கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சுமார் 400 பேருக்கும் மேல் இதுவரை (09.08.2024) பலியாகியுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகும் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. கேரளாவின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றான இந்தக் கோர நிகழ்வு நடந்தேறியுள்ளது
கேரளாவில் தொடர்கதையாகிவரும் நிலச்சரிவுகளும் அதன் துயரமும்
கேரளாவில் தொடர்ந்து பல வருடங்களாக நிலச்சரிவு நடப்பது வழமையான ஒன்றுதான் என்றபோதிலும், கடந்த 2018 நிலச்சரிவுகளால் மக்கள் பலியாவது ஆண்டுக்காண்டு பலமடங்கு பெருகிவருகின்றன. 1960 – 2018 வரையிலான 60 ஆண்டுகளில் கேரளாவில் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297 பேர். ஆனால், 2018 முதல் இதுவரையிலான (ஆகஸ்டு, 2024) கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 பேருக்கு மேல் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளனர். 60 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணத்தைவிட இரண்டு மடங்கு மரணங்கள் ஆறே ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதை, நாம் முதலாளித்துவத்தின் கோர வடிவமான மறுகாலனியாக்க காலத்தின் ‘சாதனைகளில்’ ஒன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் கேரளத்தை வாட்டி வதைக்கும் கதைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 21-ஆம் நூற்றாண்டின் கேரளத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரிடர் என்று கூறப்பட்ட, 2018 பெருவெள்ளமானது 483 பேரைப் பலிவாங்கியது. 12 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. மக்களின் உடைமைகள் மட்டுமல்ல, வீடுகளும் கூட பல கி.மீ தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து 2019-இல் வயநாடு, கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் இரண்டே நாட்களில் 80 நிலச்சரிவுகள் ஏற்பட்டு 121 உயிர்களையும், 2021 இல் ஏற்பட்ட நிலச்சரிவு 18 உயிர்களையும், 2022-இல் ஏற்பட்ட நிலச்சரிவு 53 உயிர்களையும் காவுகொண்டது. 2018 பெருவெள்ளமானது 12 மாவட்டங்களைச் சேர்ந்த 483 பேரை பலிகொண்டது; ஆனால் தற்போது 2024-இல் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவானது முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் இதுவரை சுமார் 400 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.
கொத்துக் கொத்தாக மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளும்; கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக இடிந்து கிடக்கும் காட்சிகளும்; குடும்ப ஆல்பத்திலுள்ள புகைப்படங்களை வைத்துக் கொண்டு குடும்பத்தினரைத் தேடி மக்கள் அலையும் காட்சிகளும்; அழுகுரல்களும் கதறல்களும் நம் நெஞ்சத்தை உலுக்குகின்றன. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தமக்கு என்ன நேர்ந்ததென்றே தெரியாத வகையில் மக்கள் மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளனர். இவற்றில் உயிரிழந்தவர்களை விடவும் உடைமைகளையும் குடும்பங்களையும் இழந்தவர்களின் துயரக் கதைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தன் வாழ்நாளெல்லாம் உழைத்துச் சேர்த்த வீடுகளையும், செல்வங்களையும் பலர் தொலைத்துள்ளனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்தே (trauma) பலர் இன்னும் வெளிவரவில்லை. இத்தகைய நிலச்சரிவுகளிலும் பெருவெள்ளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற்று மீண்டுவர குறைந்தபட்சம் 7 ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும் என்றும் 2018 பெருவெள்ளத்தின் பாதிப்பிலிருந்தே இன்னும் பெரும்பாலான மக்கள் முழுமையாக மீண்டுவரவில்லை என்றும் அதிகாரப்பூர்வ ஆய்வுகளே கூறுகின்றன. உண்மையான நிலைமை இதைவிடப் படுமோசமானது என்பது கூறாமலே விளங்கும்.
