புதிய வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறோம்; புதிய தொழிlமுயற்சிகளை வரவேற்கிறோம்; அதற்காகவே அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதித்துள்ளோம் என்று மோடி அரசு, தம்பட்டம் அடித்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு மோடி, அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவிற்கு சென்ற போது, அமெரிக்கப் பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அதில் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வணிக நிறுவனமான அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியும் ஒருவர்
மோடியின் சந்திப்பிற்கு பின்பு, ஜாஸ்ஸி செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவில் அமேசான் நிறுவனம் இதுவரை 11 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 15 பில்லியன் டாலரை மூதலீடு செய்வோம் என கூறியிருந்தார். இந்த முதலீடு மூலம் 2025 ஆம் ஆண்டிற்குள் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள் பெருகும் என மோடி- ஜாஸ்ஸி சந்திப்பு விளம்பரப்படுத்தப்பட்டது
ஆனால், அமேசான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்கி இந்தியத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாகச் சுரண்டிக் கொழுப்பதை அனுமதிப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு என்பதை நிருபிக்கும் விதமாக அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்தப்படுவது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளன. ஹரியானா மாநிலத்தின் குர்கானில் உள்ள அமேசான் நிறுவனத்தின் கிடங்கில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை, அந்நிறுவனம் எவ்வாறு ஒட்டச் சுரண்டுகிறது என்பது பற்றியும் அத்தொழிலாளர்களின் படு பயங்கர வேலை நிலைமைகளைப் பற்றியும் பத்திரிக்கைகளில் சமீபத்தில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.
அமேசானின் குர்கான் கிடங்கில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வெறும் ஆறு மணிநேரம் தான் பயிற்சி வழங்கப்படும். மின்விசிறி இல்லாமல் 10 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்க்க வேண்டும். 15 வினாடிக்கு ஒரு முறை ஒரு பொருளை அவர்கள் கண்டிப்பாக பேக் செய்ய வேண்டும். அதாவது மணிக்கு 240 பொருட்களை பேக் செய்ய வேண்டும். அவர்கள் இந்த இலக்கை அடையமுடியவில்லை என்றால் அது மேலாளருக்கு உடனடியாக தெரியவரும். தாமதம் செய்யும் பட்சத்தில் அத்தொழிலாளர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள். சம்பளமோ மாதம் வெறும் ரூ 10.488 மட்டுமே. எந்த ஒரு தொழிலாளிக்கும் பணி நிரந்தரம் எல்லாம் ஒருபோதும் கிடையாது. மறுநாள் வேலைக்கு வருவதை முதல் நாளே முன்பதிவு செய்ய வேண்டும். வேலைக்கு வரவில்லையென்றால் முன்பதிவை காரணம் காட்டி தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
அமேசான் நிறுவனம், இந்திய தொழிலாளர் நல சட்டங்களை பெயர் அளவுக்கு கூட மதிப்பதில்லை. குர்கான் அமேசான் கிடங்கிற்கு காலை 8.30 மணிக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள் மாலை 6.30 மணிவரை வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தொழிலாளர்களை சுரண்டி கொழுக்கும் அமேசான் நிறுவனம், வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்ற தொழிலளார்கள் சட்டங்களையெல்லாம் மதிப்பதேயில்லை. தொழிலாளர்களை வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு அதிகமாக வேலை பார்க்க வைத்து சுரண்டுவதோடு மட்டும் நிற்காமல், அவர்களை ஓய்வு நேரத்தில் கூட வேலை பார்க்க கட்டாயப்படுத்துகிறது என்கின்றனர் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள்.
நிறுவனத்தின் தினசரி இலக்கை அடையும் வரை தேநீர் இடைவெளிக்கு செல்ல மாட்டோம்; கழிவறைக்கு செல்ல மாட்டோம்: என உறுதி மொழி எடுக்கத் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஆனால் நாங்கள் உணவு மற்றும் தேநீர் இடைவெளியை தவிர்த்து விட்டு வேலை பார்த்தால் கூட எங்களின் இலக்கான 6 டிரக்கு சரக்குகளை இறக்க முடியாது; 4 டிரக்கு சரக்குகளைதான் இறக்க முடியும் என்கிறார் அந்நிறுவனத்தின் வேலை பார்க்கும் தொழிலாளி. கழிவறை இடைவெளிக்கு செல்லாமல் எங்கள் இலக்குகளை அடைவோம் என உறுதிமொழி எடுத்த நாட்களில் கழிவறையில் வந்து மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பதாக கூறுகிறார்கள் அத்தொழிலாளர்கள்.
மேலும் அமேசான் தொழிலாளர்களுக்கு உணவு இடைவெளியின் போது ஓய்வெடுப்பதற்கு என தனியறை கிடையாது. அவர்கள் கழிவறையையும், தொழிலாளர்களின் பொருட்களை வைத்திருக்கும் லாக்கர் அறைகளையும் தான் உணவு மற்றும் தேநீர் இடைவெளியின் போது பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
குடிக்க கூட தண்ணீர் மறுக்கப்பட்டு, மின்விசிறி இல்லாமல் பத்து மணிநேரம் நின்று கொண்டு வேலைப் பார்த்தும் கூட, உணவு இடைவேளையின் போது அமருவதற்கென ஒரு இடம் ஒதுக்காமல் தொழிலாளர்களை சுரண்டும் இதே அமேசான் நிறுவனம் தான் 2021 ஆம் ஆண்டில் தொழிற்சங்க எதிர்ப்பு ஆலோசனைக்காக, அமெரிக்காவில் சுமார் 4.3 மில்லியன் டாலரை செலவிட்டது.
அமேசான் நிறுவனம் தனது தொழிலாளர்களை மட்டும் சுரண்டவில்லை. அமெரிக்காவில் இந்நிறுவனம் பல வரி ஏய்ப்புகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் 2021 ஆம் ஆண்டு 35 பில்லியன் டாலரை இலாபமாக ஈட்டியபோதிலும், அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய கார்ப்பரேட் வரியில் சுமார் 5 பில்லியன் டாலரை ஏமாற்றியது.
அமேசான் தொழிலாளர்கள் முன்னேயுள்ள படுபயங்கர நிலையை கார்ப்பரேட் நலனுக்காக செயல்படும் பாசிச மோடி அரசு ஒரு போதும் தீர்த்து வைக்கப் போவது இல்லை. அமேசான் தொழிலாளர்களின் படுபயங்கர வேலை நிலைமைகள் பத்திரிக்கைகளில் வெளியான பின்பு, மின்விசிறிகள் எண்ணிக்கையை உயர்த்துவது போன்ற ஒரு சில கண் துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன
இது ஏதோ அமேசான் கிடங்கில் நடக்கும் ஒரு தனிப்பட்ட தொழிலாளர்களின் பிரச்சினை என நாம் இதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க கூடாது. பத்து மணி நேரத்திற்கும் அதிகமான வேலை, அமேசானில் நடந்து வரும் தொழிலாளர்கள் விரோத வேலை நிலைமைகள் நாடு முழுவதும் பரவும் அபாயம் வெகு தொலைவில் இல்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே, தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட பாசிச மோடி அரசு, தொழிலாளர் சட்டங்களை மாற்றியுள்ளது.
மறுகாலனியாக்க கொள்கையால் பறிபோகும் தொழிலாளர்கள் உரிமைகள் மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார நலன்களை அடகுவைத்துள்ள இந்த பாசிச மோடி அரசுக்கு எதிராக, தொழிலாளர்கள் இணைந்து போராட வேண்டும். தேனெடுக்க வந்துள்ள அமேசான் போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், தேனீக்களால் கொட்டப்பட்டு விரட்டப்பட வேண்டும்.
- தாமிரபரணி
Good