”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர் என்பவர் எள்ளி நகையாடினார்.
தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின் தம் கண்ணெதிரிலேயே அதை இஸ்ரேலுக்குப் பறிகொடுத்து பின்னர் அதை மீட்பதற்காக போராடிய பாலஸ்தீனிய தலைமுறை தன் இறுதிகாலத்தில் இருக்கிறது.
ஜான் பாஸ்டர் கூறியது போலவே நான்கு தலைமுறைக்கும் மேலாக தொடர்ந்து வரும் பாலஸ்தீனர்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது பாலஸ்தீன மக்கள் நம் கண்முன்னே கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள்.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை என்பது ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து தான் நடைப்பெற்று வருகிறது என நாம் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அங்கு இஸ்ரேல் யூதவெறி அரசின் இனப்படுகொலை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. பாலஸ்தீனர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து விரட்டுவது என்பதில் தான் இஸ்ரேல் யூதவெறியின் இதயத்துடிப்பே அடங்கியிருக்கிறது.
1948 இல் இஸ்ரேல் உருவான நாளிலிருந்து பாலஸ்தீன மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டியும் இனப்படுகொலை செய்தும் அமெரிக்காவின் ஆதரவுடன் தனது நாட்டை விரிவுபடுத்தி வருகிறது இஸ்ரேலின் யூத இன வெறி அரசு.
1967இல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமிடையில் நடைப்பெற்ற போரில், பாலஸ்தீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரை, காசா எல்லைக்கோடு ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்டது. ஆக்ரமித்த பகுதிகளில் அனைத்திலும் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று ஹமாஸின் தாக்குதலில் 1154 இஸ்ரேலியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளிகள் கொல்லப்பட்ட நிகழ்வு, ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய காத்திருந்த இஸ்ரேல் யூதவெறி அரசுக்கு ஒரு பொய்யான காரணத்தை வழங்கியது என்றால அது மிகையல்ல.
அக்டோபர் 7ம்தேதிக்குப் பிறகு இஸ்ரேலின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், டாங்கிகள், பீரங்கிக் குண்டுகள் மற்றும் கடற்படை துப்பாக்கிகள், 20 மைல் நீளமும், 5 மைல் அகலமும் கொண்ட காசாவை தினசரி தூள் தூளாக்குகின்றன.
ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ,ஏறக்குறைய இரண்டு அனுகுண்டுகளுக்கு சமமான 25,0000 டன் வெடிப்பொருட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் காசாவின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மீது வீசப்பட்டுள்ளன.. பாலஸ்தீன மக்கள் தங்களுக்கு உயிருக்கு பயந்து பாதுகாப்பான பகுதிகள்(Safe zone) என தங்கியிருந்த இடங்களில் மட்டுமே 2500 பவுண்டு பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன., கொல்லப்பட்டவர்களில் 42% பேர் தம் உயிருக்கு பயந்து பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்கள். பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்களை வேறு இடங்களுக்கு ஓடுமாறு விரட்டி அவர்கள் மீது குண்டுமழை பொழிகிறது இஸ்ரேல் இனவெறி அரசு. இதனால் எங்கு தங்குவது என தெரியமாலேயே சுமார் 17 இலட்சம் பாலஸ்தீன மக்கள் மருத்துவமனை தாழ்வாரங்கள், அதன் நுழைவு வாயில்கள்,பள்ளிகள் மற்றும் தென் காசாவின் திறந்த வெளியில் வசித்து வருகிறார்கள்.
இதுவரை 32,705 பாலஸ்தீனர்களை (13,000 குழந்தைகள் மற்றும் 9000 பெண்கள்) இஸ்ரேல் இனவெறி அரசு இனப்படுகொலை செய்துள்ளது. அக்டோபர் 7ம் தேதியிலிருந்து ஒரு நாளைக்கு 75 குழந்தைகள் உள்ளிட்டு 185 பேரை இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது.
இதுமட்டுமில்லாமல் 136 பத்திரிக்கையாளர்கள், 504 சுகாதாரத் துறை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது காசாவில் கொல்லப்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்களில் மொத்த எண்ணிக்கையில் 4% ஆகும். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை கணக்கீட்டால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000 யை தாண்டும். சுமார் 75,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்து ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.
மருத்துவமனைகளில் மயக்க மருந்து கூட இல்லை. கை, கால்களை துண்டிப்பதற்கு மயக்க மருந்து கூட கிடைக்காமல் மருத்துவர்கள் திணறுகின்றனர். கை கால் அறுவை சிகிச்சைக்கு செய்யப்படும் நோயாளிகளின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. கருச்சிதைவோ 300% அதிகரித்துள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் எந்தவித மருத்துவ வசதியும் இல்லாமல் பிரசவிக்கின்றனர். மருத்துவசதி இல்லாமல் புற்றுநோய், நீரழிவு, இதயநோய், சீறுநீரக போன்றவற்றால பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறக்கின்றனர். இந்நோயோடு உயிருடன் இருப்பவர்களோ விரைவில் இறக்கும் நிலைமைகளில் இருக்கின்றனர்.
காசாவில் 90% அதிகமான பாலஸ்தீன மக்கள் கால்நடை தீவனம், புல் போன்றவற்றை சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.குழந்தைகளோ பட்டினியால் இறக்கின்றனர்.
காசாவின் 77% சுகாதார நிலையங்கள், 68% தொலைத் தொடர்பு உள்கட்டமைப்புகள், 68 % குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.பல்கழைக் கழங்கள் உள்ளிட்டு காசாவின் 60% கல்வி நிலையங்கள், 13 நூலகங்கள்,208 மசூதிகள், காசாவின் பழமை வாய்ந்த ஆவணங்களை வைத்திருக்கும் 195 பராம்பரிய தளங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கொல்லப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 7000 பேர். ஆனால் 5000 ஆண்களே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் கொல்லப்பட்ட ஆண்கள் அனைவருமே ஹமாஸ் தீவிரவாதிகள் என்கிறது இஸ்ரேல் இனவெறி அரசு
பாலஸ்தீனர்கள் அனைவரும் அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு பொறுப்பாளிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காசாவின் அனைத்து கட்டிடங்களும் ஹமாஸின் கட்டளை மையங்கள் அல்லது அவர்களது புகலிடங்கள் எனக் கூறி இஸ்ரேல் யூத இனவெறி அரசின் இலக்குகளாக வீழ்த்தப்படுகின்றன.
காசாவில் அனைவருக்கும் குடிமக்கள் அந்தஸ்து உரிமை மறுக்கப்படுகிறது. மசூதிகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்கள் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அந்தஸ்தை மறுக்கிறது
இஸ்ரேலைப் பொறுத்தவரை பாலஸ்தீனர்கள் அனைவருமே ஹமாஸின் மனித கேடயங்கள். பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதற்கு பொய்யான காரணங்களை கூறி தனது இன அழித்தொழிப்பை நியாயப்படுத்துகிறது இஸ்ரேல் யூதவெறி அரசு
காசாவில் பாலஸ்தீனர்களின் இனப்படுகொலை என்பது இஸ்ரேல் யூத இன வெறியின் உச்சக்கட்டத்தை தொட்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல் முன் எப்போதும் இல்லா அளவுக்கு தற்போது உக்கிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் யூதவெறி பாசிஸ்டுகளோ இந்த இனப்படுகொலையை பார்த்து கொக்கரக்கின்றனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட், அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு காசாவிற்கு உணவு, மின்சாரம், தண்ணீர் எரிபொருள் இல்லை என அறிவித்தார். இஸ்ரேல் விவசாய அமைச்சர், காசா நக்பா (பேரழிவு ) எனக் குறிப்பிட்டார். நக்பா என்பது 1947 க்கும் 1949 க்கும் இடையில் சுமார் 75,000 பாலஸ்தீனர்களை அவர்களின் நிலத்திலிருந்து விரட்டியத்த ஒரு நிகழ்வாகும். லிகுட் உறுப்பினரான ரிவைட்டல் என்பவர், காசாவை இரக்கமில்லாமல் சமதளமாக்குங்கள்; இந்த முறை இரக்கமில்லை;கட்டிடங்களை வீழ்த்து; எந்தவித வேறுபாடு இல்லாமல் வெடிகுண்டுகளைப் போடு என்று பதிவு செய்கிறார்.
இஸ்ரேலை ஆளும் யூதவெறி பாசிஸ்ட் அரசு பாலஸ்தீன இன அழித்தொழிப்பில் மும்முரமாக உள்ளது. பூர்விக அமெரிக்க குடிகளை வெள்ளையர்கள் அழித்தொழித்தைப் போல, நாஜிக்கள் யூதர்களை அழித்தொழித்தைப் போல தற்போது இஸ்ரேல் யூதவெறி அரசால், பாலஸ்தீனர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகிறார்கள். இம்முறை பாலஸ்தீனர்களின் இனப்படுகொலை நம் கண்முன்னே நேரலையாக ஒளிப்பரப்படுகிறது
இஸ்ரேல் என்ற நாடு உருவானதிலிருந்து பாலஸ்தீனர்களுக்கு என்ன நடந்தது; என்ன நடந்து கொண்டு இருக்கிறது; என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்து கொண்டு வருகிறோம். ஆனாலும் மனிதாபிமான உதவியை இஸ்ரேல் அளிக்கும்; அங்கு போர் நிறுத்தம் இருக்கும்; பாலஸ்தீனர்கள் காசாவிற்கு மீண்டும் திரும்புவார்கள்; காசாவில் பாலஸ்தீனர்கள் மீண்டும் ஆட்சி செய்வார்கள் என அமெரிக்காவும் இஸ்ரேல் இனவெறி அரசும் உலக மக்களை நம்பச் சொல்கிறார்கள்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலைக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டாலர் இரானுவ நிதி உதவியை அளித்து வருகிறது. தற்போதும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக 1800 -எம்.கே குண்டுகள், 500 எம்.கே 82 குண்டுகள்,2500 பவுண்ட் குண்டுகளை வழங்கியுள்ளது.
பாலஸ்தீனர்கள் இந்த இனப்படுகொலை என்பது ஏதோ ஹமாஸுக்கு எதிரான ஒரு நடவடிக்கை அல்ல. இது யூத இனவெறி இனப்படுகொலையின் உச்சக்கட்டம். இந்த இன அழித்தொழிப்பு இல்லாமல இஸ்ரேலின் யூதவெறியால் உயிர் வாழமுடியாது
அமெரிக்க நயவஞ்சகமும், இஸ்ரேலின் யூதவெறியும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது.கொல்லப்பட்டது பாலஸ்தீனர்கள் மட்டுமில்லை அவர்களது விடுதலைப் போராட்டமும் தான். பாலஸ்தீனிய குழந்தைகள், பெண்கள் மற்றும் அம்மக்களின் வேதனை குரல்களை இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த நம்மை அறை கூவி அழைக்கிறது. இன்று நாம் பாலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாவிடில், இன்னொரு நாள் வேறு ஒரு இனத்தின் இனப்படுகொலையை நாம் காண நேரிடும்.
- தாமிரபரணி