சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றித்திரியும் குண்டர் படையால் கொல்லப்பட்டவர்களை, யாரும் தாக்கவில்லை என்றும் அவர்கள் பாலத்தில் இருந்து குதித்ததில் இறந்துவிட்டனர் என்றும் நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் கூறியிருக்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் 7ம் தேதியன்று உத்தரபிரதேசத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றி வந்த குட்டு கான், சாந்த் மியா கான், மற்றும் சதாம் குரேஷி என்ற மூன்று இஸ்லாமியர்கள் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பசுக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். இதில் குட்டு கானும், சாந்த் மியா கானும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். குற்றுயிராகக் கிடந்த குரேஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்படு பத்து நாட்களுக்கு பிறகு மரணமடைந்தார்.
இந்தப் படுகொலைக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்திற்குப் பிறகு ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தற்போது கைது செய்யப்பட்ட ஐவரையும் தப்பிக்க வைக்க “கொல்லப்பட்டவர்களை யாரும் தாக்கியதற்கான தடையங்கள் இல்லை. பசுப் பாதுகாவலர்கள் தங்களைத் துரத்தி வருவதால் பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மூவரும் கீழே குதித்துள்ளனர். அதன் காரணமாகத்தான் மூவரும் இறந்துள்ளனர்” என ராய்பூர் நீதி மன்றத்தில் போலீசார் கூறியுள்ளனர்.
போலீசாரின் குற்றப்பத்திரிகையின் படி, “குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும், பசுக்களை கொண்டு செல்லும் வண்டிகளை மறிப்பதற்காக, மூன்று கார்களில் காத்திருந்தனர். தும்கான் நோக்கிச் சென்ற லாரியைக் கண்டதும், அவர்கள் அதனை விரட்டிச் சென்று அதன் டயர்களை பஞ்சராக்க ஆணிகளை வீசியுள்ளனர், அத்துடன் கற்களை வீசி லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இவர்களுக்கு பயந்து 14 கிலோமீட்டர் தூரம் சாலையின் தவறான பக்கத்தில் லாரியை டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களிடம் மாட்டிக்கொண்டால் உயிர் போய்விடும் எனப் பயந்து லாரியை பாலத்தில் நிறுத்திவிட்டு கீழே குதித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 53 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றுள்ளனர் ஆனால் கொல்லவில்லை” என கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த குற்றப்பத்திரிக்கையை படுகொலை செய்யப்பட்ட குரேஷியின் உறவினரான சோய்ப் மறுத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சோய்ப்பிற்கும் அவரது மற்றொரு உறவினருக்கும் அலைபேசியில் அழைத்த குரேஷி அந்த அழைப்பைத் துண்டிக்காமல் அலைபேசியை தனது சட்டைப்பையில் வைத்திருந்திருக்கிறார். அதில் அங்கே நடந்தது அனைத்தையும் சோய்ப் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். குரேஷியைச் சுற்றி வளைத்தவர்கள் அவரை அரை மணி நேரத்திற்கும் அதிகமாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவர்களிடம் தண்ணீர் வேண்டும் எனக் கெஞ்சினார். ஆனால் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திட்டியதையும், தாக்கியதையும் கேட்க முடிந்தது என சோய்ப் கூறியுள்ளார்.
சோய்ப் இதனை விசாரணை அதிகாரிகளிடமும் தெரிவித்திருக்கிறார். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் முதல் தகவல் அறிக்கையே பதியப்பட்டுள்ளது. ஆனால் இன்று இதனை மாற்றி போலீசார் வேறு விதமாக கூறுகின்றனர்.
53 கிலோமீட்டர் தூரத்திற்கு தங்களைத் துரத்திக் கொண்டு வந்தவர்களிடமிருந்து தப்பி ஓடிய மூவரும், குறிப்பாக இந்த பாலத்தில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்து செத்துப்போனது ஏன்? இறந்து போனவர்களது உடலில் உள்ள காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டவையா அல்லது அதற்கு முன்னதாக ஏற்பட்டதா என்பதை எதை வைத்து முடிவு செய்தார்கள்? பாலத்தில் இருந்து விழுந்ததால் மரணம் என்றால் அவர்களை யாரேனும் வலுக்கட்டாயமாக தூக்கி வீசியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? என பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கேட்ட கேள்விக்கு போலீசாரிடம் பதில் எதுவும் இல்லை.
குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் ராய்ப்பூர் நகரில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகு இந்த வழக்கை போலீசார் விசாரித்த விதமே மாறிவிட்டது. முதல் தகவல் அறிக்கையில் “மரணம் விளைக்கும் வகையிலான தாக்குதல்” எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது. குற்றவாளிகளை வி்டுவிக்க வேண்டும் என்ற கெடு நோக்கத்துடன், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் போது “மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாத தாக்குதல்” என போலீசார் மாற்றிப் பதிவு செய்துள்ளனர்.
சிறுபான்மையினர் மீதான தாக்குதலின் போதும் அதற்கு பிறகும் பாசிச அமைப்புகளும், பசுக்குண்டர்களும், போலீசாரும் எப்படி ஒன்றாக வேலை செய்கின்றனர் என்பதை மீண்டும் ஒருமுறை ராய்ப்பூர் போலீசார் நிரூபித்துள்ளனர்.
- சந்திரன்