நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியால் எதிர்பார்த்த அளவிற்கான வெற்றியை ஈட்ட முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரேயின் சிவசேனா கட்சிகளின் இந்தியா கூட்டணி 30 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக தலைமையில் போட்டியிட்ட ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் சட்டசபைக்கான தேர்தலில் தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியால் வெற்றி பெற முடியாது என அஞ்சும் காவிக் கும்பல் தங்களது வழக்கமான் ஆயுதமான கலவரத்தைக் கையில் எடுத்துள்ளது.
கடந்த ஞாயிறன்று இந்துத்துவா காலிகள் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஷால்காட் கோட்டையின் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள முஸ்லிம் குடியிருப்புகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். விஷால்காட் கோட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த திங்களன்று பேரணி நடத்தப்போவதாக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான சம்பாஜி ராஜூ சத்ரபதி அறிவித்திருந்தார். இந்தப் பேரணியில் சம்பாஜி ராஜூ ஆதரவாளர்கள் மட்டுமில்லாது சங்கப்பரிவார காலிகளும் ஆயுதங்களோடு கலந்துள்ளனர்.
இந்த பேரணிக்கு முதல் நாள் ஜூலை 14 அன்று கோட்டையை நோக்கி பேரணி போகின்ற வழியில் உள்ள குஜாபூர் என்ற கிராமத்தை இந்த இந்துத்துவ காலிகள் சூறையாடியுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளை தீக்கரை ஆக்கியுள்ளனர். அவர்களுடைய பணம் நகைகளை களவாடியும் வாகனங்களை தீக்கரையாக்கியும் வீடுகளைக் கொளுத்தியும் உள்ளனர். நெற்றியில் காவித்துணியுடனும் கையில் மூங்கில் கம்பு, ஹாக்கி ஸ்டிக் மற்றும் கோடாரியோடு, ஜெய் ஸ்ரீராம்-ஜெய் சிவாஜி என்ற கோஷமிட்டுக்கொண்டே இந்த அட்டுழியத்தை அரங்கேற்றியுள்ளது காவி கும்பல்.
அத்தோடு நிற்காமல், அறுபதுபேர் கொண்ட கும்பல் அந்த கிராமத்திலுள்ள மசூதிக்குள் புகுந்து அடித்து நொருக்கியதோடு, மசூதியின் கோபுரங்களை சம்மட்டி கொண்டு உடைத்தும் அதன் உச்சியில் காவிக்கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் அதை காணொலி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
“கும்பல் கிராமத்தை நெருங்க நெருங்க, விஷயங்கள் தவறாக நடக்கக்கூடும் என்பதை உணர்ந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டோம், மாலையில் வீடு திரும்பியபோது, எங்களுடைய சொந்த வீட்டை எங்களால் அடையாளம் காண முடியவில்லை, சூறையாடப்பட்டிருந்தது” என்கிறார் பாதிக்கப்பட்ட 45 வயதான முஸ்லீம் பெண்.
குஜாபூர் கிராமம் விஷால்காட் கோட்டையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விஷால்காட் கோட்டையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை வலியுறுத்தி பேரணி என்று அறிவித்துவிட்டு கோட்டைக்கு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் வீடுகளையும் மசூதியையும் சூறையாடியதிலிருந்தே பேரணிக்கு பின்னால் காவிகும்பலின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.
விஷால் காட் கோட்டை சத்ரபதி சிவாஜி கட்டிய கோட்டையாகும். சிவாஜி வம்சாவழியின் தற்போதைய வாரிசான சம்பாஜி ராஜூ சத்ரபதி தன்னுடைய அரசியல் நலனுக்காக இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் மாகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதில் சம்பாஜி ராஜூ போட்டியிடப் போவதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. இந்தப் பின்னனியிலிருந்தே, விஷால் காட் கோட்டையை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்போம் என்ற முழக்கத்தின் கீழ் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்ததை புரிந்துக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோலாப்பூர் நகரத்தில் இந்துத்துவா காலிகள் முஸ்லிம் கடைகளை அடித்து நொறுக்கி கலவரம் செய்தனர். அவுரங்கசீப்பையும் திப்பு சுல்தானையும் உயர்வாக புகழ்ந்து பேசிய காணொலி சமூக வலைதளங்களில் பதிவிட்டதை கண்டித்து இந்த காவி கும்பல் கலவரத்தையும் கடையடைப்பையும் நடத்தியது. அதிலிருந்து இப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதாக பத்திரிகைகள் கூறுகின்றன. தற்போதைய பேரணியில் கூட கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிந்து இருந்தும் மகாராஷ்டிரா போலீஸ் போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை. காவி கும்பல் வீடுகளையும் மசூதியையும் சூறையாடும் போது போலீசார் வேடிக்கை பார்க்கின்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன. வரப்போகும் தேர்தலை ஒட்டி மதக்கலவரத்தை தூண்டி அதனை ஓட்டாக மாற்றவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சின்டே-பட்னாவிஸ் கும்பல செயல்படுகிறது.
- அழகு
குஜாபூர் கலவரம்: சரிந்த செல்வாக்கை ஈடுகட்ட இஸ்லாமியர்களைத் தாக்கும் காவி கும்பல்
தலைப்பு துல்லியமாக உள்ளது.ஆனால் அதற்கான உள்ளடக்கம் கட்டுரையில் தெளிவாக இல்லை. தினசரிகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே உள்ளன.இவை எப்படி மூஸ்லீம் மக்களின் கடைசி ரத்தத்தையும் ருசிபார்க்கும் மிருகமாக அரசு எந்திரத்தை உருமாற்றிவிட்டது என்பதற்கான ரத்தநெடி அதில் இல்லை.
இதை சமீபத்தில் படித்த முகநூலில் உணரமுடிந்தது.அது …
“மதவெறி அடங்காப் பிடாரி ஆதித்யநாத்
வட இந்தியாவில் இப்போது பிரபலமாக இருப்பது கன்வாரி யாத்திரை. இந்த யாத்திரிகள் கங்கை உற்பத்தியாகும் கங்கோத்ரிக்கும், ஹரித்வாருக்கும் நடந்து சென்று ‘புனித நீரை’ எடுத்து வந்து அவர்களின் ஊரிலிருக்கும் சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வார்கள். இந்த வருடம் யாத்திரை செல்லும் வழியில் இருக்கும் கடைகளெல்லாம் தம் உரிமையாளர் பெயரை கடைக்கு வெளியே கண்ணில் படுமாறு வைக்க வேண்டுமென உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டிருக்கிறது. யாத்திரை செல்பவர்கள் முஸ்லிம் கடைகளுக்குச் செல்லக் கூடாது என்பதுதான் இந்த உத்தரவின் உள் நோக்கம். புனிதம் கெட்டு விடுமாம்!
இனி இது குறித்து ஸ்வாமிநாதன் அன்க்ளேசரிய அய்யர் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
இப்படித்தான் யூதர்களின் கடைகளை அடையாளம் கண்டு அடித்து நொறுக்கினர் நாஜிகள். இது 1838இல்.
ஹிமாலயா மருந்துக் கம்பெனி ஆயிரக் கணக்கில் கிளைகளை வைத்து ஆயுர்வேத மருந்துகளை விற்று வருகிறது. மனால் எனப்படும் முஸ்லிம் குடும்பத்தால அது நடத்தப் படுகிறது.
சிப்லா என்கிற மருந்துக் கம்பெனி உரிமையாளரின் பெயர் யூசுப் ஹமீத். எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை மேற்கத்திய கம்பெனிகளை விட மிகக் குறைந்த விலையில் (10இல் ஒரு பங்கு) விற்றதால் பிரபலாமனது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனங்களையெல்லாம் மூடி விட வேண்டுமென இந்த மதத் தீவிரவாதிகள் கேட்பார்களா?
முஸ்லிம்கள் மொஹர்ரம் ஊர்வலம் நடத்தும் போதும், கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் ஊர்வலம் நடத்தும் போதும் வழியிலில் கடை வைத்திருக்கும் இந்து உரிமையாளர்கள் தம் பெயர்களை வெளியே தெரியுமாறு வைக்க வேண்டுமென்று யாராவது கட்டாயப் படுத்துவார்களா?” ( Vijayasankar Ramachandran – முன்னாள் பிரண்ட்லைன் ஆசிரியரின்-பக்கம்) இப்போது ஆதாரங்களைத்தேட நேரமும் பொறுமையும்தான் தேவை.அதை தோழர்கள் விரைவாக ஈடு செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.நன்றி.