கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து 50 பேர் பலி
போலிசையும் அரசுக் கட்டமைப்பையும் ஒழிக்காமல்,
கள்ளச்சாராய மரணங்கள் ஒழியாது!

புரட்சிகர மக்கள் அதிகாரம்
பத்திரிகை செய்தி

21-06-2024

 அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசச்சாராயத்திற்கு சாதாரண ஏழை எளிய உழைக்கும் மக்கள் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். சில குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் இறந்து பல குழந்தைகள் அநாதைகளாகியுள்ளனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக செய்திகள் வருகின்றமையால் இந்த விசச் சாராயம் இன்னும் எத்தனை பேரை பலிவாங்கும் என்று நினைக்கவே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.

கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் கிராமத்தில் எங்குபார்த்தாலும் மரண ஓலம்; எங்கு பார்த்தாலும் பிணங்கள்; எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள்; கருணாபுரம் கிராமமே சுடுகாடு போலக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் எல்லோருடய இதயமும் கணக்கிறது.

மரக்காணம், விழுப்புரத்தில் கடந்த ஆண்டு மெத்தனால் கலந்த விசச் சாராயம் குடித்த 25-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரம் ஆறும் முன்னரே, இப்போது கள்ளக்குறிச்சியில் 42 பேர் பலியாகியுள்ளனர். பலருக்கும் பார்வை பறிபோயுள்ளது.

முதலில் வயிற்று வலியால் இறந்தார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தார்கள். பின்னர் ஊடகங்களுக்குச் செய்தி வெளியாகி நாறிப்போன பின்னர் சீரிய நடவடிக்கைகள் எடுப்பது போல பம்மாத்து காட்டுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரை மாற்றுவது, மாவட்ட காவல்கண்கானிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்வது, மாவட்ட மதுவிலக்குத் துறை அதிகாரிகளை முழுதுமாகப் பணியிடை நீக்கம் செய்வது, சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிடுவது, ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது. இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் என்ற பெயரில் வாய்க்கரிசி போடுவது – என வழக்கமாக மக்களை ஏய்க்கும் அதே தந்திரத்தைக் கையாண்டுள்ளது, ஆளும் தி.மு.க. அரசு. இவை மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல, கண்துடைப்புக்காகவே!

எதிர்வரும் ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவில்லையென்றால் இந்த ‘நடவடிக்கைகளும்’ எடுக்கப்படிருக்குமா என்பது சந்தேகமே!

அரசே டாஸ்மாக்கில் விற்கும் சாராயம் விலை சற்று அதிகமாக இருப்பதால், மெத்தனால் கலந்த மலிவு விலை சாராயத்தை ஏழை உழைக்கும் மக்கள் குடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும்; எனவே அரசு மலிவு விலையில் சாராயத்தை வழங்குவதன் மூலம் இத்தகைய விசச் சாராய சாவுகளைத் தடுக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர் சில கணவான்கள்! ஒரு சில தொழில்களுக்கு மட்டுமே உரிமம் பெற்று இறக்குமதி செய்யப்படும் மெத்தனால் சர்வ சாதாரணமாக சாராயம் காய்ச்சுபவர் கைகளுக்கு எப்படிக் கிடைக்கிறது; போலிசும் மதுவிலக்குத் துறையும் ஏன் அதைத் தடுக்கவில்லை என்ற எளிய கேள்வியை மூடிமறைத்து, “மெத்தனால் புழக்கத்தை அரசு எந்திரம் கட்டுப்படுத்த முடியாது; நாம் மலிவு விலையில் சாராயம் விற்று அதன் புழக்கத்தை தேவையற்றதாக்கிவிடலாம்” என்ற மனநிலையை உருவாக்க முனையும் கேடுகெட்ட வாதமன்றி இது வேறொன்றுமல்ல!

கள்ளச் சாராய, விசச் சாராய மரணங்களைத் தடுக்கத்தான் கருணாநிதி 1971-இல் அரசு சாராயம் விற்கும் முறையைக் கொண்டுவந்ததாகவும்; அதன் பின் கள்ளச் சாராய மரணங்கள் குறைந்துவிட்டதாகவும்; குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பிறகுதான் இத்தகைய மெத்தனால் சாராயங்கள் போன்றவை அதிகரித்ததாகவும்; இதுபோன்ற சம்பவங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் துருதிருஷ்டமானவை என்றும் இணையங்களில் பேசுகிறார்கள், தி.மு.க. ஐ.டி.விங்கைச் சேர்ந்தவர்கள்.

இத்தகைய மரணங்களையே காரணமாக வைத்து “பாருங்கள் டாஸ்மாக்கை மூடினால் விசச் சாராய மரணங்கள் அதிகரிக்கும்” என்று டாஸ்மாக்கை நடத்துவதற்கான “நியாயவுரிமையை” நிலைநாட்டிக் கொள்கின்றன அரசும் அதன் அடிபொடிகளும்.

டாஸ்மாக்கை நடத்தாவிட்டால் கள்ள, விசச் சாராயங்கள் பெருகுமென்று கூறினால், அரசால் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைத் தடுக்க முடியாது என்றுதானே அதற்குப் பொருள்! பின்னர் அரசு எதற்கு? போலிசு எதற்கு? உளவுத்துறை எதற்கு? இவை எல்லாவற்றையும் கலைத்து விடலாமே! தொலைக்காட்சிகளில் மயிர்பிளக்கும் விவாதங்கள் நடத்தும் யாரும் இந்த எளிய கேள்வியை மறந்தும் கேட்பதில்லை.

