மனித சமூகம் உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தை அளிக்கும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம், விலை வீழ்ச்சி, கடன் போன்ற நெருக்கடிகளால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தேசிய குற்றப் பதிவு ஆணையகத்தின் கணக்குப் படி, 1995 முதல் 2014 வரை 2,96,438 விவசாயிகளும், 2014 லிருந்து 2022 வரை 1,00,474 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது 1995 லிருந்து 2022 வரை சுமார் 4 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலை இன்றும் தொடர் கதையாகவே இருக்கிறது. சமீபத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலையை எடுத்து கொண்டால், கர்நாடகாவில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 1182 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் மட்டும் 1267 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதில் விதர்பாவில் மட்டும் 557 விவசாயிகளின் தற்கொலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் எனப் பொய்ப் பிரச்சாரம் செய்து 2014ல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதற்கு விவசாயிகளின் தொடரும் தற்கொலை சாவுகளே சாட்சியாக உள்ளன.
இதற்கிடையே மோடியால் 2016 ஆம் ஆண்டு ’பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளின் நலனுக்காகவும் விவசாயிகளின் துயரை துடைப்பதற்காகவும் உள்ளது என பீற்றிக்கொண்டு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.
ஆனால் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை விட இன்சூரன்ஸ் நிறுவனங்களே கொள்ளை இலாபத்தை அடைந்து வருகின்றன என்பதை இந்து குழும பத்திரிக்கையான பிரண்ட்லைன், மராட்டிய மாநிலத்தில் 2019 ஆண்டு முதல் 2024 வரையுள்ள பயிர் காப்பீட்டதிட்டத்திற்கான அரசு ஆவணங்களை ஆராய்ந்து செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இதன் படி மராட்டிய மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை விவசாயிகள் மற்றும் ஒன்றிய, மராட்டிய அரசிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரிமியத் தொகை ரூ 30,740 கோடி. ஆனால் விவசாயிகளுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் பயிர்காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க ஒப்புக் கொண்ட தொகை ரூ.16,597 கோடி. ஐந்து ஆண்டுகளில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 14,142 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளன.
விவசாயிகளும் மாநில அரசுகளும் செலுத்தும் பிரிமியம் தொகையை பெற்றுக் கொள்ளும் காப்பீட்டு நிறுவனங்கள். மராட்டிய விவசாயிகளின் பயிர் இழப்பை ஈடு செய்யாமல் இழுத்தடித்தும், அவர்களின் இழப்பை நிராகரித்தும் , பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வருகின்றன
மராட்டிய மாநிலத்தில் கடுமையான வறட்சி அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 385 தாலுகாவில் 185 தாலுகாவில் வறட்சி நிலவியதாக அறிவிக்கப்பட்டன தங்களுக்கு பயிர் காப்பிட்டு திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இத்திட்டதில் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2.4 கோடி விவசாயிகள் இணைந்தனர். இந்த ஆண்டில் அரசிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் ரூ 10,141 கோடி ருபாயை பிரிமியமாக காப்பீட்டு நிறுவனங்கள் பெற்று கொண்டன. ஆனால் 71.19 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ.3,551 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.6 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஒரு வருடத்தில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்கள் 6,590 கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் அதிக வறட்சியில் நொடிந்து போன மராட்டிய விவசாயிகள் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி ஜூலை மாதம் முழுவதுமே லத்தூர் – சோலாப்பூர் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஜூலை 29ம் தேதி சோலாப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆண்டு | திட்டத்தில் இணைந்த விவசாயிகளின் எண்ணிக்கை | விவசாயிகள் செலுத்திய பிரிமியத் தொகை | மராட்டிய அரசின் பங்கு | ஒன்றிய அரசின் பங்கு | மொத்த பிரிமியம் தொகை | விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகை |
ரூபாய் – கோடிகளில் | ||||||
2019-20 | 1. 4 கோடி | 614.08 | 2153.97 | 2153.97 | 4922.02 | 5537.28 |
2020-21 | 1.2 கோடி | 572.34 | 2732.17 | 2501.71 | 5806.19 | 1116.35 |
2021-22 | 97 இலட்சம் | 489.65 | 2453.77 | 2236.2 | 5179.61 | 3484.32 |
2022-23 | 1.5 கோடி | 688.98 | 2002.57 | 1999.52 | 4691.07 | 2908.08 |
2023-24 | 2.4 கோடி | 2.41 | 6048.48 | 4090.21 | 10141.12 | 3551.77 |
மொத்த தொகை | 2365.05 | 15390.96 | 12981.61 | 30740.01 | 16597.8 |
ஆதாரம் : பிரண்ட்லைன்.
பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், மராட்டிய மாநிலத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே பகற்கொள்ளை அடித்து வருகிறது. நாடு முழுவதும் 2017- 2022 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் 40,000 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளன. இந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட மொத்த பிரிமியம் தொகை ரூ.1,59,132 கோடி. ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க ஏற்றுக் கொள்ளப்பட்ட தொகை ரூ.1,19,314 கோடி மட்டுமே என்கிறது பிசினஸ் ஸ்டாண்ர்டு.(2) இதை மோடி அரசு விவசாயிகளுக்கு கொடுத்திருந்தால் ரூ.40,000 கோடி மிச்சம். தங்களிடம் மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியில்லை என சொல்லும் அரசு, இன்னொரு பக்கம் பருத்து கொழுத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பயிர்காப்பீட்டு திட்டம் எனும் போர்வையில் அரசு நிதியை, விவசாயிகளின் பணத்தை வாரி வாரி வழங்குகிறது.
கந்து வட்டியின் மூலம் ஊதாரி ஒருவன் பணம் சம்பாதிப்பது போல், கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக பயிர் காப்பீட்டு தொழில் வளர்ந்து வருகிறது. இத்தொழிலில் சில அரசு நிறுவனங்கள் உள்ளிட்டு 19 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன இவற்றில் மிட்டலின் பாரதி இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ், HDFC, ICICI இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், டாட்டாவின் டாட்டா ஏஐகி இன்சூரன்ஸ், டிவிஎஸ் குழுமத்தின் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களும் அடங்கும்.
இந்தியாவில் தாராளமயக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு, மக்களின் நிதியை, அரசின் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுருட்ட வழி செய்யும் ஒரு திட்டமாகவே இன்சூரன்ஸ் திட்டம் வளர்ந்துள்ளது. மோட்டார் வாகன காப்பீடு, மருத்துவ காப்பீட்டிற்கு அடுத்த படியாக பணம் கறக்கும் தொழிலாக பயிர் காப்பீட்டு தொழில் இருக்கிறது கல்விக்கு கடன், விவசாயத்திற்கும் மருத்துவத்திற்கும் இன்சூரன்ஸ், கையில் காசு இருந்தால் தான் குடிநீர்; ஒரு வேளை சோறு உண்பதற்காக குப்பை பொறுக்கினாலும் அதற்கும் ஜி.எஸ்.டி வரி; இதுதான் மோடி அரசின் தனியார்மய கொள்கை. மோடி அரசையும், அது தீவிரமாக அமுல்படுத்தி வரும் தனியார் மயக் கொள்கையையும் தூக்கி எறியாமல் மக்களுக்கு விடிவில்லை.
- தாமிரபரணி