தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன், தமிழக அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வமுடன் இருப்பதாகவும், இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன்னதாகவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநில அரசு கையெழுத்து போடும் என்றும் கூறியுள்ளார்.
பி.எம்.ஸ்ரீ திட்டம் என்பது ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையினை அமுல்படுத்தும் சோதனைக் கூடம் என வர்ணிக்கப்படுகிறது. அதன்படி இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, பாடதிட்டம், கற்பித்தல் முறை, மாணவர்களுக்கான தேர்வு முறை என அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளபடி அமுல்படுத்தும் மாதிரிப்பள்ளிகளாக மாற்றப்படும்.
இந்தப் பள்ளிகள் அதன் அருகாமையில் உள்ள மற்ற பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அந்தப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும். இந்தப் பள்ளிகளை நடத்தும் செலவை ஒன்றிய அரசும் மாநில அரசும் 60:40 என்கிற விகிதத்தில் பகிர்ந்துகொள்ளும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 27,360 கோடி ரூபாய் இத்திட்டத்துக்குச் செலவு செய்யப்படும்’ என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்த்து. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 18,128 கோடி. மீதிப் பணத்தை மாநிலங்கள் செலவிட வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக் கல்விக் கொள்கை அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்து கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டம் தான் பி.எம்.ஸ்ரீ திட்டம். இந்த திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களும் கையெழுத்திட்டுவிட்டன. மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தினை ஏற்றுக்கொள்வது என்பது தேசிய கல்விக் கொள்கையை தங்களது மாநிலத்தில் அமுல்படுத்த ஏற்றுக் கொள்வதாக அர்த்தம்.
வேத கலாச்சாரத்தை பரப்புவதையும், சமூக நீதியை மறுப்பதையும், இந்தித் திணிப்பையும் நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும், தமிழ்நாட்டிற்கென தனியாக மாநில கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்கிடுவோம் என்றும் திமுக இதுவரை கூறிவந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இதனையே தனது தேர்தல் வாக்குறுதியாகவும் திமுக அறிவித்திருந்தது. திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றையும் உருவாக்கியது. அக்குழு அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தும் விட்டது. ஆனால் திமுக அரசாங்கமோ அவ்வறிக்கையை வெளியிடாமல் வைத்துள்ளது. அதேவேளையில் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளை மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது. தற்போது வெளிப்படையாகவே அதனை ஏற்றுக்கொள்ளும் முடிவிற்கு திமுக வந்துவிட்டது. இதனை நியாயப்படுத்த ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது என்று காரணம் கூறுகின்றது.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசுக்கு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 2024-25ம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது தவணையான ரூ.1,200 கோடியை(சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூ.1,045.38 கோடி) விடுவிக்க வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கோரியபோது, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அலோசித்து, அவரது கூற்றின்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதில் எவற்றையெல்லாம் ஏற்கலாம், ஏற்க வேண்டாம் என்பது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நமக்கு ஏற்காத விஷயங்களை ஒன்றிய அரசிடம் எடுத்து சொல்லப் போவதாகவும் கூறினார்.
மேலும் “மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடுவதால் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்வதாகாது. புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” எனவும் கூறினார்.
பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் கையெழுத்து போடுவதாக வாக்குறுதி அளித்துள்ள தமிழக தலைமைச் செயலாளரின் கடிதத்தை, ஒன்றிய கல்வி அமைச்சகம் தனது எக்ஸ்(டிவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் தலைமைச் செயலாளர் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் கையெழுத்திடுவதாக கூறியுள்ளார். ஆனால் அமைச்சரோ திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து பரிசீலிப்பதாக கூறுகிறார். இதில் யார் சொல்வதை நம்புவது?
பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் கையெழுத்திடாத மாநிலங்களை தங்களது வழிக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு இந்த நிதியாண்டில் மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்ட கல்வித் துறைக்கான நிதியைக் கொடுக்காமல் நிறுத்திவைத்து, பி.எம்.ஸ்ரீ. திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் நிதியை கொடுக்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அதனிடம் திமுக சரணடைந்துள்ளது. இதனை மறைக்க குழு அமைப்பது, பி.எம்.ஸ்ரீ திட்டத்தினை பரிசீலிப்பது என்று கண்துடைப்பு வேலைகளை செய்கின்றது.
இவ்வாறு பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் இணைவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒப்புக் கொண்டு ஒன்றிய அரசிடம் சரணடைவது ஒருபுறம், என்றால் மறுபுறத்திலோ இதனை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறையை ஏவிவருகிறது திமுக அரசு.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக வாயளவில் கூறினாலும், நடைமுறையில் திமுக அரசு அதனை நடைமுறைப்படுத்தியே வந்துள்ளது. இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், திறன் சார்ந்த கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன் போன்று தேசியக் கல்விக் கொள்கையின் பல்வேறு கொள்கை அம்சங்களை வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை ஆசிரியர் உமா மகேஸ்வரி தொடர்ந்து அம்பலப்படுத்தி சமூக ஊடகங்களில் எழுதி வந்தார். அதுமட்டுமன்றி கல்வித்துறையில் நடைபெறும் சீர்கேடுகளையும், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைகளையும், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் அராஜகத்தையும் உமா மகேஸ்வரி அவர்கள் அம்பலப்படுத்தி சுட்டிக் காட்டினார். இதனால் அவரை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இடைநீக்கம் செய்ததுடன், அதிகாரிகளை வைத்து அவரை கிரிமினலை நடத்துவது போல மிரட்டியிருக்கிறது.
ஆசிரியர் உமா மகேஸ்வரி மட்டுமல்ல, திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக யார் பேசினாலும் போராடினாலும் அவர்களை இந்த அரசு ஒடுக்கிவருகிறது. தூய்மைப் பணியாளர் தொடங்கி, செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சமீபத்தில் மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் வரை திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அமுல்படுத்தக் கோரி போராடினால் கூட அவர்களை இந்த அரசு ஒடுக்குகிறது.
பாசிச எதிர்ப்பில் தன்னை வலுவான சக்தியாக திமுக முன்னிறுத்திக் கொண்டாலும், ஒவ்வொரு இடத்திலும் பாசிசத்தின் முன்னாள் சரணடைவதையே அது வழக்கமாக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தன்னை எதிர்த்துப் போராடும் ஜனநாயக சக்திகளை தயவுதாட்சன்யமின்றி ஒடுக்குகிறது. பாசிச எதிர்ப்பில் திமுகதான் தலைமை தாங்கும் சக்தி என கூறித்திரியும் திமுகவின் துதிபாடிகளோ இன்னும் ஒருபடி மேலே போய் திமுகவின் இந்த அனுகுமுறையை விமர்சிப்பவர்களை திமுக விரோதிகள் என்றும், பாசிசத்தின் கையாட்கள் என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.
- அறிவு