ஒவ்வொரு நிலச்சரிவாலும் பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்படுபவர்களில் ஆகப் பெரும்பாலானோர் ஏழை உழைக்கும் மக்களே ஆவர். குறிப்பாக, தேயிலை, காபி, இரப்பர் தோட்டங்கள், ரிசார்ட்டுகள், மருத்துவமனைகள், சுரங்கங்கள், குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளிகளே ஆவர். இதில் கேரள மக்களின் நிலைமையை விடவும் பிழைப்புத் தேடி வெளிமாநிலத்திலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் புலம் பெயர் தொழிலாளிகளின் நிலைமை இன்னும் படுமோசமானதாகும். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவானது முண்டக்கை, சூரல்மலையில் இருந்த குடியிருப்புகளை முற்றிலுமாக மண்ணுக்குள் தள்ளியுள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்கூறிய இடங்களில் பணிபுரியும் உழைக்கும் மக்களே இப்போதும் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, சட்டிஸ்கர், ஜார்கண்டு, மத்தியப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்த பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு புலம்பெயர் தொழிலாளிகள் பெருவாரியாக இப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்கூறிய துறைகளில் வேலை செய்கின்றனர். முறையான தங்குமிடமோ, உணவோ இன்றி அற்பகூலிக்கு அடிமைகளைப் போல வாழும் இத்தொழிலாளிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசுகள் எப்போதும் கணக்குக் கூறுவதில்லை; கணக்கிலிருந்து மறைக்கப்படும் இந்த அப்பாவிப் புலம்பெயர் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு இறந்தவர்களுக்குக் கிடைக்கும் இழப்பீடுகளும் நிவாரணங்களையும் கூட வழங்க மறுத்து, அவர்களை அடையாளம் காணாப் பிணம் (unidentified bodies) என்று கூறி கொத்தாகப் புதைக்கப்படும் அல்லது எரியூட்டப்படும் அவலம் அரங்கேறி வருகிறது.[1]
2011-இல் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிலைமையை ஆராய்ந்து அதைப் பாதுகாப்பதற்கான அறிக்கையைச் சமர்பித்த புகழ்பெற்ற சூழலியலாளரான மாதவ் காட்கில், இப்பேரிடர் நிகழ்ந்த அடுத்த நாளன்று (31.07.2024) இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உழைக்கும் மக்களை இவ்வாறு மரணத்தின் விளிம்பில் வைத்திருக்கும் முதலாளித்துவ பயங்கரவாத்தின் கோரமுகத்தைப் பின்வருமாறு அம்பலப்படுத்துகிறார் :
“[கேரளத்தின்] எல்லா நல்ல நிலங்களையும் [அதாவது நிலச்சரிவு அபாயமற்ற சமதளப் பகுதிகளை] தேயிலைத் தோட்ட முதலாளிகளும் அவர்களின் நண்பர்களும் சுகபோகமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால் அதேவேளையில், ஏழைகள் குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் இந்த பேராபத்து மிகுந்த [சரிவான, நிலச்சரிவு அபாயமுள்ள] பகுதிகளில் மோசமான நிலைமைகளின்கீழ் வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அடிமை வாழ்வுக்கு இணையான வகையில் வெறும் அற்ப ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள்தான் இப்பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.”[2]
நிலச்சரிவிற்கான காரணங்களாகச் சொல்லப்படுபவை என்னென்ன?
இந்த நிலச்சரிவிற்கான உண்மையான, அறிவியல் பூர்வமான காரணங்களைப் பார்ப்பதற்கு முன்னர், எந்தெந்த வகையிலான தவறான, அரைகுறையான, திசை திருப்பும் தன்மையிலான காரணங்கள் கூறப்படுகின்றன என்பதைச் சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
‘கம்யூனிஸ்டுகள்’ ஆண்டால் இதுதான் நிலைமை’ ‘2018-இல் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்த பின்னர்தான் கேரளத்தில் இவ்வாறான பேரிடர்கள் அதிகரித்துள்ளன’ ‘கிறித்துவர்களும் முசுலீம்களும் கணிசமாக வாழும் கேரளத்திற்கு இது தேவைதான்’ என்று இந்து மதவெறிக் கண்ணோட்டத்திலிருந்தும்; ‘தமிழர்களை வஞ்சிக்கும் மலையாளிகளுக்கு இயற்கை புகட்டிய பாடம் இது’ என்று தமிழினவெறிக் கண்ணோட்டத்திலிருந்தும் ஏராளமன பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் வாட்சாப்பிலும் விஷமாகப் பரவிவருகின்றன. இதயத்தையே உறையவைக்கும் அளவிலான இத்தகைய கோரச் சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகள் பாசிஸ்டுகளாகத்தான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள் என்பதற்கு இவையெல்லாம் நேரடி சாட்சிகள்.
