வல்சன் தில்லங்கேரியும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்த கதையும்
நாங்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் கண்ணூரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவரிடமிருந்து மின்னிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பிறகு கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். செய்துவரும் வேலைகளின் கேந்திரமான அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுவதாக மின்னி எங்களுக்கு வாக்களித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தலச்சேரியின் கடலோரத்தில் உள்ள ஒரு அமைதியான பூங்காவில் அந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை நாங்கள் சந்தித்தோம். அவர் தற்பொழுது சி.பி.எம். கட்சிக்குத் மாறியதைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறச் சட்டையும், சிவப்புக் கறையுடனான வெள்ளை நிற வேட்டியும் உடுத்தியிருந்தார். அவர் கணிவோடும் நம்பிக்கையோடும் பேசினார். மேலும் தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் [புரிதலுக்காக இவரை X என்று குறிப்பிடுகிறோம் – மொ.ர்] என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார்.
வயநாடு மாவட்டத்தின் எல்லைப்புறமாக உள்ள கண்ணூரின் மிகப்பெரிய வனப்பகுதியான ஒரு கிராமத்தைச் சேர்ந்த அவரது கிராம மக்கள் கேரளாவில் இதர பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கப்படும் ஈழவ சாதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த ஈழவ சமுதாயத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸோடு இணைந்துகொண்ட முதல் குடும்பம் இவருடையதுதான். ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாவில் தனது ஆரம்ப நாட்களில் அவர் சில உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்; குறிப்பாக, களரிப்பாயாட்டு என்ற கேரளாவின் ஒரு சண்டைக் கலையைக் கற்றுக் கொண்டார். இதுதான் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தபோதும், தற்போது சி.பி.எம்-மில் இருக்கும்போதும் அவருடைய மிகப்பெரிய சொத்தாக அவருடன் இருக்கிறது. திருச்சூரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது, ஒரு பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ். அவருக்குத் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி கொடுத்தது. பி.பி.முகுந்தன், கும்மன்னன் ராஜசேகரன், ஏ.வி.பாஸ்கரன் போன்ற கேரள ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கியப் புள்ளிகளோடு பணிபுரிந்த நாட்களை அவர் நினைவு கூர்ந்தார்.
ஒரு பத்தாண்டாக ஆர்.எஸ்.எஸ்-சுடன் பணிபுரிந்ததன் விளைவாய், கேரளாவிற்கு லாரிகள் மூலம் ஆயுதங்கள் கடத்தி வரப்படுவதை அவர் கண்டறிந்தார். 1990-களின் இறுதியில் கேரளாவானது அரசியல் படுகொலைகளின் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்-சிற்கு அப்போது ஆயுதங்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. தேங்காயையும் மரங்களையும் வெட்டும் வெட்டரிவாள் (வடிவாள்) தான் ஆர்.எஸ்.எஸ்-இன் எதிர்ப்பாளர்களை வெட்டிக் கொல்லவும் அவ்வமைப்பு ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய ஆயுதமாகும். போலிசு சோதனைகளின்போது சர்வசாதாரணமாகக் கைப்பற்றப்படும் ஒரு ஆயுதமும் இதுவேதான். இரும்பு வெட்டரிவாள்கள் செய்வதற்குப் புகழ்பெற்ற இடமாக விளங்கிய கூர்க் என்ற ஊரில் [கர்நாடகத்தின் குடகு மலைப்பகுதி] இந்த ஆயுதங்கள் செய்யப்பட்டன. அவருக்கான [X] முதல் வேலைத்திட்டமாக, வேறு சிலரோடு இணைந்துகொண்டு இரிட்டிக்கு மிக அருகில் இருந்த கூர்க் பகுதியில் உள்ளவர்களிடம் தொடர்புகளை நிறுவுமாறு ஆர்.எஸ்.எஸ். அவரைப் பணித்தது. கேரளாவில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு அங்கிருந்து வெளியேறிய பல இந்துப் பண்ணையார்கள், கர்நாடகத்தில் மிகப்பெரியளவில் நிலத்தை வாங்கி இஞ்சி பண்ணைகளையும் ஓட்டல்களையும் நடத்திக் கொண்டிருந்தனர். வரலாற்று ரீதியாக காங்கிரசின் முதுகெலும்பாகவும் முக்கியப் புள்ளிகளாகவும் இருந்த அவர்களது விசுவாசம் ஆர்.எஸ்.எஸ்.சிற்கு மாறியது. “வடக்கரியில் இருந்து மிர்ஜாபேட்டை, சோம்வார்பேட்டை வரை இருந்த அத்தகைய [முன்னாள்] நிலப்பிரபுக்களிடம் நாங்கள் தொடர்புகளை நிறுவிக் கொண்டோம்” என்றார், அவர். அவர்கள் இந்த X-க்கு ஆயுதங்களைக் கொடுத்தனர். அவற்றை அவர் எல்லைதாண்டிக் கேரளத்துக்குள் கடத்தி வந்தார்.
