்:

“இப்பேரிடர்களுக்குக் காரணமான மனிதச் செயல்பாடுகள் அல்லது மனித் தலையீடுகள் என்பவை சாதாரண மக்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளல்ல; பணக்காரர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் இப்பேரிடர்களை உருவாக்கியுள்ளது”

இவ்வாறு முதலாளிகள் தமது இலாபத்துக்காக சுரங்கங்கள், தொழிற்சாலைகள், ரிசார்ட்டுகள், தோட்டங்கள் போன்றவற்றை அமைக்க காடுகளை அழிப்பது, மலைகளைக் குடைவது ஆகியவற்றை விட்டுவிடுவோம்; சாதாரண மக்களே மலைப்பாங்கான இடங்களிலும் ஆபத்தான இடங்களிலும் தங்குவதும் நகரங்களில் குவிவதும் தன்னிச்சையான ஒன்றோ முற்றிலும் மக்களின் விருப்பத்திற்கு உட்பட்ட ஒன்றோ அல்ல. முதலாளித்துவம் தனது நலனுக்கேற்ப உற்பத்தியை எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே அது அமைகிறது.

முதலாளித்துவம் உழைக்கும் மக்களை இவ்வாறு வாழுமாறு இருத்தி வைத்திருப்பதை, மாதவ் காட்கிலின் வார்த்தைகளில் கூறினால் “நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை” பற்றிய அறிவற்ற தற்குறிகளும் ஆளும் வர்க்கங்களின் பாதந்தாங்கிகளான அயோக்கியர்களுமே பழியை மக்களின் மீதே சுமத்துகிறார்கள். ‘உங்களை யார் ஏரியில் வீடுகட்டச் சொன்னார்கள்; மலையில் வீடுகட்டச் சொன்னார்கள்; அங்கே போய் குடியிருக்கச் சொன்னார்கள்’ என்று பெரிய அறிவாளிகள் போல பாதிக்கப்பட்ட மக்களின் மீதே கல்லெறிகிறார்கள். அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் இதன் விளைவு முதலாளிகளையும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் காப்பாற்றுவது என்பதைத் தவிர `வேறொன்றுமில்லை. எனவே, சூழலியல் சீரழிவுகளுக்கு ‘மனிதச் செயல்பாடு, மனிதத் தலையீடு’ தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களின் வாதங்கள் அரசியல் அரங்கில் தாக்கித் தனிமைப்படுத்தப்பட வேண்டியவையாகும்.

2010-இல் நீதிபதி ஷா கமிட்டியை அமைத்த அதேவேளையில் சூழலியளார்களின் போராட்டங்கள், அழுத்தங்களால் மாதவ் காட்கில் தலைமையிலான ஒரு குழுவை அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அமைத்தார். மாதவ் காட்கில், வி.எஸ்.விஜயன் போன்றோரை உள்ளடக்கிய அக்குழு, மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி அதுவரையில் வெளியான ஆய்வுகளைத் தொகுக்கவும் அம்மலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனை வழங்குமாறும் பணிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சிமலை வல்லுநர் சூழலியல் குழு (WGEEP) என்று அறியப்பட்ட புகழ்பெற்ற அக்குழு 2011-இல் தமது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையை முழுவதுமாக சூழலியல் ரீதியாக கூருணர்வு (Ecological sensitive) பகுதியாக அறிவிக்க வேண்டுமென்றும், அதை அதிதீவிர கூருணர்வு மண்டலம், மிதமான கூருணர்வு மண்டலம், தாழ்ந்த கூருணர்வு மண்டலம் (Ecological highly, moderate, low sensitive zones ESZ1, ESZ2, ESZ3) என்று மூன்று வகையாகப் பிரித்து அறிவிக்க வேண்டும்னெறும் பரிந்துரைத்தது. சுமார் 66,000 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய 65% பகுதியை அதிதீவிர கூருணர்வு மண்டலமாக வரையறுத்தது. இப்பகுதியில் எவ்வித காடுசாராத நடவடிக்கைகளையும் (non foreset activities) மேற்கொள்ளக் கூடாதென்றும்; இங்கு செயல்பட்டு வரும் குவாரிகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளை உடனடியாக 5-7 ஆண்டுகளுக்குள் மூட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. அதேபோல இரண்டாவது வகையிலான மிதமான கூருணர்வு மண்டலத்தைப் பொறுத்தவரையில் அங்கே மேற்கூறிய நடவடிக்கைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டுமென்றும்; சட்டவிரோத குவாரிகள், சுரங்கங்கள் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. பின்னிரண்டு பகுதிகளிலும் ஒற்றைப் பயிர் சாகுபடியை (mono corping)[10] முற்றாகக் கைவிட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.

காடுகளில் இருந்து பழங்குடிகளை வெளியேற்றக் கூடாது என்றும், அவர்களின் பங்கேற்புடன் காடுகளைப் புத்துயிர் பெறவைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென்றும் அக்குழு பரிந்துரைத்தது. ஆனால், முதலாளிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கான சேவையை துரிதப்படுத்தி வந்த ஒன்றிய, மாநில அரசுகள் மாதவ் காட்கிலின் பரிந்துரைக்கு நேரெதிராக பழங்குடிகளை காட்டை விட்டு விரட்டியடிப்பதைத் துரிதப்படுத்தின.

சுற்றுச் சூழல் என்ற வார்த்தையையே தமது பரம வைரியாகக் கருதும் முதலாளி வர்க்கமும் அதன் ஏவலாளான இந்திய அரசும் இதைப் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல; நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையைப் போன்றே மாதவ் காட்கிலின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் குப்பைக் கூடையில் வீசியெறிந்தது. இந்த அறிக்கையைப் பற்றிய விவாதங்கள் பொதுவெளியில் எழும்போது, ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலையையும் சூழலியல் கூருணர்வு மண்டலமாகவும், அதன் 65% பகுதிகளில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அறிவிக்க வேண்டுமென்ற பரிந்துரையானது அறிவுக்குப் பொருத்தமற்று என்றும் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் ஒன்றிய மாநில, அரசுகளும் ஊடகங்களும் ஒரே குரலில் ஓலமிடுகின்றன. இந்த முண்டக்கை நிலச்சரிவிற்கு பிறகு காட்கில் குழுவின் அறிக்கை பற்றிய விவாதம் பொதுவெளியில் எழுந்தபோதும் இதே மாதிரியான ‘நியாயங்கள்’ தான் முன்வைக்கப்பட்டன.

ஆனால், மேற்படி வாதங்களை வைப்பவர்களது “அக்கறை பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றியது அல்ல. பணக்காரர்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றிய அக்கறைதான்” என்று இந்தியா டுடே-வின் பேட்டியில் காட்கில் அம்பலப்படுத்துகிறார். ஆம். ஆடு நனைவதைப் பற்றி ஓநாய்கள் ஒருபோதும் அழப்போவதில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் சர்வ கட்சி அரசியல்வாதிகளின் அக்கறையெல்லாம் ‘மக்களின் வாழ்வாதாரம்’ பற்றியதல்ல, மாறாக ஏகாதிபத்திய, இந்தியத் தரகு முதலாளிகளின் கட்டற்ற இயற்கை வளச் சுரண்டலைப் பற்றியதுதான்.  

மாதவ் காட்கிலின் பரிந்துரைகளுக்கு மாறான நீர்த்துப் போன பரிந்துரைகளைப் பெறுவதற்காகவே கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை அப்போதைய காங்கிரசு அரசு அமைத்தது. எதிர்பார்த்தபடியே, மாதவ் காட்கிலின் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலான பரிந்துரைகளை கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை வழங்கியது. குறிப்பாக, 37% மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை மட்டும் சூழலியல் ரீதியாக கூருணர்வு தன்மை கொண்டதென்று வரையறுத்தால் போதுமென்று பரிந்துரைதத்து. இக்குழுவின் அறிக்கையை அப்போதைய ஒன்றிய காங்கிரசு அரசு ஏற்றாலும், 6 மாநில அரசுகளும் சகல ஓட்டுக் கட்சிகளும் நீர்த்துப் போன இவ்வறிக்கை கூட ‘வளர்ச்சிக்கு எதிரானது’ என்று ஒரே குரலில் கூச்சலிட்டன.