உண்மையில் கள்ளச்சாராயமானாலும் விசச் சாராயமானாலும் அது அரசுக்குத் தெரியாமல், திருட்டுத்தனமாகவெல்லாம் காய்ச்சி விற்கப்படுவதல்ல; அது போலிசு, அதிகாரவர்க்கம், மதுவிலக்குத் துறை, உள்ளூரில் இருக்கும் அதிமுக, திமுக அரசியல் பிரமுகர்கள் – என எல்லோருக்கும் பங்கு கொடுக்கப்பட்டு ஊரறிய நடக்கும் தொழிலாகும். இன்னும் சொல்லப் போனால் ஓட்டுக் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.களின் உறவினர்கள், பினாமிகள்தான் சாராயம் காய்ச்சுவது முதல் கஞ்சா விற்பது வரை இத்தகைய கிரிமினல் நடவடிக்கைகள் அனைத்திலும் ஈடுபடுகின்றனர்.

அரசு கொடுத்த பத்திரிக்கைச் செய்தியின்படியே கண்ணுக்குட்டி என்பவன் 200 லிட்டர் மெத்தனால் சாராயத்தை வைத்துள்ளான்; கள்ளக் குறிச்சிக்கு அருகிலுள்ள கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வ சாதாரணமாக சாராயம் காய்ச்சப்படுவதாக அப்பகுதி மக்கள் எல்லோரும் தெரிவிக்கின்றனர்; மேலும், இந்த கருணாபுரம் கிராமத்தில் முதலில் இறந்த சுரேஷ் என்பவரின் இறுதி சடங்கிற்கு வந்த எல்லோருக்கும் மெத்தனால் விசச் சாராயம் கிடைத்துள்ளது; அவர்களிலும் பலர் இறந்துள்ளனர்; மக்கள் தமது கோரிக்கைக்காக சாதாரணமாகத் திரண்டு போராடினாலே மோப்பம் பிடித்து வந்து விடும் உளவுத்துறைக்கும் போலிசுக்கும் இவையெல்லாம் தெரியாது என்று கூறுவதை விட அயோக்கியத்தனம் ஏதாவது உண்டா? உண்மையில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு அருகில், போலிசு நிலையத்திற்கு பின்புறம் 100 மீட்டர் தொலைவில்தான் கருணாபுரம் கிராமம் உள்ளது. அங்குதான் விசச் சாராயம் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்துள்ளது.

இது வெறும் விசச் சாராய பலியல்ல; போலிசு, அதிகார வர்க்கம், போதைப் பொருட்கள் தடுப்புத் துறை, மதுவிலக்குத் துறை, ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் – என இந்த ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பே சேர்ந்து நடத்திய பச்சைப் படுகொலை!

அரசு மக்களைக் காப்பதற்காக பொறுப்பெடுத்துக் கொண்ட ஒரு நிறுவனமல்ல; மக்களை ஒட்டச் சுரண்டும் முதலாளிகளுக்குப் பாதுகாப்பு அளித்து, மக்களை அடக்கி ஒடுக்கும் கருவியாகவே உள்ளதோடு தானும் ஒரு சுரண்டலாளனாகவே உள்ளது. மக்களை நேரடியாகவும் மறைமுகமாவும், சட்டப் பூர்வமாகவும் சட்ட விரோதமாகவும் ஒரு ஒட்டுண்ணி போல உறிஞ்சி கொழுத்து தன்னளவில் ஒரு சுரண்டலாளனாக இருக்கிறது.

நேரடியாகவும், சட்டப் பூர்வமாகவும் மக்களை உறிஞ்ச ஆண்டுக்கு ரூ.50,000 கோடி இலக்கு வைத்து சாராயம் விற்கும் இதே அரசமைப்புதான், சட்ட விரோதமாக, கஞ்சா, கள்ள, விசச் சாராயம், குட்கா என எல்லாவற்றையும் விற்க அனுமதித்து அதில் பங்கு போட்டுத் தின்று வயிறு வளர்க்கிறது. மக்களின், குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலம் சீரழியும் பாழாகும் என்பதைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையின்றி இவற்றை அனுமதிக்கிறது. பெண்கள், தாய்மார்களின் தாலியை அறுத்து தனது கஜானாவையும் சட்டைப்பைகளையும் நிரப்பிக் கொள்கிறது.

மக்களைச் சூறையாடும் இத்தகைய ஒட்டுக் கட்சிகளையும், போலிசு, அதிகார வர்க்கம் உள்ளிட்ட அரசு அமைப்பு முழுவதையும் ஒழிக்காமல் சாராய மரணங்களை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியாது. நெஞ்சுவெடித்துக் கதறியழும் கருணாபுரம் கிராம மக்களின் துயரைத் துடைக்க எண்ணுபவர் யாராக இருந்தாலும், இத்தகையதொரு போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

இவண்,
தோழர். இரா. முத்துக்குமார்
மாநில பொதுச் செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு.
9790138614.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன