நீட் தேர்வு முடிவுகள்: ஊழலும், முறைகேடுகளும் தனியார்மயத்தின் தவிர்க்கவியலாத விளைவுகள் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

கல்வி வியாபாரிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் தனியார்மயத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியான ஊழலும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதில் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

நீட் தேர்வு நடத்தப்பட்டதிலும், தேர்வு முடிவுகள் வெளியானதிலும் குளறுபடிகள் உள்ளதாக கூறி, இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மராட்டிய மாநிலம் கான்பூரில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் இதற்காக தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியிலும், அலகாபாத்திலும், லக்னோவிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

மாணவர்களின் மருத்துவர் கனவைப் பொசுக்கி வரும் நீட் தேர்வின் இந்த ஆண்டிற்கான முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதியன்று வெளியாகின. தேர்வு அட்டவணைப்படி ஜூன் மாதம் 14ம் தேதிதான் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும் ஆனால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்திலேயே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுப்பப்பட்டது.

அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நீட் தேர்வின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்த சூழலில் அதிக அளவிலான மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றதாக வெளியான செய்தி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் 720க்கு 720 என்ற முழுமதிப்பெண்களைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஹரியாணா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றிருப்பது மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 2 மாணவர்கள் மட்டுமே முழுமதிப்பெண் பெற்றிருந்தனர் என்பதையும். அதற்கு முந்தைய ஆண்டில் (2022) எந்தவொரு மாணவரும் முழுமதிப்பெண் பெறவில்லை என்பதையும் இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.

அதே போன்று மதிப்பெண் வழங்கப்படுவதிலும் குளறுபடி நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக சில மாணவர்கள் 718, 719 என பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வின் மதிப்பெண் கணக்கிடும் முறையின்படி இந்த மதிப்பெண்ணை ஒருவர் பெறுவது சாத்தியமே இல்லை. ஏனென்றால் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான கேள்விக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அந்த வகையில் ஒருவர் எல்லாக் கேள்விக்கும் சரியான பதில் அளித்தால் அவருக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும், அதுவே ஒரே ஒரு தவறான பதில் அளித்தால் அவருக்கு 715 மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கமுடியும். எனவே 718, 719 என ஒருவர் மதிப்பெண்களை பெறுவது சாத்தியமே இல்லை என்று மாணவர்கள் கூறுகின்றனர்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இது குறித்து அளித்துள்ள பதிலில், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத பல்வேறு காரணங்களால் குறைந்த அளவிற்கு நேரம் கிடைத்த 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட காரணத்தினால்தான் இது போன்ற மதிப்பெண்கள் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளது. அதே போன்று வினாத்தாளில் ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருந்ததால் அவற்றிற்கு விடையளித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளது. கருணை மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டன என்பதை தேசிய தேர்வு முகமை தெளிவு படுத்தாத சூழலில் நீட் தேர்வு முடிவுகளின் மீது நம்பிக்கையிழந்த மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிவருகின்றனர்.

ஏற்கெனவே இந்த ஆண்டு நீட் தேர்வு நடப்பதற்கு முன்னதாக அதன் வினாத்தாள் கசிந்தது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, இது தொடர்பாக பிகார் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த விசாரணை இன்னமும் முடிவடையாத நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் குறித்து அடுத்த சர்ச்சை ஆரம்பமாகியிருக்கிறது.

நீட் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்தும், தேர்வு முடிவுகள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுவதும், அதற்கு தேர்வு முகமை விளக்கமளிப்பதும் தொடர்கதையாகி வந்தாலும், இந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் ஒரு முக்கிய திருப்பம் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த ஆண்டு மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக  மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 134ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு 164 ஆக அதிகரித்துள்ளது.

அதே போன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 660க்கும் அதிகமான மதிப்பெண்களை மாணவர்கள் வாங்கியிருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் முளைத்துள்ள நீட் தேர்வு பயிற்சி நிறுவனங்களே காரணம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

லட்சங்களைக் கட்டணமாக பெறும் இந்த பயிற்சி நிறுவனங்கள், நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு தகுந்தபடி மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. தனியார் மருத்துவக்கல்லூரியில் பல பத்துலட்சம் முதல் கோடி ருபாய் வரை பணம் கட்டிப் படிப்பதற்கு பதிலாக இது போன்ற பயிற்சி நிறுவனத்திற்கு சில லட்சங்களைக் கட்டணமாக கொடுத்து ஆண்டு முழுவதும் நீட் தேர்விற்கு தயாரித்து கலந்து கொண்டால் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட முன்னணி பயிற்சி நிறுவனத்தில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க போட்டி போடுகின்றனர். இதனால் பயிற்சி நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்க வசதியில்லாத ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு கருகிப் போயுள்ளது.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் கறாராகவும், கண்டிப்புடனும் நடந்துகொள்ளும் தேசிய தேர்வு முகமை, பயிற்சி நிறுவனங்களின் கொள்ளை குறித்தும் அவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக நடந்து கொள்கிறது.

கல்வி தனியார்மயம்தான் தேசிய தேர்வு முகமையின் இந்தப் பாராமுகத்தின் பின்னால் இருக்கும் காரணம். உயர் கல்வியைத் தனியார்மயமாக்குவது என்பது கல்வியின் ஒவ்வொரு அம்சத்திலும் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடுவதாகும். 2022ம் ஆண்டின் கணக்கின்படி தமிழ்நாட்டில் மட்டும் நீட் பயிற்சி நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 5,750 கோடிகளாகும். இதுவே இந்திய அளவில் ஆண்டுக்கு 58,000 கோடிகள் எனவும், 2028ம் ஆண்டுக்குள் இது ஒரு லட்சம் கோடிகளைத் தாண்டிவிடும் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கொள்ளையைப் பாதுகாக்கவே நீட் தேர்வுகள் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கல்வி வியாபாரிகளின் நலனுக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வில் தனியார்மயத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பிறவியான ஊழலும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதில் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பொசுக்கி, நடுத்தர வர்க்க மாணவர்களைக் கடனாளியாக்கும் நீட் தேர்வு முறையையே இரத்து செய்ய வேண்டும் எனப் போராடுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

 

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன