கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராய்டர்ஸ் (Reuters) பத்திரிக்கையில், “ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் சப்ளை செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் திருமணமான பெண்களை வேலைக்கமர்த்த மறுக்கிறது” [Apple supplier Foxconn rejects married women from India iPhone job] என்ற தலைப்பில் அறிக்கையொன்று வெளிவந்தது.[i] அதில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணம் ஆன பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பிபிசி, போர்ப்ஸ், ஃபர்ஸ்ட் போஸ்ட் போன்ற பத்திரிகைகளும் இதை பற்றி எழுதின. மேலும் இப்பிரச்சனை தொடர்பாக ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் அறிக்கையையும் கேட்டுள்ளது.
இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி விவாதங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, பாக்ஸ்கான் தொழிற்சாலையில் திருமணமான ஆண்களை வேலைக்கு எடுக்கும்போது திருமணம் ஆன பெண்களை மட்டும் வேலைக்கு எடுக்காதது பாலினப் பாகுபாடு என்ற விமர்சனங்களைப் பலரும் முன் வைத்துள்ளனர்.
பாலினப் பாகுபாடா? உழைப்பு சுரண்டலா?
இந்த விமர்சனங்களுக்கு ‘பதிலடி’ கொடுக்கும் விதமாக பாக்ஸ்கன் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 75% மேற்பட்டோர் பெண்கள்தான் என்றும்; அதனால் பாலினப் பாகுபாடு என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் கூறியுள்ளது.
திருமணமான பெண்களை பாக்ஸ்கான் வேலைக்கமர்த்துவதில்லை என்பதும், 75% பெண்களை வேலைக்கமர்த்தியுள்ளது என்பதும் இரண்டுமே உண்மைதான்.
“உடலுழைப்புக்கான திறமையும் உடல் வலிமையும் எந்த அளவுக்குக் குறைவாகத் தேவைப்படுகின்றதோ, அதாவது நவீனத் தொழில்துறை எந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ச்சி பெறுகின்றதோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் ஆண்களின் உழைப்புப் பெண்களின் உழைப்பால் அகற்றப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்துக்கு வயது வேறுபாடும், ஆண், பெண் என்கிற பால் வேறுபாடும் இனிமேல் எவ்வித தனித்த சமூக முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை. அனைவருமே உழைப்புக் கருவிகள்தாம்.” – கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை [ii]
முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில், உற்பத்தி சாதனங்கள் வளர வளர கருவிகளைக் கையாள அதிக உடல்வலிமை தேவையில்லை என்பதால் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் பாலின வேறுபாடு முக்கியத்துவமற்றுப் போய்விடுகிறது. பாக்ஸ்கான் மட்டுமல்ல எல்லா கார்ப்பரேட்டுகளும் – குறிப்பாக உற்பத்தித் துறையினர் – பெண்களையே அதிகம் வேலைக்கமர்த்த விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக உற்பத்தி நிறுவனம் (plant) இருக்கும் ஊருக்கு வெளியே உள்ள, ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பங்குடி பெண்களையே – அதிலும் 17-22 வயது வரையுள்ள பெண்கள், இளைஞர்களையே – குறிவைத்து வேலைக்கமர்த்துகின்றன.
இதற்கு பல காரணங்கள் உண்டு. எனினும் ஆண்களை விடவும் பெண்களை அதிகமாகக் கசக்கிப் பிழிய முடியும்; இளமைக் காலத்தில் அவர்களின் இரத்தம் முழுவதையும் உறிஞ்சித் தள்ளிவிட்டு எளிதில் ஒரு சக்கையைப் போல வேலையை விட்டு தூக்கியெறிய முடியும்; அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கூட “பெற்றோருக்கு போன் செய்து நீ ஆண்களோடு சுற்றுவதாக சொல்லிவிடுவேன்” என்று மிரட்டி அனுப்பிவிட முடியும். இந்தக் கண்ணோட்டத்தில் இளம் ஆண் தொழிலாளிகளை விடவும். பெண் தொழிலாளிகள் சமூகத்தில் மிகவும் பலவீனமான நிலைமையில் (most vulnerable) இருப்பது, பணிச்சுமை, உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் போராடும் வாய்ப்பு மிகமிகக் குறைவாக இருப்பதால்தான் கார்ப்பரேட்டுகளின் நாவில் எச்சில் ஊறுகின்றது.
உள்ளூர்கார்களை வேலைக்கமர்த்தினால் எதேனும் விபத்து ஏற்பட்டால் ஊர் திரண்டுவிடும்; பின் நட்ட ஈடு கொடுக்க வேண்டி வரும் என்ற கண்ணோட்டத்தில்தான் எல்லா நிறுவனங்களும் திட்டமிட்டு வெளியூர் இளைஞர்கள், பெண்களை வேலைக்கமர்த்துகின்றனர். சீனாவில் பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களை ஃபாக்ஸ்கான் எங்கனம் குறிவைத்து வேலைக்கமர்த்தியது; அவர்களை எங்கனம் கசக்கிப் பிழிந்து ஒரு சக்கையைப் போல வெளியே தள்ளியது என்பதை “ஒரு ஐபோனுக்காக மரணித்தல்” (Dyinig for an Iphone) என்ற நூல் விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இதே பாணியில்தான் இந்தியாவிலும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு உற்பத்தித் துறையில் ஈடுபடும் எல்லா நிறுவனங்களும் இளம் பெண்களை அதிகமாக வேலைக்கமர்த்துகின்றன என்றாலும், பாக்ஸ்கான் இவ்வாறு செய்வதற்கு இன்னொரு கூடுதலான காரணமும் உண்டு. ஐபோன் செல்போனை – பொதுவாக செல்போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் – தயாரிக்கும் பணி என்பது மற்ற உற்பத்தித் துறை பணிகளைக் காட்டிலும் மிகவும் நுட்பமான வேலை பாணியைக் கொண்டதாகும். குறிப்பாக மிகவும் சிறியதாக இருக்கும் மதர் போர்டில் பல்வேறு உதிரிபாகங்களைப் பொறுத்துவது, அவற்றைப் பேக் செய்வதற்கு கண்களும் கைகளும் மிகவும் இளமையாக, நடுக்கமின்றி இருத்தல் அவசியமாகும். அப்போதுதான் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தியை செய்துவிட முடியும். 17-22 வயது வரையுள்ள இளைஞர்களுக்குத்தான் கண்களும் கைகளும் இத்தகைய தன்மையில் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.
17-22 வயதுள்ள பெண்களை ஒட்டச் சுரண்ட வேலைக்கமர்த்தும் இதே கண்ணோட்டம்தான் திருமணமான பெண்களை எடுக்கவும் மறுக்கிறது. திருமணமான பெண்கள் குழந்தைப் பேறு, அறுவை சிகிச்சை, குழந்தைப் பராமரிப்பு போன்ற காரணங்களால் உடல் ரீதியில் பலவீனமடைகின்றார்கள்; வேலைகளில் அதிக விடுப்புகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எனவே, இவர்களை வேலைக்கமர்த்தினால் உறபத்தித்திறன் (productivity) பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்துவிடும் என்று கார்ப்பரேட்டுகள் சிந்திக்கின்றன. திருமணமாகாத பெண்கள் என்றால் ஒரு கொட்டடி போன்ற அறையில் 4-5 பேர் என அடைத்துவைத்து தர்க்குறைவான உணவைக் கொடுத்து வேலை வாங்கிவிட முடியும்; இவ்வாறுதான் பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் பெண் தொழிலாளிகளை நடத்துகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் தரமாண உணவுக்காக பாக்ஸ்கானில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பெண்கள் சாலை மறியல் செய்ததை நீங்கள் அறிவீர்கள். ஆனால், திருமணமான பெண்களுக்கு குடும்பம், குழந்தை என்று ஆகிவிடும்போது அவர்களின் பராமரிப்பு செலவு அதிகமாகிவிடுகிறது; எனவே, திருமணமான பெண்களால் உற்பத்தி குறையும் அதே வேளையில் கூலியுயர்வு கோரிக்கையும் எழுந்துவிடும் அபாயம் உள்ளதைக் கண்டு முதலாளி வர்க்கம் அஞ்சுகிறது. இவையிரண்டுமே முதலாளிகளின் இலாப வீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் அவர்களின் கவலை.
இதே பாணியில் ஆடை தொழிற்சாலைகளிலும் பெண்கள் வேலைக்கு அமர்த்தபட்டு குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்காக போராடும் சூழலும் உருவாகியுள்ளது. இதைப்பற்றிய தி ஹிந்து இதழில் வெளிவந்த கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடபட்டுள்ளது :
“தமிழ்நாட்டில் உள்ள 18 லட்சம் தையல் தொழிலாளர்களில் 60% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். … தொழிற்சாலை அமைப்பானது கொட்டடிகள் போல (sweatshop) இயங்கும் நிலையை கொண்டு வந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.”[iii]
2023 உலக முதலீட்டாளர் சந்திப்பின் போது செங்கல்பட்டில் புதிய ஆலை தொடங்க கோத்ரெஜ் நிறுவனம் அடிக்கல் நாடியது. இதில் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) 5% பணியாளர்களுடன் 50% பெண்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்னர்.[iv]
இப்படி அனைத்து உரிமைகளையும் மறுத்து ஓட்டச் சுரண்டத்தான் பெண்களை வேலைக்கு அமர்த்த இந்நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவில் தொழிலாளர் சந்தையில் பெண் தொழிலாளர் பங்கேற்பை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுடன் இந்நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து முனைப்பு காட்டி வருகின்றன. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசின் பல அமைச்சகங்கள் நாட்டின் பெண்கள் தொழிலாளர் பங்கேற்ப்பை உயர்த்த ஆலோசனைகள் வெளியிட்டுள்ளன.[v] உழைப்பு சந்தையில் பெண்களின் பங்கை உயர்த்துவதற்குத்தான் மகளிருக்கு இலவச பேருந்து திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. மோடி அரசு கடந்த 2021 இல் பெண்களின் திருமண வயதை 18-இலிருந்து 21 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பித்ததும் கார்ப்பரேட் சேவை என்ற இதே கண்ணோட்டத்திலிருந்துதான்.
இளம் பெண்களை இதுபோன்ற பட்டறைகளில் அடைத்து இரத்தம் உறியும் இலாப வெறி பிடித்த முதலாளிகளிடம் அடமானம் வைப்பதை வளர்ச்சி என்றும், பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு உயர்வை “பெண் விடுதலை”, பெண்களுக்கு அதிகாரமளித்தல் (women empowerment) என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் மக்களை ஏய்த்து வருகின்றன. அந்நிய முதலாளிகளின் ஆசைக்கு இணங்க நடக்கும் சுரண்டலை மறைக்கவே இது போன்ற கதைகள் கட்டப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 5-7% இந்தியாவில் நடைபெறுகிறது. இதை 25% ஆக கூடிய விரைவில் உயர்த்துவோம் என்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.[vi] இது நடந்தேறுமாயின், பெண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் மேலும் தீவிரமடையும் என்பதே நிதர்சனம்.
- ஜெமினி
[i] Apple supplier Foxconn rejects married women from India iPhone jobs
[ii] காரல் மார்க்ஸ், பிரடரிக் எங்கல்ஸ் – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
[iii] Warped deal: the victimisation of women in the garment industry – The Hindu
[iv] Godrej’s New Tamil Nadu Facility: First Multi-Category Unit | Chennai News – Times of Indi
[v] Centre releases advisories, surveys to boost female workforce participation | Economy & Policy News – Business Standard
[vi] Apple targets raising India production share to up to 25% – minister | Reuters