மேற்கூறிய இனவெறி, மதவெறி நச்சுக் கருத்துக்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்த நிலச்சரிவு மட்டுமல்ல பொதுவாக இத்தகைய பேரிடர்கள் நிகழும்போதெல்லாம், அரசியல் கட்சிகளும் ஒன்றிய, மாநில அரசுகளும் ஒருவரையொருவர் குற்றஞ்சுமத்துவதைத் தாண்டி பொதுவில் இருவகையிலான காரணங்கள் பிரதானமாக வைக்கப்படுகின்றன. ஒன்று, இயற்கையாக நிகழ்ந்த பேரிடருக்கு நாம் என்ன செய்துவிட முடியும் என்று கூறுவது; இரண்டாவதாக, காலநிலை மாற்றம், இயற்கையைச் சிதைக்கும் ‘மனிதச் செயல்பாடுகள்’ பற்றி மேலோட்டமாகப் பேசுவது.
முண்டக்கை நிலச்சரிவிலும் இதே மாதிரியான வாதங்கள்தான் முன்வைக்கப்படுகின்றன. அபரிமிதமான மழைபொழிந்துவிட்டது; அதனால் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டுவிட்டு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டுவிட்டது; எனவே, இது எதிர்பாராத இயற்கைப் பேரிடர் என்று ஒருவகையிலான வாதம் வைக்கப்படுகிறது. இவை பகுதியளவு உண்மைதான். ஆனால், இதை நாம் “எதிர்பாராத இயற்கைப் பேரிடர்” என்று எடுத்துக் கொண்டால், அபரிமிதமான மழை பொழிவதற்கும்; நிலச்சரிவு ஏற்படுவதற்கும் என்ன காரணம் என்பதைப் பரிசீலிக்க இயலாது. இயற்கையின் மீது மொத்தப் பழியையும் சுமத்திவிட்டு நாம் அமைதியாக அமர்ந்துகொள்ள வேண்டியதுதான். எனவே, இத்தகைய பார்வையும் பரிசீலனையும் எதையும் புரிந்துகொள்ளவோ தீர்க்கவோ உதவாது.
இரண்டாவதாக, இது இயற்கைப் பேரிடர் அல்ல; காலநிலை மாற்றத்தின் விளைவு; மனித செயல்பாடுகளின் விளைவு என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. முதலாவது வாதம் பெரும்பான்மையான மக்களிடையே செல்வாக்குச் செலுத்தினாலும், இரண்டாவது வாதம் படித்தவர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகிறது. இதுதான் எல்லாத் தொலைக்காட்சி, பத்திரிக்கைகளிலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. எனவே, இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
நாம் வாழ்வதற்காகக் காடுகளை அழிக்கிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; மலைகளைக் குடைகிறோம்; மக்கள் தொகைப் பெருக்கத்தால் நுகர்வுகள் அதிகமாகிறது; மனிதர்கள் இயற்கையை நாசமாக்குகின்றனர்; மனிதர்கள் இயற்கையை வரைமுறையின்றி அழித்ததால் இப்போது இயற்கை மீண்டும் பழிவாங்குகிறது; இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் அல்லது மனிதர்களால் உந்தப்பட்ட பேரிடர் (man made or human induced disaster) – என்கிற வகையில் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. ‘மலைப்பாங்கான இடங்களில் உங்களை யார் தங்கச் சொன்னது’ உங்களை அங்கு யார் வீடு கட்டச் சொன்னது’ ‘அங்கே இருந்தால் இதுதான் கதி’ என்ற ‘திவிரமான’ வகையிலும் இதில் ஒருசிலர் பேசுகின்றனர்.
இந்த வாதத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், காலநிலை மாற்றம் என்பது மனிதர்களால் ஏற்பட்டது என்றும்; இயற்கையை மனிதர்கள்தான் வரைமுறையின்றிச் சிதைத்தார்கள் என்றும்; எனவே, இத்தகைய பேரிடர்களை மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்கள் என்றும்; மனிதர்களால் உந்தப்பட்ட பேரிடர்கள் என்றும் பொதுவாகப் பேசுவதன் மூலம் பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்களையே மீண்டும் குற்றவாளிகளாக்குவதுதான். அதாவது எந்த வர்க்கத்தைச் சேர்ந்த ‘மனிதர்களின்’ நலனுக்காக காடுகளும் மலைகளும் அழிக்கப்படுகின்றன என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு பொதுவாக ‘மனிதர்களின்’ மீது பழிசுமத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த ‘மனிதர்களையே’ – அதாவது உழைக்கும் மக்களையே – மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். நிலச்சரிவிற்கான காரணங்களை சூழலியல் ரீதியில் அறிவியல் பூர்வமாக விளக்கும் பெரும்பாலான சூழலியலாளர்கள், அறிவுத்துறையினரின் வாதங்களும் கூட இத்தன்மையிலேயே இருக்கின்றன. எனவே, தவிர்க்கவியலாமல் அவை அரைகுறையானதாகவோ, திசை திருப்பும் தன்மையிலானதாகவோ, மக்கள் மீதே பழிசுமத்தும் தன்மையிலானதாகவோ தான் இருக்கின்றன.
நிலச்சரிவு போன்ற பேரிடர்களுக்கான காரணங்களை பொதுவில் சூழலியல் சார்ந்த அறிவியலின் மூலம்தான் புரிந்துகொள்ள முடியும் என்றாலும் கூட, அவை பிரதானமாக சூழலியல் மட்டும் சார்ந்தவை அல்ல. நிலவும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக, அரசியல், பொருளாதார அமைப்புதான் இத்தகைய சூழலியல் பேரழிவுகளைத் தோற்றுவிப்பதற்கான பிரதானக் காரணமாகும். சமூகத்தின் அரசியல், பொருளாதார உறவுகளிலிருந்து சூழலியல் பிரச்சனையை விலக்கி வைக்கும்போது அல்லது சூழலியல் அறிவியலை சமூக அறிவியிலில் இருந்து பிரித்தெடுத்து தனியாகப் பரிசீலிக்கும்போது பொத்தாம் பொதுவாக ‘மனிதர்கள்’ மீது குற்றஞ்சுமத்துவதைத் தவிர வேறெந்த முடிவையும் நம்மால் பெற முடியாது.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோர வடிவமான
மறுகாலனியாக்கச் சுரண்டலின் விளைவே கேரளத்தின் நிலச்சரிவுகள்
இந்த நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளும் முன்னர் நிலச்சரிவுகள் என்றால் என்ன? அவை ஏன் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
குறிப்பிட்ட டிகிரியில் சாய்வாக இருக்கும் ஒரு மலையில் உள்ள சரிவுகள் (slopes) எப்போதும் கீழ் நோக்கி புவியீர்ப்பு விசையினால் அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த நிலத்தின் மரங்களும், கற்களும், மண்ணின் கடினத் தன்மையும் அது சரியாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறுதான் பொதுவில் எல்லா மலைப்பகுதிகளும் நிற்கின்றன. ஆனால், எப்போது அந்த மண்ணின் தன்மை இலகுவாகி, குறிப்பிட்ட சரிவுடனான அதன் பிடிமானம் தளர்ந்து, அது புவியீர்ப்பு விசையை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கிறதோ அப்போது அது சரிந்து விழுகிறது. இதைத்தான் பொதுவில் நாம் நிலச்சரிவு என்று கூறுகிறோம். இந்த நிலச்சரிவானது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தா வண்ணம் மிதமானதாகவும் இருக்கலாம் அல்லது மிகப்பெரிய பேரிடரையே உருவாக்கும் வண்ணமும் இருக்கலாம்.
நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கனமழை, நில அதிர்வுகள் போன்ற பல்வேறு காரணிகள் நிலச்சரிவைத் தோற்றுவிக்கலாம். நமது நாட்டில் ஆகப்பெரும்பாலான நிலச்சரிவுகளுக்கு மழைதான் தூண்டுதலாக (trigger) இருக்கிறது. உலகளவில் நடக்கும் நிலச்சரிவுகளில் 16% இந்தியாவில் தான் நடக்கின்றன.
மலைகளின் நில அமைப்பானது, பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். கீழே இறுக்கமான பாறைகள் தொடங்கி, அதற்கு மேல் களிமண் பகுதி, அதற்கு மேல் ஒப்பீடளவில் இலகுவான மண்ணுடைய பகுதி என்று பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒரு மலையின் கற்பாறைகளும் மண்ணின் உறுதித் தன்மையும் எந்தளவு உறுதியாக இருக்கின்றனவோ அந்தளவுக்கு அங்கே நிலச்சரிவு நடப்பதில்லை. முண்டக்கை நிலச்சரிவு ஏற்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையானது ஒப்பீட்டளவில் உறுதியான பகுதியாத்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்தது. இமயமலையைக் காட்டிலும் பல இலட்சம் ஆண்டுகள் பழமையான, உலகில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய (Precambrian era) மலைதான் மேற்குத் தொடர்சி மலையாகும். இமயமலை அப்படிப்பட்டதல்ல, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உலகின் இளமையான மலைகளில் ஒன்றாகும். எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பாறைகளும் கற்களும் மண்ணுடைய கடினத் தன்மையும் இமயமலையை விடவும் அதிகம் என்பது கூறாமலே விளங்கும். பல்லாயிரம் ஆண்டுகாலமாய் உறுதியாக இருந்த அத்தகைய மேற்குத் தொடர்ச்சி மலை கூட இன்று பலவீனப்பட்டுள்ளதுதான் (fragile) அங்கு ஏற்படும் தொடர் நிலச்சரிவுகளுக்கான காரணமாகும். எனவே, இந்த நிலச்சரிவுகளைப் புரிந்துகொள்ள மேற்குத் தொடர்ச்சி மலை பலவீனப்படுத்தப்பட்ட வரலாற்றைச் சற்று சுருக்கமாகவேனும் பார்ப்பது அவசியம்.
ஆங்கிலேயக் காலனியாதிக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சீரழித்த கதை
குஜராத்-மகாராஷ்டிர எல்லையில் தொடங்கி கோவா, கர்நாடகா, கேரளம் என தமிழ்நாட்டின் குமரி முனைவரை, 6 மாநிலங்கள், 44 மாவட்டங்களுக்கு 1490 கி.மீ நீளத்துக்கு அரபிக் கடல் கரைக்கு இணையாக நீண்டு கிடப்பதுதான் மேற்குத் தொடர்ச்சி மலையாகும். 1,29,037 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இம்மலைத்தொடரில் இருந்துதான் கோதாவரி, காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, துங்கபத்திரை போன்ற மிகப்பெரிய நதிகளும் அவற்றிலிருந்து எண்ணற்ற துணை நதிகளும் ஊற்றெடுத்து ஓடுகின்றன. உலகில் வேறெங்கும் காண இயலாத தனித்துவமான விலங்கினங்கள், பறவைகள், தாவரங்கள் ஆயிரக்கணக்கானவை இங்கு வாழ்கின்றன. யுனெஸ்கோவின் அங்கீகரிக்கப்பட்ட பல்லுயிர் சரணாலயமாகவும் (biodiversity hotspot) இந்தியாவின், ஏன் உலகத்தின் தனித்துவமான சூழலியல் கட்டமைப்பில் (unique ecosystem) ஒன்றாகவும் திகழ்கிறது. தான் உண்டாக்கிய நதிகள், துணை நதிகளின் மூலம் நீராதாரமாக விளங்குவது மட்டுமல்ல, தென்னிந்தியாவின் நீர்த்தேவைக்கான மிகமுக்கிய ஆதாரமாகத் திகழும் தென்மேற்குப் பருவமழைக்கும் இந்த மலைத் தொடர்தான் ஆதாரத்தூணாக விளங்குகிறது. அவ்வகையில், இந்தியாவின் நுரையீரலாகவும் கிட்டத்தட்ட சரிபாதி இந்திய மக்களின் நீராதரமாத்துக்கான தாயாகவும் திகழ்கிறது.
