கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி? பாகம் 3

"சூறையாடப்பட்ட தங்கம் மற்றும் பணத்தில் பெரும்பாலானவை எங்களிடம் வந்து சேர்ந்தன. அவை மங்களூரில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளரான ஒரு தொழிலதிபரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர், எப்போதெல்லாம் வல்சனுக்கு பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நானும் வினோத், ரஞ்சித், சதீஷ் ஆகிய நால்வரும் மங்களூரு சென்று அந்தத் தொழிலதிபரின் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வருவோம்." ......"சூறையாடப்பட்ட இந்தச் செல்வங்கள் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ்-சின் கருவூலத்தை நிரப்புவதற்காக என்.டி.எஃப்-ஐ சேர்ந்தவர்களுடன் வல்சன் பேரங்களிலும் ஈடுபட்டார்."

வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும்

ஃபெரோஜ்-வும் அவரது தந்தையான பி.வி.முகம்மது-வும் இரிட்டியில் உள்ள ஜூம்மா பள்ளி வாசலை அடைந்தபொழுது, அந்த மலைப்பாங்கான சாலையில் அதிகாலை தொழுகைக்கான பாங்கு ஓசை இன்னமும் கேட்கப்படவில்லை. ஜூம்மாவின் தலைவரான பி.வி.முகம்மது தனது தோள்களில் அதிகமான சுமைகளை வைத்திருந்தார். மிகவும் அமைதியான பகுதியாக அறியப்பட்டிருந்த அந்த மசூதி இருந்த பகுதி, விரைவிலேயே பதற்றமும் அபாயகரமானதுமாக மாறியது. இரண்டு நாட்களுக்கு முன்புதான், அதாவது ஜூன் 5 2004 அன்றுதான், இந்து பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஒரு இசுலாமிய இளைஞரைத் தாக்கினர். அதற்கு அடுத்த நாள் இசுலாமிய இளைஞர்கள் அதற்கு பதிலடியாக ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரைத் தாக்கினர்.

வரலாற்று ரீதியில் கண்ணூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் சி.பி.எம்-முக்கும் இடையில்தான் மோதல்கள் நடப்பது வழக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சி.பி.எம். கட்சியினரில் பெரும்பாலானவர்கள் முசுலீம்களாக இருந்தனர். ஆனால், பின்னர் ஆர்.எஸ்.எஸ். தனக்கான சிறந்த இலக்கைக் கண்டறிந்தது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, தமது நலனைப் பிரதிபலிக்காத ஐ.யூ.எம்.எல். மீது இசுலாமியர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். சில இசுலாமிய மாணவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், இசுலாமிய மதபோதகர்கள் உள்ளிட்ட இசுலாமியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சில அமைப்புகள் வட கேரளாவில் எழுச்சி பெற்றன. அத்தகைய ஒரு அமைப்புதான் ஒரு நூலகரால் கொச்சினில் தொடங்கப்பட்ட நேஷனல் டெவலப்மண்ட் ஃபிரண்ட் (என்.டி.எஃப்) என்பதாகும். கம்யூனிஸ்டுகள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் இசுலாமியர்கள் தாக்கப்பட்டால், திருப்பித் தாக்குவதை “தற்காப்பு” என்று கூறி அறைகூவல் விடுத்த ஒரே அமைப்பு என்.டி.எஃப் என்பதால், அவ்வமைப்பு வெகுவேகமாக வளர்ந்தது. என்.டி.எஃப்-இன் இரிட்டி ஒருங்கிணைப்பாளர்தான் பி.வி.முகம்மது ஆவார்.

