“100 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் பெண்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்று கங்கனா சொன்னார். என் அம்மாவும் அந்த போராட்டத்தில்தான் இருந்தார்”
- குல்விந்தர் கவுர் (கங்கனா ரனாவத்தைக் கன்னத்தில் அறைந்தவர்)
சண்டிகர் விமான நிலையத்தில் குலவிந்தர் கவுர் என்னும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை காவலர், ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பாலிவுட் நடிகையுமான கங்கனா ரணாவத்தை பளாரென்று கன்னத்தில் அறைந்துள்ளார்.
மூன்று வேளான் சட்டங்களுக்கெதிராகப் போராடிய விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என்றும் போராடிய பென்களை “100 ரூபாய்க்காக வருபவர்கள்” (available for 100 rupees) என்றும் பேசிய ஒரு அருவருக்கத்தக்க இழிபிறவியான கங்கனா, தனக்கு இப்படியொரு செருப்படி கிடைக்குமென்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். குறைந்தபட்சம் சில நாட்களேனும் இந்த அவமானம் அவரது உறக்கத்தை உருக்குலைத்துவிடும் என்பதில் ஐயமேதுமில்லை.
ஒரு அருவருக்கத்தக்க பாசிஸ்டைக் கண்டதும் இயல்பாக வெடித்து வெளிவந்திருக்கிறது குல்வந்திரின் கோபம். சமூகத்தின் நாடி நரம்பெல்லாம் சுயநலவெறி ஊறிப் போயிருக்கிற வேளையில், நாம் செய்யும் வினையெல்லாம் என்ன எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று கணக்குப் போட்டே வாழ்க்கை நடத்தும் காரியவாதம் கோலோச்சும் சூழலில் குல்விந்தரின் கோபம் கொண்டாடத்தக்க அறச்சீற்றம் மட்டுமல்ல. நம்மை குல்விந்தரின் இடத்தில் வைத்துப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டியதும் ஆகும்.
தன்னலத்தை இறுகப் பற்றிக் கொண்ட குல்விந்தரின் சுற்றத்தார் பலர் “மூடத்தனமான முரட்டுத் துணிச்சல் இது” “நீ அவரை அறைந்ததால் என்னவாகிவிடப் போகிறது” “உன் எதிர்காலமே பாழாகிவிடப் போகிறது” “உன் அரசாங்க வேலை பறிபோய்விடும்” “ஒழுங்காக மன்னிப்புக் கேட்டுப் பிழைக்கும் வழியைப் பார்” என்று இந்நேரம் அறிவுரை மழைகளைப் பொழிந்து தள்ளியிருக்கலாம்.
“சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் அருவருப்பானது ஏதுமில்லை” என்பார் ஆசான் மார்க்ஸ். விலங்கு போல உயிர்பிழைத்திருப்பதற்கும் மனிதனாக வாழ்வதற்கும் இடையில் மிக விரிவான ஒரு இடைவெளி உண்டு. இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த தடையையும் தாண்டப் போவது இல்லை. அவர்கள், தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்ஷன் என்று சிந்திப்பவர்கள். அத்தகைய காரியவாதிகளால் குல்விந்தர் கவுரின் சுயமரியாதை மிக்க அறச்சீற்றத்தின் உணர்ச்சியை புரிந்துகொள்ள இயலாது.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது யாருக்கும், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது. விவசாயிகள் போராட்டம் குறித்து புகார்கள் வந்தாலும், ஒருவரை இப்படி அடிப்பது துரதிர்ஷ்டவசமானது. இச்செயலைக் கண்டிக்கிறேன். இதற்கெதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்துள்ளார். இதிலென்ன தவறு; எதிரியாக இருந்தாலும் அவருக்காகக் குரல் கொடுப்பது ஒரு அரசியல் நாகரிகம் தானே என்று யாரேனும் இதற்கு ஓடிவந்து முட்டுக் கொடுக்கலாம். அவ்வாறு சிந்திப்பவர்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறோம். போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும், விவசாயப் பெண்களை 100 ரூபாய்க்கு வருபவர்கள் என்றும் பேசிய ஒரு கேடுகெட்ட பிறவிக்காக வக்காலத்து வாங்குவதை நாகரிகம் என்று கூறுவதை விட அநாகரிகமானது ஏதுமில்லை.
பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே, பாசிஸ்டுகளுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்கிற ‘பரந்துவிரிந்த மனம்படைத்த’ சிலர், “பணியிலிருக்கும் பாதுகாப்பு காவலர் இவ்வாறு செய்யலாமா? இது ஒரு அதிகார துஷ்பிரயோகம்; இது போன்ற செயல்கள் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்; வன்முறை எதற்கும் தீர்வாகாது” என்று வெடித்துச் சிதறியுள்ளனர்.
குல்விந்தரின் அறச்சீற்றம் கணக்குப் போட்டு வந்த காரியவாதமல்ல. ஆனால் மேலே “யாருக்கும் எதுவும் நடக்கலாம்” என்று கூறுபவர்களின் சீற்றமோ ‘தனக்கும் இதே கதி ஏற்பட்டுவிடும்’ என்ற கணக்கின் அடிப்படையில் வரும் அச்சவுணர்ச்சி அன்றி வேறல்ல. கங்கனாவுக்கு நடந்தது ஒவ்வொரு பாசிஸ்டுக்கும் மக்கள் விரோதிக்கும் நடக்க வேண்டுமென்று நாம் மனதார விரும்புகிறோம். கங்கனா முதல் மோடி வரை வெறுப்புப் பேச்சுக்களுக்கும் பாசிச வெறியாட்டங்களுக்கும் நாம் தீர்க்க வேண்டிய கணக்கு ஏராளமாக இருக்கிறதுதான்; ஆனால் துருதிருஷ்டவசமாக நமது கோழைத்தனமும் காரியவாதமும் எதிரிகளுக்கு அச்சமின்றி உலவும் தைரியத்தைக் கொடுக்கிறது.
கங்கனாவின் கன்னத்தில் விழுந்த அறை பாசிஸ்டுகளை ஒரு கணமேனும் நடுநடுங்க வைத்திருக்கும். எங்கே எந்த இடத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்ற அச்சம் ஒரு கணமேனும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அரிதினும் அரிதாய் இத்தகைய நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் நமக்குத் தென்படுகின்றன. சமூகத்தின் அறவுணர்ச்சி இன்னும் மரித்துவிடவில்லை என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
குல்விந்தரைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் நேர்மையாக தமக்குள் ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வோம். பாசிஸ்டுகளுக்கு எதிராக வினையாற்றவும் வெடித்துச் சிதறவும் நமது வாழ்நாளில் வாய்ப்பே கிடைத்ததில்லையா? அத்தகைய தருணங்களில் நாம் வெடித்துச் சிதறியிருக்கிறோமா? கணக்குப் போட்டுக் கொண்டே வேடிக்கை பார்த்திருக்கிறோமா?
குல்விந்தர் கவுரின் இச்செயலுக்காக அவரது வேலையை இழந்து நிற்கலாம். ஆனால், வெடிக்க வாய்ப்பிருந்தும் வெடிக்காத எண்ணற்ற நமது நாட்களை எண்ணிப் பாருங்கள்! குல்விந்தர் இழக்கப் போவது வெறும் வேலையைத்தான்! நாம் இழந்து நிற்பதோ தன்மானத்தை!
- கார்த்திக்
பதிவு அருமை. பிரச்சனைகளின் சாதக பாதகங்களைப் பார்த்து வருவதல்ல அறச்சீற்றம்; சுயநலமிகள், காரியவாதிகள் மட்டுமே சாதக பாதக அம்சங்களை பார்த்து முடிவு எடுப்பார்கள் என்று அம்பலப்படுத்துவது சிறப்பு.
பதிவில் குல்விந்தரின் உறவினர்கள், கங்கனாவை அடித்ததை குறை சொல்லி, அறிவுரை மழையை பொழிந்து இருப்பார்கள் என்று வந்துள்ளது. இது பொதுவாக சொல்லப்படுவது.
பஞ்சாப் விவசாயின் போராட்டம் மீப்பெரும் அளவில் நடந்ததை பார்த்திருக்கிறோம். அவர்களை போராளிகளாகத்தான் பார்க்க முடியும். ஒருகால் அறிவுரை வழங்குபவர்கள் உறவினர்களே ஆயினும் அவர்களை காரியவாதிகளாக – பிழைப்புவாதிகளாக மட்டுமே பார்க்க முடியும். உறவினர்கள் என்று அழைப்பது தவறு.
இன்னொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
குல்விந்தர் கவுரின் அறச்சீற்றத்திற்கு என்ன காரணம்? அரசுப் பாதுகாவலர் என்ற பொறுப்பிலிருந்த அவரை தூண்டிய உந்து சக்தி எது? அந்தப் பின்னணியோடு பொருத்திப் பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.
பெரியார் மண், சுயமரியாதை என்றெல்லாம் பீற்றிக்கொள்ளும் தமிழ்நாட்டில் இப்படியொரு தரமான சம்பவம் நடக்கவில்லை, நடந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில், தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்கு NGO-க்கள் திராவிடம், பெரியாருக்கு முட்டுக்கொடுத்து மார்க்சியத்தை கரைத்துவிடுகிறார்கள். ஆகையால், கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்கு எதிரான ஒரு சிறு பொறி பற்றினாலும் அதிகாரத்தின் பலத்தோடு அதை அடியோடு அணைத்துவிடுகிறார்கள். ஆனால், பஞ்சாபில் தொடர்ச்சியான போராட்டங்களால் மக்கள் புடம்போடப்படுகிறார்கள். அதிலிருந்து பிறந்த எதிர்ப்பாகத்தான் குல்விந்தர் கவுரின் கோபத்தைப் பார்க்கிறேன்.