இத்தகைய சிறப்புகளுடையதும் கண்ணை இமைகாப்பது போல பாதுக்காக்கப்பட வேண்டியதுமாகிய இம்மலைத்தொடரின் மீதான முதல் தாக்குதல் பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து – குறிப்பாக 1826-வாக்கில் இருந்து – பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் சிறுகச் சிறுக இம்மலையின் இயல்பையும் அதன் சூழலியல் அமைப்பையும் சிதைக்கத் தொடங்கினர். மேற்குத் தொடர்ச்சி மலையானது வெப்பமண்டலக் காடுகளையும் வெப்பமண்டலப் புல்வெளிகளையும் (tropical forests and tropical grass lands) ஒருங்கே கொண்டிருந்தது. இவையிரண்டும் சூழலியல் ரீதியில் ஒன்றுக்கொன்று இணையானவையும் உறுதுணையானவையும் சமநிலையை பாதுகாக்கக்கூடியவையுமாகும். அதாவது இதில் ஒன்றின் சமநிலையானது இன்னொன்றைச் சார்ந்திருக்கிறது. சுமார் 35,000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே – அதாவது மனிதகுலம் இப்பகுதிக்கு வந்துசேர்வதற்கு முன்பிருந்தே – நிலவிவந்த இச்சமநிலையானது, 19-ஆம் நூற்றாண்டிற்குப் பின் உடைக்கப்பட்டது. தங்களின் உல்லாச, கேளிக்கை நோக்கங்களுக்காக இப்புல்வெளிகளை மொட்டையடித்து அங்கே காண்பதற்கு அழகாக உள்ள இம்மண்ணுக்குத் தொடர்பற்ற அந்நிய மரங்களையும், தாவரங்களையும், பூச்செடிகளையும் ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகள் விதைத்தனர். எரிபொருள், பிற மரம்சார்ந்த தேவைகளுக்காக அவற்றை விடவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பைன் மரங்களையும், யூகோலிப்டஸ் (தைல மரங்களையும்), அக்காசியா மலனோக்சினான் என்ற சவுக்கு மரங்களையும் ஏராளமாக விதைத்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பூர்வீகமாக வாழும் பழங்குடி மக்கள் தமது தேவைகளுக்காக சுள்ளி பொறுக்குவதைத் தடைசெய்து, அதற்கு தண்டனை விதித்த அதேவேளையில் தமது இலாப நோக்கத்திற்காக ஏற்கனவே அங்கிருந்த வெப்பமண்டலக் காடுகளின் மரங்களை வெட்டுவதும், புதிய வகை மரங்களை விதைப்பதும் துரிதகதியில் நடந்தேறியது.
வெப்பமண்டலக் காடுகளுக்கும் புல்வெளிக்கும் இடையிலான உறவு குறித்த ஆய்வுகள் அந்தக் காலத்தில் நடக்கவில்லை; எனவே, காலனியாதிக்கவாதிகள் புல்வெளிகளைத் தேவையற்றது என்று கருதினார்கள்; அதனால் அவற்றை அழித்தனர் – என்கிற வகையில் சூழலியலாளர்கள் பேசுகிறார்கள். சமூக அறிவியலில் இருந்து சூழலியல் அறிவியலைப் பிரித்தெடுத்துப் பரிசீலிப்பதன் மூலம் பெறப்படும் தவறான, அரைகுரையான விளக்கத்துக்கு இது மிகச்சிறந்த உதாரணம். காலனி நாடுகளில் இயற்கை வளங்களை மூர்க்கமாகச் சூறையாடிய காலனியாதிக்கம் இந்த இந்த உறவு குறித்த புரிதலை ஒருவேளை பெற்றிருந்தாலும் கூட இவ்வண்ணமே செய்திருக்கும். ஏனென்றால் காலனியாதிக்கத்தை இயக்கிய எரிபொருள் சூழலியல் குறித்த விழிப்புணர்வல்ல; மாறாக, இலாபவெறிதான்.