ஜூன் மாதத்தில் [ஜூன் 5-ல் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவர் என்.டி.எஃப்-ஆல் தாக்கப்பட்ட பிறகு] இரிட்டியில் பதற்றமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. புன்னாட்டில் உள்ள என்.டி.எஃப்-இன் அலுவலகங்களில் போலிசு சோதனைகளை நடத்தியது. இந்தச் சம்பவத்திற்கு எந்தவிதத்திலும் ஈடுபடாத பி.வி.முகம்மதுதான் நிலைமையை சரிசெய்யவும், போலிசை அலுவலகத்தில் இருந்து வெளியேறச் செய்யவும் வேண்டியிருந்தது. இதற்கான உரையாற்றத்தான் அவர் தன் மகனுடன் ஜூம்மா மசூதிக்கு வந்ததாகத் தெரிகிறது. இருவரும் மசூதியை அடைந்த வேளையில், அங்கே மறைந்திருந்த 8 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தாவிக்குதித்து வந்து முகம்மதை வெட்டிச் சாய்த்தனர். அவரது மகனான ஃபெரோசையும் தீவீரமான காயங்கள் ஏற்படுமாறு சரமாரியாக வெட்டினர். “யாராக இருந்திருந்தாலும் அவர்கள் வெட்டியிருப்பார்கள். பி.வி.முகம்மது-க்கு ஆர்.எஸ்.எஸ்-சுடன் எவ்விதப் பகையும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கமெல்லாம் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான்” என்கிறார், ஒரு என்.டி.எஃப் தலைவர்.

போலிசு இரிட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.கார்ரகள் பலரையும் கைது செய்தது. படிக்காச்சலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இக்கொலை திட்டமிடப்பட்டதையும், வல்சன் அங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்த ஒரு நபர் சாட்சி கூறிய அடிப்படையில், வல்சனின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் (FIR) முதன்மை குற்றஞ்சட்டப்படுபவராகப் (first accused) பதியப்பட்டது. வல்சனின் வீடுதேடி போலிசு சென்றிருந்தபோது, அவர் அங்கிருந்து தப்பியிருந்தார். சில மாதங்கள் கழித்து, இரிட்டியில் சிறிதளவு அமைதி திரும்பிய பிறகு வல்சன் திரும்பி வந்தார். போலிசுடன் அவர் பேசினார். குற்றப் பத்திரிக்கை தயாரானபோது, குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரில் [முதலாவதாக இருந்த வல்சன், 26-வது நபராக மாற்றப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தலச்சேரி கூடுதல் நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. அவர்களில் 4 பேர் தில்லங்கேரியைச் சேர்ந்தவர்களாவர். ஆனால், கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இருந்து வல்சனை விடுவித்தது.

இதுதான் ஒரு பத்தாண்டுக்கும் மேலாக நடந்துவரும் சம்பவங்களின் மாதிரி வடிவம் (part of a pattern) ஆகும். அரசியல் எதிரிகளைக் கொலை செய்யும் வழக்குகளில் தொடக்கத்தில் வல்சனின் பெயர் முதன்மையாக சந்தேகிக்கப்படுபவராக (primary suspect) இருக்கும். அந்தக் கொலைகளுக்கான தூண்டுதல்கள், வல்சனால் பேசப்பட்ட உரைகளாகவோ அல்லது அவரால் தலைமை தாங்கப்பட்ட கூட்டத்தில் பேசப்பட்டவையாகவோ இருக்கும். இருந்தபோதிலும், தொடர்ச்சியாக அவரால் அக்குற்றச்சாட்டுகளை மறுக்கவும், தனது வாதத்தை உண்மை என்று நம்ப வைக்கவும், சட்ட ரீதியான தண்டனைகள் பெறுவதைத் தவிர்க்கவும் முடிந்தது. கொலைச் சம்பவங்களில் தான் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லாமல் கவனமாக ஒதுங்கியிருப்பதை வல்சனால் எவ்வாறு செய்ய முடிந்தது என்பதை மின்னி விளக்குகிறார்.