”உங்களுக்குத் தெரியுமா? கூர்கில் இருந்து இரிட்டிக்கு ஆயுதங்களைக் கடத்தி வரும் பாதை அப்போது வெகு சிலருக்கே தெரிந்திருந்தது. எனவே, போலிசின் சோதனையும் சில இடங்களில்தான் இருந்தது. கைப்பிடியையும் இரும்பையும் தனியாகப் பிரிக்கும் வகையில் வடிவாள்களை நாங்கள் தயாரித்தோம். தேங்காய் நார்களுக்குள்ளே ஒளித்து வைத்து சிறிய துப்பாக்கிகளைக் கடத்தி வந்தோம்.” என்று அவர் எங்களிடம் கூறினார். இது ஆர்.எஸ்.எஸ்-சிற்கு இலவசமாகச் செய்யப்பட்ட வேலையல்ல. கண்ணூரைச் சேர்ந்த உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இக்கடத்தலில் ஈடுபடுவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கூலியும் கொடுத்தனர். ஆயுதங்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும், இந்த கடத்தல் வேலையின் நெளிவு சுளிவுகளையும் கற்றறிந்த அவர் [X] நல்ல இலாபத்தைச் சம்பாதித்தார். “நூற்றுக்கணக்கில் நான் மொத்த ஆர்டர்களையும் அவர்களுக்குக் கொடுத்ததால் கூர்க்கில் இருந்த ஆயுதம் செய்யும் கொல்லர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாயினர். நாங்கள் ஆயுதங்களைக் கடத்தி வருவதற்கான புதுப்புது உத்திகளைக் கண்டறிந்தோம்” என்கிறார், அவர்.
சிறிது காலத்திற்கு பிறகு வாள்களுக்கு இருந்த தேவையிலிருந்து நாட்டுத் துப்பாக்கிகளுக்கான தேவையாய் அது மாறியது. 1990-களின் இறுதியில் ஒரு போக்குவரத்தில் (one trip) 30, 40 என்ற ரீதியில் துப்பாக்கிகளைக் கடத்தி வந்த அவர்கள், 2000-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு போக்குவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டுவந்தனர். இன்றளவிலும் [போலிசு சோதனைகளில்] ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும்போது, பெரும்பாலான ஆயுதங்கள் மட்டனூர், பன்னூர், இரிட்டி ஆகிய ஊர்களின் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர்களிடமிருந்துதான் கிடைக்கின்றன. அவ்வூர்களில் உள்ள கோவில் வளாகங்களில்தான் அவை [பதுக்கி] வைக்கப்பட்டிருக்கின்றன. “வல்சனுக்கும் இந்த ஆயுதக் கடத்தலுக்குமான தொடர்புக்கான ஒரேயொரு ஆதாரம் என்னவென்றால், எனக்கும் [X] வல்சனுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற [தொலைபேசி] தொடர்பே ஆகும். எனவே, நீதிமன்றத்தில் வல்சனால் இதை எளிதில் மறுத்துவிட முடியும்” என்கிறார், அவர்.