முதலில் புல்வெளிகளை அழித்து இவற்றை விதைத்தவர்கள் பின்னர் வெப்ப மண்டலக் காடுகளை அழித்து அங்கேயும் விதைத்தனர். முதலில் எரிபொருளுக்காகவும் பிற மரத் தேவைகளுக்காகவும் தொடங்கிய இக்காடழிப்பு (deforestation) நடவடிக்கை, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை, இரப்பர், காபி போன்றவற்றுக்காகவும் நடந்தேறியது. மரங்களையும், காபி, தேயிலை, இரப்பர் போன்றவற்றையும் ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபம் ஈட்டினர். இந்த வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காடழிப்பு நடவடிக்கையையும் காடுகளின் இயல்பைச் சிதைக்கும் நடவடிக்கையையும் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் தொடங்கி வைத்தனர். மரங்களுக்கான தேவை, காபி, தேயிலை, இரப்பருக்கான தேவைகள் மேலும் மேலும் பெருகியதால் காடழிப்பு மேன்மேலும் துரிதகதியில் நடந்தேறியது. இந்த மரங்களும் அந்நியத் தாவரங்களும் அங்குள்ள நூற்றுக்கணக்கான உயிரினங்களையும் தாவரங்களையும் அழிவின் விளிம்பிற்குத் (extinction) தள்ளியிருப்பதைப் பற்றி இன்று ஏராளமான ஆயுவுகள் வந்துள்ளன. குறிப்பாக அதிக நீரை உறிஞ்சும் யூகோலிப்டஸ் போன்ற மரங்கள் நீர் நிலைகளுக்கு அப்பால் நடப்பட்டிருந்தாலும், அகலமாகப் பரந்துவிரியும் அதன் வேர்கள் நீர்நிலைகள் வரையிலுள்ள நீரை ஏராளாமாக உறிஞ்சி நீர்த்தட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கின்றன. அம்மரங்களை வெட்டி வீழ்த்தினால் கூட அவற்றின் வேர்கள் நிலத்தடியில் இருக்கும் வரை இதன் பாதிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாறு பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளான ‘மனிதர்களின் செயல்பாடுகள்’ தாம் கொள்ளை இலாபம் ஈட்டவும் உல்லாசமாகப் பொழுது கழிக்கவும் தொடங்கி வைத்த காடழிப்பு நடவடிக்கைகளும், 35,000 ஆண்டுகளுக்கும் மேலாக சமநிலை தவறாமல் இருந்த சூழலியல் அமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கைகளும் அம்மலையை பலவீனமாக்குவதில் முதல் அடியை எடுத்து வைத்தன.[3]
இந்த அந்நிய மரங்களையும், தாவரங்களையும் படிப்படியாக அழிக்க வேண்டுமென்றும், அதற்கு மாற்றாக வெப்ப மண்டலக் காடுகளைச் சேர்ந்த அம்மண்ணுக்கேற்ற மரங்களை அதிகப்படியாக வளக்க வேண்டுமென்றும் சூழலியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளும் இதை வலியுறுத்துகின்றன. குறிப்பாக, 2014-இல் சென்னை உயர்நீதிமன்றம் “சூழலியல் சமநிலையை மீட்டமைப்பதற்காக, எல்லா அந்நிய மரங்களையும், தாவரங்களையும் வெட்டிவீழ்த்த வேண்டுமெனத்” தீர்ப்பளித்தது. ஆனால், பன்னாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதும் அதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) சுற்றுலாத் துறையின் பங்கு உயர்வதுமே ‘வளர்ச்சியின்’ அளவுகோல் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள் அதற்கு நேரெதிராக இன்னும் ஆயிரக்கணக்கான அந்நிய மரங்களையும், தாவரங்களையும் மலைகளை ‘அழகுபடுத்தும்’ நோக்கில் வளர்த்தன.[4]
(தொடரும்)
ரவி
குறிப்புகள்
[1]Wayanad landslides: migrant community in danger of going unaccounted for
[2] Exclusive: Madhav Gadgil on Wayanad Disaster and Illegal Quarrying | Kerala Landslides
https://www.youtube.com/watch?v=TzV_gldgW5U&list=PL6Cukv–CSH97L90Pix1y_6S50piAIdH1
[3] Study traces how the British ruined Western Ghats, one of India’s most unique ecosystems
[4] You’d Think Cutting Kodai Plantations Will Save Its Grasslands. It Won’t.
https://thewire.in/environment/kodaikanal-plantation-grasslands-shola-eucalyptus-gaur