2 – வது அரசியல் – அமைப்பு மாநில பொதுக்குழு மற்றும் மாநாடு
பத்திரிகை செய்தி
தேதி 25-02-2024
அன்பார்ந்த பத்திரிகையாளர்களே! ஜனநாயக சக்திகளே! உழைக்கும் மக்களே! வணக்கம்!!.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எமது அமைப்பான மக்கள் அதிகாரம் இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே தீர்வுகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை எடுத்து மக்களிடம் செல்வாக்கு பெற்றதை தமிழக மக்கள் அறிவர். இதனூடாக பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தியுள்ளோம். ஆனால், எமது அமைப்பில் இருந்த சில சீர்குலைவு சக்திகள் மற்றும் அரசியலற்ற லும்பன் கும்பல் ஆகியோரின் சதியின் காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மக்கள் அதிகாரம் அமைப்பானது பிளவுகளை சந்தித்தது. 2021 இறுதியில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து அதை ஒழுங்கமைக்கும் முகமாக மாநிலம் முழுதும் பொதுக்குழு தோழர்களை கூட்டி சிறப்பு பொதுக்குழு கூட்டம் மற்றும் முதல் மாநாட்டை நடத்தி அதில் பிளவுக்கான காரண காரியங்களை விவாதித்து ஜனநாயக பூர்வமான முறையில் மாநில குழுக்கள், மண்டல குழுக்கள், வட்டார குழுக்கள் தேர்வு செய்து அவற்றிலிருந்து நிர்வாகிகள் தேர்வாகி வேலைகளைத் தொய்வின்றி கொண்டு சென்று வருகிறோம்.
எமது அரசியல் வழிகாட்டியாக செயல்பட்ட அருமை தலைவர் தோழர் அன்பழகனின் மரணம், அதை தொடர்ந்து போலிசின் பல்வேறு கெடுபிடிகளை எதிர்கொண்டு அவரது படத்திறப்பு மற்றும் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு, இந்தி மொழி திணிப்புக்கு எதிரான திருச்சி கருத்தரங்கம், ஹிண்டன்பர்க் அறிக்கை-பிபிசி ஆவணப்படம் தொடர்பான சென்னை கருத்தரங்கம், மே தின ஒசூர் ஆர்ப்பாட்டம், மின்துறை கார்ப்பரேட்மயம் தொடர்பான ஒசூரில் நடத்தப்பட்ட மைய பொதுக்கூட்டம், இதற்கிடையே பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பல்வேறு அரசியல் பாடல்கள் தயாரித்து பாடி வெளியிட்டு வீச்சாக பிரச்சாரம் மேற்கொண்டு செயல்பட்டுள்ளோம். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் நிலைப்பாட்டில் ஊன்றி நின்று செயல்படும் அமைப்பு என்று பெயர் எடுத்துள்ளோம்.
குறிப்பாக, இன்று ஆளும் வர்க்கம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி மறுகாலனியாக்கத்தை தீவிரப்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக பாசிசம் அரங்கேறிவருகிறது. இதன் விளைவாக, அற்ப சொற்ப ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாசிச அபாயம் குறித்து எமது அமைப்பு எச்சரித்து வந்துள்ளது. இது இன்று பலராலும் உணரப்பட்டு பேசப்பட்டுவருகிறது. ஆனால், நிதி மூலதனத்தின் அகோர பசிக்கு பொருத்தமான கொடிய அரசு வடிவம்தான் பாசிசம் என்ற அரசியல் கோணத்தில் இதைப் பார்க்காமல் வெறும் பிஜேபி-சனாதனம் என்பதாக மட்டுமே சுறுக்கிப் பார்க்கும் நிலையே இன்று பெரும்பாலானோரிடம் உள்ளது. .
இதன் போக்கில் அரசின் அனைத்து துறைகளும் கார்ப்பரேட்டு கொள்ளைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அரசியல் ரீதியில் ஜனநாயக உரிமைகளும், பொருளாதார ரீதியில் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு சொல்லொன்னா துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவைகளை இப்போது நடைமுறையில் உள்ள போலி ஜனநாயக அரசு கட்டமைப்பால் வீழ்த்த முடியாது. ஏனென்றால், இந்த கட்டமைப்பு இந்திய சுதந்திர போராட்டத்தை, திசைதிருப்ப அன்றைய பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்திய கும்பலும் இந்தியாவில் தரகு அதிகாரவர்க்க முதலாளி வர்க்கத்தின் முகவர்களான காங்கிரசு கட்சியும் மேற்கொண்ட ஒரு தந்திரம் ஆகும். அதை தொடர்ந்து பல பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டது. சீர்திருத்தம் எனும் பெயரில் கவர்ச்சி திட்டங்களைக் கொண்டுவந்தாலும் அது பன்னாட்டு கம்பெனிகளின் கொள்ளைக்காவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஈவு இரக்கமற்ற முறையில், அதிவேகமாக பன்னாட்டு கம்பெனிகளின் கொள்ளைக்கான சீர்திருத்தத்தை துரிதப்படுத்தும் ஓர் அடியாள் தேவை என்ற அடிப்படையில் 2014 ல் ஒன்றிய ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டவர்தான் மோடி.
இதன் விளைவாக, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை என கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக நாட்டின் பொருளாதாரம் முழுதும் திறந்து விடப்பட்டுள்ளது. கார்ப்பரேட் கும்பலே பொருளாதாரம் முழுவதையும் தீர்மானிப்பவர்களாக மாறியிருக்கின்றனர். இதனால், பொருளாதாரத்தில் மட்டுமின்றி அரசியலிலும் பணம் படைத்தவர்கள் மட்டுமே நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள், மேலும் மேலும் அரசிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அரசியல் அதிகாரத்தை தீர்மானிப்பவர்களாக இக்கார்ப்பரேட்டுகளே உள்ளனர். பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் முன்வைக்கும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்தான் பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள், வாழ்வுரிமைகள் பறிக்கப்பட காரணமாக இருந்து வருகின்றன. கார்ப்பரேட்களின் கொள்ளையை எதிர்க்காமல் எல்லா தேர்தல் கட்சிகளும் தொழில் வளர்ச்சி எனும் பெயிரில் இதை ஆதரிப்பவர்களாகவே மாறியுள்ளனர். இதனால் ஒரு சில புரட்சிகர அமைப்புகளும் மக்களும் மட்டுமே இதை எதிர்த்து போராடி வருகின்றனர். இப்போராட்டங்களையும் எதிர்ப்பு குரலையும் நசுக்கும் வகையில் ஊபா, தடா, பொடா போன்ற பல்வேறு கொடிய அடக்குமுறை சட்டங்களையும் என்ஐஏ போன்ற அமைப்புகளையும் விதிவிலக்கின்றி அனைத்து அரசுகளும் கொண்டுவந்து ஒடுக்குகின்றன.
இந்நிலையில், இதற்கு பொருத்தமான புரட்சிகர மாற்றை முன்வைக்கும் அவசியத்தை அறிவிக்கும் முகமாக எமது அரசியல்-அமைப்பு மாநில மாநாட்டை தருமபுரியில் நடத்தி முடித்துள்ளோம். அதாவது, இந்த அரசு கட்டமைப்புக்கு வெளியே புரட்சிகர மக்கள் அதிகார மன்றங்களை கட்டியமைப்பது என்று முன்வைத்துள்ளோம். அந்த வகையில் புதிய கொள்கை அறிக்கையையும் அமைப்பு விதிகளையும் முன்வைத்து மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். அதன் ஒரு அங்கமாக அமைப்புக் கொடியையும் அமைப்பு பெயரையும் மாற்றி அமைத்துள்ளோம். அதன்படி அமைப்பின் பெயரை புரட்சிகர மக்கள் அதிகாரம் என்று மாற்றியமைத்துள்ளோம். அதோடு அமைப்பின் கொடியையும் மாற்றியமைத்துள்ளோம். இதை கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நாங்கள் நடத்தி முடித்துள்ள மாநாடுகள் அங்கிகரித்து உற்சாகமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
அந்த வகையில் முன்வைக்கப்பட்ட புதிய கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகளை கிளை முதல் வட்டம், மாவட்டம், மாநிலம் வரை மாநாடுகளை நடத்தியும் மாநில பொதுக்குழுவை கூட்டியும் விவாதித்து அதன் அடிப்படையில் ஜனநாயக பூர்வமாக கிளை, வட்டார, மாவட்ட, மாநில செயற்குழுவை தேர்வு செய்து அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளோம். குறிப்பாக, இந்த அமைப்பின் தலைமை நிர்வாகிகள் என்ற வகையில், மாநில செயலராக தோழர் முத்துகுமார், மாநில துணை செயலராக தோழர் கோபிநாத், மாநில பொருளாளராக தோழர் காமராஜ் ஆகியோரையும் தோழர்கள் அருண், கிருஷ்ணமூர்த்தி, சரவணன், செல்வராசு மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்துள்ளோம். இதை மாநாடு பெரிய உற்சாகத்தோடு வரவேற்று ஏற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தோழர் முத்துக்குமார்,
மாநில பொதுசெயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்
மாநில செயற்குழு
தமிழ்நாடு
97901 38614