“1994-ல் ஆயிதாராவில் உள்ள ஷாகாவில் நான் தலைமை ஆசிரியனாக (முக்கியஷிஷாக்) இருந்தேன். அங்கே வல்சன் அடிக்கடி உரையாற்றுவார். அந்த நாளன்று ஒரு கூட்டத்தை வல்சன் நடத்தினார். பெண்கள் அதிகமாகக் கலந்துகொண்ட அக்கூட்டத்தில், சி.பி.எம்-ஐ சேர்ந்தவர்களால் ஆர்.எஸ்.எஸ்-சின் கொடிகள் சிதைக்கப்படுவதைக் குறித்து நாங்கள் அப்போது பேசிக் கொண்டிருந்தோம். ‘இந்த கொடி வெறுமனே ஒரு துணியல்ல. பாரதத்தின் ஆன்மாவாகும். சோகம் என்னவென்றால், நாளுக்கு நாள் இந்தக் கொடியை நாம் இழந்துகொண்டு வருகிறோம். தினந்தோறும் கிழித்துச் சிதைக்கப்படுவது இந்தக் கொடியல்ல; நமது ஆன்மாவாகும்’ என்று உணர்ச்சி பொங்கும் தொணியில் வல்சன் பேசத் தொடங்கினார். இந்த உரையின்போது, உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் அதைச் செய்து இந்தக் கொடியைக் காப்பாற்ற வேண்டியது தாய்மார்களின் பொறுப்பு என்று அழுத்தமாகக் கூறினார். இரவு பகல் பாராமல் இந்தக் கொடியைப் பாதுகாப்போம் என்று உரையைக் கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் உறுதியளித்தனர்.

“இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கிளம்பியவுடன், மண்டலச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், நான் உள்ளிட்ட முக்கிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கொண்டு இன்னொரு கூட்டத்தைக் கூட்டினார். ‘இன்றைய உரையின் விளைவாக பெண்களெல்லாம் உணர்ச்சி தூண்டப்பட்டிருக்கிறார்கள். அதன் பலனை அறுவடை செய்யுங்கள்’ என்று எங்களிடம் கூறினார். கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். கொடியை அகற்றாமல் போய்விடுவார்களோ என்று வல்சன் அஞ்சினார். ‘எனவே நம்மில் ஒருவர் இதைச் செய்தாக வேண்டும்’” என்று வல்சன் கூறியதை மின்னி நினைவு கூர்ந்தார். தங்களிடம் வல்சன் என்ன கேட்கிறார் என்பதை மின்னி நன்கு அறிந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். கொடியைத் தாங்களே கிழித்துச் சிதைத்துவிட்டு, சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்களின் மீது பழிபோட்டு மோதலைத் தூண்டுவது முதல் முறையல்ல. ஆயிதாராவில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் சி.பிஎம்-முக்கும் இடையில் நடந்த பெரும்பாலான மோதல்களுக்கு ”கொடியைத் தாமே கிழித்துவிட்டு – அதன் பழியை சிபிஎம்-மின் மீது போடுவது”  என்ற இச்செயல்தான் பல கொலைகளுக்கும் தூண்டுகோலாக இருந்தது என்று மின்னி எங்களிடம் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்-சுக்கு சேவையாற்றுவதற்காக வல்சனுக்குத் தேவைப்பட்ட ஒரே ஆயுதம் வாய்வீச்சுதான் என்று மின்னி கூறினார். வல்சன் மிகச் சிறந்த படிப்பாளி. அவரது வார்த்தைப் பயன்பாடுகள் பல மலையாள எழுத்தாளர்களையே வெட்கித் தலைகுணிய வைக்கும் தன்மையிலானவை. இந்து மதப் புராணங்களில் இடம்பெறும் பாத்திரங்களைப் பற்றிய கதைகளை, தற்கால இந்துத்துவத்தின் எதிரிகளை எதிர்க்கும் கதைகளாகச் சித்தரித்து வெறியூட்டும் பேச்சுக்களைப் பேசும் கலையில் வல்சன் கைதேர்ந்தவர். “வல்சனின் ஆன்மீகப் பேச்சுக்கள் மென்மையான தொணியிலும், கணிவாகவும், இந்து மதப் புராணத்திலும் கடவுளர்கள் பற்றியும் ஆய்ந்து கரைகண்ட ஒருவரது பேச்சைப் போன்று இருக்கும். அவ்வுரைகள் பல்வேறு கதைகள் மூலம் செறிவூட்டப்பட்டிருக்கும். இந்த அறிவுதான் கேரளத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் அவர் நுழைவதற்கு வழிவகை செய்து கொடுத்தது. எந்த உரையையும் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென ஆவேசமானதாக அவரால் மாற்றிவிட முடியும். அவரது அரசியல் உரைகள் அதிதீவிரத் தன்மையுடனும், நேரடியாக சி.பி.எம்-ஐயும், பாப்புலர் ஃபிரண்டையும் [PFI] தாக்கியும் இருக்கும். எதிரிகளைப்  பழிவாங்குவதற்காக தனது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை உசுப்பேற்றுவார். ஒரு செயலூக்கமிக்க ஆர்.எஸ்.எஸ்.காரரை விட்டுவிடுங்கள், எந்தவொரு சாதாரண இந்துவின் இரத்தமும் அவரது உரையைக் கேட்டால் கொதித்துப் போய்விடும்” என்று கூறினார் மின்னி. இத்தகைய தருணங்களில் அவரது சிறந்த நினைவாற்றல் அவருக்குப் பெரிதும் கைகொடுக்கும்; அந்த நினைவாற்றலைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும்; அதனால் பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.கார்ரகளின் பெயர்கள், பாதிப்பை ஏற்படுத்திய எதிர்களின் பெயர்கள் என அனைத்தையும் குறிப்பிட்டு உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசுவார்.