மாதவ் காட்கிலின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது மட்டுமல்ல, வளர்ச்சிக்கு எதிரானது; மக்களின் வாழ்வாதரத்திற்கு எதிரானது; சூழலியல் என்ற பெயரில் பிற்போக்குத் தனமான கருத்துக்களைக் கொண்டுள்ளது; இந்தியாவின் வளர்ச்சிக்கெதிராக அந்நிய நாடுகளின் சதிச் செயல்தான் இந்த அறிக்கை என்று சர்வ கட்சியினராலும் அதிகார வர்க்கத்தினராலும் அவதூறு செய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. இதைப் பற்றி மாதவ் காட்கில் வேதனையோடு பின்வருமாறு கூறுகிறார்:

“நாங்கள் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், எல்லா கட்சியிலுள்ளவர்களும் எங்களை எதிரிகளைப் போலப் பார்த்தார்கள். காட்கில் ஒரு ஆபத்தான மனிதர், வளர்ச்சிக்கு எதிரானவர், எதற்கும் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று எல்லோரிடமும் சொல்லி வைத்தார்கள்”

நீர்த்துப்போன பரிந்துரைகளைக் கொண்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான அறிக்கையை நிராகரித்த கேரளத்தின் உம்மண்சாண்டி தலைமையிலான காங்கிரசு அரசாங்கம் 2014-இல் தானே ஒரு குழுவை அமைத்தது. பின்னர் அக்குழு அளித்த பரிந்துரைகளைக் கூட அது நடைமுறைப்படுத்தவில்லை. 2014-இல் மோடி பிரதமாரான பின்னர் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை இரத்து செய்தது; அப்போதைய கோவாவின் பா.ஜ.க. முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுரங்கத் தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு பேரிடர் நிகழும்போதும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளையாவது அமல்படுத்துங்கள் என்று சூழலியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், முதலாளிகளின் தாசாதி தாசனான மோடி அரசு அதை மயிரளவும் மதிப்பதில்லை.

(தொடரும்)
ரவி

 

குறிப்புகள்

[1] Wayanad district is highly vulnerable to disaster — Data and history are testament, Down To Earth https://www.downtoearth.org.in/natural-disasters/wayanad-district-is-highly-vulnerable-to-disaster-data-and-history-are-testament

[2] Why scenic Wayanad suffered its deadliest disaster

https://www.indiatoday.in/india-today-insight/story/why-scenic-wayanad-suffered-its-deadliest-disaster-2574502-2024-07-31

[3] Wounded mountains, The Hindu documentary ,

https://www.youtube.com/watch?v=rTV-56QagQM

[4] 31.07.2024 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு காட்கில் அளித்த மேற்கூறிய பேட்டியில்..

[5] 2011-இல் இந்திய அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மாதவ் காட்கில் அறிக்கை, பக்கம் 76

[6] Goa mining scam worth Rs 34,935 crore: Justice Shah Commission
https://www.hindustantimes.com/india/goa-mining-scam-worth-rs-34-935-crore-justice-shah-commission/story-EbEV7zhxNhuQQwwICmQ7dN.html

[7] Indian illegal mining investigation ends without explanation

https://www.theguardian.com/global-development/2013/oct/22/indian-illegal-mining-investigation-shah-commission

[8] M B Shah Commission report: Odisha’s mine of scams exposed

https://www.downtoearth.org.in/environment/m-b-shah-commission-report-odishas-mine-of-scams-exposed-43348

[9] Shah Commission names 14 miners for CBI inquiry

https://www.business-standard.com/article/current-affairs/shah-commission-names-14-miners-for-cbi-inquiry-114080800967_1.html

[10] ஒரு நிலத்தில் ஒரே விதமான பயிரை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பயிரிடுவதே ஒற்றைப் பயிர் சாகுபடி முறை என்பதாகும். இது மண்ணின் வளத்தையும் தன்மயையும் கடுமையாக பாதிக்கக் கூடியதாகும். தேயிலை, இரப்பர், காபி போன்ற ஒரே வகையான பயிர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் பல பத்தாண்டுகளாக. சில இடங்களில் நூறாண்டுகளாக தொடர்ச்சியாகப் பயிரிடப்பட்டு வருகின்றன. சூழலியல் அதிதீவிர கூருணர்வு மண்டலங்களிலும் கூட அவ்வாறு பயிரிடப்பட்டு வருகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன