நாம் வாழும் இப்புவிப்பரப்பு பருவநிலை மாற்றத்தினால் பேரழிவுகள் ஏற்படுகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்பொழுது மிகத்தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளிலேயே இந்தியா, ஏராளமான புயல்களையும், பெருவெள்ளத்தையும் சந்தித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தியதோடு லட்சக்கணக்கான உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. மறுபுறம் அதிகமான வெப்பத்தின் காரணமாக உயிரிழப்பும், பூமிக்கடியில் நீரின் அளவு குறைந்து விவசாயம் செய்ய முடியால் போகிறது. மேலும் கோடைகாலத்தில் இந்திய நகர்ப்புறங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.
கடும் வறட்சி, பெரும் வெள்ளம், அதிவேகப் புயல்கள், நீண்டு கொண்டே செல்லும் கோடைகாலம், வெப்ப அலைகள் போன்ற கேடுகளுக்கும், மனித குலத்தின் பேரழிவிற்கும் பருவநிலை மாற்றமே முதன்மைக் காரணமாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரழிவுகள் குறித்து தேர்தல் கட்சிகள் ஒருபோதும் வாய் திறப்பதில்லை. மேலும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ இந்திய தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு அரசியல் கட்சிகளிடமும் இல்லை.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றிய விவாதங்கள் தீவிரம் அடையும் போதெல்லாம் சோலார் பேனல்கள், ஹைபிரிட் கார்கள், மின்ஆற்றல் கொண்ட வீடுகள் என புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட பொருட்களைக் கடைவிரிக்கின்றனர். இப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பேரழிவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என நம்பச் சொல்கிறார்கள். எனவேதான் தங்களது கொள்கைகளையும், விவாதங்களையும் இதனைச் சுற்றியே அமைத்து கொண்டு தொடர்ந்து மக்களை ஏய்த்து வருகிறார்கள்.
ஆண்டிற்கு ஒருமுறை ஆளும்வர்க்கப் பிரதிநிதிகளால் நடத்தப்படும் உலகப் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கூட பருவநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது பற்றியோ, அதற்கான நிரந்தரத் தீர்வு பற்றியோ விவாதிக்கப்படுவதில்லை.
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவு, இப்புவிப்பரப்பின் சுற்றுச்சூழலையும், இயற்கையையும் மட்டும் நாசப்படுத்தவில்லை; ஒட்டுமொத்த விவசாயத்தையுமே நாசப்படுத்தியுள்ளது. விவசாயிகள் தங்களது நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் பருவநிலை மாற்றங்களினால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், இத்தகைய தாக்கங்கள் சமீபகாலங்களில் மிகவும் அதிகமாகி வருகிறது. எனவே உலகளாவிய பருவநிலை மாற்றத்தினால் அனைவரும் பாதிப்படைகின்ற போதிலும், இதில் அதிகளவில் விவசாயிகள் தான் பாதிப்படைகிறார்கள் என்பது பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கும் ஓர் உண்மையாகும்.
இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் 68.5% ஆக இருந்த போதிலும், நாட்டில் மொத்தப் பயிர் செய்யும் நிலங்களில் வெறும் 34% மட்டுமே வைத்துள்ளனர் என்கிறது 2015-16ல் நடத்தப்பட்ட இந்திய 10வது விவசாய கணக்கீடு.
பருவநிலை மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இயற்கை சீற்றங்களினால் இந்திய குறு விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளில் எந்தளவிற்குப் பாதிப்படைந்துள்ளனர் என்பதைப் பற்றி சமத்துவ மேம்பாட்டிற்கான நிறுவனம் எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் குறுவிவசாயிகளுக்கு எந்தெந்த வகையில் பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
குறு விவசாயிகளின் பயிர்ச்சேதம் – காரணம் | விவசாயிகளின் விழுக்காடு |
பருவமழை தாமதம் | 24% |
வெள்ளம் | 18% |
சூறாவளி | 13% |
வறட்சி (அ) குறைந்த மழைப்பொழிவு | 41% |
அதிகபட்ச வெப்ப அலைகள் | 8% |
சராசரிக்கும் அதிகமான வெப்ப நிலை | 10% |
கோடை காலம் நீடிப்பு | 12% |
குளிர்காலம் நீடிப்பு | 12% |
எதிர்பாராத மழை | 33% |
சம்பா, குறுவை ஆகிய இரண்டு சாகுபடிகளிலும் பயிரிட்ட நெல், கோதுமை, சோளம், கம்பு, பருத்தி, துவரை போன்ற அனைத்து பயிர்களும் பாதிப்படைந்துள்ளது.
அதேபோல், விவசாயத்தை மட்டுமே வைத்து வாழ்க்கையை நடத்தும் குறுவிவசாயிகள் தங்களது பயிர்கள் சேதமடையும்போதெல்லாம் கடன் வாங்குகின்றனர். இதனால் தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் இக்குறுவிவசாயிகள் விளைவித்த பயிர்களில் மூன்றில் ஒரு பங்கை இழந்துள்ளனர். மேலும் நெல் பயிரிடும் விவசாயிகளில் 50% விவசாயிகளும், கோதுமை பயிரிடும் விவசாயிகளில் 40% விவசாயிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதில் மிகச் சிலரே பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். மாறாக மோடியின் பல்வேறு விவசாயத் திட்டங்களின் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருவதாக கூறுவதெல்லம் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
பருவநிலை மாற்றம் குறித்த உண்மையையும், அதன் பேரழிவுகள் குறித்த உண்மையையும் ஆளும்வர்க்கத்தினரும் அவர்களது பிரதிநிதிகளும் மக்களுக்கு ஒருபோதும் கூறப்போவதில்லை. சுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையே முதன்மைக் காரணம் ஆகும். எனவே முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் பருவநிலை மாற்றம் குறித்து இனி நாம் விவாதிக்க முடியாது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது என்பது முதலாளித்துவத்தினால் ஏற்படும் கேடுகளை மட்டும் கண்டிப்பது அல்ல; மாறாக ஒட்டுமொத்த புவிப்பரப்பிற்கும் தீங்கிழைத்து ஒரு சில முதலாளிகள் மட்டுமே பெரும் செல்வத்தைச் சுரண்டும் இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிந்துவிட்டு சோசலிச அமைப்பு முறையை நிறுவுவதில் தான் இருக்கிறது..
தாமிரபரணி
தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் தமது தேவைக்கும், கால்நடைகளுக்கு தேவையை நோக்கியே பயிறிடுகின்றனர்