வெகுசில சமயங்களில், வல்சனின் பேச்சு ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தைத் தாண்டி கேரள அரசியலின் பொது நீரோட்டத்தில் விவாதமானதும் உண்டு. அத்தகைய பேச்சுக்கள் வியத்தகு விளைவுகளையும், பெரும் விமர்சனத்தையும் இரண்டையுமே பெற்றுத் தந்தன. சபரிமலை விவகாரத்தில் [பெண்கள் நுழையக் கூடாது என்ற] நிலைப்பாட்டின் அடிப்படையில் அவர் பேசிய வைரலான பேச்சில், “நமது பிரதமரே அவரின் சொந்தக் கரங்களால் 4,000 பேரைக் கொன்றுள்ளார்” என்று பெருமிதம் பொங்கப் பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் திருத்தமாகவும் உதிர்த்த அவர், அவ்வுரையில் மேலும் பேசியதாவது “மோடி வட இந்தியாவில் உள்ள மக்களுக்கு முன்னுதாரனமாக மாறியதற்கான முக்கியக் காரணமே இதுதான். புராணங்களில் கடவுளான கிருஷ்ணர் பல பேரைக் கொன்றுள்ளார். அதேபோல கடவுளான ராமர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றுள்ளார். அவதார புருஷர்களெல்லாம் பல பேரைக் கொல்வார்கள்”

ஆனால், இத்தகைய பேச்சுக்கள் வல்சனக்கு வழமையானவைதான். புத்திக் வார்க்ஸ் [‘அறிவுசார் வகுப்புகள்’] என்ற பெயரில் வட கேரளத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அணிகளுக்கு எடுக்கப்படும் வகுப்புகளில் வல்சன் இவற்றைச் சர்வசாதாரணமாகப் பேசுவார். வல்சன் தான் பார்த்ததாகக் கூறிக்கொள்ளும் வன்முறைகள், ஐயப்ப பக்தர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாகச் சொல்லப்படும் நிகழ்வுகள், பாப்புலேஷன் ஜிகாத் (முசுலீம்கள் அதிகமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற சதிக் கோட்பாடுகள்தாம் இவை) பற்றியவை, மலப்புரத்திலுள்ள முசுலீம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளனர் என்பது போன்ற விசயங்கள் – இப்படி பல விசயங்களைப் பற்றிய விரிவான விவரிப்புடன் ஒவ்வொரு வகுப்பும் தொடங்கும். அவர்கள் அடிக்கடி வன்முறைக்கு அறைகூவல் விடுத்ததாகவும் மின்னி எங்களிடம் கூறினார். “அரசியல் எதிரிகளை நமக்குக் கீழே அடக்கியாள ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு வல்சன் எப்போதும் எங்களிடம் கூறுவார்” என்கிறார், மின்னி.

பல ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மத்தியில், வல்சன் தான் செய்ய விரும்பும் செயலின் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலை கொண்டதே இல்லை. ஒரு படுகொலையை நிகழ்த்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சில நபர்களைச் சந்திப்பதற்காக வல்சன் தனது வீட்டிற்கு வந்த ஒரு நிகழ்வை மின்னி நினைவு கூர்ந்தார். அக்கூட்டத்தில் வல்சனின் வழிகாட்டலைத் தொடர்ந்து, 4 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்தோஷ் என்பவருக்குச் சொந்தமான ஒரு அம்பாசிடர் காரில் இரிட்டிக்குப் புறப்பட்டனர். சி.பி.எம். கட்சியின் அப்போதைய கிளைச் செயலாளராக இருந்த ஒருவரைக் கொல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுக்கான வேலைத் திட்டமாகும். அதற்காக அவர்கள் இரிட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரிட்டியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பாடியூர் அருகே வழக்கமான போலிசு சோதனையில் அவர்கள் நிறுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். அந்த சி.பி.எம். கிளைச் செயலாளர் வேறு ஒரு தோழரின் திருமணத்திற்குச் சென்று வரும் வழியில் மறைந்திருந்து அவரைக் கொல்ல வேண்டும் என்பதுதான் திட்டம் என்பதை மின்னி விவரித்தார். ஆனாலும், எந்தத் தெளிவான குற்றச்சாட்டும் பதியப்பட இயலாததால் அந்த 4 ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆயிதாராவில் வல்சன் ஒரு ஷாகாவை நடத்தினார். அதன் பின்னர் மின்னியின் வாழ்க்கையில் இரத்தக்கறை படிந்த நாட்களாகவே கடந்தது. “ஆயிதாராவின் அரசியல் வரலாற்றோடு வல்சன் தனது உரையைத் தொடங்கினார். ஆயிதாரா எவ்வாறு ஜனசங்கத்தின் கோட்டையாக இருந்தது என்பதையும், அந்த இடத்தின் மதப்புனிதத் தன்மையைப் பற்றியும் பேசினார். மெல்ல மெல்ல அவரது பேச்சு, கம்யூனிஸ்டுகளின் அடக்குமுறையால் ஆயிதாராவின் கலச்சாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை நோக்கிப் போனது. ஆயிதாரா கிராமத்தின் இன்னொரு முனையில் இருந்து இந்த ஷாகாவுக்கு வரும் ஒருவரை எழுந்து நிற்க வைத்து, அவர் வரும் வழியில் கம்யூனிஸ்டு அலுவலகங்கள் இருப்பதால் அவர் நெடுந்தொலைவு சுற்றி ஷாகாவுக்கு வர வேண்டியிருப்பதைப் பற்றி விவரித்தார். ‘இங்கே நிலைமை படுமோசமாக இருக்கிறது ஒரு சுவயம் சேவக் ஷாகாவிற்கு வருவதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை” என்றெல்லாம் வல்சன் பேசியவற்றை மின்னி நினைவுகூர்ந்தார். பின்னர், கடுமையான வாழ்வை ஏற்றுக் கொண்டு சி.பி.எம்-இல் செயலூக்கத்துடன் இயங்கிவரும் அணிகளை அடையாளப்படுத்துமாறு வல்சன் கூறினார். ஸ்ரீஜித் என்ற சி.பி.எம்-ஐ சேர்ந்த ஒருவரை பல ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அடையாளம் காட்டினர். “நாம் ஷாகாவை நடத்துவதற்கு உண்மையிலேயே ஸ்ரீஜித் அச்சுறுத்தலான ஒருவனாக இருக்கிறானா? அவ்வாறாயின், அத்தகைய நபர்களைக் கொன்றொழித்துவிடுவது நல்லது” என்று வல்சன் கூறியதை மின்னி நினைவு கூர்ந்தார்.

 

மூன்று நாட்களுக்குப் பிறகு, 04, டிசம்பர் 2000 அன்று, ஸ்ரீஜித் ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதேநாளில், இன்னொரு சி.பி.எம்.காரரான எம்.பிஜேஷ் என்பவர் அவரது வீட்டிற்கு அருகே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் சரமாரியாகக் குத்தப்பட்டார். பின்னர், செங்கல் சூளையில் வேலைசெய்து வந்த பிஜு என்ற ஆர்.எஸ்.எஸ்.காரரை சி.பி.எம்-ஐ சேர்ந்தவர்கள் கொன்றனர். அதைத் தொடர்ந்து வன்முறை பெருகிக் கொண்டேபோனது; சில வாரங்களுக்குப் பிறகுதான் அது முடிவுக்கு வந்தது. ஸ்ரீஜித்தின் கொலை வழக்கில் வல்சனின் பெயர் இடம்பெறவே இல்லை.

ஆறு வருடங்கள் கழித்து, அதேமாதிரியான சம்பவங்கள் புன்னாட்டில் மீண்டும் நடந்தன. ஜூன் 2006-ல், சி.பி.எம். மற்றும் அதன் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எப்.ஐ-க்கும் [DYFI] ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. போலிசின் தலையீட்டைத் தொடர்ந்து இந்தக் கைகலப்பு முடிவுக்கு வந்ததைப் போன்றுதான் தோன்றியது; ஆனால், இந்த விசயத்தை மேற்கொண்டு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து தில்லங்கேரியில் உள்ள நினைவு மண்டபம் அருகே வல்சன் ஒரு கூட்டத்தை நடத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 13 அன்று, புன்னாட்டில் உள்ள ஒரு நண்பரின் இல்ல வளாகத்தில் சி.பி.எம்-ஐ சேர்ந்த யாக்கூபும் அவரது நண்பர் கள்ளிக்கண்டி சுபாஷூம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சுமார் 9 மணியளவில், ஆர்.எஸ்.எஸ்-சை சேர்ந்த ஒரு கும்பல் யாக்கூப்பின் தலைமீது ஒரு வெடிகுண்டை வீசியெறிந்தது. உயிர் போகுமளவுக்கு அது வெடித்துச் சிதறியது. உடனடியாக யாக்கூப் தலச்சேரி மருத்துவமணைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். யாக்கூபைத் தாக்கியவர்கள் இரும்பு ராடுகளையும் வடிவாள்களையும் வைத்திருந்தனர். அவர்கள் யாக்கூபின் நண்பர்களையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் சுபாஷும் அவரது சகோதரர் கள்ளிக்கண்டி பாபுவும் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலானது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதற்கான எல்லாத் தடயங்களையும் கொண்டிருந்தது. “அந்த வீட்டில் யாக்கூப்பும் அவரது நண்பர்களும் தங்கியிருந்ததையும், அந்த வீட்டிற்குச் சென்று கொலையை நிகழ்த்திவிட்டுத் திரும்புவதற்கான சரியான வழியையும் ஆர்.எஸ்.எஸ்-சினர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தனர். இத்தகைய திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஆர்.எஸ்ஸ்.எஸ்-சின் தலைமைக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை” என்கிறார், அப்பகுதியின் ஒரு மூத்த சி.பி.எம். தலைவர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பலர் வல்சனுக்கு மிக நெருக்கமானவர்களாவர். வல்சனின் வலது கையாகவும் ஆர்.எஸ்.எஸ். இரிட்டி தாலுகா யூனிட்டின் முன்னாள் தலைவராகவும் பிரகதி கல்வி நிறுவனத்தில் முதல்வராகப் பணியாற்றியவருமான விளங்கேரி சங்கரன் என்பவர்தான் இந்தப் படுகொலையில் முதலில் கைதானார். இத்தாக்குதலில் ஈடுபட்ட இன்னொருவர் பிரகதியில் ஆசிரியராகப் பணியாற்றிய காவ்யேஷ் என்பவராவார். இந்தப் படுகொலையில் வல்சன் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாலும், 86 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்தார். 12 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, வல்சன் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

என்.டி.எஃப். அமைப்பும் வலிமையடைந்து வந்ததால், கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும் என்.டி.எஃப்-க்குமான பகை வளர்ந்தது; பி.வி.முகம்மது-வின் படுகொலையைத் தொடர்ந்து கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ். மேலும் ஒருபடி மேலே வளர்ந்தது. ஆனால், வல்சனுக்கோ அவரது நெருக்கமானவர்களுக்கோ இப்பகைமையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மார்ச் 10, 2005 அன்று, அஸ்வினி குமாரை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அஸ்வினி குமாருக்குப் பின்னால் அமர்ந்திருந்த 3 என்.டி.எஃப்.காரர்கள் உடனடியாக அவரைக் கீழே தள்ளி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தினர்; ஒரு வாளால் அவரது கைகளை வெட்டித் துண்டாக்கினர். பேருந்தில் இருந்த மற்றவர்கள் பீதியடைந்த வேளையில், நாட்டு வெடிகுண்டின் சத்தம் பேருந்துக்கு வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. அஸ்வினி குமாரைக் குத்தியவர்கள் பேருந்திலிருந்து குதித்து ஒரு ஜீப்பில் ஏறித் தப்பித்தனர்.

பொதுமக்கள் கண்ணெதிரிலேயே நிகழ்த்தப்பட்டது என்பதால், கண்ணூரின் சமீபத்திய வரலாற்றில் இது மிகப்பெரிய படுகொலையாகப் பார்க்கப்பட்டது. மூன்று பகுதிகளைச் சேர்ந்த எல்லா அரசியல் பிரிவினரும் மிகுந்த எச்சரிக்கைக்குள்ளாகும்படி இச்சம்பவம் ஆக்கியது. கண்ணூரின் எஸ்.பி.யாக இருந்த சுரேஷ் ராஜ்புட்டைச் சந்திப்பதற்காக, இரிட்டியின் சி.பி.எம். யூனிட்டானது அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பதற்காக எல்லா அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டதாக ஒரு மூத்த சி.பி.எம். தலைவர் கூறுகிறார். “அனைத்து கட்சிக் குழு சார்பில் நாங்கள் எஸ்.பி-யை சந்தித்தோம்; அஸ்வினி குமாரின் இறுதி ஊர்வலத்தில் கேரளத்தின் பிற பகுதிகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ்-சினர். வருவதை அவர் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அவர் எங்களது வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். வெளியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-சினர் புன்னாட்டிற்கு வந்தனர்” என்று அவர் எங்களிடம் கூறினார். இந்தப் படுகொலையானது இசுலாமிய பயங்கரவாத கும்பலால் நிகழ்த்தப்பட்டது என்ற பழிசுமத்தப்பட்டு, முசுலீம்கள் சரமாரியாகத் தாக்கப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன; 40-க்கும் மேற்பட்ட வீடுகளும் 3 மசூதிகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மட்டனூர், பெராவூர், இரிட்டியில் உள்ள சுமார் 18 கடைகள் சூறையாடப்பட்டன. வருவாய்த் துறையின் கணக்கீட்டின்படி, சுமார் 4.77 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோயின. இந்த வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோனருக்கு வல்சன் தான் தூண்டுகோலாக இருந்தார் என்று குற்றஞ்சுமத்திய போதிலும், இவ்வன்முறை தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் ஒன்றில் கூட வல்சனின் பெயர் இடம்பெறவே இல்லை.

“சூறையாடப்பட்ட தங்கம் மற்றும் பணத்தில் பெரும்பாலானவை எங்களிடம் வந்து சேர்ந்தன. அவை மங்களூரில் உள்ள பா.ஜ.க. ஆதரவாளரான ஒரு தொழிலதிபரின் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர், எப்போதெல்லாம் வல்சனுக்கு பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நானும் வினோத், ரஞ்சித், சதீஷ் ஆகிய நால்வரும் மங்களூரு சென்று அந்தத் தொழிலதிபரின் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வருவோம். அந்தப் பணத்தில் சிறிதளவு தொகை உள்ளூர் மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளும், வலைகளும் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டன” என்று கூறுகிறார், மின்னி.

சூறையாடப்பட்ட இந்தச் செல்வங்கள் மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ்-சின் கருவூலத்தை நிரப்புவதற்காக என்.டி.எஃப்-ஐ சேர்ந்தவர்களுடன் வல்சன் பேரங்களிலும் ஈடுபட்டார். “நரக சகீதத்திலே உள்ளாரக்கல்” என்ற தனது நினைவுக் குறிப்பில் இத்தகைய பேரங்கள், பணம் பெற்றமை குறித்து வல்சன் விரிவாக எழுதியுள்ளார். “நாங்கள் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டில் சந்தித்தோம். என்னுடன் வல்சன், சங்கரன் மற்றும் இரண்டு மாவட்ட அளவிலான ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அங்கு வந்திருந்தனர். சிறிது நேரத்தில் அங்கே ஒரு தொப்பியணிந்த தாடிக்காரர் காரில் வந்து இறங்கினார். பின்னர் அவர்கள் பேசத் தொடங்கினர்” என்கிறார் மின்னி. அந்தச் சமயத்தில் மின்னி வேறு ஒரு அறையில் காத்திருக்க வைக்கப்பட்டார். அந்த தாடிக்காரர் சென்ற உடனேயே மின்னியை அவர்கள் அழைத்தார்கள். “ஆர்.எஸ்.எஸ். அஸ்வினி குமாரின் மரணத்துக்கு பதில் நடவடிக்கையை எடுக்காது என்றும் புன்னாட்டில் நடந்துவரும் வன்முறைச் சம்பவங்களில் இருந்து பின்வாங்கிக் கொள்ளும் என்றும் அந்த மனிதரோடு ஒப்பந்தம் போடப்பட்டதாக வல்சன் என்னிடம் கூறினார். அதற்குப் பதிலாய் அத்தாடிக்காரர் பெட்டி நிறைய பணத்தைக் கொடுத்ததாகவும், கண்ணூரின் ஆர்.எஸ்.எஸ். பிரிவு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்றும் வல்சன் என்னிடம் கூறினார்” என்கிறார், மின்னி. அதற்கு அடுத்த நாள் மின்னியும் அவரது சக ஆர்.எஸ்.எஸ்-சினரும் அந்தப் பணத்தை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் வைப்புநிதியாக (deposit) செலுத்தினர்.

இந்தக் கொலைகள் எதிலும் வல்சன் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது சாதாரண ஒரு விசயமல்ல. ஒரு பிரபலமான வழிமுறையில்தான் கண்ணூரின் அரசியல் படுகொலைகள் நிகழ்ந்து வந்தன. இப்படுகொலைகள் நடந்து சில மணி நேரங்களில் உள்ளூர் தலைவர்கள் போலிசுக்கு குற்றஞ்சுமத்தப்பட வேண்டிய நபர்களின் பட்டியலைக் கொடுப்பார்கள்; பின்னர் அதுவே முதல் தகவல் அறிக்கையாகவும், குற்றப்பத்திரிக்கையாகவும் தாக்கல் செய்யப்படும். சி.பி.எம்., ஆர்.எஸ்.எஸ். இரண்டிலும் கீழ் மட்டத்தில் உள்ள அணிகள் பாதிக்கப்படும் அதேவேளையில், இரண்டு அமைப்பின் தலைமையைச் சேர்ந்தவர்களும் கண்கானிப்பு வளையத்துக்குள் சிக்காமல் [அரசுக்] கட்டமைப்பு உத்திரவாதப்படுத்தியது. கண்ணூரில் நடந்த மோதல்களில் ஆர்.எஸ்.எஸ்-சுக்கும், சி.பி.எம்-க்கும் பேரங்கள் நடப்பது என்பது ஒரு ஊரறிந்த இரகசியம். 2001-ல் வன்முறையைச் சகித்துக் கொள்ளாதவர் என்று பெயரெடுத்த மனோஜ் ஆபிரகாம் என்ற அதிகாரி கண்ணூரின் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்ற பின்னர், போலிசு இந்த அரசியல் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் சதித்திட்டங்களைப் பற்றி ஆராயும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. “இந்த மாற்றங்கள் கண்ணூரின் அரசியல் படுகொலைகள் குறைவதற்கு ஓரளவு உதவின. [எல்லா அமைப்புகளின்] உயர்மட்டத் தலைவர்களின் தலைவர்களும் குறிவைக்கப்பட்டதால், இரத்தக்களறியாவதை நிறுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் எல்லாத் தரப்பினருக்கும் ஏற்பட்டது” என்கிறார், பல்வேறு அரசியல் படுகொலை வழக்குகளில் வாதாடிய கேரள உயர்நீதிமன்றத்தின் ஒரு வழக்கறிஞர்.

(தொடரும்)

“கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?” என்ற தலைப்பில் ஜூன், 2024 கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

மொழியாக்கம்.

  • கார்த்திக்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன