ஏழை – எளிய – ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை புதைத்து விட்டது ‘நீட்’;
பட்டப்படிப்பையும் புதைக்க வருகிறது ‘கியூட்’..!

இதுவரை துறைச் சார்ந்த பயிற்சிப் பெற்ற நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட உயர்கல்வி துறையின் அனைத்து நிறுவனங்களிலும், இனிமேல் காவி - கார்ப்பரேட் பாசிசத்தால் வழி நடத்தப்படும். அதாவது, அறிவியல் பூர்வமற்ற பிற்போக்கு, மூடநம்பிக்கை பார்ப்பன மத வெறியை உள்ளடக்கிய, காவிகளின் இலக்கையும் கல்வியை சந்தைப்படுத்தவும், வணிகமயப் படுத்தவும், தனியார் மயப்படுத்தவும் தடையாக உள்ள அரசின் பொதுக் கல்விக்குப் பொறுப்பான யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.ஏ.சி.சி. போன்ற அமைப்புகள் கலைக்கப்படுவதை உள்ளடக்கிய கார்பரேட்டுகளுக்கான ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் இலக்கையும் சாதிக்க வழிநடத்தப்படும்.

 

பள்ளிப்படிப்பை முடித்து ஆயிரம் கனவுகளோடு, கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர் எதிர்காலங்களான மாணவ – மாணவிகள். இவர்களில் குறிப்பாக கிராமப்புற – நகர்ப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட – மாணவ – மாணவிகளின் எதிர்காலமானது கலை – அறிவியல் கல்லூரிகளில்தான் விதைக்கப்படுகிறது.

இவற்றை முளையிலேயே கிள்ளியெறிந்து தற்குறிகளாக்கும் நோக்கத்தில் பாசிச மோடி அரசால் கொண்டுவரப்படுவதே கியூட் (The Common University Entrance Test – CUET) என்கிற பொது நுழைவுத் தேர்வு.

நீட்டைக் கொண்டு வந்து கிராமப்புற – நகரப்புற ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மாணவ – மாணவிகளின் மருத்துவக் கனவைப் புதைத்துவிட்டது. அதேபோல் கடைசிப் புகலிடமான கலை – அறிவியல் பட்டப்படிப்புகளையும், கியூட் என்கிற நுழைவுத் தேர்வு மூலம் புதைக்கப் போகிறது. இதை ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களின் பல்கலைக்கழகங்களிலும், கியூட் என்கிற நூழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாஜக ஆளும் கட்சியாக அல்லாத மற்ற மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) உள்ள ஒன்றிய அரசால் நேரடியாக இயக்கப்படும் மத்திய பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் நீட்டைப் போல மற்ற மாநிலங்களின் நேரடி பொறுப்பில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயப்படுத்தப் படலாம். இருப்பினும் தற்போது வரை தமிழக அரசு இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. இவைக்கூட எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் – கோவை – அவிநாசிலிங்கம் – திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய; பாண்டிச்சேரி போன்ற ஒன்றிய பல்கலைக்கழகங்களில் ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் தனித்துவமான இளநிலை (UG) முதுநிலை (PG) பட்டப்படிப்புகள் உள்ளன.

இவற்றில் குறிப்பாக, அவிநாசிலிங்கம் கல்லூரியில் அப்பகுதி பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் சில தனித்துவமான சிறப்பு பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் எதிர்காலங்களை உருவாக்குவதற்கு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான நிலத்திலிருந்து 207 ஏக்கர் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இக்கல்லூரிகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் விண்ணப்பிக்கும் எண்ணிக்கைகளைப் பொறுத்து எழுத்து தேர்வு, நேர்காணல் என்கிற அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் இப்பகுதியின் ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மாணவ – மாணவிகள் 90% பேர் ஒவ்வொரு வருடமும் பட்டதாரிகளாக எதிர்கால கனவுகளோடு நீரூற்றாக வெளியே வந்தனர். இவற்றை ஒன்றிய அரசனது கியூட் என்கிற நுழைவுத் தேர்வு முறையின் மூலம் அவர்களின் கனவுகளைச் சிதைத்து அதன் நீரூற்றையும் அடைத்துவிட்டது.

நுழைவுத் தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது. அவ்வப்போது நடத்தப்படும் பருவத் தேர்வுகளே மாணவ – மாணவிகள் தங்கள் தகுதியை அளவிடவும், தங்கள் பட்டப்படிப்பைத் தெரிவு செய்யவும், அதற்கேற்ப ஆற்றலை திறம்பட வளர்த்துக் கொள்ளவும் முடியும். இல்லையேல் 5-ஆம் வகுப்பில் இருந்து நுழைவுத் தேர்வு மூலமே ஐ.ஐ.டி.யை வந்தடையும். மாணவர்கள் எந்திர மனிதர்களாக மாறும் நிலையே ஏற்படும்.

தீவிரமாகத் திணிக்கப்பட்டுவரும் நுழைவுத் தேர்வானது மறுக்காலனியாக்கக் கொள்கையை உள்ளடக்கிய, புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான இந்திய உயர்கல்வி ஆணைய அதிகாரத்தோடு தொடர்புடையது.

இதுவரை கலை – அறிவியல் கல்லூரிகளை வழிநடத்திவரும் யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு) பொறியியல் கல்லூரிகளை வழிநடத்திவரும் ஏ.ஐ.சி.டி.இ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு) கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் NACC (தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்) போன்ற அமைப்புகள் அனைத்தும் இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது மூலம் கலைக்கப்படும். உயர்கல்வித் துறையில் இந்திய உயர்கல்வி ஆணையமே ஏகபோக நிறுவனமாக இயங்கும். இதை ஒன்றிய அரசின் அதிகாரிகளே கட்டுப்படுத்துவார்கள்.

இதன் விளைவு, இவற்றிலுள்ள அந்தந்த துறைகளுக்கான நிபுணர்கள், பாடத்திட்டத்தை உருவாக்கும் படிப்புக்கான அங்கீகாரம், நிதியாதார ஒதுக்கீடு, தன்னாட்சி அதிகாரம் என்கிற ஆக்கப்பூர்வமான அமைப்புகள் அனைத்தும்  தேவையற்றவையென நீக்கப்படும்.

யு.ஜி.சி.யின் கீழ் இயங்கி வரும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களும், பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளும், ஏ.ஐ.சி.டி.இ யின் கீழ் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஒற்றை நிறுவனமான இந்திய உயர்கல்வி ஆணையத்தால் இயக்கப்படும். இதன் தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் அங்கும் வகிக்கும் 12 பேர்களில் 2 துணை வேந்தர்கள், 2 பேராசிரியர்கள் இருப்பர். மீதமுள்ள 8 பேர்களில் வெளிநாட்டு இந்தியர்கள், தொழிலதிபர்கள் ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவார்கள் இருப்பர்.

இதுவரை துறைச் சார்ந்த பயிற்சிப் பெற்ற நிபுணர்களால் வழிநடத்தப்பட்ட உயர்கல்வி துறையின் அனைத்து நிறுவனங்களிலும், இனிமேல் காவி – கார்ப்பரேட் பாசிசத்தால் (மறுகாலனியாக்கம் – பார்ப்பன பயங்கரவாதத்தால்) வழி நடத்தப்படும். அதாவது, அறிவியல் பூர்வமற்ற பிற்போக்கு, மூடநம்பிக்கை பார்ப்பன மத வெறியை உள்ளடக்கிய, காவிகளின் இலக்கையும் கல்வியை சந்தைப்படுத்தவும், வணிகமயப் படுத்தவும், தனியார் மயப்படுத்தவும் தடையாக உள்ள அரசின் பொதுக் கல்விக்குப் பொறுப்பான யூ.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.ஏ.சி.சி. போன்ற அமைப்புகள் கலைக்கப்படுவதை உள்ளடக்கிய கார்பரேட்டுகளுக்கான காட்ஸ் ஒப்பந்தத்தின் இலக்கையும் சாதிக்க வழிநடத்தப்படும்.

இதற்கேற்ப பொதுப் பட்டியலிலுள்ள உயர்கல்வி படிப்படியாக மத்தியப் பட்டியலுக்கு நகர்த்தி செல்வது மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒன்றிய அரசின் இந்திய உயர்கல்வி ஆணையம் என்கிற ஆக்டோபஸ் மூலம் சுற்றி வளைத்து இறுக்குகிறது.

அதே வேலையில், இலட்சக்கணக்கில் விலை போகும் நீட், கியூட்’டைப் புகுத்தி ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மாணவ – மாணவிகள் உயர்கல்விப் பெறும் உரிமையையும், வாய்ப்பையும் நசுக்கி – அழித்தும் வருகிறது. மேலும் பாரபட்சத்தையும் – ஏற்றத்தாழ்வையும் உருவாக்குகிறது.

சூதும், தந்திரமும், நயவஞ்சகமும் நிறைந்த இவற்றை முறியடிக்கும் வகையில் கல்வி என்பது தேங்கி நிற்கும், அழுகி நாறும் குட்டை அல்ல; காவிரியைப் போல் பறந்து விரிந்து ஓடும் நீர்; பற்றிப்படரும் பெரும் தீ என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். மாணவ – மாணவிகள் தங்கள் எதிர்கால உயர்கல்வியின் உரிமையை இழந்துவிடாமல் மீட்டெடுக்க போராட்டத் தீயைப் பற்றிப்படர வைப்பதே இன்றைய பிரதான போராட்டமாக கொள்ள வேண்டும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன