வயநாடு நிலச்சரிவு
முதலாளித்துவம் உருவாக்கிய பேரழிவு

சூழலியலாளர்களின் பரிந்துரைகள் அனைத்தும் வளர்ச்சிக்கு எதிரானது என்பதுதான் ஆட்சியாளர்களின் வாதம். இந்திய வனங்களில் உள்ள மரங்களை வெட்டியெடுக்கவும், மலைகளில் உள்ள கனிமவளங்களை தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும் தோண்டியெடுத்துக்கொள்ளவும் வசதியாக மலைகளைக் காலிசெய்ய அனுமதிக்க வேண்டும், சுற்றுலா என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு உள்ளேயும் கூட சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்டி பணம் கொழிக்க வழிவகை செய்துதர வேண்டும். அதன் மூலம்தான் தொழில் பெருகும், வேலைவாய்ப்பு உருவாகும், நாடு முன்னேறும் என்று கூறுகிறார்கள்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை முன்னூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர்களைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பேரழிவு இயற்கையின் சீற்றத்தால் நிகழ்ந்தது என்றும் பெருமழை பெய்வதும், அதன் காரணமாக நிலச் சரிவு ஏற்படுவதும் மனித சக்தியினால் தடுக்க இயலாத ஒன்று எனவும் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

அதே சமயம் இப்படி ஒரு பேரழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த இரண்டு ஆய்வறிக்கைகள் குறித்தும், அந்த ஆய்வறிக்கைகளில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை ஒன்றிய அரசும், மாநில அரசும் கிடப்பில் போட்டது குறித்தும் விமர்சித்து, பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச்சூழல் பகுதியும், 58 ஆறுகள் உற்பத்தியாகும் இடமும், இந்தியாவின் நுரையீரல் என்று கூறத்தக்க 1,64,280 சதுர கி.மீ. வனப்பகுதியுமான மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 75% கடந்த 30 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் மழை இன்றி வறட்சியையும், மற்றொரு சமயம் வெள்ளத்தையும் இது தோற்றுவித்திருப்பதால், இந்த வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட காட்கில் குழு, 64% வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டுமென சிபாரிசு செய்தது. அதற்குப் பின்னர் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு குறைந்த பட்சம் 37% வனப்பகுதியையாவது அவ்வாறு அறிவிக்கவேண்டுமெனக் கூறியது.

மேலும் இந்தப் பகுதிகளில் மரம் வெட்டுவது, சுரங்கம் அமைப்பது, தனியாருக்கு வன நிலங்களைக் கொடுப்பது, குறிப்பாக சுற்றுலா ரிசார்ட்டுகள் கட்டுவதற்கு நிலம் கொடுப்பது ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என காட்கில் அறிக்கை வலியுறுத்தியது.

கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கை 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. காட்கில் கமிட்டியின் அறிக்கை 2011-ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த இரண்டு அறிக்கைகளின் பறிந்துரைகளையும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இதுவரை நிறைவேற்றவில்லை இனியும் இவர்கள் நிறைவேற்றப் போவதும் இல்லை.

ஏனென்றால் சூழலியலாளர்களின் பரிந்துரைகள் அனைத்தும் வளர்ச்சிக்கு எதிரானது என்பதுதான் ஆட்சியாளர்களின் வாதம். இந்திய வனங்களில் உள்ள மரங்களை வெட்டியெடுக்கவும், மலைகளில் உள்ள கனிமவளங்களை தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும் தோண்டியெடுத்துக்கொள்ளவும் வசதியாக மலைகளைக் காலிசெய்ய அனுமதிக்க வேண்டும், சுற்றுலா என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு உள்ளேயும் கூட சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்டி பணம் கொழிக்க வழிவகை செய்துதர வேண்டும். அதன் மூலம்தான் தொழில் பெருகும், வேலைவாய்ப்பு உருவாகும், நாடு முன்னேறும் என்று கூறுகிறார்கள்.

இதனை நடைமுறைப்படுத்திட கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்கெனவே இருந்த பல்வேறு சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லை என சான்று பெறத் தேவையில்லை என்றும், ஒற்றைச் சாளர முறையில் பிரதமரின் அலுவலகத்தில் பெரும் அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டு தொழில் தொடங்கலாம் என்றும் 2014-ம் ஆண்டு பிரதமாராக பதவியேற்ற அடுத்த மாதத்திலேயே மோடி அறிவித்தார்.

2020-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கையின் படி, முதலாளிகள் தொடங்கும் தொழிற்சாலை சுற்றுச்சூழலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மதிப்பீடு செய்வதையும், அதனைக் கண்காணிப்பதையும் இன்னொரு முதலாளியிடம் கொடுப்பது என மாற்றியது ஒன்றிய அரசு.

2023-ம் ஆண்டு வனப்பாதுகாப்புச் சட்ட திருத்தத்தின்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை காடுகள் என்ற வரையறுப்பில் இருந்து நீக்கியது. இது அந்தப் பகுதிகளை தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்க வழி செய்வதுடன், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு போன்று எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவிலான பேரிடர்கள் ஏற்படவும் வழிசெய்து கொடுத்துள்ளது.

 

 

2018-க்கும் 2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் காடுகள், வனவிலங்குகளின் வழித்தடங்கள், கடலோர பகுதிகளில் தொழில் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட அனுமதிகள் 21 மடங்கு அதிகரித்துள்ளன. முந்தைய நான்கு ஆண்டுகளில் வெறும் 541-ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 12,496-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான கால அளவும் 600 நாட்களில் இருந்து 172 நாட்களாக குறைக்கப்பட்டு அதிவிரைவாக காடுகளை அழிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏற்கெனவே இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களைப் புகுத்திக் கொண்டே முதலாளிகளுக்கு ஆதரவாக நடைமுறையையும் மாற்றியமைத்த ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சூழலியளாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுத்த போதும் மோடி அரசு அவற்றிலிருந்து பின்வாங்கவில்லை.

ஏனென்றால் சுற்றுச்சூழல் என்ற வார்த்தையே முதலாளிகளுக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்கள் அமைக்க வேண்டும். அப்படி வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை கொண்டுசெல்ல பெரும் சாலைகள் அமைக்க வேண்டும், அவற்றை ஏற்றுமதி செய்ய புதிய புதிய துறைமுகங்கள் கட்ட வேண்டும். இதற்கெல்லாம் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என முதலாளிகள் விரும்புகின்றனர். முதலாளிகளின் விருப்பத்தை அரசும் தன் தலைமேல் ஏற்று நிறைவேற்றித் தருகிறது. இதுதான் ‘வளர்ச்சி’ என்றும் இதனை எதிர்ப்பவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் கூறுகிறது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்ல, இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்ளும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கும் இதே நிலைப்பாடுதான். கடல்வளத்தையும் பவளப்பாறைகளையும் அழிக்கும் அதானியின் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு ஆதரவாக சிபிஎம் கட்சியினரும், பாஜகவும் இணைந்து போராடியது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் லாபவெறிக்கு இயற்கையை பலிகொடுக்கும் அரசின் கொள்கையை மாற்றாத வரை, வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவு மீண்டும் ஏற்படாமல் தடுக்க இயலாது.

இயற்கைப் பேரிடரால் பல நூறு பேர் பலியாவது என்பது நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காற்று மாசு, ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகுவது, பெரும் காட்டுத் தீ, கடல் மட்டம் உயர்வது, கடும் வரட்சி, வரலாறு காணாத பெரும் மழை என சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உருவாகும் பேரழிவுகள் இன்றைக்கு மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்து வருகிறது.

இவையனைத்தும், முதலாளித்துவம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, இயற்கையைப் பாதுகாப்பது என்பதை நாம் முதலாளித்துவத்தை வேரருப்பதில் இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதாரச் சூழலைப் பொறுத்தவரை முதலாளித்துவத்தின் ஆக மிகப் பிற்போக்கான வடிவமான காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதில் இருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

  • அறிவு

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. கார்ப்பரேட்டுகளுக்கு கம்யூனிஸ்ட் CPM துணை நிற்பது புதியதல்ல, நந்திகிராம், சிங்கூர் நடவடிக்கை தான் அந்த கட்சியின் உண்மை முகம் வெளிபட்டது. தற்போது விழிஞ்சம்.

  2. குறிப்பாக கேரளத்தில் இதுபோன்ற கார்ப்பரேட் திட்டங்கள் என்ன என்ன அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை குறிப்பாக குறிப்பிட்டிருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்.