பட்ஜெட் : முதலாளிகளுக்கான கட்டமைப்பு உருவாக்கத்திற்கு காவு கொடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்கள்.

உயர்கல்வியில் தனியார்மயத்தை நுழைப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கான (UGC) நிதி ஒதுக்கீடு 50% ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களும் அரசிடமிருந்து நிதி பெறாமல் இயங்கவேண்டிய நிலையினை உருவாக்கியிருக்கிறது. வரும் மாதங்களில் அரசுப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.

 

 

மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட்டானது கியான் பட்ஜெட் (Gyan – ‘Garib’ (poor), ‘Yuva’ (youth), ‘Annadata’ (farmer), and ‘Nari’ (women)) அதாவது ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் என கூறிக்கொண்டாலும் இவை எல்லாம் மக்களை ஏமாற்றக் கூறப்படும் வாய்வார்த்தைகள்தான், மோடியின் பாசையில் சொல்வதானால் ‘ஜூம்லாக்கள்’ தான். மற்றபடி இது வழக்கம் போல, முதலாளிகளுக்கான பட்ஜெட்தான் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.

முதலாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கட்டமைப்பு உருவாக்கத்திற்கான (infrastructure development) திட்டங்களுக்கு அதிகரித்த அளவிலான நிதி ஒதுக்கீடும், மக்கள் நலத் திட்டங்களுக்கு கடந்த பட்ஜெட்டைவிட குறைவானதாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுமே இதற்குச் சான்று. உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு கடந்த பட்ஜெட்டை விட இந்த முறை குறைவான நிதியே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்திட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (2103) கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் எல்லாம் வெறுமனே ஏட்டளவில் இருப்பதால்தான் ஐநா வெளியிட்டிருக்கும் 2024-ம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக ஐநா கூறியுள்ளது.

இருந்தும் இந்த பட்ஜெட்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழுள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பொது விநியோக முறை (PDS) மூலம் விநியோகிக்கப்படும் உணவு மானியத்திற்கான பட்ஜெட் செலவீனத்தின் பங்கு 2019-20-ல் 6.61 சதவீதத்திலிருந்து தற்போதைய பட்ஜெட்டில் 4.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கான பிரதம மந்திரி உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்குவதை நீட்டித்திருப்பதாக மார்தட்டிக் கொண்டாலும், பட்ஜெட்டில் அதற்குப் போதுமான நிதியை ஒதுக்காமல் மக்களை மோடி அரசு ஏமாற்றியிருக்கிறது.

இது மட்டுமன்றி குழந்தைகளுக்கான அங்கன்வாடித் திட்டம், வளர் இளம் பெண்களுக்கான திட்டம், மற்றும் இளம் தாய்மார்களின் ஊட்டச்சத்திற்கான திட்டம் ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடும் கணிசமான அளவிற்குக் குறைக்கப்பட்டுள்ளது. 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கன்வாடித் திட்டத்திற்கான பங்கு 0.95 சதவீதமாக இருந்த நிலையில் அது தற்போது 0.43 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டம் என பெருமைபட்டுக்கொள்ளும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 1.78 சதவீதத்தில் இருந்து 1.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 20 சதவீதம் கடந்த ஆண்டு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகைகளுக்கு கொடுக்க பயன்படுத்தப்படும் என்ற சூழலில் இந்த ஆண்டிற்கான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மிகக் குறைவான அளவிற்கே நிதி கிடைக்கும்.

வயதானவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத பென்சன் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது 16 கோடி அளவிற்கு அதிகப்படுத்தப்பட்டிருப்பினும், விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை வைத்துக் கணக்கிடும்போது இந்த தொகை கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விடவும் குறைவே. வயதானவர்களுக்கு மாதம் 200 ருபாயும், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 300 ரூபாயும் வழங்கும் இந்த திட்டங்களுக்கு 16 கோடி அதிக நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் அற்பமானது.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் பள்ளிக் கல்வியையும், உயர்கல்வியையும் தனியார் முதலாளிகள் கையில் தாரைவார்ப்பதையும், கல்வியை காவிமயமாக்குவதையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசு, புதிய கல்விக் கொள்கையில் கூறிய படி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குவதில்லை. மாறாக இந்த பட்ஜெட்டிலும் கல்விக்கு 0.37 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படியே 2014 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தமாக 61,923 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள அதேவேளையில் இந்தக் காலகட்டத்தில் மட்டும் 47,680 தனியார் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, புதிய கல்விக் கொள்கையின் வழிகாட்டலின் படி இன்னமும் 50,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைத்துவிட ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, கல்வித்துறையை முற்றிலும் தனியார்மயமாக்குவதை நோக்கியே அரசு நகர்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதிலிருந்துதான் இந்த பட்ஜெட்டில் மட்டுமல்ல கடந்த பத்து ஆண்டுகளில் கல்வித் துறைக்கென போதுமான நிதி ஏன் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

உயர்கல்வியில் தனியார்மயத்தை நுழைப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கான (UGC) நிதி ஒதுக்கீடு 50% ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களும் அரசிடமிருந்து நிதி பெறாமல் இயங்கவேண்டிய நிலையினை உருவாக்கியிருக்கிறது. வரும் மாதங்களில் அரசுப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. அது மட்டுமன்றி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையும் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையிலும் இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. 2019-20 பட்ஜெட்டில் 2.16 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு தற்போது 1.88 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தொகையும் கூட ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை உருவாக்கவும் தரம் உயர்த்தவும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு பதிலாக, பெரும் அளவிலான தொகை தனியார் காப்பீட்டு முதலாளிகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டு, முதலாளிகள் நலனுக்கான அடிப்படைக் கட்டுமான வசதிகளை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் 11 லட்சத்து 11 ஆயிரம் கோடிகள் ஓதுக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இது 3.40 சதவீதமாகும். இதுவரை இவ்வளவு பெரிய தொகையை எந்தவொரு அரசும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஒதுக்கீடு செய்தது இல்லை. இந்த ஒதுக்கீடு பொறியியல், இரும்பு, சிமெண்ட், கட்டுமானம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.

சுருங்கக்கூறின், 2024-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது முதலாளிகளைக் குளிர்விக்க, மக்கள் நலத்திட்டங்களை ஒழித்து நாட்டில் உள்ள ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களை காவு கொடுப்பதற்கான பட்ஜெட் என்பதில் எல்முனையளவுக்குகூட சந்தேகம் இல்லை.

  • மகேஷ்

4 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 என்று திருத்தவும். ஏற்கனவே ஏற்றத்தாழ்வு உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது என்று உணர்கிறேன். இப்படி இருக்கையில் தொலை நோக்கு பார்வையில் ஏழ்மை ஏற்றத்தாழ்வை ஒழிப்பதை நோக்கமாக கொள்ளாமல் கார்ப்பரேட் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகம், கேரளா போன்ற பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்பது பற்றி கட்டுரை எதுவும் கூறவில்லை. மேலும் வரவுக்கான திட்டத்தில் மறைமுக வரியை உயர்த்தியிருப்பதன் மூலம் மேலும் விலைவாசியை உயர்த்தி ஏழைகளின் கோவணத்தை உறுவும் பட்ஜெட்டாக இது உள்ளது. நடுத்தர மக்கள் தங்களது சேமிப்புகளுக்கும் வரிகட்ட வேண்டும் என்று இந்த பட்ஜெட் கூறுகிறது. அந்த வகையில் ஏழை நடுத்தர மக்களுக்கு எதிரான கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு பயக்கும் பட்ஜெட் என்பது சரிதான்.

  2. ஏற்கனவே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ள நாடுகளில் முதன்மையான இடத்தை இந்தியா பிடித்துள்ளது என்று தெரியவருகிறது. இந்நிலையில் மேலும் மேலும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை போட்டு வருகின்றன. இந்த பட்ஜெட்டில் மறைமுக வரியை கணிசமான அளவு அதிகரித்திருப்பதன் மூலம் விலைவாசி உயர்ந்து மேலும் மக்கள் போண்டியாவதை நோக்கி இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நடத்தர மக்கள் தங்களின் சேமிப்புக்கும் வரிகட்ட வேண்டும் என்று இந்த பட்ஜெட் கூறுகிறது. மொத்த த்தில் இது ஏழை நடுத்தர மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் தேவையி இட்டு நிரப்பும் பட்ஜெட் என்பதுதான்.