தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 522 உறுப்பினர்களைக் கொண்ட மக்களைவையில் இருந்து நூறு எம்.பி.க்களும், 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதற்கு உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரிய ‘குற்றத்திற்காகத்தான்’ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக தமிழகத்திலிருந்து 29 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுவையைச் சேர்ந்த ஒரே எம்.பி.யும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லட்சத்தீவிற்கும் இதேநிலைதான். கேரளாவைச் சேர்ந்த எம்.பி.க்களில் இருவரைத் தவிர மற்ற 18 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 14 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளைக் கூண்டோடு இடைநீக்கம் செய்து விட்டு மிக முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தைச் செலுத்தக் கூடிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) அதன் பெயர் முதற்கொண்டு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகிவிட்டது. அதே போன்று தொலைதொடர்பு மசோதாவும் தற்போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்ல இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட 370வது பிரிவு நீக்கம், மூன்று விவசாயச் சட்டங்கள் என மிக முக்கிய மசோதாக்கள் அனைத்தும் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அப்போது விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோருவதைத் தவிர எதிர்க்கட்சிகளால் அவற்றை எதிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது அந்த வேலையும் உங்களுக்கு வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சொத்தைக் காரணங்களைக் கூறி பாஜக இடைநீக்கம் செய்துள்ளது. இதில் கூட்டத்தொடருக்கே வராத திமுகவைச் சேர்ந்த சேலம் மக்களவை தொகுதி எம்.பி. எஸ்.ஆர். பார்த்தீபன் அமளியில் ஈடுபட்டதாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டது பாஜகவின் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தங்கள் மீதான பாஜகவின் இந்த பாசிசத் தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளன என்று பார்த்தால், கண்டனம் தெரிவிப்பது, போட்டி நாடாளுமன்றம் நடத்துவது என வழமையாகச் செய்வதைத் தாண்டி அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. குறைந்தபட்சமாக இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக்கோரி மோடி, அமித்ஷா வீட்டையோ, துணை ஜனாதிபதியின் வீட்டையோ முற்றுகையிட்டிருந்தால் கூட பாஜகவிற்கு ஒரு நெருக்கடியினைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதாகக் கூடத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேட்டிகள் பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் குறித்த புலம்பல்களாக மட்டுமே உள்ளன.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை சொத்தைக் காரணங்களைக் கூறி இடைநீக்கம் செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுவது என்பது சாதாரண விசயமல்ல. இந்த விவகாரத்தில், பாசிச பாஜகவின் நோக்கம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவது மட்டுமே அல்ல. எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் என்ற ஒன்றே இல்லாமல் நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான முன்னோட்டமாகத்தான் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க எதிர்க்கட்சிகள் என்ன செய்தன? நாடுமுழுவதும் கட்சி வலைப்பின்னலைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியும், தாங்கள் ஆளும் மாநிலங்களில் மிக வலுவான கட்சி அமைப்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நூறு பிரதிநிதிகளையும் கொண்டுள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம் போன்ற கட்சிகளும் நினைத்தால் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாதா என்ன?
ஜனநாயகத்தின் மீதான பாசிசத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு எதிராக வினையாற்ற வேண்டிய இவர்கள், அதனைப் பார்த்துத் திகைத்து, செயலற்றுப் போன பொம்மைகளாக நிற்கின்றனர். குறைந்தபட்சமாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளக் கூட மக்களிடம் செல்ல இவர்கள் தயாராக இல்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு வெறுமனே ஓட்டுப் போடும் பாத்திரம் மட்டுமே இருப்பதாக இவர்கள் கருதுகிறார்கள். இவர்களைப் பாசிச எதிர்ப்பிற்குத் தலைமைதாங்கும் சக்தியாக முன்னிறுத்தும் கூட்டமும் இதே சிந்தனையில்தான் மூழ்கிக் கிடக்கிறது. அதனால்தான் பாசிசத்தை தோற்கடிக்க இவர்களைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் போதும் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றது.
எம்.பிக்கள் இடைநீக்கம் குறித்த ஊடக விவாதம் ஒன்றில், இடைநீக்கத்திற்கு எதிராக கட்சிகள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏன் ராஜினாமா செய்யக் கூடாது, அதன் மூலம் இந்தப் பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியுமே, என சுமந்த் சி ராமன் கேட்ட கேள்விக்கு, அப்படிச் செய்தால் மக்கள் ஓட்டளித்துத் தேர்வு செய்ததை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்காமல் இராஜினாமா செய்துவிட்டார்கள் என பாஜக தங்களுக்கு எதிராக தேர்தலின் போது பிரச்சாரம் செய்யும் எனக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் மறுக்கிறார்.
பாசிசத்திற்கு எதிராக எதைச் செய்தாலும் அது தங்களுக்கு எதிராகவே திரும்பும் ஆகையால் எதுவும் செய்யாமல் தேர்தல் வரை அமைதிகாக்க வேண்டும் என்பதைத்தான் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் கருத்து உணர்த்துகிறது. இதுதான் எதிர்க்கட்சிகளின் உண்மை மனநிலை.
நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியாத ஆள்கடத்தல் வழக்குகளில், கடத்தப்பட்டவர்கள் ஸ்டாக்ஹோம் சிண்டரம் என்ற உளவியல் சிக்கலுக்கு உள்ளாவதாக கூறும் உளவியலாளர்கள், தன்னைக் கடத்தியவரிடமிருந்து என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது என கடத்தப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் சிந்திப்பார்கள் எனக் கூறுகிறார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் நிலையும் ஸ்டாக்ஹோம் சிண்டரத்தால் பீடிக்கப்பட்டது போலத்தான் இருக்கிறது.
- அறிவு