தேர்தல் நன்கொடை பத்திரம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும், பாசிச மோடி அரசின் பிரம்மாஸ்திரமான ‘CAA’வும்!

 

 

அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறையானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை – கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

மேலும், அரசிடம் கணக்கு கேட்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி மோடி அரசின் செவியில் அறைந்துள்ளது. இதை தொடர்ந்து பிப்ரவரி 15-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விநியோகம் தொடர்பான விவரங்களையும் மார்ச் 6க்குள் தேர்தல் ஆணையத்திடம் தர வேண்டும் SBI-க்கு உத்தரவிட்டது. அவற்றை தேர்தல் ஆணையம் மார்ச் 13-க்குள் பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

SBI வங்கியானது மார்ச் 3-ஆம் தேதி வரை இதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டு மார்ச் 4-ஆம் தேதி ஆவணங்களின் விவரங்களைத் தருவதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கோரியது. இவற்றை எதிர்த்து வழக்குத் தொடுத்த அமைப்புகளில் ஒன்றான ஜனநாயக சீர்திருத்தச் சங்கமானது கடந்த மார்ச் 7-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தபின்பே SBI-யின் மீது விசாரணையை தொடங்கிய உச்ச நீதிமன்றம் அவை கோரிய கால அவகாசத்தை நிராகரித்தது.

ஒருவேளை அச்சங்கம் கால அவகாசம் கோரிய SBI-மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பாக உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கமோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், உத்தரவு வழங்கி 20 நாட்களாகியும், எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்த உண்மையைக் கண்டறிந்து, கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், தான் கெடுவிதித்த தேதிக்கு முன்பே கால அவகாசம் கோரும் SBI-யின் கேடான – அதாவது, இந்த ஊழலில் இருந்து ஆர்எஸ்எஸ், பிஜேபி, பாசிச கும்பலைத் தப்பிக்க வைப்பதற்கான நோக்கத்தை புரிந்துக் கொண்டிருக்க முடியும் என்கிற அடிப்படையில் தான் இச்சந்தேகம் எழுகிறது.

இருப்பினும், SBI 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததையும், அதற்கான எந்த விளக்கங்களையும் தராமல் கால அவகாசம் கூறியதையும் கடுமையாக விமர்சிப்பதோடு, அதன் செயல்பாட்டின் நேர்மையையும் கேள்விக்குட்படுத்தியது வரவேற்கக் கூடியதே.

அதானிக்கு எந்த வங்கியும் நம்பி கடன் வழங்க முன்வராத பட்சத்தில் பாசிசம் மோடி அரசின் சிபாரிசு பெயரில் SBI மக்களின் சேமிப்புப் பணத்தை ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தைக் கையகப்படுத்த ரூபாய் 6000 கோடியை வாரி வழங்கியதிலிருந்தே, கார்ப்பரேட்டுகளுக்கு லட்சக்கணக்கான கோடியில் கடன் தள்ளுபடி செய்ததிலிருந்தே இதன் நேர்மையின் லட்சணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியும்.

கால அவகாசம் உச்ச நீதிமன்றத்தால் ஏற்படும் பட்சத்தில், அவற்றைப் பயன்படுத்தி, ஏதாவது, தில்லுமுல்லு செய்து நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாமென பாசிச – ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலும், SBI-யும் திட்டம் தீட்டியிருக்கலாம். இதனடிப்படையில் தான், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எதுவும் பாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் SBI-யானது கால அவகாசத்தை தேர்தலுக்குப் பின்பு, அதாவது ஜூன் 30 வரை கோரியுள்ளது.

தீர்ப்பு தனக்கு சாதகமாக வரும் பட்சத்தில், மோடி அரசின் உத்தரவாதத்தையும், எதிர்க்கட்சிகளின் ஊழலையும், வாரிசு அரசியலையும் வழக்கமான வகையில் தேர்தல் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வது; தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில், ஏற்கனவே நிறைவேற்றி வைத்திருந்த CAA என்கிற பிரம்மாஸ்சரத்தை ஏவிவிடுவது என்கிற சதி திட்டத்தைத் தீட்டி வைத்துள்ளது.

இதனடிப்படையில் தான், பாசிச மோடி அரசு 11-ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தனக்கு பாதகமாக வந்தவுடன் அன்று மாலையை (CAA) குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக அரங்கேற்றியுள்ளதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இவைக் கூட ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிசக் கும்பலின் வெற்றிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது என்று கருதலாம்.

எனினும், கடந்த காலத்தைப் போல எதிர்க்கட்சிகள் CAA-வை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில், அவை மக்கள் மத்தியில் எடுபடாமல் இருக்க, அவற்றை, இந்துக்களுக்கு எதிரான போராட்டமாகவும் மடை மாற்றிவிடும் என்பது அமிஸ்தாவின் நேற்றைய உரை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்துக்களின் வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக்கி கொள்ளும்.

ஏற்கனவே, ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிச கும்பலின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி, குதிரை பேரத்தாலும், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையின்மையாலும், உத்திரவாதம் என்கிற பெயரிலும், ஓயாத மோடி அரசின் பிரச்சாரத்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அணிகள், சாதியவாத, பிழைப்புவாத கட்சிகள் பிஜேபியில் வந்து சேர்வதாலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும், இவற்றை அப்படியே விட்டு விடமுடியாது; முறியடிக்க வேண்டிய அவசியம் கட்டாயம் உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து குடிமக்களுக்கும் உண்டு என்பதையும், இதன் மூலமே நமது வாழ்வுரிமையையும் பாதுகாக்க முடியும் என்பதையும் எவராலும் மறுக்க முடியாது.

ஆனால், தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொன்றும் அவலத்தில் திகழ்ந்துவரும் இந்தியா கூட்டணியால் ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிச கும்பலின் வெற்றியைத் தடுத்து நிறுத்த முடியாது. மேலும், வெறும் CAA எதிர்ப்பால் மட்டும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

அவற்றில் [CAA-வில்] விசமாக புதைந்துள்ள NPR, NRC-ன் கேடுகளை – பாதிப்புகளை – அதாவது, “குறிப்பாக NRC-யை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக NPR-ஐ செயல்படுத்த வேண்டும். அதாவது, வீடு வீடாக சென்று ஒருவரைப் பற்றிய தகவல் திரட்டப்பட வேண்டும். இதனடிப்படையில் சந்தேகிக்கும் நபர்களை அடையாளப்படுத்தி, அவர்களை தனிமைப்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது வதை முகாமில் அடைக்க வேண்டும்.” இது போன்ற எண்ணற்ற சரத்துகள் இவற்றில் உள்ளதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி திரளான – வீச்சான போராட்டங்களை வீதிகள்தோறும் – வீடுகள்தோறும் முன்னெடுக்காமல் ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிசக் கும்பலை மோடி அரசால் கொண்டுவரப்படும் CAA-வை வீழ்த்த முடியாது.

ஏனெனில், இவை வெறும் முஸ்லிம்களுக்கு, ஈழத் தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயகக் கோரிக்கைகளுக்காகப் போராடும், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும், முறைகேடுகள் மீது கேள்விகளை எழுப்பும், சுதந்திரத்திற்காகப் போராடும், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலைத் தட்டிக் கேட்கும் மொத்தத்தில் பாசிசம் மோடி அரசுக்கு எதிராகவோ, காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலுக்கு எதிராகவோ போராடும் எவராக இருந்தாலும், அது இந்துவாக இருந்தாலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது வதை முகாமில் அடைக்கப்படுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதனால்தான் சொல்கிறோம்; நாடாளுமன்றத்தை பெரும்பான்மை என்ற பெயரில் மலைப்பாம்பைப் போல சுற்றி வளைத்து விட்ட ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிசக் கும்பலை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் வீழ்த்தி விடலாம் என்பது நாய் தேங்காய் உருட்டிய கதையாகத்தான் அமையும். மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமைக்கும் ஆப்பு வைக்கும் NPR, NRC-யை இந்தியா கூட்டணி முறியடிக்க முன்வராமல், சாதி, மதம்,  மொழியின் பெயரில் மக்களைப் பிரிக்கிறது; தேர்தல் நன்கொடை பத்திர ஊழலில் இருந்து மக்களைத் திசைத் திருப்புகிறது; மனித நேயத்தை அழிக்கிறது; இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் வஞ்சிக்கிறது என வாய்ச்சவடால் அடித்தால் மட்டும் ஆர்எஸ்எஸ் பிஜேபி பாசிசக் கும்பலை வீழ்த்த முடியாது.

இவற்றை, சிந்தனையில் நிறுத்திக் கொண்டு பெரும் திரளான மக்கள் போராட்டங்களை வீதிகள் தோறும் வீச்சாகக் கொண்டு செல்வது மூலமே முறியடிக்க முடியும். மேலும், CAA-வை அமுல்படுத்த முடியாது என முடிவெடுத்திருக்கும் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளும், இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தங்களது கட்சி அணிகளை – ஜனநாயகச் சக்திகளைக் கொண்டு NRC-க்கு எதிரான பிரச்சாரத்தை வீடு வீடாக, வீச்சாக ,விரைவாக கொண்டு செல்வதோடு, CAA-வுக்கு எதிராக, காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக, ஆர்எஸ்எஸ், பிஜேபி பாசிசக் கும்பலுக்கு எதிராக போராடும் ஜனநாயக – புரட்சிகர சக்திகளை அங்கீகரித்து அனுமதியளித்து ஊக்கப்படுத்த வேண்டும், அவர்களை ஒடுக்கக்கூடாது. பெருவாரியான அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் ஒதுங்கி நிற்காமல் இவ்வகையான போராட்டங்களில் ஊக்கத்துடன் கலந்துக் கொள்வது மூலமே ஒரு எழுச்சிக்கு வழி வகுக்க முடியும். காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் வீழ்த்த முடியும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன