நவீன தாராளவாத தனியார்மயமாக்கலின் சரிவைப் பறைசாற்றும் தேம்ஸ் வாட்டர்!

ஏர்டெல் ஜியோ போன்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவரும் போது பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இன்றுவரை 4ஜி சேவை வழங்க அனுமதி வழங்கப்படாமல் முடமாக்கப்பட்டிருப்பதை நாம் கண்முன்னே காண்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் கால்களை உடைத்து தனியார நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் இந்தப் பாணியை மார்கரெட் தாட்சர் தொடக்கிவைத்திருக்கிறார்.

 

 

நவீன தாராளவாதம் முன்வைக்கும் பொருளாதார கொள்கையில் மிக முக்கியமானது தனியார்மயமாக்கம். ஏகபோக நிறுனவங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் முதலாளிகளின் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்று நவீன தாராளவாத கொள்கையின் ஆதரவாளர்கள் இன்றுவரை கூறிவருகின்றனர். இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எல்.ஐ.சி., ரயில்வே., பி.எஸ்.என்.எல். போன்ற ஏகபோக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கைகளில் ஒப்படைக்கும் வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தனியார்மயமாக்கலுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாகம் முறையாக இருக்காது, சீர்கெட்டுவிடும். லாப நோக்கத்தில் இயங்காததால் வாடிக்கையாளர் சேவை என்ற மனப்பான்மை இருக்காது. ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள். அரசியல் காரணங்களால் விலைகள் கட்டுப்படுத்தப்படும் என்பதால் போதுமான அளவு லாபம் கிடைக்காது மறுமுதலீடு என்பது இருக்காது, இதன் காரணமாக நவீனமாகாமல் காலப்போக்கில் நிறுவனங்களின் திறனும், தரமும் குறைந்துபோகும். இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

இதுவே தனியார் முதலாளிகளின் கைகளில் இந்த பொதுத்துறை நிறுவனங்களைக் கொடுத்துவிட்டால், அவர்கள் நிர்வாகத்தை மிகவும் நேர்த்தியாக கட்டுப்பாடோடு நடத்துவார்கள். ஊழியர்களை முறையாக வேலைவாங்குவார்கள், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவார்கள், தொழிற்துறையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்து நவீனமாக்குவார்கள் என்று தனியார்மயத்தின் சாதக அம்சங்கள் பட்டியலிடப்படுகின்றன.

இவையெல்லாம் இன்றைக்கு புதிதாகச் சொல்லப்படுபவை அல்ல, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்து இதனைத்தான் கூறிவருகிறார்கள். இவையெல்லாம் பொய் என்றும், இவர்கள் கூறுவது போலத் தனியார்மயமாக்கலில் காரணமாக ஏகபோக பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் சேவையின் தரம் உயராது என்றும், ஏகபோகத்தைப் பயன்படுத்தி முதலாளிகள் கொள்ளையடிப்பதனை உறுதி செய்யவே அது உதவும் என்றும் இன்றைக்கு தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சியானது நிரூபித்துக்காட்டியுள்ளது.

1980களில் இங்கிலாந்தின் முக்கியமான நீர்விநியோக ஏகபோக நிறுவனமாக இருந்த தேம்ஸ் வாட்டர் நிறுவனம், அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் மார்கரெட் தாட்சரால் தனியார்மயமாக்கப்பட்டது. நவீன தாராளவாத பொருளாதார கொள்கையின் மிக முக்கியமான திருப்பமாக, இங்கிலாந்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்மாதிரியாகவும், தனியார்மயத்தின் மிகப்பெரிய வெற்றிக்கதையாகவும் சொல்லப்பட்ட தேம்ஸ் வாட்டர் நிறுவனம் இன்றைக்கு அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தை ஒட்டச் சுரண்டிய பங்குதாரர்களிடமிருந்து 500 மில்லியன் பவுண்டுகளைத் திரட்ட முடியாமல் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெம்பிள் வாட்டார், இந்த ஏப்ரல் மாதத்தில் தனது கடன்களுக்குச் செலுத்த வேண்டிய 190 மில்லியன் பவுண்ட் தவணையைக் கட்டவில்லை.

அதுமட்டுமன்றி பல ஆண்டுகளாக நீர் விநியோகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதிஒதுக்கப்படாததால், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே சீரழிந்து, கசிவுகள் ஏற்பட்டு, குடிநீருடன் கழிவு நீர் கலந்துவிடுகிறது. குடிதண்ணீரில் அதிக அளவில் மலம் கலந்ததால் தங்களது குழு வீரர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட காரணத்தால்தான் நாங்கள் போட்டியில் தோற்றுப் போனோம் என்று ஆக்ஸ்போர்டு படகுக் குழுவின் தலைவர் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

1989ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மார்கரெட் தாட்சர் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் கூறும் அதே காரணங்களை முன்வைத்து இங்கிலாந்தில் அதுவரை அரசு ஏகபோகமாக இருந்த நீர்விநியோகத்தைத் தனியார் கைகளுக்கு மாற்றிக் கொடுத்தார். உண்மையில் 1979ல் பிரதமராக இருந்த போது இந்த நீர்விநியோக நிறுவனங்கள் கடன் வாங்குவதற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதை தடுத்ததே தாட்சர்தான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதையே காரணமாக காட்டி அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நீர்விநியோக நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தார்.

ஏர்டெல் ஜியோ போன்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவரும் போது பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இன்றுவரை 4ஜி சேவை வழங்க அனுமதி வழங்கப்படாமல் முடமாக்கப்பட்டிருப்பதை நாம் கண்முன்னே காண்கிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் கால்களை உடைத்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் இந்தப் பாணியை மார்கரெட் தாட்சர் தொடக்கிவைத்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி தனியார் முதலாளிகளை ஈர்ப்பதற்காக 7.6 பில்லியன் பவுண்ட் விலை கொடுத்து நீர்விநியோக நிறுவனங்களை வாங்கிய முதலாளிகளுக்குச் சாதகமாக அந்நிறுவனங்களின் 5 பில்லியன் பவுண்ட் கடன்களைத் தள்ளுபடி செய்ததுடன், அவர்களுக்கு ஊக்கத் தொகையாக கூடுதலாக 1.5 பில்லியன் பவுண்டுகளைத் “பசுமை வரதட்சணை” என்ற பெயரில் தாய்வீட்டுச் சீதனமாக வழங்கினார்.

அரசின் கட்டுப்பாட்டில் ஏகபோகமாக இருப்பதால் நிறுவனங்கள் காலப்போக்கில் செயலிழந்துவிடும் அதுவே தனியார் முதலாளிகளின் போட்டிக்குத் திறந்துவிட்டால் சிறந்த சேவையும் லாபமும் கிடைக்கும் என்று கூறியதை அன்றைக்கே மார்கரெட் தாட்சர் பொய் என நிரூபித்தார். 1989ம் ஆண்டு நீர்ச்சட்டத்தினைக் கொண்டுவந்து, 25 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் நீர்விநியோகத்தில் இந்த நிறுவனம் மட்டுமே ஏகபோகமாக கோலோச்ச ஏற்பாடு செய்தார்.

இத்தனை சலுகைகளையும், ஏகபோக உரிமையையும் வாங்கிக் கொண்டு தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தை வாங்கிய ஜெர்மனியின் RWE நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில் தான் உறுதியளித்தபடி சேவை தரத்தையும், நீர்க்கசிவு மேலாண்மையையும் வழங்க முடியவில்லை என்று கூறி கெம்பில் வாட்டர் நிறுவனத்திற்கு அதனை விற்பனை செய்தது.

ஆனால் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் புதிய முதலாளிகள் நீர்விநியோக சேவையை விட அதிவிரைவான கொள்ளை லாபத்தை எடுத்துக் கொண்டு நிறுவனத்தை மொட்டையடிக்கும் நோக்கத்துடன்தான் அதனை வாங்கியுள்ளனர் என்பது வெகுவிரைவில் அம்பலமானது. இதனை அவர்கள் மூன்று வழிகளில் நடத்திக்காட்டினார்கள். முதலில் லாபத்தினை அதிகரிக்க வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக் கட்டணத்தை அதிகரித்தார்கள். இரண்டாவதாக உபரி லாபத்தினை நீர்விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்தவும், புதுப்பிக்கவும் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதித்தனர். மூன்றாவதாக பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் லாபம் முழுவதையும் அள்ளிக் கொடுப்பதற்கு ஏதுவாக சந்தையில் இருந்து மிகப் பெரிய அளவில் கடன் வாங்கினார்கள்.

இங்கிலாந்தின் தேசிய தணிக்கை அலுவலகத்தின் கணக்குப்படி தனியார்மயமாக்கப்பட்ட முதல் 15 ஆண்டுகளில் தண்ணீருக்கன கட்டணங்கள் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் நீர்விநியோக நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதிஒதுக்கப்படாததால் நாள் ஒன்றுக்கு 2400 கோடி லிட்டர் நீர் கசிவினால் வீணாகிறது, பல லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆறுகளிலும், கடலிலும் கலக்கப்படுகிறது.

இதுவரை கட்டணங்களை உயர்த்தியது போதாதென்று இந்த ஏப்ரல் மாதம் முதல் 15 பவுண்ட் அளவிற்கு கட்டணங்களை உயர்த்துதற்கு தேம்ஸ் வாட்டர் பரிசீலித்துவருவதாக கார்டியன் இதழ் தெரிவித்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் 40 சதவீத அளவிற்கு கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும் தெரிகிறது.

தேம்ஸ்வாட்டர் நிறுவனம் இதுவரை 14 பில்லியன் பவுண்ட் அளவிற்கு கடன் வாங்கியுள்ளது. ஆனால் 1990 முதல் 2022 வரையிலான 32 ஆண்டுகளில் 7 பில்லியன் பவுண்ட் அளவிற்கு அதன் பங்குதாரர்களுக்கு மட்டும் லாபமாக கொட்டிக் கொடுத்துள்ளது. 2006ம் ஆண்டுமுதல் 2017ம் ஆண்டுவரை தேம்ஸ்வாட்டர் நிறுவனத்தைக் கட்டுப்படுத்திய மெக்கையர் எனும் நிதிமூலதன நிறுவனம் மட்டும் 2.8 பில்லியன் பவுண்டுகளை லாபமாக எடுத்துச் சென்றுள்ளது. இந்த காலகட்டத்தில்தான் தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் கடன் அளவு 4.4 பில்லியன் பவுண்டிலிருந்து 10.5 பில்லியன் பவுண்டாக அதிகரித்துள்ளது.

தனது கடன்களை அடைப்பதற்கு நிதி உதவி அளிக்கும்படி தேம்ஸ்வாட்டர் நிறுவனம், தற்போதைய பங்குதாரர்களிடம் கேட்ட போது அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் கடன்களைக் கட்ட முடியாமல் கடன் கொடுத்த இரண்டு சீன வங்கிகள் வசம் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் கைமாற்றப்படும் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.

தனியார்மயமாக்கலின் தொடக்கப்புள்ளியாக இருந்த தேம்ஸ் வாட்டரின் இந்த நிலை, இந்தியாவில் தனியார்மயமாக காத்திருக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கு சாட்சியம் சொல்கிறது.

  • ஆதவன்

(மே 3 2024 தேதியிட்ட பிரண்ட்லைன் இதழில் பேராசிரியர் சி.பி.சந்திரசேகர் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)

https://frontline.thehindu.com/columns/economic-perspectives-c-p-chandrasekhar-thames-water-symbolises-collapse-of-neoliberal-privatisation/article68046671.ece

 

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. இந்திய பொதுத்துறைகளை நாசம் செய்தது தனியார்மய கொள்கை.