அந்தக் காலத்தில் ஆயுதக் கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடந்த ஒரு விசயம்தான் என்றும், தன்னைத் தற்காத்துக் கொள்வது என்ற பெயரில் பல தலைவர்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டனர் என்றும் மின்னியும் நினைவு கூர்ந்தார். “இந்த நடவடிக்கைகளில் மிகச் சிலரே ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ்-இன் வைபக் கார்யவாஹ் பதவியில் உள்ளவர்கள்தான் துப்பாக்கிகளை வைத்திருந்தவர்களில் முதன்மையாவர்களாவர். அத்துப்பாக்கிகள் கூர்க்கில் இருந்து இரிட்டிக்குக் கடத்தி வரப்பட்டவைதாம். இந்த ஆயுதக் கடத்தல் பற்றிய அனைத்து விவரங்களும் வல்சனுக்கு நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல, வல்சன் அனைத்து கார்யவாஹ்குகளோடும் தொடர்பைப் பராமரித்து வந்தார்” என்கிறார், மின்னி.
ஆர்.எஸ்.எஸ்-சிற்குள்ளும் போட்டிகள் வளர்ந்தன. முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் [X] புதிய வசதி வாய்ப்புகளையும், புதிதாக அவர் ஈட்டிய செல்வங்களையும் பார்த்து ஆர்.எஸ்.எஸ்-சிற்குள் உள்ள பிற நிர்வாகிகள் பொறாமை கொண்டனர். “அதிகாரிகளுக்கு [கடத்தல் பற்றி] துப்பு கொடுத்ததன் மூலம், எனது சொந்த அமைப்பைச் சேர்ந்த [ஆர்.எஸ்.எஸ்.] ஆட்களே என்னை முதுகில் குத்த முயன்றனர். ஆனால், நான் எப்படியோ அதில் இருந்து தப்பித்துவிட்டேன்” என்கிறார், அவர். கடத்தல் தொழில் எளிதில் செய்யக் கூடியதாக இருந்தமையால், ஆர்.எஸ்.எஸ். வேறு வகையான பொருட்களை கடத்துவதிலும் ஈடுபடத் தொடங்கியது.
இரிட்டியின் சாதகமான தட்பவெட்ப சூழலில் தனியார் நிலத்திலும் அரசு நிலத்திலும் சந்தன மரங்கள் அபரிமிதமாக வளர்ந்தன. வட இந்தியாவில் கோவில்கள் கட்டுவதற்கு, குறிப்பாக அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்காக சந்தன மரங்களுக்கான தேவை இருக்கிறது என்று வல்சன் உட்பட மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலர் விவாதித்துக் கொண்டிருந்த நிகழ்வை முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி நினைவு கூர்ந்தார். “உள்ளூரில் சந்தன மரங்கள் இருக்குமிடத்தைக் கண்டறியவும், அவை கோவில்களுக்குத்தான் கொண்டு செல்லப்படுகிறது என்று மக்களிடம் பேசி இணங்க வைக்கவுமான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ். என்னிடம் ஒப்படைத்தது. என்னைப் பொறுத்தவரையில் இது எனது மத நம்பிக்கை சார்ந்த வேலையாகத் தெரிந்தது. நான் தெய்வீகப் பணியைத் தான் செய்கிறேன் என்று முற்று முழுதாக அப்போது மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தேன். கைவிடப்பட்ட பகுதிகளில் நாங்கள் முதலில் சந்தன மரங்களைக் கண்டறிந்து வெட்டினோம். அழகழகான வேலைப்பாடுகள் செய்யத் தெரிந்த மரத் தச்சர்களை நாங்கள் அப்போது கொண்டிருந்தோம். வெட்டிய மரங்களைக் கடத்தும்போது கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக, அம்மரக்கட்டைகளில் கறுப்பு சாயங்களைப் பூசினோம்.” என்கிறார், அவர். பின்னர், சில தனியாருடைய நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து, அவற்றை வெட்டத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். கோவில் பணிகளுக்காக என்று கூறி, சந்தன மரக் கடத்தலையும் அதை இரகசியமாகச் செய்வதையும் அந்த நில உரிமையாளர்களிடம் நியாயப்படுத்தியது. ஷாகா உறுப்பினர்கள் சந்தன மரங்கள் இருக்குமிடங்களையும் அவற்றை பாதுகாப்பாக வெட்டிச் செல்ல உகந்த நேரம் பற்றியும் அவருக்குத் [X] தகவல் கொடுப்பார்கள்.
இவ்வாறு ஒருநாள் வெட்டப்பட்ட சந்தன மரங்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோதுதான், இந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அவ்வமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்த சம்பவம் நடந்தது. “சந்தன மரங்களை ஏற்றிச் செல்ல வரும் லாரி ஓட்டுனர்களிடம் நான் எப்போதும் பேசியதே கிடையாது. இந்த குறிப்பிட்ட நாளன்று, லாரியை ஸ்டார்ட் செய்வதில் சிறிய கோளாறு ஏற்பட்டது. நான் சாதாரணமாக லாரி டிரைவரிடம் பேசத் தொடங்கினேன். இங்கே ஏற்றப்படும் சந்தன மரங்கள் எப்போதும் மங்களூரில் உள்ள ஒரு ஆலையில் இறக்கப்படும் என்பதை அவர் என்னிடம் கூறினார். ஒரு சிறிய சந்தனக் கட்டை கூட எந்த கோவில் புணரமைப்புப் பணிக்கும் செல்வதில்லை என்றார். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் (IUML – ஐ.யூ.எம்.எல்) தலைவர்களில் ஒருவருடையதுதான் அந்த ஆலையாகும்” என்றார், அவர் [X]. அந்த ஆலையின் உரிமையாளரின் பெயரைச் சொல்ல அவர் மறுத்த போதிலும், அந்தச் சம்பவம் தனக்குள் இருந்த “உண்மையான ஆர்.எஸ்.எஸ்.காரணை சுக்குநூறாக நொறுக்கிவிட்டது” என்றார். “ஆயுதக் கடத்தலுக்காவும், சந்தன மரக் கடத்தலுக்காகவும் நான் எவ்வாறு பல ஆண்டுகளாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளேன் என்பதையும் ஆர்.எஸ்.எஸ்-இன் கட்டுப்பாடுகள் பற்றிய போதனைகள் எப்படி எதையும் புரிந்துகொள்ள இயலாமல் என்னை ஆக்கிவிட்டது என்பதையும் உணரும் தருணமாக அந்தநாள் இருந்தது” என்றார்.
ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்து விலகியதற்கான காரணம் அவ்வமைப்போடு சித்தாந்த ரீதியாக மாறுபட்டதால் அல்ல. வல்சன் அவ்வமைப்பின் விழுமியங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்பதால்தான். “அவர்கள் தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்; துறவறத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறார்கள்; தன்னலமின்றி இருப்பதை வலியுறுத்துகிறார்கள்; ஆனால், இந்தப் பிரச்சாரத்தை எல்லாம் செய்துவரும் ஒரு முகமூடி தரித்த மனிதர் [வல்சன்] இந்த உயர்ந்த நெறிகளை ஒருபோதும் பின்பற்றியது கிடையாது என்பதை நான் பின்னர் உணர்ந்தேன்” என்று எங்களிடம் கூறினார். ஒருவேளை மலபார் ஆர்.எஸ்.எஸ்-சானது அஸ்வினி குமார் போன்ற தலைவர்களால் தலைமை தாங்கப்பட்டிருக்குமாயின் தான் அவ்வமைப்பிலேயே நீடித்திருப்பேன் என்றும் கூறினார். ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்து ஓடி வந்த ஒருவருக்கு சிவப்பு முன்னணிதான் பாதுகாப்புத் தந்தது என்ற காரணத்திற்காகவே அவர் சி.பி.எம். கட்சியில் இணைந்தார்.
-தொடரும்.
இந்தியாவின் அதிபயங்கர கொலை, கொள்ளைக்கார அமைப்பு RSS.
போலிகளால் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதற்கு கேரளம் ஒரு உதாரணம்