ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுமார் 400 கோடி (4 பில்லியன்) டாலர் மதிப்பிலான கொரோனா தடுப்பூசிகளை அழித்துள்ளன என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை சர்வதேச பத்திரிக்கையான பொலிட்கோ (Politco) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 35 இலட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையதாகும். எந்த நாடும், தான் எவ்வளவு தடுப்பூசிகளை அழித்துள்ளோம் என்ற உண்மையான தகவலைத் தர மறுப்பதால் இது ஒரு குறைந்தபட்ச மதிப்பீடுதான் என்றும் உண்மையாக அழிக்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு இதைவிட பலமடங்கு அதிகமாக இருக்குமென்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஏழை, பின்தங்கிய நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வரும் சூழலில், அபரிமிதமாக (surplus) வாங்கிக் குவிக்கப்பட்ட தடுப்பூசிகளை புல்டோசர் விட்டு உடைத்து அழிக்கும் காட்சிகளைப் பார்க்கவே நெஞ்சமெல்லாம் பதைபதைக்கிறது.
இன்றைய உலகின் மொத்த மக்கள் தொகையே 800 கோடி பேர்தான். ஆனால் 44 கோடி மக்கள் வசிக்கிற, 28 நாடுகள் அங்கமாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் 22 கோடி டோஸ்களை இவ்வாறு அழித்துள்ளது என்று அந்த ஆய்வானது கூறுகிறது.
கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து மேற்கண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டும் 150 கோடி டோஸ்களை பைசர், பயோண்டெக் போன்ற முன்னணி ஏகாதிபத்திய பார்மா நிறுனவங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகையே 44 கோடி பேர்தான். வாங்கிய தடுப்பூசிகளோ 150 கோடி டோஸ்கள். அதாவது ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட முறை செலுத்தக் கூடிய அளவிற்கு தடுப்பூசிகளை அந்நாடுகள் வாங்கிவைத்துள்ளன. ஒரு நபருக்கு 2 டோஸ்கள் போட்டதாக வைத்துக் கொண்டாலும், சில கோடி டோஸ்கள் சேதமுற்றவை அல்லது கழிவாகப் போனவை (damage and wastage) என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 50 கோடி டோஸ்களாவது அழிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.
பொலிட்கோவின் கணக்கீட்டின்படி 13.3 இலட்சம் பேரைக் கொண்ட எஸ்டோனியா, ஒரு குடிமகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ்களை அழித்துள்ளது. அதாவது 15 லட்சம் தடுப்பூசிகளை அழித்துள்ளது. 8.32 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி 8,300 கோடி தடுப்பூசிகளை அழித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான பிரான்ஸ் உட்பட பல அரசாங்கங்கள் அழிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை வெளிப்படுத்தத் தயங்குவதாக அவ்வாய்வு கூறுகிறது.
இத்துடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் இவ்வாறு அபரிமிதமாக வாங்கிக் குவித்து, பின்னர் அழித்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் இது இன்னும் பலமடங்கு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
2021 ஆம் ஆண்டில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக பரவி பலரை பலிவாங்கிய கால கட்டத்தில் இத்தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஏப்ரல் 2021 இல் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக இருந்தபோது தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்க இங்கிலாந்து ஆஸ்ட்ராசெனெகா (AstraZeneca) என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருந்தது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை பாதுகாத்தன அந்த நேரத்தில் தான் ஐரோப்பிய ஒன்றியம் பைசர், பயோண்டெக் (Pfizer BioNTech) நிறுவங்களிடமிருந்து 90 கோடி டோஸ்களை வாங்குவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் செய்துகொண்டன.
2021-இல் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பாராட்டைப் பெற்றது. ஆனால் தொற்றுநோய் தணிந்தபோதும் நாடுகள் தடுப்பூசிகளை வாங்குமாறு மேற்படி ஏகாதிபத்திய பார்மா நிறுவனங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியம் 2022 இல் 65 கோடி டோஸ்க்களையும் 2023 இல் 45 கோடி டோஸ்க்களையும் ஒப்பந்த படி வாங்கியாக வேண்டும். போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய இரண்டு நாடுகளும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டன. ஒப்பந்தப்படி தடுப்பூசி வாங்காவிட்டாலும் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியாக வேண்டும். பணம் செலுத்தாததற்காக ஃபைசரால் வழக்கும் தொடரப்பட்டது. ருமேனியாவில், வழக்கறிஞர்கள் அதன் முன்னாள் பிரதமர் மற்றும் இரண்டு முன்னாள் சுகாதார அமைச்சர்கள் அதிகப்படியான தடுப்பூசி கொள்முதல் செய்ததால் 100 கோடி டாலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், பைசர் உடனான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் குறைந்தபட்சம் 2027 வரை தடுப்பூசிகளை நிறுவனங்களிடம் வாங்கியே ஆகவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிராக எந்த அரசும் பேசாது, மாட்டிக்கொண்டால் தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ தான் பலிகொடுப்பர். ஆனால் நிறுவனத்தின் லாபத்தில் பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்வர். இங்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர்லேன் மாட்டிக்கொண்டார். இவரால் போடப்பட்ட ஒப்பந்தத்தால் தான் மருந்துகளை தொடர்ந்து வருடா வருடம் வாங்கியாக வேண்டியிருக்கிறது என்று பழியை இவர் மீது மட்டும் போட்டு ஃபைசர், பயோண்டெக்கின் கொள்ளையைக் காப்பாற்றி விட்டனர். அதுமட்டுமல்லாமல் முழுமையாக இந்த ஒப்பந்தத்தில் என்னென்ன பிரிவுகள், நிபந்தனைகள் இருந்தது என்றும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.
மிதமிஞ்சிய தடுப்பூசிகள் காலாவதியாவதற்குள் பிற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கலாமே என்ற கேள்வி இங்கே எழலாம். சில நாடுகள் அவ்வாறு நன்கொடையளிக்கவும் முடிவு செய்தன. ஆனால் மேற்படி பார்மா நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு நன்கொடையாக தடுப்பூசியைக் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தடுப்பூசிகள் நன்கொடையாக அளிக்கப்பட்டால் உலகளவில் அதன் தேவை (demand) குறைந்து, விலைகள் வீழ்ச்சியுறும்; இதனால் அந்நிறுவனங்களின் இலாப வீதம் வீழ்ச்சியுறும்; எனவே மண்ணில் கொட்டி அழித்தாலும் அழியுங்கள் நன்கொடையாகக் கொடுக்காதீர்கள் என்று பார்மா நிறுவனங்கள் மேற்படி நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. அதன்படி மிதமிஞ்சிப் போன அனைத்துத் தடுப்பூசிகளும் மண்ணுக்கு இரையாகியுள்ளன; புல்டோசர்களால் நொறுக்கபட்டு குப்பை மேட்டில் குவிக்கப்பட்டுள்ளன.
பல ஏழை நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படும் அதே சமயம் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள தடுப்பூசிகளை அழிப்பதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதுதான் முதலாளித்துவம். முதலாளித்துவம் கருணையோ, ஈவிரக்கமோ அற்றது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டது. இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு இயங்கும் கருணையற்ற முதலாளித்துவக் கட்டமைப்பில், அதுவும் மனித முகத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு அப்பட்டமான சுரண்டலில் இறங்கியுள்ள இந்த புதிய தாராளவாத முதலாளித்துவத்தில் மக்கள் நலன் என்ற வார்த்தைக்கு துளியும் பொருளில்லை.
கொரோனாவின்போதும் இயற்கை பேரிடர்களின் போதும் டாடா இவ்வளவு கோடி நன்கொடை அளித்தார்; பில்கேட்ஸ் அவ்வளவு கோடி நன்கொடை அளித்தார் என்று ஊடகங்கள் கூச்சமேயின்றி முதலாளித்துவத்தை ‘காருண்யமூரித்தியாக’ சித்தரிக்கும் அருவருக்கத்தக்க பிரச்சாரத்தோடு உயிர்காக்கும் தடுப்பூசிகளை கொட்டியழிக்கும் இந்த உண்மை நிலையை ஒப்பிட்டுப்பாருங்கள்!
இந்தியாவில் கோவிட்ஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜூன் 2022 வெளியிட்ட அறிக்கையில் குறைத்தது 20 கோடி தடுப்புசிகள் ஆகஸ்ட்-செப்டம்பர் 2022 மாதம் காலாவதி ஆகிவிடும் என்று கூறியிருந்துத. அப்படி இருந்தும் இப்படி தயாரிக்கும் மருந்துகளை குறைத்த விலைக்கோ இலவசமாகவோ முதலாளி வர்கம் எப்போதும் கொடுக்காது. மிதமிஞ்சி உற்பத்தி செய்த பொருள் விலை போகவில்லை என்றால் அழிப்பது தான் முதலாளித்துவம் செய்யும் செயல். உயிர்காக்கும் மருந்தென்றாலும் பசிபோக்கும் உணவென்றாலும் எல்லாத் துறைகளிலும் இதுதான் நடக்கிறது. உதாரணமாக ஆடை உற்பத்தி செய்யும் லூயிஸ், புரஃபெர்ரி, நிக்கே போன்ற பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களில் தேங்கும் பொருட்களை எரித்து அழித்துவிடுகின்றனர். அதன் மூலம் தங்கள் பொருள்களுக்கு பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி விலை குறைவதைத் தடுக்கின்றனர்.
உலகத்தின் பசியையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் அளவுக்கு இன்று உற்பத்தி சாதனங்களும், தொழில்நுட்பமும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளன. ஆனால் அதன் பலன் கிஞ்சித்தும் மக்களுக்குச் சென்றடையாத வண்ணம் முதலாளித்துவ தனியுடைமையானது தடுக்கிறது. மனிதகுல வளர்ச்சிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் காரணமாக, ஆக்கப்பூர்வ சக்தியாகத் தோன்றிய முதலாளித்துவம் இன்று நாசகர சக்தியாக, அழுகி நாறும் ஒன்றாக மாறிப்போயுள்ளது.
தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட, இலாபத்தை அச்சாணியாகக் கொண்டு இயங்குகிற இந்த முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பையே தூக்கியெறியாமல் மனிதகுலம் இனி உயிர் பிழைத்திருப்பது சாத்தியமில்லை.
- சந்திரன்
ஆதாரம்
EU countries destroy €4B worth of COVID vaccines
https://www.politico.eu/article/europe-bonfire-covid-vaccines-coronavirus-waste-europe-analysis/
New Report Says EU Destroyed $4.3 Bn Worth of Wuhan Virus Vaccines | Vantage
https://www.youtube.com/watch?v=p59b1u11PtE
மன்மோகன் சிங் ஆட்சியின் போது, டன் கணக்கில் உணவு தானியங்களை கடலில் கொட்டி அழித்தனர்.